Advertisement

அன்பு குழந்தைகளுக்கு ஆசையுடன் ஊட்டுங்கள்

இல்லத்தரசிகளே, 'பெண்மை' கிடைத்ததற்கு அரிய ஒரு பிறப்பு. தாய்மை இறைவன் அளித்திருக்கும் வரப்பிரசாதம். பார்க்க பார்க்க சலிக்காத அம்சங்களில் ஒன்று குழந்தையின் சிரிப்பு. கேட்க கேட்க சலிக்காத இசை, மழலைப் பேச்சு! நினைக்க நினைக்க இன்பம் அளிப்பது அதன் தளர் நடை. இவையாவும் நம் வாழ்வில் நடைபெறும் அலாதியான இன்ப நிகழ்வுகள். இத்தனை சுகத்தையும் இன்பத்தையும் அளிக்கும் குழந்தைகளை நாம், சரியாகப் பார்க்கிறோமா? கவனிக்கிறோமா? அவர்கள் தேவையை முழுமையாக பூர்த்தி செய்கிறோமா? அவர்களின் சின்ன சின்ன ஆசைகளை தீர்த்து வைக்கிறோமா? பிஞ்சு மனதில் தோன்றும் ஆசைகளை நாம் அறிந்து கொள்கிறோமா?, அவர்களுக்கு பிடித்த உணவை தேவையான நேரத்தில் தருகிறோமா? என்றால் பெரும்பாலான இல்லத்தரசிகள் 'இல்லை' என்றும், நேரமில்லை என்றும்தான் பதில் சொல்வார்கள். அந்தளவிற்கு அக்கறைஇன்மையிலும், அசட்டை மனப்போக்கிலும் மூழ்கிவிட்டார்கள் அவர்கள்.சமூகத்தில் அன்றாடம் நடக்கும் சம்பவங்கள் நம்மை ஆழ்ந்து சிந்திக்க வைக்கின்றன. 'குழந்தைகளின் பள்ளி நேரம், வாகனம் வரும் நேரம், குழந்தை புறப்பட வேண்டிய நேரம்' அனைத்தும் அவசரகதியில் நடந்து முடிந்து விடுகிறது. அதற்கு பிறகு, இல்லத்தரசிகள் மூச்சுவிட்டு 'அப்பாடா' என இழைப்பாறுகிறார்கள். வாகனம் வரும் நேரத்தில், இதுதான் முடியும் என்று முறையற்ற, தரமற்ற, சத்துக்கள் இல்லாத ஒரு உணவை தயாரித்து குழந்தைக்கு ஊட்டாமல், வாயில் திணிக்கிறார்கள். ஒரு டம்ளர் பாலை குடிக்க வைத்து பள்ளிக்கு அனுப்பி விடுகிறார்கள்.

அவசர உணவுகள்:பெரும்பாலான நேரங்களில் அவசரத்திற்கு என்ன தயாரிக்க முடியுமோ அவை மட்டுமே தினசரி உணவு பட்டியலில் இடம் பெறுகிறது. நூடுல்ஸ், பிரட், சப்பாத்தி ஜாம், இட்லி சர்க்கரை, தோசை ஜாம், லெமன் ரைஸ், தக்காளி சாதம் அதனுடன் அவ்வப்போது அவித்த முட்டை என காலையில் தயாரிக்கும் உணவை, மதியத்திற்கும் கொடுத்து அனுப்புகிறார்கள். பள்ளி 'மிஸ்' சொல்வதை கேட்டு படித்து முடித்து, யூனிபார்ம், சாக்ஸ், ஷூ அணிந்ததால் ஏற்பட்ட வியர்வை ஏற்படுத்திய சோர்வில் வீட்டுக்கு வரும் குழந்தைகளுக்கு பேரிடியாய் மீண்டும் கேட்கும் அடுத்த உத்தரவு, 'உடனே, டியூஷனுக்கு கிளம்பு...' பிறகென்ன, குழந்தைகளை அனுப்பி விட்டு அக்கம் பக்கம் அரட்டை, டி.வி., சீரியலில் மூழ்கும் பெண்கள் அதிகமாக இருக்கிறார்கள். நமது தென்னிந்திய உணவு மிகச் சிறப்பானது. ஆவியில் வெந்த இட்லி, இடியாப்பம், புட்டு முதலானவை மிக எளிதாக செரிக்கக்கூடிய சுவையான உணவு. மதியம் பருப்பு, நெய், காய்கறிகள், ரசம், மோர் சேர்த்து புரதம் மிகுந்த பருப்பு சாதம், வைட்டமின்கள் கொடுக்கும் காய்கறிகளில் சத்துக்கள் மிக அதிகம். கீரை, மிளகு, சீரகம், பூண்டு சேர்த்த ரசம் ஜீரணமாக்கி உடலில் சத்துக்கள் சேர உதவும். மோர் அல்லது தயிர் உணவுப்பாதையை குளிர்விக்கும். மாலையில் ஒரு பயறுவகை சுண்டல், அதோடு ஒரு கப் பால், இரவில் ஒரு பழம்' என மேற்சொன்னவை வளரும் குழந்தைகளுக்கு அமுதமாக அமைகிறது. ஒரு வாழைப்பழம், ஆப்பிள், கொய்யா, பப்பாளி, ஆரஞ்ச், சப்போட்டா, சீத்தாப்பழம் என எதுவேண்டுமானாலும் குழந்தையின் பசியைப் போக்கும், தேவையான ஊட்டச்சத்தை அளிக்கவல்லது பழங்கள் மட்டுமே.

உடல் உறுப்புகளாய் பழங்கள்:இயற்கையான பழங்களே இறைவடிவமாக இருக்கிறது. அவை நம் உடல் உறுப்புக்களை போலவே அமைந்திருக்கின்றன. ஆரஞ்சு சுளை சிறுநீரகத்தின் வடிவிலும், சீத்தாப்பழம் மூளை போன்ற வடிவிலும், திராட்சை கருவிழி போலவும் உள்ளன. அழகிய மூக்குப்போல் முந்திரிப்பழம் உள்ளது. பல்வரிசையாக மாதுளையும், ஓம் என்ற அட்சரம் போல் மாம்பழ மும் (ஞானம்), வழவழப்பான மருவற்ற மேனிபோல் வாழைப்பழமும், பெண்ணின் கருப்பை போல ஒத்திருக்கும் பப்பாளிப்பழமும், சினை முட்டை பை போல் அமைந்திருக்கும் மங்குஸ்தான் பழமும், ஆயிரம் லிங்கங்களை ஓரிடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள பலாப்பழமும் நம் உடலுக்கும், குழந்தையின் உடலுக்கும் ஏற்றதுதான். இல்லத்தரசிகளே.. சத்தான உணவுகளோடு, பிஞ்சு வயதிலேயே பகிர்ந்து உண்ணும் பழக்கத்தையும் பாசத்தையும் உங்கள் குழந்தைக்கு சேர்த்து ஊட்டுங்கள். கருணையில் இறைவனை நீங்கள் காண்பீர்கள்.

- டாக்டர் எம்.ரவிக்கலா, மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் திண்டுக்கல். dr.murali1983gmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement