Advertisement

கோடி கொடுத்து குடியிருந்த வீடும் கொடுத்த கல்வி வள்ளல்...

"கோடி கொடுத்த கொடைஞன், குடியிருந்த வீடும் கொடுத்த விழுத்தெய்வம்' என தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவையும் தாண்டி, உலக நாடுகளிலும் பெயரும், புகழும் பெற்றவர் கல்வி கொடை வள்ளல் அழகப்ப செட்டியார். இவர் காரைக்குடி அருகே கோட்டையூரில் 1909 ஏப்ரல் 6ல் பிறந்தார்.
காரைக்குடி எஸ்எம்.எஸ்., பள்ளியில் ஆரம்ப கல்வி, சென்னை மாநில கல்லூரியில் முதுகலை பட்டமும் (ஆங்கில இலக்கியம்) பெற்றார். தனது 21ம் வயதில் லண்டனில் உள்ள 'சார்டட்' வங்கியில் முதல் இந்திய பயிற்சியாளராக சேர்ந்தார். இங்கிலாந்தில் உள்ள 'மிடில் டெம்பிள்' நகரில் வழக்கறிஞராக தகுதி பெற்று, 'பார் அட் லா' பட்டம் பெற்றார். இங்கிலாந்தில் 'கிராய்டன்' நகரில் விமான ஓட்டிக்கான பயிற்சி பெற்று சான்று பெற்றார். சென்னை மற்றும் அண்ணாமலை பல்கலை கழகங்களில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார். வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்பதில், அவருக்கு தணியாத வேட்கை இருந்தது. பிரிட்டிஷ் அரசு அழகப்பர் ஒரு வணிக வித்தகராக இருப்பதை உணர்ந்து 1945ல் 'சர்' பட்டம் வழங்கியது. அப்போது அவருக்கு வயது 37. நம்நாடு சுதந்திரம் அடைந்த பிறகு ஆங்கிலேயர் தந்த 'சர்' பட்டத்தை உதறி தள்ளினார்.

வணிக வாழ்க்கை:முதன் முதலாக தன் வணிக வாழ்க்கையை துணி வியாபாரம் மூலம் துவக்கினார். மலேசியாவில் ரப்பர் தோட்டம் உருவாக்கினார். பர்மாவில் வெள்ளீய தாது பொருளை கொடுக்கும் சுரங்கங்களை கண்டுபிடித்தார். கேரளாவில் துணி ஆலைகளை உருவாக்கினார். கோல் கட்டாவில் ஆயுள் காப்பீடு நிறுவனம் உருவாக்கினார். அத்தோடு ஒரு தனியார் விமான போக்குவரத்து நிறுவனத்தையும், பங்கு நிறுவனத்தையும் உருவாக்கினார். 1947ல் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, நேரு விருப்பத்திற்கு இணங்க கல்வித் துறையில் காலடி எடுத்து வைத்தார். 1947 ஜூலை 3ல் அன்னிபெசன்ட் அம்மையாரின் நூற்றாண்டு விழா சென்னையில் நடந்தது. அதில் பேசிய சென்னை பல்கலை கழக துணைவேந்தர் லெட்சுமணசாமி முதலியார், "இந்தியர்கள் ஆள்வதற்கு தகுதியற்றவர்கள், ஆளப்படுவதற்கே உரியவர்கள் என்று வின்ஸ்டன் சர்ச்சில் கூறுவதற்கு என்ன காரணம் தெரியுமா? இந்தியாவில் புரையோடிகிடக்கின்ற அறியாமை, படிப்பறிவின்மை, உயர்கல்வி இல்லாமை தான். விரைவில் அரசியலில் விடுதலை பெற உள்ள நாம், அறியாமையில் இருந்தும் விடுபட வேண்டும். மக்கள் கல்வி அறிவு பெற்றால் நாட்டில் பொருளாதாரம், அறிவியல் சேர்ந்து வளர்ந்து வளம் பெற்று விடும். கல்வியில் பின்தங்கிய பகுதியில், கல்லூரிகள் தொடங்க அந்தந்த பகுதியை சேர்ந்த செல்வந்தர்கள் முன்வர வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார். இதை கேட்ட அழகப்பர், 'துணைவேந்தர் வேண்டுகோள் எனது மனதை உருக்கி விட்டது. அவரது விருப்பபடி, எனது சொந்த ஊரில் மாணவர்கள் மேற்படிப்பு பெற இந்த ஆண்டே ஒரு கலை கல்லூரி துவக்குகிறேன், அதற்காக ரூ.ஒரு லட்சத்திற்கான காசோலையை வழங்குகிறேன்,” என துணைவேந்தரிடம் அதை வழங்கினார். அதிலிருந்து வள்ளல் அழகப்பர் தொடர்ச்சியாக பல்வேறு கல்வி நிறுவனங்களை தோற்றுவித்தார். சென்னையில் ஒரு தொழில் நுட்ப கல்லூரியை ஆரம்பித்து, பின்னர் அந்த கல்லூரி சென்னை பல்கலைகழகத்தோடு இணைக்கப்பட்டது.

காரைக்குடியில் கல்வி நிறுவனங்கள்:இதை தொடர்ந்து காரைக்குடியில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஒரு தொடராக பற்பல கல்வி நிறுவனங்களை நிறுவினார். ஆரம்ப மற்றும் உயர்கல்வி அளிக்கும் அழகப்பா பள்ளிகள், தொழில் நுட்ப, பொறியியல் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி, பி.எட்., கல்லூரி, உடற்பயிற்சி கல்லூரிகளை துவக்கினார். ஒரு பொறியியல் கல்லூரியை அண்ணாமலை பல்கலை கழகத்தில் நிறுவ நன்கொடை வழங்கினார். சென்னையில் இயங்கி வரும் கணக்கியல் மேதை ராமானுஜம் எண்ணியல் கழகம் அழகப்பரின் கனவில் உருவானது. மகாத்மா காந்தியின் பரிந்துரைபடி,சென்னையில் தக்கர் பாபா வித்யாலயாவை தோற்றுவித்தார். திருச்சூருக்கு அருகே அழகப்பபுரம் எனும் சிறு நகரத்தை உருவாக்கி அங்கு தொழில் நுட்ப கல்லூரியையும் மகப்பேறு இல்லத்தையும் அமைத்தார். நாட்டு மருந்து ஆராய்ச்சி துறையை எர்ணாகுளத்தில் இருக்கும் மகாராஜா கல்லூரியிலும், தமிழுக்காக ஒரு ஆராய்ச்சி துறையை திருவனந்தபுரம் பல்கலையிலும் தோற்றுவித்தார்.

பத்மபூஷன்:இந்திய அரசு வள்ளல் அழகப்பருக்கு 1956ல் பத்மபூஷன் விருது வழங்கி கவுரவித்தது. அண்மையில் மத்திய அரசு தபால் தலையை வெளியிட்டு அவர் புகழுக்கு மேலும் பெருமை சேர்த்தது. இருபதே ஆண்டுகளில் தான் எவ்வளவு பெரிய வணிகவித்தகர் என்பதை உலகிற்கு எடுத்து காட்டினார். வனாந்தரமாக, காரை முள்செடிகள் சூழ்ந்திருந்த காரைக்குடியை தொலைநோக்கு பார்வையுடன், 'கல்விக்குடியாக' மாற்றிய பெருமை அவரை சாரும். கல்வியின் மேம்பாட்டுக்கு கோடி, கோடியாக வழங்கி தான் குடியிருந்த வீட்டையும் வழங்கினார். தமது 48ம் வயதில் 1957ல் இயற்கை எய்தினார். மறைவுக்கு பின் அழகப்பா கலை கல்லூரியின் நான்கு முதுகலை துறைகளையும், அழகப்பா ஆசிரியர் பயிற்சி கல்லூரியையும், அழகப்பா உடற்பயிற்சி கல்லூரியையும் ஒருங்கிணைத்து 1985ல் அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., பல்கலை கழகமாக உருவாக்கினார்.

அழகப்பர் கொடையளித்து உருவாக்கிய அறப்பணிகள் சில...

* 420 ஏக்கர் நிலப்பரப்பில் இன்றைய அழகப்பா பல்கலை கழகம்.


* ரூ.15 லட்சம் மற்றும் 300 ஏக்கர் நிலத்தை இலவசமாக மத்திய அரசுக்கு அளித்து, மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம்(சிக்ரி) காரைக்குடியில் நிறுவ செய்தார்.


* சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் இன்ஜி., கல்லூரி நிறுவ ரூ.5 லட்சம்.


* சென்னை பல்கலை கழகத்தில் தொழில் நுட்ப கல்லூரியை நிறுவ ரூ.5 லட்சம். அதை போற்றும் வகையில் சென்னை பல்கலை கழகம், அந்த நிறுவனத்திற்கு அழகப்ப செட்டியார் காலேஜ் ஆப் டெக்னாலஜி என பெயரிட்டது.


* மலேசியாவில் உயர்கல்வி நிறுவனங்களை நிறுவ ரூ.5 லட்சம். இப்படி அவர் வழங்கிய அறப்பணியை எழுதிக்கொண்டே செல்லலாம். காரைக்குடி பகுதி வீடுகள், வணிக நிறுவனங்களில் அவரது புகைப்படம் இடம்பெற்றிருப்பதே, அவர் புகழ் இன்றளவும் நிலைத்திருப்பதற்கு சான்று.

- எம்.பாலசுப்பிரமணியன், துணை பதிவாளர், அழகப்பா பல்கலை கழகம், காரைக்குடி. 94866 71830.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (15)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement