Advertisement

நேருவின் தோழர்கள்

அணிசேரா இயக்கத்தின் முதல் நீரோட்டத்தில், விடுதலைப் போராட்டங்களின்போது உருப்பெற்ற உறவுகளினால் அமைந்த ஓர் உணர்ச்சிகரமான உள்ளடக்கம் இருந்தது. டச்சுக்காரர்கள் ஆட்சியில் இருந்து விடுதலை பெறுவதற்கான இந்தோனேசியாவின் போராட்டத்தை இந்தியா ஆதரித்தது. 1950-இல் இந்தியாவுக்கு வந்துவிட்டு திரும்பிச் சென்ற இந்தோனேசிய அதிபர் சுகர்னோ தலைநகர் ஜாகர்தாவில் இருந்து 1950 பிப்ரவரி 14-இல் நேருவுக்கு ஒரு கடிதம் எழுதினார்:'என் அன்புக்குரிய பண்டிஜி, ஜவஹர்லால்ஜி,இந்தியாவில் இருந்து திரும்பி வந்ததற்குப் பிந்தைய நாட்களில், உங்கள் நாட்டில் நான் மேற்கொண்ட பயணம் குறித்து நினைத்துப் பார்ப்பதற்கு எனக்கு நிறைய நேரம் இருந்தது.என் வாழ்வின் மிக முக்கியமான கட்டங்களில் ஒன்றாக அதை நான் திரும்பிப் பார்க்கிறேன். இதை நான் சொல்லும்போது இந்தோனேசியாவின் அதிபர் என்ற முறையில் நான் பேசவில்லை. மாறாக, இன்றைய அரசியலின் இறுகிய நலன்களுக்கு அப்பால், சகோதரத்துவத்தின் நட்புறவின் புதிய எல்லைகளைக் கண்டுகொண்ட ஒருவன் என்ற முறையில் பேசுகிறேன். நமது நாடுகளுக்கு இடையிலான சகோதர உறவுகளில் செயற்கைத்தனம் எதுவும் இல்லை என்பதை முன் எப்போதைவிடவும் இப்போது நான் அதிகமாக நம்புகிறேன். பத்மாவும் நானும், உண்மையில் இந்தப் பயணத்தில் எங்களுடன் வந்த எல்லோரும், நாங்கள் சென்ற இடங்களில் எல்லாம் சகோதரர்களையும் சகோதரிகளையும் கண்டோம். பல நூற்றாண்டுகளாக இணைந்து செல்லும் வரலாறுகளைக் கொண்ட மக்கள் என்ற முறையில், நமது கலாசார சின்னங்கள் ஆன்மிக அடிப்படையிலும், பொருள் வடிவிலும் நெருக்கமான உறவுகளைக் கொண்டவை என்ற முறையில், இன்றைய உலகப்பிரச்சினைகளில் ஒன்றுகூடும் வழியில் ஒன்றை ஒன்று சந்தித்துக் கொள்கின்ற நாடுகள் என்ற முறையில் நாம் சேர்ந்து நிற்கிறோம் என்ற உண்மையை அந்தக்கணத்தில் உணர்ந்துகொண்டதன் வெளிப்பாடாகத்தான் எல்லா இடங்களிலும் தன்னெழுச்சியான உற்சாகச் சூழலை நாங்கள் எதிர்கொண்டோம்.இந்தியாவில் பலருடன் எனக்குக் கிடைத்த தொடர்புகள், குறிப்பாக உங்களுடைய தொடர்பு, பொதுவாக உலகப் பிரச்சினைகளைப் பற்றி, குறிப்பாக ஆசிய உறவுகளைப்பற்றி நான் அறிவுத் தெளிவு பெற பெருமளவுக்குப் பங்களிப்பு செலுத்தியிருக்கிறது. உண்மையில் என்னுடைய இந்த குறுகியகாலப் பயணம், இன்றையப் பிரச்சினைகளைப் பற்றிய என்னுடைய முழுக் கண்ணோட்டத்தையும் மகத்தான அளவுக்கு செழுமைப்படுத்திஇருக்கிறது. உங்களுடனும், மகிழ்ச்சி அளிக்கும் உங்கள் குடும்பத்தினருடனும், உறவினர்களுடனும் தங்கி இருந்தபோது எங்களுக்குக் கிடைத்த உளங்கனிந்த விருந்தோம்பலுக்காக, நானும் பத்மாவும் சேர்ந்து மிக்க மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்களுடன் இருந்தபோது முற்றிலும் எங்கள் வீட்டில் இருப்பது போன்றே உணர்ந்தோம். எல்லாவற்றுக்கும் மேலாக அது 'சொந்தங்களுடன்' இருப்பது போன்ற உணர்வை உண்மையில் எங்களுக்கு அளித்தது. விஜயலட்சுமி, இந்திரா, தாரா ஆகியோருக்கு எங்களின் அன்பான வாழ்த்துகளையும், அழகான உங்கள் பேரக்குழந்தைகளுக்கு எங்களின் முத்தங்களையும் தெரிவிப்பீர்களா? அவர்கள் எல்லோரும் எப்படி இருக்கிறார்கள்?நாங்களும் இந்தோனேசிய மக்கள் எல்லோரும் இந்தோனேசியாவுக்கு உங்களின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்...ஜெய் ஹிந்த்சுகர்னோ'இதற்கு பிப்ரவரி 28-ஆம் தேதி நேரு பதில் எழுதினார்:'என் அன்புக்குரிய சுகர்னோ அவர்களுக்கு,பிப்ரவரி 14-ஆம் தேதியிட்ட உங்கள் கடிதத்துக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நீங்களும் பத்மாவும் சில நாட்கள் எங்களுடன் தங்கி இருந்ததில் நாங்கள் எல்லோரும் எந்த அளவுக்கு மகிழ்ச்சி அடைந்தோம் என்பதை என்னால் சொல்ல முடியவில்லை. நாங்கள் உங்களை சாதாரண முறையில் நடத்திவிட்டோமோ என்றும், அரசுமுறை அம்சத்துக்கு அதிக அழுத்தம் கொடுக்கவில்லையோ என்றும் நான் அஞ்சுகிறேன். ஆனால்நீங்கள் பெரிதும் எங்களைப் போலவே இருந்ததால், வெறுமனே மரியாதைக்குரிய புதியவர்களைப் போல உங்களை நடத்துவது கடினமாக இருந்தது. நீங்களே சொல்லி இருப்பது போல, எங்களது பொதுவான சூழலுக்குள் மட்டும் அல்லாமல் எங்கள் குடும்ப வட்டத்துக்குள்ளும் நீங்கள் முழுமையாக இணைந்துவிட்டீர்கள்.வெகு காலத்துக்கு முந்தைய கடந்த காலம், மிக அண்மைக் கால கடந்த காலம் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய வரலாற்று வழி முழுவதும், நமது இரு நாடுகளையும் நெருங்கிவரச் செய்திருக்கிறது என்ற நெடிய சிந்தனை எனக்கு உண்டு. அந்த நிகழ்வுகளின் திசை வழிக்கு, தனிச் சிறப்பு வாய்ந்த மனிதர்களும், அவர்களுக்கு இடையிலான உறவுமுறையும் ஓரளவுக்கு உதவியாகவும், ஓரளவுக்கு அவற்றைக் கட்டுப்படுத்துகின்ற வகையிலும்இருந்திருக்கிறார்கள், இருந்திருக்கின்றன.நல்வாய்ப்பாக நமக்கு, நீங்களும் நானும் தனிமனிதர்கள் என்ற வகையில் அதிக அளவில் பொதுவான அம்சங்கள் இருக்கின்றன. அதைத்தான் தன்னியல்பாக நாம் ஒருவரிடம் ஒருவர் எடுத்துச் செல்கிறோம்.எங்கள் தூதர் டாக்டர் சுப்பராயன் விரைவில் இந்தோனேசியாவுக்கு வர இருக்கிறார். அவரிடம் உங்களுக்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு ஜோடி கண்ணாடிகளைக் கொடுத்து அனுப்பலாம் என்று கருதுகிறேன். இதுபோன்ற பொருள்களை உருவாக்கும் எங்களது முதல் முயற்சிகளில் இதுவும் ஒன்று. அநேகமாக இந்த வகைப் பொருளில் இதுவே இந்தியாவில் முதன் முதலாகத் தயாரிக்கப்பட்டதாக இருக்கலாம். உங்கள் குழந்தைகளுக்காக மின்சார ரயில் ஒன்றை வாங்குவதற்கும் நான் முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். நான் விரும்பும் வகையிலான ஒன்றை நாங்கள் இங்கே எங்கேயும் வாங்க முடியாது. எனவே லண்டனில் உள்ள எங்கள் தூதரிடம் அதை முயற்சிசெய்து வாங்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறேன். உங்களுக்கும் பத்மாவுக்கும் எங்களுடைய அன்பும், நல்வாழ்த்துக்களும்.மெர்தேகா.உங்கள் நேர்மையுள்ள,ஜவாஹர்லால் நேரு0பிற்சேர்க்கை: அணிசேரா இயக்கம் பற்றிய மிகவும் நெருக்கமான மூன்று பார்வைகள்1953-54ல் ஐ.நா. பொதுப் பேரவையின் தலைவர் என்ற முறையில் இந்தோனேசியாவுக்குச் சென்ற விஜயலட்சுமி சுகர்னோ தம்பதியின் மணவாழ்க்கைப் பிரச்னைக்குள் இழுக்கப்பட்டார். இந்திய மக்களின் உள்ளங்களைக் கவர்ந்தவர் அதிபர் சுகர்னோவின் அழகிய இளம் மனைவி பத்மா. அவருக்கு ஐந்து குழந்தைகள் இருக்கின்றன. இந்நிலையில் சுகர்னோவுக்கு இன்னொரு மனைவியும் குழந்தைகளும் ஏற்பட்டது பத்மாவுக்கு துன்பத்தை தந்தது. பத்மாவிடம் அனுதாபம் காட்டுவதைத் தவிர தன்னால் செய்ய முடிந்தது எதுவும் இல்லை என்று பின்னர் தன் சகோதரரிடம் விஜயலட்சுமி தெரிவித்தார். ஏனெனில் கவர்ச்சியான பெண்களிடம் எளிதில் உணர்ச்சிவயப்படுபவர் சுகர்னோ என்பது எல்லோரும் நன்கறிந்த ஒன்று.1959ல் காமன்வெல்த் பிரதமர்கள் மாநாடு முடிந்த பிறகு, இலக்கம் 9ல் உள்ள லண்டன் கென்சிங்டன் அரண்மனைத் தோட்டத்தின் படிக்கட்டுகளுக்கு அப்பால் என்குருமாவைக் கண்ட நேரு, பாதி திகைப்புடனும் பாதி எரிச்சலடைந்த நிலையிலும், 'அஞ்சல் தலையில் உங்கள் தலையை போட்டிருப்பதன் மூலம் நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?' என்று கேட்டார். பதிலுக்கு என்குருமா சிரிக்க மட்டுமே செய்தார். அவர்களுடன் நின்று கொண்டிருந்த எனக்கு, நேரு 'நாணயம்' என்றுதான் சொன்னாரே தவிர 'அஞ்சல் தலை' என்று சொல்லவில்லை என்பது நினைவுக்கு வருகிறது.மார்ஷல் டிட்டோவுடனான இந்தியாவின் உறவு காதல் தொடர்பான ஆச்சரியங்களாலோ அல்லது அரசியல் சார்ந்த ஆச்சரியங்களாலோ தொல்லைக்கு உள்ளாகவில்லை. 1954ல் இந்தியாவுக்கு வருகை தந்த டிட்டோவும் அவரது குழுவினரும் கிறிஸ்தமஸ் வேளையில் இமாச்சலப் பிரதேசத்துக்கு சென்றனர். அந்த மாநிலத்தின் துணைநிலை ஆளுநராக இருந்த மேஜர் ஜெனரல் ஹிமத்சின்ஜி, அந்தப் பயணம் பற்றி விரிவாக விவரித்து 5 ஜனவரி 1955 அன்று பிரதமர் நேருவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அந்தப் பயணம் பெரிதும் வெற்றிகரமான பயணம் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். டிட்டோ எளிதில் அணுகக்கூடியவராகவும், வெளிப்படையாக பேசுகின்றவராகவும் , நட்புடன் பழகுபவராகவும் இருந்தார் என்று கூறியிருக்கிறார். மலைகள் நிறைந்த அவரது சொந்த நாட்டை நினைவுபடுத்துவதாக இருந்ததால், மலை மாநிலமான இமாச்சலப் பிரதேசம் குறித்து அவர் பெருத்த ஆர்வம் காட்டினார். அந்த மலைப் பகுதியில் 350 மைல் தொலைவுக்கு மோட்டார் வாகனங்கள் செல்லக்கூடிய சாலைகளையும், 250 மைல் தொலைவுக்கு ஜீப்புகள் செல்லும் சாலைகளையும், ஆயிரம் மைல்களுக்கு புதிய ஒழுங்கமைப்புகளையும் அரசு ஏற்கெனவே அமைத்திருக்கிறது என்பதைக் கேட்டு டிட்டோ வியப்படைந்தார். ஒரு ராணுவ வீரர் இன்னொரு ராணுவ வீரருக்குச் சொல்லும் வகையில், கடந்த போரின்போது தான்இத்தாலி, மால்டா, சைப்ரஸ் ஆகிய இடங்களில் இருந்ததை மேஜர் ஜெனரல் ஹிமத்சின்ஜி டிட்டோவிடம் தெரிவித்தார். அப்போது போர்க்கள உடையில் எதற்கும் அஞ்சாதவர்களாகத் தோன்றும் பெண்களை பார்த்ததாகவும், அவர்கள் யுகோஸ்லேவியப் படையைச் சேர்ந்தவர்கள் என்றும், விமானங்கள் மூலம் அவர்கள் இந்த இடங்களுக்கு அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள் என்றும் அவரிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் ஹிமத்சின்ஜி டிட்டோவிடம் கூறினார். தங்களது படைவீரர்களில் பெரும்பகுதியினர் பெண்கள்தான் என்றும், கெரில்லா போர் அவர்களை சிறந்த வீராங்கனைகளாக உருவாக்கி இருந்தது என்றும், ஆண்களைக் காட்டிலும் அவர்கள் கட்டுப்பாட்டில் மேலானவர்கள் என்றும் டிட்டோ அதற்கு பதில் அளித்தார். =========நேரு : உள்ளும் புறமும் நயன்தாரா சகல்தமிழில்: ஜெயநடராஜன்கிழக்கு பதிப்பகம்பக்கம் 320 விலை ரூ 200இணையத்தில் புத்தகத்தை வாங்க : https://www.nhm.in/shop/978-93-5135-152-8.htmlஃபோன் மூலம் புத்தகத்தை வாங்க : 09445901234 / 09445979797

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement