Advertisement

இலவசங்களை நிராகரியுங்கள்! - வே.பழனிசாமி -சமூக ஆர்வலர்

ஆதிமனிதன் உணவுக்காக பழங்கள், கிழங்குகள் என, காட்டில் கிடைத்ததை எல்லாம் பிடுங்கித் தின்றான்; ஆடையின்றி சிலகாலம் திரிந்தான்; வெயில், குளிருக்கும், மிருகங்களிடமிருந்து காத்துக் கொள்ளவும், மலைக்குகைகளில் தங்கியிருந்தான். கண்டதையும் தின்று, செத்து அனுபவப்பட்ட பின், அவற்றில் உணவுக்கானதை மட்டும் கண்டறிந்து, விவசாயம் பழகினான்.

குகையிலிருந்து வெளிவந்து வீடுகட்டி, ஆடையும் வடிவமைத்து உடுத்திக் கொண்டான். மனிதனுக்கு இந்த உருவம் கிடைத்து, 20 லட்சம் ஆண்டுகளாயிற்று என்கின்றனர். என்னத்தைப் பெரிதாய் சாதித்து விட்டோம்? உலகில் இன்றும் சில லட்சம் மக்கள் கிட்டதட்ட அதே நிலையில் தானே இருக்கின்றனர்!அன்றே சுயமாக உணவு, உடை, இருப்பிடம் தேடிக் கொண்டவன், இன்று இலவச அரிசிக்கு கால்கடுக்க நிற்கிறான்; இலவச ஆடைகளுக்காக அடிதடி போடுகிறான்; அரசு கட்டிக் கொடுக்கும் வீட்டுக்காக, ஆலாய்ப் பறக்கிறான். இது, இங்கேயென்றால், இதுவும் கிடைக்காமல் பட்டினியாய் பரிதவிக்கும் நாடுகளை என்னவென்பது?வாழும் இத்தனை கோடி மக்களுக்கும் பூமியால் படியளக்கத் திறனில்லையா? இதைப்போல, 100 மடங்கு மக்களையும் வாழவைக்க இந்த பூமிப்பந்து தயாராகத்தான் இருக்கிறது. எல்லாமும் எல்லாருக்கும் கிடைக்காதிருப்பதற்கு காரணம் என்ன?அரசுகளின் திட்டமிடலில் ஆரம்பித்து, உள் - வெளிநாட்டு பயங்கரவாதம், நாடுகளுக்கிடையேயான போர் வரை நிறையவே காரணங்கள். தனிமனிதனின் சோம்பேறித்தனம் ஒன்றையே பிரதானமாய்ச் சொல்ல வேண்டும். சும்மாயிருந்தாலே சோறு கிடைக்க வேண்டும். அப்படியே பாடுபட்டாலும், உடல் நோகக் கூடாது என்ற மனோபாவம் தான்.

அரசுகளும் பொதுவுடைமை, முதலாளித்துவம், சர்வாதிகாரம் என்று பலமுகங்களையும் காட்டித்தான் பார்க்கின்றன. எதுதான் சாசுவதம்? எப்போது தான் உலகப்பொதுவாய், ஒரு தெளிவான வாழ்க்கை முறை கைகூடும்? இலவசங்களும், மானியங்களும் வழங்குவதை, அரசுகளின் அதிகபட்ச சேவையென்பதா, நம்மைக் காப்பாற்றவா, தம்மைக் காப்பாற்றவா?உழைத்துக் கிடைக்கும் பொருளால் கிடைப்பதை விட, சும்மா கிடைப்பது சுகம் தந்து விடுமா? இலவசம் வாங்கவும் கூட்டத்துடன் போராட்டம், சலுகைகள் வேண்டி கூட்டம் சேர்த்தியும் போராட்டம்! 'நாங்கள் ஏழை நாடல்ல, முன்னேறும் நாடு; வளரும் நாடு' என்பதெல்லாம் சுத்தப்பொய்.வேலை கிடைக்கவில்லை என்று சொல்வதை மட்டும் ஒருக்காலும் ஒப்புக்கொள்ளவே முடியாது. படிப்புக்கேற்ற வேலைதான் வேண்டுமென்றால், பாதி ஆயுளை சும்மாவே முடித்துக் கொள்ள வேண்டியது தான். மூளைக்கு வேலை கிடைக்கவில்லை என்றால், உடலுக்கு வேலை. ஒரு நிறுவனம், 200 பேருக்காக வேண்டி தகுதித்தேர்வு வைக்கிறதென்றால், 20 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். உடனே கிடைக்கும் வேலையை முதலில் பிடித்து தொடர்ந்து முயற்சிப்பது, சொந்தமாய் சிறுதொழில் துவங்கத் துணிவதுமே, மிகச் சரியான நிலைப்பாடு.

படித்தவர் நிலை இதுவென்றால், பாமரருக்கு, தானிருக்கும் ஊரிலேயே வேலை வேண்டுமென்ற எண்ணம். 'திரைகடலோடியும் திரவியம் தேடு' என்று தான் சொல்லி இருக்கின்றனர். எத்தனை பேர் வந்தாலும், வேலைதர தயார் நிலையில் பல மாவட்டங்கள் காத்துக் கொண்டு தான் இருக்கின்றன. இவர்களை எல்லாம் ஒருங்கிணைப்பு செய்வதற்கும் அரசு தான் வரவேண்டும் போலிருக்கிறது.ஒரு பக்கம் இலவசமும், மானியமும் என்றால், மறுபக்கம் வரிச்சுமையும், விலையேற்றமும். ஒரு குடும்பம் இந்திய சராசரியளவுக்கு வாழ என்ன தேவையோ, அதைத்தாண்டிச் சம்பாதிக்கும் குடும்பமே வருமானத்துக்கு வரி செலுத்துகிறது. அப்படியிருக்கையில், அக்குடும்பத்துக்கு மானிய விலை உணவுப்பொருளும், சமையல் எரிவாயும், மற்ற இலவசப் பொருட்களும் வழங்குவது எந்த வகையில் சேர்த்தி?கொடுத்துவிட்ட எதையுமே, 'வெடுக்'கென்று பிடுங்குவதென்பது ஆட்சியில் இருப்போருக்கு சற்று, 'சிரம'மான காரியம்தான். கசப்பு மருந்து கொடுக்கும் மருத்துவரை நாம் கடவுளாகத்தானே பார்க்கிறோம்.

ஒரு குடும்பத் தலைவனுடைய சிரமத்தில் மனைவி, மக்களும் பங்கேற்பது போல், ஒரு நாடு கடன் வாங்கி அடுத்த நாடுகளின் கைப்பாவையாகி விடாமல் காப்பாற்றப்பட வேண்டுமென்றால், குடிமக்களுக்கும் அதில் பொறுப்பில்லாமல் போகாது.காடு அழிகிறதேயென்று சமையல் எரிவாயுவை மானியமாகக் கொடுத்துவிட்டு, மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டி பல சலுகைகளையும் வாரி வழங்கிவிட்டு, இன்று ஆப்புக்குள் சிக்கிய விரலோடு அரசுமிருப்பது தான் வேதனை. திடமான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டத்தில், இப்போது அரசுமிருப்பது உண்மை.அனாதைக் குழந்தைகள், ஆதரவற்ற முதியோர், உடலால் இயலாதோருக்கு காப்பகங்கள் அமைத்து பராமரிப்பதை மட்டும் அரசே செய்ய வேண்டும். இந்த ஒரு சேவையை தவிர்த்து கல்வியும், மருத்துவமும் மட்டுமே இலவசமாய் கிடைக்க வேண்டும்.

மற்றபடி, எந்த அளவுகோலும் வைத்துக் கொள்ளாமல், இலவசங்களை அறவே ஒழிக்க வேண்டும். மானியங்களை படிப்படியாகக் குறைக்கலாம். எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.,க்கள், தொழில் அதிபர்கள், வருமான வரி கட்டுவோர் அனைவருக்குமான மானியங்களை, ஒரே உத்தரவால் நிறுத்தலாம். அவர்கள் மூலமாகவே, 'இலவசம் - மானியம் வேண்டாதோர் இயக்கம்' உருவாகப் பிரசாரமும் செய்யலாம்.தொழில் வளம் பெருகிய மாவட்டங்களில் ஏற்கனவே, 'ஆளில்லாத் திண்டாட்டம்' தலைவிரித்தாடுகையில், 100 நாள் வேலைத்திட்டம் அவ்விடங்களில் தேவையற்றது. அத்தகைய மாவட்டங்களில் மட்டுமாவது இத்திட்டத்தை நிறுத்தி வைத்தால், வேலைக்கு ஆளும் கிடைக்கும்; பல லட்சம் மனித உழைப்பு வீண் ஆகாது.நாட்டில் உள்ள நூற்றுக்கணக்கான ஜாதியினரை, அதன் உட்பிரிவு முதற்கொண்டு துல்லியமாய் கணக்கிட முடிகிற நம்மால், ஒவ்வொரு தனிமனிதனையும் தேடிப்பிடித்து, வாக்காளர் அடையாள அட்டையத் திணிக்க முடிகிற நம்மால், பணக்காரன் - ஏழை என்ற இரண்டே இரண்டு வர்க்கத்தைப் பிரித்துக் கணக்கிடுவதும், அதனடிப்படையில் முன்னேற்ற உதவிகளை வகுப்பதும் மிகப்பெரிய சவாலாய் இருக்கப் போவதில்லை. தனியொரு மனிதனின் எண்ணமும், செயலும் பொதுநலமாய் மாறும் வரை, உலகில் எந்தவொரு நன்மைக்கும் சாத்தியமில்லை.
இ-மெயில்: www.vpindiagmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (6)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement