Advertisement

கரையில்லா கல்வியை கற்போம்

''உற்றுழி உதவியும் உறு பொருள் கொடுத்தும்பிற்றநிலை முனியாது கற்றல் நன்றே'' என்ற அன்றைய நிலைமாறி கல்வி தரத்தை உயர்த்த அரசு இலவச திட்டம் செயல்படுத்துகிறது.கல்வி என்ற சொல்லின் அடிச்சொல் 'கல்'. கல் என்றால் கல்லுதல் (கற்றல்). ''கற்றவற்றை வெளிக்கொணர்தல்; பிறருக்குத் தெளிவாக எடுத்துரைத்தல்'', இவையே கல்வியின் நோக்கம். மாணவர்களிடம் உள்ள திறமையை தெரிந்து அதை வெளிக்கொணர்வதே கற்பித்தலின் நோக்கம்.
குழந்தையிடம் இயல்பாகவே பிறர் செய்வதை பார்த்து தானும் செய்யும் ஆற்றல் உண்டு. இதை உளவியல் அறிஞர்கள் 'போலச்செய்தல்' என்கின்றனர். பள்ளிக்கு வரும் இளம் வயது சிறார்கள் அச்சமின்றி, ஆர்வத்துடன் தான் அறிந்ததை கற்கும் சூழலை வகுப்பறையில் ஏற்படுத்துவதே ஆசிரியரின் தலையாய கடமை. குழந்தைகள் வீட்டுச்சூழலில் கேட்டதை, பார்த்ததை தாய் சொல்லிக்கொடுத்ததை மனதில் பதிய வைத்து பள்ளிக்கு வருகின்றனர். அவர்களின் ஆர்வத்தை குறைக்காமல் வழிகாட்டியாக இருந்து செயல்பட்டால் அவர்களின் கல்வி மேம்படும்.தாய் மொழி கல்வி உலகில் ஆறாயிரம் மொழிகள் உள்ளன. செம்மொழியாக உள்ள ௭ மொழிகளுள் தமிழும் ஒன்று. அமெரிக்க மொழியியல் அறிஞர் நோம் சாம்சுகி, '' உலக மொழிகளுக்கு எல்லாம் தாய்மொழி தமிழாகத்தான் இருத்தல் வேண்டும்'', என்றார்.
மொழி ஞாயிறு தேவநேய பாவாணர் ''நம் தாய் மொழியாம் தமிழ் காலத்தால் முந்தையது; உலகின் முதன்மொழி; மூத்தமொழி; பல சிறப்புக்களை கொண்டது'' என்றார்.ஞானகிரியார் என்ற அறிஞர் ''தமிழ் ௧௦ ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது; கிரேக்க இலத்தீன் மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்சொற்கள் இருக்கின்றன'' என்றார்.புறநானுாற்று புலவனின் கூற்றுப்படி ''விரிப்பின் பெருகும்; தொகுப்பின் எஞ்சும்'' என்றால் மிகையாகாது. இத்தகைய சிறப்புக்களை உடைய தாய்மொழியில் நல்ல புலமையும் பிற மொழிப்பாடங்களில் நல்ல தேர்ச்சியும் பெற அனைவரும் கற்கும் முறையறிந்து கற்கவேண்டும்.
கற்பித்தல் முறைகள் ''குருகுலமுறை; திண்ணை பள்ளி முறை; ஆசிரியர் மையக்கல்வி முறை; குழந்தை மைய கல்வி முறை; என பல முறைகள் உண்டு. தற்போது அனைவருக்கும் கல்வி திட்டம் மூலம் ''செயல்வழி கற்றல், படைப்பாற்றல் கற்றல்'' என்ற புதிய முறைகள் வந்துள்ளன. ''மாணவர்களுக்கு கற்றலில் அடைவுத்திறனும் படைப்பாற்றல் திறனும் வளர்ச்சி அடைகிறது'' என்பதை காண்கிறோம்.
''எவ்வழி நல்லவர் ஆடவர்; அவ்வழி நல்லை வாழிய நிலனே'', என்ற அவ்வையின் வாய்மொழிக்கேற்ப ஆசிரியர் வழியே அறவழி என்று எண்ணும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ''ஏணியாக தோணியாக கலங்கரை விளக்காக வழிகாட்டியாக'' திகழவேண்டும்.ஆசிரியர் வகுப்பறையிலேயே தவறான கருத்தை சொன்னாலும் அதுவே சரியென அனைவரிடமும் வாதிடும் மனப்போக்கு இன்றைய இளஞ்சிறார்களிடம் காணப்படுவதால் ஆசிரியர்கள் தெளிந்த நல்லறிவு உடையவர்களாக இருத்தல் வேண்டும்.''அகத்தின் அழகு முகத்தில் தெரியும்'' என்ற வைர வரிகளை ஆசிரியர்கள் மனதில் நிறுத்தி மாணவர்களின் மனநிலை, குடும்பநிலையை உணர்ந்து செயல்படவேண்டும். மாணவர்கள் தெரியாமல் தவறு செய்தாலும்''இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்'' என்ற குறள் வழி நடந்து சாம, பேத, தானம் கடைபிடித்து தண்டனையை தவிர்த்தல் நன்று.
''எளிமையாய் இரு; எடுத்துக்காட்டாய் இரு'' என்ற பொன்மொழியை ஆசிரியர்கள் மனதில் என்றும் நிலை நிறுத்த வேண்டும். ஆசிரியர்கள் ''கண்டிப்பு கலந்த கனிவுடனும் அரவணைப்பு இணைந்த அன்புடனும் பரிவு சேர்ந்த பாசத்துடனும் உரிமை கலந்த உறவுடனும்'', நடக்க வேண்டும்.
கற்க கசடற சிற்பி தன் சிந்தனைக்கேற்ப கல்லைச்செதுக்கி சிற்பமாக வடிவமைப்பது போல; குயவன் தன் எண்ணத்திற்கேற்ப மண்ணை பிசைந்து பாண்டம் அமைப்பது போல தங்களிடம் பயிலும் மாணவர்களிடம் இயல்பாக பொதிந்துள்ள தனித்திறன்களை வெளிக்கொணர ஆசிரியர்கள் மேற்கொள்ளும் முயற்சிக்கு ஒத்துழைப்பு தருவது அவசியம். ''கற்க கசடற கற்பவை; கற்றபின் நிற்க அதற்குத் தக'' என்பது வள்ளுவர் கூற்று.கற்க, கசடற கற்க, கற்பவை கற்க, கற்றபின் கற்க, அதற்கு தக நிற்க; என்ற குறளின் கருத்துப்படி நடக்க வேண்டியது மாணவர்களின் கடமை.
இன்றைய சமுதாய சூழலில் தன் பிள்ளைகளின் எண்ணப்படியே நடக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு பெற்றோர்கள் தள்ளப்பட்டாலும் இதை தவிர்ப்பது நல்லது.விவசாயி பயிர் செழிக்க களைகளை நீக்குவதை போல பெற்றோர் தன் பிள்ளைகளிடம் உள்ள தீய பழக்கத்தை நீக்க முயற்சி செய்வதுடன், தாங்களும் முன் உதாரணமாக செயல்படவேண்டும்.இரண்டு தண்டவாளங்களாக மாணவர்களும் பெற்றோர்களும் இணைந்து செயல்பட்டால், தொடர்வண்டி என்ற ஆசிரியர், தடம் புரளாமல் தரமான கல்வி என்ற இலக்கை சென்று அடைய துணை புரிவார். கல்வி என்ற நாணயத்தின் இரண்டு பக்கங்களாக பெற்றோர்களும், மாணவர்களும் இருக்கவேண்டும்.கல்லாதவரை வள்ளுவர் மாக்கள் (விலங்கு), மரம் என்பார். அத்தகைய மாக்களை மக்களாக மாற்றும் மகத்தான சாதனம் கல்வி. கரையில்லாக் கல்வியை கற்றவரே காலத்திற்கும் மதிக்கபெறுவர்.-எஸ்.முருகேசன்,தலைமை ஆசிரியர் (ஓய்வு),வடுகப்பட்டி. 98.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement