Advertisement

புத்துணர்வுக்கு யோகா

''தன்னை அறியத் தனக்கொரு கேடில்லைதன்னை அறியாமல் தானே கெடுகின்றான்


தன்னை அறியும் அறிவை அறிந்தபின்


தன்னை அர்ச்சிக்கத் தான் இருந்தானே''


என்று திருமூலரின் திருமந்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

பயிற்சி, முயற்சி, தவம் இவை மூன்றையும் தொடர்ந்து மேற்கொண்டால் மனிதன் மா மனிதனாக மாறலாம். இதற்கு ஒரு வழி தான் யோகக் கலை. நமது பாரம்பரிய கலையான யோகாவை மேலை நாட்டினர் புரிந்துகொண்டு பயன்பெறுகின்றனர். இதன் தொடக்க புள்ளியாக இருப்பது நம் நாடு. ஆனால் இங்கு பெரும்பாலானோர் பின்பற்றவில்லை என்பது வேதனையான விஷயும். இன்றைய நிலையில் மனிதனை கணக்கில் அடங்காத நோய்கள் தாக்குகின்றன. எங்கு பார்த்தாலும் மருத்துவ முகாம்கள் நடக்கிறது. அதே போல் யோக பயிற்சிக்கும் முகாம்கள் நடத்தினால் மக்கள் அனைவரும் பயன்பெறுவர். பிரதமர் மோடி நாட்டின் புறத்தூய்மைக்கு 'தூய்மை இந்தியா' திட்டத்தை அறிமுகப்படுதியுள்ளார். அதே போல் இந்திய குடிமகன்கள் அனைவரும் அகத்தூய்மை பெறும் வகையில் 'யோகா இந்தியா திட்டம்' செயல்படுத்த வேண்டும்.

புத்துணர்வு:செலவில்லாத யோகா பயிற்சியை முறையாக பயின்றால் நோய் இல்லாமல் வாழலாம். நம் உடலில் உள்ள உறுப்புகள், சுரப்பிகளுக்கு புத்துணர்வு கிடைக்கிறது. நம் நாட்டில் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவோர் அதிகரித்துள்ளனர். உணவில் அதிகப்படியான கொழுப்பு சத்தையும், மாவு சத்தையும் எடுத்துக்கொள்ளும் போது கணையத்தின் வேலை அதிகமாகிறது. எனவே வேலை மந்தமாக நடக்கிறது. கொழுப்பு சத்தும், மாவுச்சத்தும் நேரடியாக ரத்தத்தில் கலக்கிறது. இதன் காரணமாக நீரிழிவு நோய் ஏற்படுகிறது. கணையத்தை யோகா பயிற்சி மூலம் இயக்க வைக்க சில ஆசனங்கள் உள்ளன. இதை செய்யும் போது இதன் இயக்கம் மீண்டும் வேகமாக நடைபெறுகிறது. மனிதனின் உடலானது தன்னைத் தானே சரி செய்து கொள்ளும் வகையில் அமையப்பெற்றுள்ளது. உதாரணமாக சளி பிடித்தால் மூக்கில் நீர் வடிந்து கொண்டே இருக்கும். இது உடலின் நச்சுகளை வெளியேற்றுவது தான். நாம் அன்றே சரியாக வேண்டுமென்று நினைத்து மருந்து மாத்திரைகள் உட்கொள்கிறோம். இதனால் இந்த நச்சு கிருமிகள் முழுமையாக வெளியேறாமல் உடலில் தங்கி விடுகின்றன.

உள் உறுப்புகளுக்கு பயிற்சி:ஆனால் யோகாவில் உடலில் உள்ள உள் உறுப்புகளுக்கு பயிற்சி அளிக்கும் போது நச்சுக் கிருமிகள் அன்றே வெளியேற்றப் படுகிறது. இதனால் எந்த நோய்களும் நம்மை நெருங்காது. பிற பயிற்சிகள் உடலை மட்டுமே செம்மைபடுத்தும். ஆனால் யோகா உடல், மனம் இரண்டிற்கும் அமைதியையும், வலுவையும் ஏற்படுத்துகிறது. இதனால் கோபம் குறைந்து பிரச்னைகள் குறைகிறது. பிரதமர் மோடி அமெரிக்கா சென்ற போது நடந்த விருந்தில் எதுவும் சாப்பிடாமல், 'நான் நாற்பது ஆண்டுகளாக நவராத்திரி விரதம் இருந்து வருகிறேன். வெதுவெதுப்பான நீர் மட்டும் போதும்' என்று கூறினார். அதிபர் ஒபாமா வியப்படைந்து எவ்வாறு உங்களால் இவ்வாறு இருக்க முடிகிறது, என்று கேட்டுள்ளார். 'நான் யோகா பயிற்சி செய்து வருகிறேன். இதனால் இது சாத்தியமாகிறது' என்று கூறி யோகாவின் மகத்துவம் குறித்து எடுத்துக் கூறினார். நானும் இந்த பயிற்சியை மேற்கொள்கிறேன் என்றார் ஒபாமா. சித்தர்களும், யோகிகளும் செய்யக் கூடியது தான் யோகா என்று தவறாக புரிந்து வைத்துள்ளனர். முதியவர்களுக்கு யோகா பயிற்சி சரிப்படாது என்று நினைக்கிறார்கள். உலகில் உள்ள ஜீவராசிகளை அறிந்து அத்தனை ஆசனங்களையும் கண்டுபிடித்துள்ளனர். எளிய ஆசனங்கள் நிறைய உள்ளன. நின்றநிலை, அமர்ந்த நிலை என எளிய ஆசனங்கள், மூச்சு பயிற்சிகளும் உள்ளன. கோடை காலங்களில் நமது உடலை குளிர்ச்சி அடைய செய்யும் வகையிலும், குளிர் காலத்தில் வெப்பம் அடையச் செய்யும் வகையிலும் பயிற்சிகள் உள்ளது. நமது முதுகுத் தண்டுவட எலும்புகள் ரப்பர் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் அதிகப்படியான நரம்புகளும் உடல் உறுப்புகளும் தொடர்பில் உள்ளன. சாதாரண மனிதன் முதுகு தண்டுவடப் பகுதியை நான்கு புறமும் திருப்புவதில்லை. ஆனால் யோகா எலும்புகளுக்கு ஒரு வளைவு தன்மையை ஏற்படுத்துகிறது. இது போன்ற ஆசனங்களை செய்து விட்டு மூச்சு பயிற்சி செய்யும் போது ரத்த ஓட்டமும் ஆக்ஸிஜனும் உடல் முழுவதும் பரவி புத்துணர்வை அளிக்கிறது.

எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும்:மழைக்காலங்களில் உருவாகும் வைரஸ் கிருமிகள் யோகா பயிற்சி மேற்கொள்பவரை பாதிப்பதில்லை. அவர்களுக்கு எதிர்ப்பாற்றல் அதிகமாக இருக்கும் என்பது அறிவியல் பூர்வமான உண்மை. இவ்வளவு சிறப்பு வாய்ந்த யோக கலையை பள்ளிகளில் பயிற்றுவிக்க வேண்டும். இதனால் தனி மனித ஒழுக்கம், நல்ல பழக்கவழக்கம், புலனடக்கம் ஏற்படுகிறது. 'உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்...'என்று திருமூலர் எழுதியுள்ளார். உடம்பை வளர்ப்பது என்பது சதை பகுதிகளை மாமிசமாக வளர்ப்பதில்லை. உடம்பை யோக பயிற்சியின் மூலம் வனப்பாக வளர்க்க வேண்டும்.

- டி.ராஜமோகன், யோகா நிபுணர், தேனி. 94874 39263.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement