Advertisement

நான் ஒரு ஞானப்பழம்: இன்று உலக முட்டாள்கள் தினம்

''நான் ஒரு சிங்கத்தை எல்.ஐ.சி., கட்டட மாடியில் வைத்துக் குளிப்பாட்டப் போகிறேன். அதற்கான டிக்கெட் இங்கு கிடைக்கும்,” என்று முன்பு ஒரு அறிவிப்பைப் பார்த்த பலர் அதற்கு பணம் செலுத்தி டிக்கெட் வாங்கினர். ஆனால் அந்நிகழ்ச்சி நடக்கவில்லை. இதுபோன்ற சுவையான நிகழ்ச்சிகள் அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை நடந்து கொண்டு தான் இருக்கின்றன. பிற நபர்களை துன்புறுத்தாமல் தானும் ரசித்து மற்றவர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி ஆச்சரியம் அடையச் செய்துவது தான் முட்டாள்கள் தினத்தின் நோக்கம்.
மார்ச் மாதமே முட்டாள் தினம் ஆரம்பமாகி விட்டது. '1381 மார்ச் 32ம் தேதி இங்கிலாந்து அரசர் இரண்டாம் ரிச்சர்ட்க்கும் பொகிமினா அரசி ஆன்னிக்கும் திருமணம் நடக்க இருக்கிறது' என அனைவருக்கும் மணவோலை அனுப்பப்பட்டது. அதைப் படித்த அனைவரும் மார்ச்சில் 31 நாட்கள் தானே உள்ளன. ஏப்ரல் 1ம் தேதி தான் திருமணம் என நினைத்தனர். இவ்விஷயம் நாடு முழுவதும் பரவி இப்படியா அரசர் திருமணம் செய்வது என கேலி பேசலாயினர். அதனால் ஏப்ரல் 1ம் தேதி ஏமாந்தவர்கள் தினமாகவும் ஏமாற்றுபவர்கள் தினமாகவும் மாறியது. பண்டைய காலங்களில் புத்தாண்டை மார்ச் 25ம் தேதி ஆரம்பித்து ஏப்ரல் 1ம் தேதி வரை கொண்டாடி மகிழ்ந்தனர். பல ஐரோப்பிய நகரங்களில் நடக்கும் இந்த கொண்டாட்டங்களைப் பார்த்து இங்கிலாந்து மக்கள், அவர்கள் முட்டாள்கள் எனவும், ஐனவரி 1ம் தேதி புத்தாண்டை கொண்டாடத் தெரியாதவர்கள் எனவும் கேலி பேசினர். அவர்களை ஏப்ரல் வாதிகள் எனவும் ஏப்ரல் முட்டாள்கள் எனவும் அழைத்தனர்.

சீடர்களும் மூடர்களும்:கங்கை நதிக் கரையில் உள்ள ஆசிரமத்தில் நடந்த வேடிக்கையான சம்பவம் இது. ஆசிரமத்திற்கு வேண்டிய பொருட்களை சேகரிக்க சீடர்களுடன் குருவும் சேர்ந்து கொண்டார். காட்டில் விளையும் பொருட்களை ஓரிடத்தில் சேமித்து வைத்து இருந்தனர். மாலைப் பொழுது சாய்ந்து இருட்டிவிட்டது. அப்போது ஒரு புலி பயங்கரமாக உறுமிக் கொண்டு குருவின் மேல் பாய்ந்து விட்டது. உடனே அவரும் சுதாரித்துக் கொண்டு அருகில் கிடந்த கொடுவாளைக் கொண்டு ஒரே வீச்சில் புலியின் கழுத்தினை வெட்டிக் கொன்று விட்டார். சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டு, சீடர்களிடம் அந்தப் புலியினை நல்ல விதமாக அடக்கம் செய்யச் சொன்னார். சீடர்களும் அவ்வாறே செய்தனர். இரவில் நிம்மதியாகத் தூங்கிய பின் விடிந்த பிறகு குருவிடம் சீடர்கள் மெல்ல வினவினர். 'நீங்கள் உயிர்கள் இடத்தில் அன்பு வேண்டும், ஜீவ காருண்யம் வேண்டும் என்று போதித்து வருகிறீர்கள். தற்போது நீங்களே ஒரு புலியைக் கொன்றுவிட்டீர்களே, இதற்கு என்ன விளக்கம் தரப் போகிறீர்கள், எங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லையே' என்றனர். அதற்கு குரு, 'சீடர்களே, ஜீவ காருண்யம் தேவை என்று கூறியது உண்மைதான். கொல்லவரும் புலியை நான் கொல்லவில்லை என்றால் உங்களை நான் எப்படி காப்பாற்றுவது? நீங்கள் என்னைத் தான் நம்பியுள்ளீர்கள். உங்கள் பெற்றோர்களும் என்னை நம்பி உங்களை என்னிடம் ஒப்படைத்து உள்ளார்கள். இந்த நிலையில் ஒரு புலியைக் கொல்வது குற்றம் அல்ல. தர்மம் தான் என்றும், புலிக்கு பயந்து நாம் ஓட ஆரம்பித்தால் என்னையோ, உங்களையோ அது கொன்று புசித்துவிடும். அப்போது நாம் மூடத் தனமாக ஜீவ காருண்யத்தை சிந்திக்கலாகாது என்று கூறி அனைவரையும் அமைதிப்படுத்தினார். இடம், பொருள், காலம் அறிந்து செயல்படாவிட்டால் நீங்கள் சீடர்கள் அல்ல. மூடர்களே' என்றார். மேற்கொண்ட கதை உணர்ந்தும் நீதி என்னவென்றால், இக்கட்டான சூழ்நிலையில் பதட்டமாகி முடிவு எடுப்பவர் முட்டாள்.

மனப்பக்குவம் தேவை:நாமாக ஏமாந்தால் வருத்தப்படுவோம், பிறரால் ஏமாற்றப்பட்டால் கோபப்படுவோம், உணர்ச்சி வசப்படுவோம். நாம் பிறரை ஏமாற்றினால் மகிழ்ச்சி அடைவோம். கூட்டாக ஏமாற்றினால் கேலி பேசுவோம். கூட்டத்தோடு ஏமாந்தால் சமாளிப்போம். ஆனால் தனியாகவோ, கூட்டாகவோ சிரித்தால் மகிழ்ச்சி அடைவோம். கூடிக்குலாவி சிரித்து மகிழ்ந்தால் அனைவரும் நலம் பெறலாம். மன அழுத்தத்துடன் ரத்த அழுத்தமும் குறையும். விடுமுறைகளை மகிழ்ச்சியாகக் கழிக்கலாம். கவலையோ மகிழ்ச்சியோ, நாம் எடுத்துக் கொள்ளும் விதத்தைப் பொறுத்தது. முட்டாள்தனமான செய்கையினால் மகிழ்ச்சி மட்டுமல்ல, ஆபத்துக்கள் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. தவறான அழைப்பு கொடுப்பது, இ-மெயில் அனுப்புவது, தொலைபேசி, அலைபேசியில் குறுச்செய்தி, படங்கள் அனுப்புவது, அவசரம் என விளையாடுவது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும். இதைப் புரிந்து கொள்ள இந்த தினம் நமக்கு உதவுகிறது.

புண்படுத்தக்கூடாது:இல்லத்தில் தூசு இருந்தால் துடைத்து விடலாம். உள்ளத்தில் மாசு இருந்தால் நாம் தான் மதி இழப்போம். மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வது நல்லது தான். அதே நேரத்தில் அதனால் பிறர் மனம் புண்படாமல் பார்த்துக் கொள்வது மிக நல்லது. தூண்டில் இரும்பை இரை என்று மீன் விழுங்கினால் என்னவாகும் என்று நன்கு சிந்தித்து நாம் செயல் பட வேண்டும்.

"நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும்


பண்புள பாடறிவார் மாட்டு”


ஒருவரை இகழ்வதும் பரிகசிப்பதும் விளையாட்டிலும் துன்பம் தரவல்லது. அதே போல் பகைமையிலும் மற்றவர்களுடைய இயல்பை அறிந்து நடப்பது நல்ல பண்பு கொண்டோருக்கு நலம் பயக்கும் என வள்ளுவர் அறிவுறுத்துகிறார்.

சட்டையில் மை அடிப்பதும், கலர் காகிதம் ஒட்டுவதும், மிருகங்களை வதை செய்வதும், திடீர் என அதிர்ச்சி அளிப்பதும் நல்லதல்ல. மகிழ்ச்சி என்றாலும் கூட அதில் ஆபத்து நிறைந்திருக்கக்கூடும். அப்படிபட்ட விளையாட்டுகளை தவிர்க்கலாமே. ஒவ்வொருவரும் அறிவாளிகள்தான். ஆனால் அவரவர் மூளையில் சிறிது முட்டாள்தனமும் ஒளிந்துக் கொண்டுதான் இருக்கும். அதை வெளிப்படுத்தாத வரையில் நம் முட்டாள்தனம் பிறருக்கு தெரிய வாய்ப்புகள் இல்லை. நம் பேச்சு மற்றும் நடத்தைகள் மூலம் பிறருக்கு நம் முட்டாள்தனம் தெரிந்துவிடுகிறது. இத்தன்மையின் அளவு ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபடுகிறது என மனயியல் நிபுணர் டாக்டர் எரிக் பெர்ன் கூறியுள்ளார். இன்பமும் துன்பமும் கலந்தது தான் வாழ்க்கை. இளம் பருவத்தில் விளையாட்டுகள் வழக்கமானவைதான். ஆனால் அதை அளவோடும் பண்போடும் செய்தல் வேண்டும்.

அளவுக்கு மீறினால்...:முட்டாள்கள் தினத்தில் வேடிக்கை செய்தாலும், அதனால் பிறர் மனம் புண்படாதவாறு நடத்தல் வேண்டும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷம் என உணர்ந்து செயல்பட வேண்டும். இனிய சொற்களை ஒருவர் சொல்லுவதால் பிறர் இன்பம் அடைவதை காண்பவன் பயனற்ற துன்பம் தரும் சொல்லை ஏன் சொல்ல வேண்டும். ஏன் பயனற்ற செயல்களை செய்ய வேண்டும். சிந்தியுங்கள்... சிகரம் தொடுவீர்கள்...

- முனைவர் மா.தச.பூர்ணாச்சாரி, வழக்கறிஞர், சமூக ஆர்வலர், மதுரை. 94432 66674.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement