Advertisement

மனித குலம் வாழ காடுகளை காப்போம்..!

இன்று வலுவான நிலையில் உள்ள மனித இனம், நம்மில் பெரும்பாலானோர் அறியாமலேயே பெரும் அழிவை நோக்கி சென்று கொண்டுள்ளது. மக்களுக்கு உண்மை புரியாததால், 'காடுகளை அழித்து தொழிற்சாலைகளை நிறுவினால் நாம் மேலும் மேம்படலாம்' என நினைக்கின்றனர். காடுகளினால் நமக்கு ஏற்படும் நன்மைகள் ஏராளம் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் சுவாசிக்கும் காற்றில் 21 சதவீதம் ஆக்ஸிஜன் உள்ளது. இதை மட்டுமே நுரையீரல்கள் பயன்படுத்தி நம்மை இயங்க செய்கின்றன. காற்றில் ஆக்ஸிஜன் அளவு சீராக இருக்க காடுகளே காரணம். தாவரங்கள் காற்றில் உள்ள நச்சு வாயுவான கார்பன்டை ஆக்ஸைடை உட்கொண்டு சுத்தமான ஆக்ஸிஜனை வெளியேற்றுகின்றன. காற்றில் கார்பன்டை ஆக்ஸைடு 0.4 சதவீதம் மட்டுமே இருக்க வேண்டும். உலகில் 700 கோடி மக்கள் வெளியேற்றும் சுவாச காற்றிலும், 100 கோடி வாகனங்கள் வெளியேற்றும் புகையினாலும், உலகில் உள்ள 100 கோடி தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையிலும் உள்ள கார்பன்டை ஆக்ஸைடை காடுகளே உள்வாங்கி வாயு மண்டலத்தை சுத்தப்படுத்துகின்றன. ஆனால் காடுகளை தொடர்ந்து அழிப்பதால் காற்றின் மாசு 400 பி.பி.எம்., ஆக அதிகரித்துள்ளது. நாம் முன்பு பள்ளியில் தரும் குடிநீரை பருகினோம். தற்போது நம் குழந்தைகள் பிளாஸ்டிக் பாட்டில்களில் நீரை எடுத்துச் செல்கின்றனர். காடுகள் இல்லையெனில் வரும் சந்ததியினர் பள்ளிகளுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்களை எடுத்துச் செல்லும் அபாயம் உருவாகி விடும்.

மாறுபடும் தட்ப வெப்பம்:'கிரீன் ஹவுஸ் காஸ்' என அழைக்கப்படும் கரியமில வாயுக்கள் நம் பூமியின் தட்பவெப்ப நிலையை கட்டுப்படுத்துகின்றன. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை, நிலக்கரி எரிப்பதனால் ஏற்படும் மாசு, பிளாஸ்டிக் குப்பையை எரிப்பதால் உண்டாகும் மாசு போன்றவற்றால் கரியமில வாயுக்கள் உண்டாகின்றன. இந்த வாயுக்கள் பூமியை சூடேற்றுகின்றன. நாம் செயற்கையாக உருவாக்கும் கரியமில வாயுக்களினால் பூமியின் சீதோஷ்ணத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. இந்த மாற்றம் காரணமாக உலகில் சராசரி வெப்பநிலை 2030 ல் 0.7 முதல் 2.2 பாரன்ஹீட் வரை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

தண்ணீர்... தண்ணீர்...:காடுகள் இல்லையெனில் ஆறுகள் இல்லை. தென்னிந்தியாவில் உள்ள அனைத்து நதிகளும் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள காடுகளில் உருவாகின்றன. மேற்கு தொடர்ச்சி மலை உச்சியில் இருக்கும் புல்லும், சோலை காடுகளும், பொழியும் மழைநீரை தேக்கி வைத்து சிறிது சிறிதாக வெளியேற்றுகின்றன. இதன் மூலமே நதிகள் உருவாகின்றன. இக்காடுகள் அழிந்தால் நதிகள் வறண்டு விடும். களக்காடு முண்டந்துறையில் உருவாகும் தாமிரபரணி நதியில் ஆண்டுக்கு ஏழு மாதங்கள் மட்டுமே நீர் வரத்து இருந்தது. 1988 ல் அப்பகுதி புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. வனப்பாதுகாப்பில் மக்களும் பங்கேற்றனர். காடுகள் வளர்ந்தது. இதன் விளைவு இன்று தாமிரபரணி, ஆண்டு முழுவதும் வற்றாத ஜீவநதியாக மாறிவிட்டது. இதற்கு முக்கிய அடிப்படை, காடுகள் வளமாக உருவானதே. எனவே தண்ணீருக்கு அடிப்படையே காடுகள் தான் என புரிகிறது அல்லவா? அடர்ந்த காடுகளின் குளிர்ச்சியால் ஈர்க்கப்படும் நீராவியானது, மேகமாக திரண்டு குளிர்ந்து மழையாக மாறுகிறது. இதனால் ஏற்படும் குளிர்ச்சி மீண்டும் மீண்டும் மழை பொழிவை ஏற்படுத்துகின்றன. மழை நேரடியாக தரையில் பெய்தால், மண் அரிப்பு ஏற்பட்டு மண்வளம் அழிந்து விடும். ஆனால் காடுகளில் மழை பெய்யும் போது மண் அரிப்பு ஏற்படாமல், காடு மழைநீரை உள்வாங்கி சேமிக்கிறது. சேமிக்கும் நீரில் ஒரு பகுதியை பூமிக்குள் அனுப்பி, நிலத்தடி நீர் வளத்தையும் பாதுகாக்கிறது. ஆக மண்வளம், நதிகள் பாதுகாப்பு, நிலத்தடி நீர் பாதுகாப்பில் காடுகள் முக்கிய பங்காற்றுகின்றன.

மருத்துவத்தில் காடுகளின் பங்கு:புற்றுநோய் எதிர்ப்பு சக்தி உள்ள தாவரங்கள் 70 சதவீதம் காடுகளில் மட்டுமே உள்ளன. இன்று இந்த நோய் பாதித்த 80 சதவீத குழந்தைகள் காப்பாற்றப்பட்டு வருகின்றன. மடகாஸ்கர் காடுகளில் உள்ள 'பெரிவென்டிலா' என்னும் பூவில் இருந்து எடுக்கப்படும் 'வின்கிரிஸ்டின்' என்ற மருந்தே இதற்கு முக்கிய காரணம். ஆஸ்துமா நோய்க்கு பயன்படுத்தும் தியோபைலின் என்னும் மருந்தும் தியோலோரோமோ சாக்கோ என்னும் தாவரத்தில் இருந்து எடுக்கப்படுகிறது. எம்.ஆர்.எஸ்.ஏ., கிருமிக்கு எதிர் உயிரியாக பயன்படுத்தும் மைத்திலின் ஆன்டிபயாடிக், ஊசியிலை காடுகளில் வளரும் 'ரெட்கிடார்' எனப்படும் தாவரத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது. ரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்தும் முக்கிய மருந்தான 'கேப்டோபிரல்', விரியன்பாம்பு விஷத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது. யு.எஸ்., நேஷனல் கேன்சர் இன்ஸ்டிடியூட் அறிஞர்கள், 1987ல் மலேசியாவில் போர்னியோ எனும் மலைப்பகுதியில் வளர்ந்த "காலோபைலம்” மரத்தில் புற்றுநோயை குணப்படுத்தும் மருந்து இருப்பதை கண்டுபிடித்தனர். அடுத்த ஆய்வு தொடர்வதற்குள் அந்த மரத்தை அழித்துவிட்டனர். தற்போது அந்த மரம் சிங்கப்பூரில் உள்ளது. அங்கு ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர். இவ்வளவு நன்மை தரக்கூடிய காடுகள் ஒவ்வொரு ஆண்டும் 3 கோடி ஏக்கர் அளவிற்கு அழிக்கப்பட்டு வருகிறது. தினமும் 36 கால்பந்து மைதானம் அளவிற்கு காடுகள் அழிக்கப்படுகின்றன. ஒரு கால்பந்து மைதானம் 60 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்டது. மனிதகுலம் வாழ வேண்டுமானால், நம் சந்ததியினர் வாழ வேண்டுமானால் காடுகளும், இயற்கையும் வாழ வேண்டும். இன்று உலக வனநாள்; இன்று காடுகளை உருவாக்கவும், இருக்கும் காடுகளை பாதுகாக்கவும் உறுதி எடுப்போம். காடுகள் நமது சொத்து மட்டுமல்ல; நம் சந்ததிகளை காப்பாற்றும் கடவுளும் கூட.

- டாக்டர் சி.பி.ராஜ்குமார், நிர்வாக இயக்குனர், 'வனம்' சுற்றுச்சூழல் அமைப்பு தேனி. 99944 70300

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement