Advertisement

மீண்டும் பிறந்தேன் : தன்னம்பிக்கை நாயகி மாளவிகா அய்யர்

சிறுவயதில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் இரு கை, கால்களை இழந்த சிறுமி, இன்று பலருக்கு தன்னம்பிக்கை தந்து, சமூக சேவகியாய், தன்னம்பிக்கை பேச்சாளராய் திகழ்கிறார். அவர் தான் சென்னையின் மாளவிகா அய்யர். கும்பகோணத்தில் பிறந்து இன்று செயற்கை கை, கால்களுடன் பலரின் தன்னம்பிக்கைக்கு தூண்டுதலாக இருக்கும் மாளவிகா அய்யரை எத்தனை பேருக்கு தெரியும். உலகமே கொண்டாடும் இந்த நம்பிக்கை நாயகி 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த நேர்காணல்.
* உங்கள் இளம் வயது இனிமையானதாமே...
அந்த விபத்து நிகழும் வரை என் வாழ்க்கை இனிமையானது தான். கும்பகோணத்தில் பிறந்திருந்தாலும் அப்பாவின் பணி காரணமாக ராஜஸ்தான் மாநிலம் பிக்கானில் குடியேறினோம்.
விளையாட்டில் நான் சுட்டி. 'கதக்' நடனத்தில் கெட்டி. ஆனால் அது நீடிக்கவில்லை.
* உங்கள் வாழ்க்கையை புரட்டிய அந்த தருணத்தில் மனநிலை எப்படி இருந்தது.
நான் ஒன்பதாவது வகுப்பில் நுழைந்த பருவம். 2002 மே 26 ஞாயிறு அன்று வெளியில் கிடந்த ஒரு பொருளை என் அறைக்குள் எடுத்து வந்து விளையாடிய போது அது திடீர் என வெடித்தது. ஆறு மாதத்திற்கு முன், அருகில் நடந்த வெடிவிபத்தில் சிதறிய குண்டு அது. என் இரு கால்களும், கைகளும் சிதறின. என்னால் இனி நடக்க முடியாது என டாக்டர்கள் கை விரித்துவிட்டனர். குடும்பமே அதிர்ந்துவிட்டது. 80 சதவீதம் ரத்தத்தை இழந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தேன். சிகிச்சைக்காக ஜெய்ப்பூருக்கு மாறினோம். அங்கு இரண்டு ஆண்டு சிகிச்சை.
* தமிழக பிரவேசத்திற்கு காரணம்.
சென்னையில் சிகிச்சை நன்றாக இருக்கும் என்பதால் தமிழகத்தில் குடியேறினோம். சிகிச்சை முடிந்து 2003 டிசம்பரில் நடக்கத் தொடங்கினேன். நண்பர்கள் எல்லோரும் தேர்வுக்கு தயாரான போது நான் எழுத முடியாமல் தவித்தேன்.
*மீண்டும் கல்விப் பயணம் எப்படி.
அருகில் உள்ள பயிற்சி நிலையத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பித்தேன். நீண்ட இடைவெளிக்கு பின் அப்போது தான் வெளியே வரத் தொடங்கி இருந்தேன். அனைவரும் என்னை வினோதமாக பார்த்தது எனக்கு பிடிக்கவில்லை. மூன்று மாதத்தில் தேர்வு. முழுவீச்சில் தயாரானேன். முடிவு வந்த போது எனக்கான பாதை திறந்தது. அறிவியல் 100, இந்தியில் 99 மதிப்பெண் என முதலிடம் பிடித்தேன்.
*ஜனாதிபதி உங்களை கவுரவித்தாரே...
ஆமாம், அன்றைய ஜனாதிபதி அப்துல் கலாம், என் குடும்பத்தாருடன் என்னை வரவழைத்து பாராட்டினார். 98.5 'கட்ஆப்' மதிப்பெண் பெற்று, நான் விரும்பிய டில்லி செயின்ட் ஸ்டீபன் கல்லுாரியில் சேர்ந்தேன். தொடர்ந்து முதுநிலையில் சமூகப்பணி படிப்பு முடித்தேன்.
* பொது வாழ்வில் இறங்க தூண்டியது எது.
என்னைப் பற்றி தெரிந்து கொண்ட பலர், மெயில் வழியாக தொடர்பு கொண்டு பாராட்டினர்; கவுரவப்படுத்தினர். அவர்களின் வேண்டுகோள் படி தன்னம்பிக்கை உரையாற்றினேன்.
* உங்களின் இந்த பயணத்தில் துணையாக இருந்தது யார்
குடும்பத்தினர் ஆதரவாக இருந்தாலும் என் அம்மா தான் நிழலாக இருந்தார். நான் நடக்க முடியாது என டாக்டர்கள் கூறினர். இன்று நான் 'ஹை ஹீல்ஸ்' அணிந்து நடக்க காரணம் என் அம்மா. துன்பம் வரும் போது சிரிக்கும் கலையை கற்றுத் தந்தவர் அவர் தான்.
* என்றாவது இந்த நிலை கண்டு வருந்தியதுண்டா.
ஒருவேளை அந்த விபத்து நடைபெறாவிட்டால் இந்த நிலையை அடைந்திருக்க முடியாது. வாழ்க்கையில் சவால் வரும் போது அதை எதிர்கொள்ளும் ஆற்றல் இருந்தால் மீண்டு வர முடியும். ஆராய்ச்சி படிப்பிற்கு இடையே பிறருக்கு தன்னம்பிக்கை தரும் பணியையும் செய்து கொண்டிருக்கிறேன். இது தான் எனக்கு திருப்தி.
வாழ்த்த Malvika_iyeryahoo.co.in

Download for free from the Store »

Advertisement

வாசகர் கருத்து (16)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement