Advertisement

'சிரிப்பு' யாருக்கு சொந்தம்?

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நாயகர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், “சிந்திக்க தெரிந்த மனித குலத்திற்கே சொந்தமான சிரிப்பு” என பாடி, சிரிப்புகளை வகைப்படுத்தி நடித்திருப்பார். 'வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும்' என்பது பழமொழி. பாமரனும் எளிதில் புரிந்து கொள்ளும்படி நம் முன்னோர்கள் இந்த பழமொழியை நம்மிடையே விட்டுச் சென்றுள்ளனர். இதை அனுபவப்பூர்வமாக உணர்ந்ததால்தான் இப்படி சொல்லி இருக்கின்றனர் நம் மூதாதையர்கள்.இப்படிப்பட்ட மனமகிழ்ச்சியில் ஏற்படும் சிரிப்புக்கு கோடி கோடியாக பணத்தை கொட்டிக் கொடுத்தாலும் ஈடாகாது. ஆனால், இன்று பரபரப்பான சூழலில் சிரிக்க மறந்து, எதையோ தேடி நாம் ஓடிக்கொண்டு இருக்கிறோம்.
சிரிக்கும்போது நம்மிடம் :பல்வேறு முகபாவங்கள் தோன்று கின்றன. வாய்விட்டு மனதார சிரிக்கும்போதுதான் அதிகப்படியான தசைகள் இயங்குகின்றன. இது மருத்துவப்பூர்வமாக முகப்பொலிவுக்கு பயனளிக்கிறது. சிரிக்க மறந்து வாழ்வதால் நாம் மனிதர்களுக்குரிய இயல்பை இழந்து விடுகிறோம்.சிரிப்பை நாம் மறப்பதாலும், அதற்கான முயற்சிகளை எடுக்காமல் இருப்பதாலும், நமக்கு மன அழுத்தம், இருதய நோய், ரத்தக் கொதிப்பு, ஆஸ்துமா, உடல்பருமன், தலைவலி, மனச்சோர்வு, மனப்பதற்றம், இரைப்பை மற்றும் செரிமானம் சம்பந்தப்பட்ட தொந்தரவுகள், நரம்பு சிதைவு நோய், இளவயதிலேயே ஏற்படும் வயது முதிர்ச்சி, இளவயது மரணம் போன்றவை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். எனவேதான் மகிழ்ச்சியுடன் கூடிய சிரிப்பு, மேற் கூறிய உபாதைகளுக்கும், நோய்களுக்கும் மருந்தாகிறது.
மனதில் அமைதி :நாம் சிரிக்கும்போது 'என்டோர்பின்' எனப்படும் திரவம், மனித உடலிலுள்ள 'பிட்யூட்டரி' என்னும் சுரப்பியினால் சுரக்கப்படுகிறது. இது நம் உடலில் நன்னிலை உணர்வை தந்து இதமான சூழலை உருவாக்கும். அப்போது மனதில் அமைதி ஏற்படும்.வயது முதிர்வை நோக்கி உடம்பில் இயற்கையாக ஏற்படும் மாற்றங்களை சிரிப்பும், நகைச்சுவை உணர்வும் இருந்தால் குறைக்கலாம். சந்தோஷத்துடன் கூடிய சிரிப்பு மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கிறது.
ரத்தக் கொதிப்பு இல்லாமல் ரத்த அழுத்தத்தை சீராக வைக்க நகைச்சுவை உதவுகிறது. சிரிப்பும், ஆழமான நகைச்சுவையும் உடல், மனம், மூளை ஆகியவற்றின் ஆற்றலும் மேம்படும். உடல் வலியின் வீரியத்தை உடனடியாக குறைக்க சிரிப்பு அருமருந்து.இவ்வளவு நன்மைகள் தரும் சிரிப்பு என்னும் மகிழ்ச்சியை நமதாக்கி கொள்ள சில எளிய வழிகள் உள்ளன. அவற்றை உங்கள் வாழ்க்கை முழுவதும் பின்பற்றினால் வாழ்க்கையும் உங்கள் வசமாகும்.
எளிய வழிகள் :யோகா பயிற்சி, பிராணயாமம், தியானம் செய்யலாம்.மனதை சோர்வாக்கும் எண்ணங்களையும், செயல்களையும் தவிர்க்கலாம்.தேவையில்லாத பொறுப்புகளை தலையில் துாக்கி போட்டுக் கொள்ளாமல் இருக்கப் பழகலாம்.எந்த செயலையும் தள்ளிப்போடுவதை தவிர்க்க வேண்டும்.நம்மைச் சுற்றி நாள்தோறும் சுழலும் ஒழுங்கற்ற சூழலை தவிர்க்க பழகலாம்.எப்பொழுதும், எங்கேயும் காலம் தாழ்த்தி செல்வதையும், செய்வதையும் தவிர்க்க வேண்டும்.நம்மை நாமே கட்டுப்படுத்தி, அடுத்தவரின் செயல்களை, பல்வேறு சூழ்நிலைகளிலும் மனதார, உள்ளது உள்ளபடி ஏற்றுக்கொள்ள பழக வேண்டும். அடுத்தவர்களை கட்டுப்படுத்த எண்ணாமல் இருக்க வேண்டும்.பல பணிகளை ஒரே நேரத்தில் செய்வதை தவிர்க்க வேண்டும்.கடினமான, பிரச்னைக்குரிய மனிதர்களிடம் பழகுவதை தவிர்க்க வேண்டும்.எளிமையான வாழ்கையை வாழவும், ஏற்றுக்கொள்ளவும் பழக வேண்டும்.அமைதியான, ஆர்ப்பாட்டமில்லாத வகையில் செயல்களை செய்ய வேண்டும்.அடுத்தவருக்கும், தேவை உள்ளவர்களுக்கும் முடிந்தவரை உதவ வேண்டும்.வேலைப் பளுவுக்கு இடையே போதுமான அளவு ஓய்வெடுக்க வேண்டும்.அவ்வப்போது, தினசரி எளிமையான உடற்பயிற்சி செய்ய வேண்டும்.சத்துக்கள் நிறைந்த பல்வேறு இயற்கை உணவு உண்பதை தினசரி பழக்கமாக மாற்ற வேண்டும்.நன்றி உணர்வோடு இருக்க பழக வேண்டும். இந்த மாதிரியான அனைத்து விஷயங்களையும் கடைபிடிக்க ஆரம்பித்தால், நமது வாழ்வில் மகிழ்ச்சியும், சந்தோஷமும் நிச்சயம். அதனால் ஏற்படும் சிரிப்பும் நமதாவது நிச்சயமே.-டாக்டர். அனிதாமாநகராட்சி நகர்நல அலுவலர்,திண்டுக்கல்.98421- 28833.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement