Advertisement

நேரு : முடிவும் தொடக்கமும்

1962-ஆம் ஆண்டுப் போர் இந்தியப் பொருளாதாரத்துக்கு பலத்த அடியைத் தந்திருந்தது. மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டமானது (1961-66) சிக்கன நடவடிக்கைகளுக்கும், மிகஅதிக வரிவிதிப்புக்கும், தியாகத்துக்கும், பாதுகாப்புச் செலவுகளை அதிகரிப்பதற்கும் அழைப்பு விடுத்தது. போரின் விளைவானது, இன்னொரு வகையில், நாட்டில் ஒற்றுமையையும் உறுதியையும் வலுப்படுத்தியது.அதற்கு நாற்பத்தி ஏழு ஆண்டுகளுக்குப் பிறகும் வரையறுக்கப்படாமல் இருக்கும் எல்லையைப் பொறுத்தவரையில், உயரமான மலைகள் நிறைந்த 2,680 மைல் தொலைவுக்கு எல்லையை வரையறை செய்வதில் பெரிய அளவுக்கு நடைமுறைப் பிரச்னைகளையும், புவியியல் பிரச்னைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. எண்ணற்ற வேறுபாடுகளை உள்ளடக்கிய எல்லையற்ற வகைகளைக் கொண்ட உலகில், மோதலுக்கு ஒரே ஆக்கப்பூர்வமான மாற்று சகவாழ்வு என்ற நேருவின் வழிமுறைதான் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டியது எல்லைப் பிரச்னையின் அரசியல் தீர்வுக்கு அவசியமாகும்.சிலைகள் வைத்தல், சாலைகளுக்குப் பெயரிடுதல் போன்ற எந்த வடிவிலும் ஒருவரை நிலை உயர்த்துவதை அல்லது வானளாவப் பாராட்டுவதை நேரு ஆக்கப்பூர்வமாக வெறுத்தார். 1949 ஜனவரி 8-இல் மேஜர் ஜெனரல் ஜே.என்.சவுத்ரிக்கு அவர் கடிதம் எழுதினார்: 'அன்புள்ள சவுத்ரி அவர்களுக்கு, இதனுடன் ஒரு பத்திரிகைச் செய்தி நறுக்கை இணைத்திருக்கிறேன். நான் கலக்கம் அடைந்திருக்கிறேன். எல்லாப் பெயர்களும் மாற்றப்படுவதை நான் விரும்பவில்லை. அதிலும் குறிப்பாக, என்னுடைய பெயர் இந்த வகையில் இணைக்கப்படுவதை நான் விரும்பவில்லை. பதே மைதானம் என்பது வரலாற்று அடிப்படையிலான பெயர், கவர்ந்திழுக்கக் கூடிய பெயர். வரலாற்றை அதனுடைய எல்லாத் தொடர்புகளுடனும் மறப்பது அல்லது மாற்றுவது என்பதும், மனிதர்களுடைய பெயர்களை இந்த வகையில் இணைப்பது என்பதும் ஏன் எவரேனும் ஒருவரின் வேலையாக இருக்க வேண்டும்? தயவு செய்து, இந்த விஷயத்தில் இது நடப்பதற்கு அனுமதிக்க வேண்டாம்' என்று எழுதியிருந்தார்.எப்படி நினைக்கப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள் எனக் கேட்டதற்கு, அவரது கல்லறைமீது பொறிக்கப்பட வேண்டிய வாசகத்தை அவரே எழுதிக்காட்டினார்:'இந்த மனிதன் இந்தியாவையும், இந்திய மக்களையும் மனம் நிறைய, இதயம் நிறைய நேசித்தவன். பதிலுக்கு அந்த மக்கள் அவனிடத்தில் செல்லம் காட்டினர். அவர்களது கட்டுக்கடங்காத அன்பை அவனுக்கு ஏராளமாக வாரி வழங்கினர்' எனக் குறிப்பிட வேண்டும் என எழுதியிருந்தார்.கீழே தரப்பட்டுள்ள ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த இரங்கல் செய்திகள் ஈடு செய்ய முடியாத அவருடைய இழப்புக்கு வருந்துவதாக இருந்தன: 'ஆப்பிரிக்க - ஆசிய உலகின் இதயத்தில்தான் இந்தத் துன்பம் மிக வலுவாக உணரப்பட்டது. ஏனெனில், இந்த உலகத்துக்காகத்தான் நேரு அவருடைய வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டிருந்தார்... ஆசிய, ஆப்பிரிக்காவின் விடுதலைப் போராட்டம்... காலஞ்சென்ற அந்த மாமனிதரின் தலைமையில்தான் நடந்தது...' - லே பியூப்பிள், அல்ஜியர்ஸ், 28 மே 1964'மகத்தான மனிதரான நேரு, உலகத்துக்கு எப்போதெல்லாம் வலுவான மன உறுதி தேவைப்பட்டதோ அப்போதெல்லாம் அத்தகைய வலுவான மன உறுதியைக் கொண்டிருந்தார். எப்போதெல்லாம் மனிதகுலம் பேரழிவு என்னும் படுகுழியின் விளிம்பில் நின்றதோ, எப்போதெல்லாம் பாதை இருண்டு கிடந்ததோ அப்போதெல்லாம் அவரிடத்தில் பெரும் அறிவாற்றலும், மாபெரும் இதயமும், அமைதியான சிந்தனையும், ஆழ்ந்த நுண்ணறிவும், நம்பிக்கைதரும் நடவடிக்கைகளும், சரியான கருத்துகளும் நிறைந்திருந்தன. பேரழிவில் இருந்து இந்த உலகத்தையும் மனித நாகரிகத்தையும் அவர் பலமுறை மீட்டுக் காப்பாற்றியிருக்கிறார். ' - அல்-பாத், டமாஸ்கஸ், 29 மே 1964'அரசியல் தத்துவத்தில் இருந்து ஆக்கப்பூர்வமான செயல்பாட்டுக்கு மாறும் ஆற்றல் படைந்த வெகு சிலரில் அவரும் ஒருவர். அணிசேராக் கொள்கை என்ற கருத்தோட்டத்தைப் படைத்தளித்த சிற்பி அவர். நலிவடைந்த நாடுகள் இடையே கண்ணியத்தை வளர்த்தவர்... எதேச்சதிகாரத்துக்கும் அடிமைத்தனத்துக்கும் வரம்பு கட்டிய... வலிமை மிகுந்த மூன்றாவது சக்தி என்ற கருத்தை உருவாக்கியவர்.' -அல் ஜரிதா, பெய்ரூட், 30 மே 1964'ஒரு வெளிச்சம் மறைந்துவிட்டது, ஒரு சகாப்தம் கடந்துவிட்டது. ஜவாஹர்லால் நேரு இறந்துவிட்டார்... அவர் ஒரு மகத்தான மனிதர் என்று நாம் சொல்லலாமா? ஆனால் அவர் அதற்கும் மேலானவர். அவர் ஒரு மனிதர். அவர் நமது நண்பராக இருந்தார் என்று நாம் சொல்லலாமா? ஆனால் அவர் அதற்கும் மேலானவராக இருந்தார். நமது அணு யுகத்தின் இருட்டுக்கு நடுவே, மனிதகுலத்தின் மீதான அவரின் அன்பு ஒளிவீசிக் கொண்டிருக்கிறது... இன்று அவருக்காக அழுகின்ற அனைவருடைய கண்ணீர்த் துளிகளில் மின்னும் சுடரொளியில், மனிதகுலத்தினர் இடையே அமைதியும் அன்பும் தழைப்பதற்கு முன்னெப்போதைக் காட்டிலும் அதிகமாகப் பாடுபட வேண்டும் என்ற மனஉறுதியைக் காண்கிறோம். இதைத் தவிர நாம் வேறு எதுவும் செய்வதற்கில்லை.' -தி காமனர், காத்மாண்டு, 28 மே, 1964'நேரு இல்லாத உலகத்தை... அவருடைய மதிப்பு வாய்ந்த விவேகம் இல்லாத, அவருடைய முதிர்ச்சியான தீர்ப்பு இல்லாத, அவரது தளராத துணிச்சல் இல்லாத உலகத்தை நினைத்துப் பார்ப்பது எவ்வளவு துயரம் தருகிறது... ஒருகாலத்தில் அடக்கி ஒடுக்கப்பட்டுக்கிடந்த கோடிக்கணக்கான மக்களின் இருப்பை வரலாற்று மேடையில் நிலைநிறுத்துவதற்கு பெரிதும் பாடுபட்ட... அந்த மனிதர் இல்லாமல், அமைதியான உலகத்துக்குள் தங்கள் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் ஆப்பிரிக்க, ஆசியக் குழுவை, ஒட்டுமொத்த அணிசேரா நாடுகள் சமூகத்தை நினைத்துப் பார்ப்பது எவ்வளவு துன்பம் அளிக்கிறது... ' -தி கானாயியன் டைம்ஸ், அக்ரா, 28 மே 1964 'பனிப்போரானது, உலகத்தைத் துண்டு துண்டாகச் சிதறடித்து விடக் கூடும் என அச்சுறுத்திக் கொண்டிருந்த வேளையில், உலக அமைதிக்கும் காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டத்துக்கும் நேரு ஆற்றிய தலை சிறந்த பங்களிப்பானது, அணிசேராமை என்ற கொள்கையை அவர் உருவாக்கியதில்தான் அடங்கியிருக்கிறது. அணிசேராமை என்பது இன்று சர்வதேச வெளியுறவுச் செயல்பாடுகளில் நன்கு வேரூன்றியக் கோட்பாக விளங்குகிறது. ' - தி ஈவினிங் நியூஸ், அக்ரா, 28 மே 1964எந்தக் கொள்கையும் எல்லாக் காலத்துக்கும் பொருந்தாது. மாறிவிட்ட சர்வதேச நிலவரத்தில் இன்று அணிசேராமை என்பது துல்லியமான பொருள் எதுவும் தருவதாக இல்லை. ஆனால் எந்த ஒரு குறிப்பிடத்தக்க இயக்கத்தையும் போலவே - மகளிர் வாக்குரிமைக்காக வாதாடியவர்கள் இயக்கம் முதல், அமெரிக்க மனித உரிமைப் போராட்டம், அணு ஆயுதப் படைக்குறைப்புக்கான இயக்கம், பெண்ணியம், பசுமை இயக்கம் வரையில் - அவற்றினால் விழிப்புணர்வு எந்த உயர்ந்த நிலைக்கு உயர்த்தப்பட்டதோ அந்த உயர்நிலை விழிப்புணர்வு நிலைத்திருக்கவே செய்யும். சக்தியற்றவர்களுக்கு அது உளவியல் ரீதியான வல்லமையை அளித்திருக்கிறது. அரசியல் பயன்கள் கிடைத்திருக்கின்றன. வல்லரசுகளின் நெருக்கடிகளைப் பொருட்படுத்தாமல் சுதந்தரமாக தகுதி அடிப்படையில் ஒவ்வொரு சர்வதேசப் பிரச்னையையும் மதிப்பிட்டு செயல்படும் உரிமை வாய்த்திருக்கிறது. அதைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதற்கான ஆற்றல் கிடைத்திருக்கிறது. வல்லரசுகளின் கொள்கைத்திட்டங்கள் இன்னும் ரத்தம் வடிந்து கொண்டிருக்கும் வடுக்களை ஆசியா நெடுகிலும் விட்டுச் சென்றிருக்கின்றன. அணிசேர்வதில் இருந்தும் ராணுவக் கூட்டணிகளில் இருந்தும் விலகி நிற்றல்,மற்றவர்களால் நமக்கு ஒதுக்கித் தரப்படும் பாத்திரத்தை ஏற்க மறுத்தல், வால் பிடித்துச் செல்லாமல் தலைமை ஏற்றுச் செல்வதை தேர்ந்தெடுத்தல் ஆகிய நேருவின் கொள்கை நியாயமான தீர்வுகளுக்குத் தேவையான விவேகமாக இன்றளவிலும் இருந்து வருகிறது. =========நேரு : உள்ளும் புறமும் நயன்தாரா சகல்தமிழில்: ஜெயநடராஜன்கிழக்கு பதிப்பகம்பக்கம் 320 விலை ரூ 200இணையத்தில் புத்தகத்தை வாங்க : https://www.nhm.in/shop/978-93-5135-152-8.htmlஃபோன் மூலம் புத்தகத்தை வாங்க : 09445901234 / 09445979797

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement