Advertisement

சோலைக் காடுகளின் பாதுகாப்பே முதல் வேலை

புல்வெளி, பசுமைமாறா காடுகள் ஒருங்கிணைந்து காணப்படுவது சோலைக்காடுகள். இதனை ஆங்கிலத்தில் 'சோலா' என்பர். கடல் மட்டத்தில் இருந்து 1,800 மீட்டருக்கு மேல் வளருபவை. இங்கு குட்டையான வெப்ப மண்டல பசுமைமாறா மரங்கள், அகன்ற இலைகளை உடைய மரங்கள் ஒருங்கே காணப்படும்.சோலைக்காடுகளுக்கு உரிய தட்பவெப்பநிலை, மண் அமைப்பு போன்றவை மற்ற பகுதிகளில் இல்லாததால் அவை விரிவாக்கம் அடைவதில்லை. இதனால் அவற்றை 'தொல்லுயிர் படிமங்கள்' என்கின்றனர். தமிழகத்தில் தனித்துவம் மிக்க சோலைக்காடுகள் ஒருசில பகுதிகளில் மட்டுமே உள்ளன. நீலகிரி (முதுமலை, முக்குர்த்தி), பழநி மலை (கொடைக்கானல்), கோவை (ஆனைமலை), நெல்லை (அகஸ்திய மலை) பகுதிகளில் காணப்படுகின்றன. தேனி மாவட்ட மேகமலை வனப்பகுதிகளிலும் சோலைக்காடுகள் இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளன. தமிழகத்தில் பாம்பர், முக்குர்த்தி, பாம்பாடும், வரையாடு மொட்டை, ஆனைமலை, மதிகெட்டான், தேவர், குந்தா சோலை உள்ளிட்ட பல வகையான சோலைக்காடுகள் உள்ளன.

முக்கியத்துவம்:மழைக் காலங்களில் புல்வெளிக்கடியில் உள்ள பஞ்சு போன்ற அமைப்பு மழைநீர் வீணாகாமல் சேமிக்கிறது. இந்த பஞ்சு போன்ற அமைப்பு தாவர இலைகளால் அமையப்பெற்ற ஒரு அடுக்கு. புல்வெளிகளுக்கு அடியில் உள்ள மண் பரப்பும் மழைநீரை சேமிக்கும் திறன் கொண்டது. சேமிக்கப்பட்ட நீரானது சிறிது, சிறிதாக வெளியேறி ஓடையாக உருமாறும். பின் அருவியாகவும், ஆறாகவும் உருவாகிறது. இந்தவகை காடுகள் மூலமே ஆண்டு முழுவதும் நீர் வரத்து உள்ள அருவி, ஆறுகளை உருவாக்க முடியும். ஆண்டு முழுவதும் நீர்வரத்து இருப்பதால் அணைகள் வறண்டு போகாமல் இருக்கும். அணைப்பகுதிகளில் மண் அரிப்பு இருக்காது. மூடுபனி, காட்டுத்தீ, அதிகப்படியான காற்று இவை மூன்றும் சோலைக்காடுகளின் பரவலை தீர்மானிக்கும் காரணிகள். குளிர்காலங்களில் திறந்த புல்வெளி காடுகளின் வெப்பநிலை பூஜ்யம் டிகிரிக்கும் கீழே இருக்கும். பசுமைமாறா மரங்களுக்கு இடையிலும் வெப்பநிலை பூஜ்யமாக இருக்கும். நீலகிரி பகுதிகளில் சோலைக்காடுகளின் இரவு நேர வெப்பநிலை 16 டிகிரி செல்சியஸ் ஆக கணக்கிடப்பட்டு உள்ளது. இந்த காடுகளில் அதிகப்படியான தாவர இனங்கள், விலங்குகளை காண முடியும். குறிஞ்சி வகை தாவரங்கள், ரோடாடென்ரான், ரோடோமிர்ட்ஸ், இன்பேஸியன்ஸ், எக்ஸாகம் ஆகியவை சோலைக்காடுகளுக்கே உரித்தான சில தாவரங்கள். இதில் குறிஞ்சி வகை தாவரங்களின் பரவல் மிக அதிகமாக காணப்படுகின்றன. மரத்தவளை, பாம்புகள், கருமந்தி, தேவாங்கு, மரஅணில், சிறுத்தை, கரடி, கடமான், வரையாடு, யானை, காட்டு கோழிகளும் மிகுந்து காணப்படும். சோலைக்காடுகளில் ஈரப்பதம் மூலம் விதை முளைத்தல் தடையின்றி நடக்கிறது. இதனால் சோலைக்காடு தாவரங்கள் தவிர மற்றவை வளர்வதில்லை.

சோலைக்காடுகளின் அழிவு:சோலைக்காடுகளின் பரவல் பல காரணிகளால் குறைந்து வருகிறது. மலை பகுதிகளில் வளர்க்கப்படும் கால்நடைகளால் புல்வெளிகள் மேய்ச்சல் நிலமாக மாற்றப்பட்டு அழிக்கப்படுகின்றன. இதனால் காட்டு விலங்குகளின் மேய்ச்சல் நிலங்கள் பாதிக்கப்படுகின்றன. சுற்றுலாத்தலங்கள், விவசாய நிலங்கள் விரிவாக்கம், காபி, தேயிலை தோட்டம், மரங்களை வெட்டுதல் போன்றவற்றால் சோலைக்காடுகள் பாதிக்கப்படுகின்றன. சோலைக்காடுகளின் அழிவிற்கு வெளிநாட்டு செடிகள் மிக முக்கியமான காரணியாக உள்ளன. பைன், யூகலிப்ட்ஸ், அகேசியா, லாண்டனா வகை தாவரங்கள் சோலைக்காடுகளின் பரவலை தடுக்கின்றன. காட்டுத்தீயால் அழிக்கப்பட்ட சோலைக்காடுகளில் களைச்செடிகள் செழித்து வளர்கின்றன. இதனால் வன உயிரிகளின் இடம் பெயர்வு அதிகமாகின்றன.

பாதுகாப்பு:இன்றைய காலக்கட்டத்தில் சோலைக்காடுகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது. வனபாதுகாப்பு குறித்து பல திட்டங்கள் தீட்டப்பட்டாலும் அதனை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை. சோலைக்காடுகள், அதை சுற்றியுள்ள வனப்பகுதிகளை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கலாம். வனப்பகுதிகளில் உள்ளூர் கால்நடைகளின் மேய்ச்சலை தடுத்து வன உயிரினங்களை பாதுகாக்கலாம். அயல்நாட்டு களை செடிகளை அறவே ஒழிக்க வேண்டும். தேயிலை, காபி பயிரிட சோலைக்காடுகள் அழிக்கப்படுவதை தடுக்கலாம். காட்டுத்தீயை தடுக்க வேண்டும். சோலைக்காடுகளை சுற்றியுள்ள சுற்றுலாத்தலங்களை தடை செய்யலாம். உயிர்த்தொழில்நுட்பம் மூலம் மரக்கன்றுகளை பெருக்கி, வனப்பகுதியில் நட்டு சோலைக் காடுகளை பாதுகாப்பதை முதல் வேலையாகக் கொள்ளலாம்.

- முனைவர் ஆர். ராமசுப்பு, உதவி பேராசிரியர், உயிரியல்துறை, காந்திகிராம பல்கலை, காந்திகிராமம். 90948 15828

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement