Advertisement

முத்திரை பதிக்கும் சித்திரை

கலை வளர்க்கும் தமிழ்நாட்டில் வழிபாட்டின் நிறைவான நிலையே திருவிழாக்கள். திருவிழாக்களில் மக்கள் ஒன்றுகூடி மகிழ்ந்து ஆடல், பாடல் முதலிய கலைகள் மூலம் இறைவனை வழிபட்டு வந்துள்ளனர். நம் திருவிழாக்களை பற்றி வரையறை செய்ய திருஞானசம்பந்தர் பாடிய மயிலை தேவாரப் பதிகமே சான்றாகும்.''ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள்


துய்ப்பனவும் காணாதே போதியோ பூம்பாவாய்


தையலார் கொண்டாடும்


விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்


ஆதிரை நாள் காணாதே போதியோ பூம்பாவாய்


தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய்


மாசிக் கடலாட்ட


நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய்


பலிவிழா பாடல்செய் பங்குனி உத்திர நாள்


ஒலிவிழா காணாதே போதியோ பூம்பாவாய்


பண்ணார் பதினெண் கணங்கள்தம் அட்டமிநாள்


கண்ணாரக் காணாதே போதியோ பூம்பாவாய்''என இடம்பெறும் தேவார வரிகள் மூலம்

இரண்டாயிரம் ஆண்டுகளாக நடந்து வரும் திருவிழாக்களை அறியமுடிகிறது. இசைத்தமிழ் வளர்த்த திருஞானசம்பந்தர் ஞானம் பெற்றதை போற்றும் விதமாக சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில், சீர்காழியில் 'திருமுலைப்பால்' உற்சவம் நடைபெறுகிறது. மிருகசீரிடம் நட்சத்திரத்தில் தொடங்கி திருவாதிரை வரை இத்திருவிழா நடைபெறுகிறது. திருஞானசம்பந்தர் இறைவன் அருள்பெற்ற திறத்தை விளக்கும் விதமாக இது அமைந்துள்ளது.

விழா மாநகர் மதுரை:விழா மாநகர் என்று சொன்னால் மதுரையே நமக்கு நினைவில் வரும். பன்னிரெண்டு மாதங்களும் திருவிழாக்களை உடையது ஆலவாய் என்னும் மதுரை. மதுரைக்கு பல பெயர்கள் இலக்கியங்களில் காணப்படுகின்றன. விழவுமலிமூதூர். கம்பலை மூதூர், ஆலவாயில், ஆலவாய், கடம்பவனம், கன்னிபுரம். கூடல். நான்மாடக்கூடல், பூலோக சிவலோகம், சிவபுரம், சீவன்முத்திபுரம் என்பன அவற்றுள் சில. அருளும் பொருளும் புலமையும் நிறைந்த காரணத்தால் மாமதுரை பெருமை பெற்றது என்று பரிபாடல் கூறுகிறது.

''உலகம் ஒரு நிறையாத் தானோர் நிறையாப்


புலவர் புலக்கோலான் தூக்க உலகனைத்தும்


தான்வாட வாடாத தன்மைத்தே தென்னவன்


நான்மாடக் கூடல் நகர்''


(பரிபாடல் திரட்டு 6ஆம் பாடல்)

சிறப்புப் பெற்ற மதுரையில் சித்திரைப் பெருவிழா நடக்கிறது. சித்திரை திருவிழா என்றாலே அன்னை மீனாட்சி திருமணமும், கள்ளழகர் சேவையும் கண்முன் நிற்கும். மக்களால் பெரிதும் விரும்பப்படும் திருவிழாவாக நடக்கிறது. திருக்கல்யாணத்திற்கு முன்பு, மீனாட்சி அம்மை தடாதகைப் பிராட்டியாக முடிபுனைந்து செஙகோல் ஏந்தும் விழாவும், அதன் பின்னர் மீனாட்சி சுந்தரேசர் திருக்கல்யாணமும், அங்கயற்கண்ணி ஆலயத்தில் நடக்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஆகும். இந்நாளில் மதுரையில் உள்ள மணமான பெண்கள் தங்களுடைய மங்கல நாணை புதுப்பித்துக்கொள்ளும் விதமாக புதிய தாலிக்கயிறு கட்டிக்கொள்வர். நாள்தோறும் ஒவ்வொரு வாகனங்களில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் மாசி வீதிகளில் வலம் வருவது காணக்கிடைக்காத காட்சி. திருத்தேர் வைபவத்திற்கு வருவோரை நீர், மோர், பானகம் முதலியன வழங்கி உபசரிப்பதும் தமிழுர்களின் பண்பாட்டு நெறியாகும். திருமாலிருஞ்சோலையில் கள்ளழகர் எழுந்தருளி புறப்பட்டு வைகை ஆற்றில் இறங்குவது சித்திரை மாதம் பவுர்ணமி நாளில் நடக்கிறது. அழகர் கோவிலில் உள்ள பெருமாள் கள்ளழகராக மதுரைக்கு புறப்பட்டு, தல்லாகுளத்தில் வந்து தங்குகிறார். அங்கிருந்து நகருக்கு செல்லும் போது சுந்தரராஜபெருமாளாக பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். இவர் வைகைக் கரையோரமே சென்று வண்டியூர் சேர்தலும், அங்கிருந்து விழாக் கோலத்துடன் திரும்பி ராமராயர் மண்டபத்தில் தசாவதாரக் காட்சி தருவதும் அதன் பின்னர் பூப்பல்லாக்கில் இருப்பிடம் திரும்புவதும் கள்ளழகர் திருவிழா.

அழகர் வர்ணிப்பு:கிராமியக்கலைகளின் சிறப்பை மதுரை சித்திரைத் திருவிழாவில் பார்க்க முடியும். நையாண்டி மேளம் என்று சொல்லப்படுகின்ற நாட்டுப்புற கலை பல்வேறு பரிமாணத்தில் கலைஞர்களின் கலைத்திறமையை பறைசாற்றிக் கொண்டிருக்கும். மதுரை நகரமே இந்த லயவாசிப்பு முறைக்கு ஆடும் என்று சொன்னால் அது மிகையல்ல. அறிவை மிஞ்சிய தாளவகை கோர்வைகளை இசைக் கலைஞர்கள் வாசிப்பது காணவும் கேட்கவும் கிடைக்காத காட்சி. எதிர்சேவை என்று சொல்லப்படும் அழகரை எதிர்கொண்டு அழைக்கும், தல்லாகுளம் பகுதியில் பல கிராமியக் கலைஞர்கள் நிகழ்த்தும் 'அழகர் வர்ணிப்பு' என்ற அற்புதமான கலைவடிவம் தமிழகத்தின் அரிய கலையம்சம்.

சங்கரன்கோவில்:முத்திரை பதிக்கும் சித்திரை மாதத்தின் பெருமையை அளவிட நாம் சங்கரன்கோவில் திருத்தலத்திற்கு செல்ல வேண்டும். பங்குனி உத்திர நாளில் தொடங்கும் சித்திரை உற்சவம், பவுர்ணமி அன்று தேரோட்டத்துடன் நிறைவடைகிறது. 38 நாட்கள் நடைபெறும் இச்சித்திரைத் திருவிழா, பக்தி வழிபாட்டை வலியுறுத்தும் விழா. 63 நாயன்மார்களின் வரலாற்றை அநபாயசோழன் வேண்டுகோளின்படி தொகுத்து எழுதிய சேக்கிழார், இதனை சித்திரை மாதம் திருவாதிரை நாளில் தொடங்கி அடுத்த ஆண்டு சித்திரை மாதம் திருவாதிரையில் நிறைவுசெய்தார்.

''சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்


தமிழோடு இசைப்பாடல் மறந்தறியேன்''


என்று பாடிய திருநாவுக்கரசர், முக்தி பெற்றது சித்திரை மாதம் சதய நாளில். இந்நாளில் இவருடைய பதிகங்களை போற்றும் விதமாக சிவனடியார்கள் தேவாரம் ஓதுவார்கள். இவர் முக்தி பெற்ற திருப்புகலூர் என்னும் திருத்தலத்தில் பத்து நாட்கள் உற்சவம் நடைபெறுகிறது. 63 நாயன்மார்களில் மதுரையில் சைவம் தழைக்க பாடுபட்ட மங்கையர்கரசியார் குருபூஜை சித்திரை ரோகிணி நாளிலும், சுந்தரரின் தாயார் இசைஞானியார் குருபூஜை சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்திலும் சிறுத்தொண்டர் நாயனார் குருபூஜை திருவாரூர் மாவட்டம் திருச்செங்காட்டங்குடியில் பரணி நட்சத்திர விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. இப்படி பக்தி, பண்பாட்டு விழாக்களின் மாதம் சித்திரை. அதனை அன்போடு வரவேற்போம்!

- கலைமாமணி முனைவர் தி.சுரேஷ்சிவன், 94439 30540.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement