Advertisement

என் பார்வை : 'தீயா வேலை செய்யும்' தீயணைப்புத் துறை: நாளை தீத்தொண்டு நாள்

"தீ” - இந்த ஓரெழுத்துக்குள் தான் எத்தனை உஷ்ணம்! சொல்லும்போதே சுடுகிறதல்லவா? நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐம்பூதங்களும் அளவாய் இருக்கும் போது நன்மையும், அதிகமாகும் போது அழிவையும் தருகின்றன.
இதில் அதிக நன்மை, அதிக அழிவைத் தருவது நெருப்பு. நன்மையை தருவதும் தீமையைத் தருவதும் அதனிடம் நாம் நடந்துக்கொள்ளும் விதத்தைப் பொறுத்தது.தீ விபத்தின் போது நமது உயிரையும், உடமைகளையும் காத்து, நமக்கு அபயம் அளிப்பவர்கள் தீயணைப்புப் படை வீரர்கள். மக்களை காப்பதில் 'நான்காவது ராணுவம்' என்று போற்றப்படும் தீயணைப்புத் துறையைப் பற்றி அறிந்து கொள்ளவே இந்த கட்டுரை.
காக்கும் பணி
தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைப்பதும், உயிர்களை மீட்பதும் தான் எல்லோருக்கும் தெரியும். பாதுகாப்பு பிரசாரங்கள், போலி ஒத்திகை பயிற்சிகள் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு செய்கின்றனர். கட்டட ஆய்வு, விழாக்கள் நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு என இவர்கள் செய்யும் சேவைகளின் பட்டியல் அதிகம்.
ஒவ்வொரு ஆண்டும், ஏப்ரல் 14 'தீத்தொண்டு நாள்' கடைபிடிக்கப்படுகிறது. அன்று முதல் ஒரு வாரம், தீ பாதுகாப்பு குறித்து பொது மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தீயணைப்புத் துறையினர் செய்கின்றனர்.
இந்த நிகழ்வு ஏன் ஏப்ரல் 14 ல் கடைபிடிக்கப்படுகிறது?
அது இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த காலம். 1944 ஏப்ரல் 14 ல் ஆயிரத்து இருநூறு டன் வெடிப்பொருட்கள், எண்ணெய் ட்ரம்களை சுமந்தபடி மும்பை துறைமுகத்திற்கு வந்த கப்பலில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. அந்தக் கப்பல் மட்டுமின்றி, அருகிலிருந்த வேறு கப்பல்களும், கட்டிடங்களும் தீக்கிரையானது. அதில் மும்பை துறைமுகத்தைச் சேர்ந்த 66 தீயணைப்பு வீரர்களுடன் 231 பேர் பலியானார்கள். இந்த துயர நிகழ்வின் நினைவாகத்தான், வீரமரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு ஏப்ரல் 14ல் வீர அஞ்சலி செலுத்தப்படுகிறது.
தமிழகத்தில் உருவான கதை
சென்னையில் பல்வேறு இடங்களில் செயல்பட்டுவந்த 16 தீயணைப்புப் பிரிவுகளை ஒருங்கிணைத்து 'மதராஸ் தீயணைப்புப்படை' 1908 ல் உருவாக்கப்பட்டது. சென்னை நகர காவலர்களுக்கு பயிற்சி அளித்து தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். காவல் துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த தீயணைப்புத் துறை 1967ல் தனித் துறையாக உருவாக்கப்பட்டது. 1969ல் நிரந்தரமான தீயணைப்புத் துறையாக உருவானது. தற்போது 'தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை' என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது. இன்று 308 தீயணைப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
சென்னை தாம்பரத்தில் நவீன பயிற்சி உபகரண வசதிகளுடன் 'மாநில பயிற்சி மையம்' செயல்பட்டு வருகின்றது.
விபத்துகளை தடுப்பது எப்படி?
பெரும்பாலான தீ விபத்துகள், மின் கசிவின் காரணமாகவே ஏற்படுகின்றன. கடைகள், வணிக வளாகங்களில் காகிதங்கள், குப்பைகள் போன்ற எளிதில் தீப்பற்றும் பொருட்களை வீட்டிலும், வெளியிலும் குவியலாக வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். வீடுகளில் காஸ் அடுப்பை சிலிண்டருடன் இணைக்கும் டியூபை ஓராண்டுக்கு ஒருமுறை மாற்றிவிட வேண்டும்.உடலில் தீப்பிடித்துவிட்டால் அலறி ஓடுதல் கூடாது. ஒரே இடத்தில் நின்று, ஏதேனும் ஒரு போர்வை அல்லது சாக்குப் பையை உடலில் சுற்றிக் கொண்டு, தரையில் படுத்து உருள வேண்டும். கவனக்குறைவே பெரும்பாலான தீ விபத்துகளுக்கு காரணம்.
விபத்தில்லா சமுதாயம் அமைந்திட, தீயணைப்பு வீரர்களுடன், பொது மக்களும் இணைந்து பணியாற்றிட முன்வரவேண்டும். ஒவ்வொரு ஊரிலும், ஆர்வமுள்ள மாணவர்கள், பொதுமக்களைக் கொண்டு 'தீயணைப்பு தன்னார்வ தொண்டர்' குழுக்களை ஏற்படுத்தலாம். பயிற்சி அளித்து, தீ விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் இவர்களின் சேவையை பயன்படுத்திக்கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது. அந்தந்த பகுதியிலுள்ள தீயணைப்பு நிலையங்களை தொடர்பு கொண்டால் இது தொடர்பான வழிகாட்டுதல் கிடைக்கும்.
தனிநபர்களுக்கு பயிற்சி
தீயணைப்புப் பற்றி அடிப்படைப் பயிற்சி பெற விரும்புபவர்களுக்கு தீயணைப்புத்துறையில் பத்து நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. ரூபாய் ஆயிரம் கட்டணம். பயிற்சி பெற்றமைக்கு சான்றும் வழங்கப்படுகிறது. தீயணைப்புப் பற்றிய அடிப்படை அறிவை பெற விரும்பும் 18 வயதிற்கு மேற்பட்ட எவரும் சேர்ந்து கொள்ளலாம்.தீயணைப்புத்துறைக்கு 101 என்ற தொலைபேசி எண்ணில் இலவசமாக அழைக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இலவசம் என்றாலே எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் பொதுமக்களில் சிலர் தீயணைப்பு வீரர்களை அலைய வைக்கும் நோக்கத்தில், குறிப்பிட்ட இடத்தைக்கூறி தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தவறான தகவலை தெரிவிக்கின்றனர். வாகனத்துடன் பணியாளர்கள் சென்று பார்த்தால் அப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்காது. அதே நேரத்தில் வேறொரு இடத்தில் உண்மையாகவே ஏற்படும் விபத்திற்கு சென்று செய்யவேண்டிய சேவையும் பாதிக்கப்படுகிறது.
ஏன் வாகனம் வர தாமதம்?
தீ விபத்துப் பற்றி, தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தருபவர் பெயர், தொலைபேசி எண்ணைக் கூறவேண்டும். எந்த இடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்பதற்கு தெளிவான முகவரியை அடையாளங்களுடன் கூறவேண்டும். அந்த இடத்திற்கு எந்த வழியாக வந்தால் விரைவாக தடையின்றி தீயணைப்பு வாகனம் வரலாம் என்ற விவரம் கேட்டால், வழித்தடத்தையும் தெரிவிக்க வேண்டும். என்ன வகையான தீவிபத்து என்பதை தெரிவிக்க வேண்டும். முழுமையான விவரங்களை தெரிவிக்காமல், பதட்டத்தில் ஒரு இடத்தைக் குறிப்பிட்டு "தீ பிடித்து எரிகிறது உடனே வாருங்கள்” என்று மொட்டையாக கூறிவிட்டு போனை வைத்து விடுவார்கள். சரியான தகவல்களை அளித்தால் பெரும் விபத்துகளையும், வீரர்கள் தடுத்து விடுவார்கள். - கோவி. ஏகாம்பரம்கண்காணிப்பாளர்தீயணைப்புத்துறை, திண்டுக்கல்98430 36765வாசகர்கள் பார்வை


காடுகளை அறிந்தோம்

என் பார்வையில் வெளியான 'சோலைக்காடுகளின் பாதுகாப்பே முதல் வேலை' கட்டுரை படித்தேன். காடு, ஆறு, அருவிகள் எப்படி உருவாகிறது என்பதை அறிந்து கொண்டோம். காடுகளை அழிப்பதனால் ஏற்படும்
விளைவுகளையும் படம் பிடித்து காட்டியது கட்டுரை.- வி.எஸ்.மோகன், மதுரை.

சுகாதார பாடம்

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு வெளியான 'சுத்தம் நூறு போடும்' கட்டுரை படித்தேன். கழிவுகளை எப்படி அழிக்க வேண்டும் என்பது தெளிவாகச் சொல்லபட்டிருந்தது. உணவு சமைப்பது, அதை பரிமாறுவது உள்ளிட்ட விஷயங்களை கற்றுக் கொண்டோம். டாக்டர் ஜெயவெங்கடேஷிற்கு நன்றி.
- வி.எஸ்.ராமு, திண்டுக்கல்.

அற்புத மனிதர்
என் பார்வையில் வெளியான 'கோடி கொடுத்து குடியிருந்த வீடும் கொடுத்த கல்வி வள்ளல்' கட்டுரை அழகப்பரின் கல்வி சேவையை எடுத்துரைத்து. இளைஞர்களுக்கு உயர் கல்வியை கொடுத்து விட்டால் அறியாமை, வறுமையை போக்கலாம் என்று எண்ணிய அற்புத மனிதர் அழகப்பர்.- என்.எஸ்.முத்துகிருஷ்ண ராஜா, ராஜபாளையம்.

ஹைக்கூ அலங்காரம்

ஹைக்கூ கவிதைகளின் சிறப்பை அழகாக வெளிப்படுத்தியது என் பார்வையில் வெளியான 'இக்கால உணர்வு இலக்கியம்' கட்டுரை. முன்னுரை முதல் முடிவுரை வரை ஹைக்கூ கவிதைகளால் அலங்கரித்துள்ளார் பேராசிரியர் இரா.மோகன்.- எஸ். ஹேமா, காரைக்குடி.

புது புத்துணர்வு

எழுத்தாளர்களின் கருத்துக்களை சுமந்து வரும் என் பார்வையை படிக்கும் போது புது புத்துணர்வு ஏற்படுகிறது. வாசகர்களிடம் பல தகவல்களை கொண்டு வந்து சேர்க்கும் என் பார்வைக்கு நன்றி.
- என். கார்த்திகேயன்,திண்டுக்கல்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement