Advertisement

ஜனநாயக ஆணிவேருக்கு தேவை ஆப்பரேஷன்!

நம் நாட்டில் நடக்கும் தேர்தல், கமிஷனின் பல்வேறு சட்ட திட்டங்கள், கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நடந்தாலும் விதிமீறல்களுக்கு குறைவில்லை. இதை கட்சிகள், அதிகாரிகள் வெளிப்படையாக ஒத்துக்கொள்கின்றனர். எனவே தேர்தல் சீர்திருத்தம் தேவை என்ற குரல் எல்லா பக்கங்களில் இருந்தும் எழத் துவங்கியுள்ளது. ஜனநாயகத்தின் ஆணிவேரான தேர்தலில் முறைகேடுகள் நடப்பதை அனுமதிக்கக் கூடாது.
ஜனநாயகம் தழைக்க, லஞ்ச லாவண்யத்தை ஒழிக்க, ஜாதி, மத வெறியற்ற சமுதாயத்தை உருவாக்க தற்போதைய தேர்தல் முறையை மாற்றி விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையை (proportional representation) அமலாக்க வேண்டும். ஓட்டளிப்போரின் விருப்பம் தேர்ந்தெடுக்கப்படும் மன்றத்தில் பிரதிபலிப்பதுதான் விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறை. உதாரணமாக 30 சதவீத வாக்காளர் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களித்தால் அந்த கட்சிக்கு தேர்ந்தெடுக்கப்படும் மன்றத்தில் 30 சதவீத பிரதிநிதித்துவம் (இருக்கைகள்) கிடைக்க வேண்டும். சுருக்கமாக எல்லா வாக்குகளுக்கும் தேர்தல் முடிவில் பங்கிருக்க வேண்டும். பெரும்பான்மை மட்டும் முடிவு செய்யக் கூடாது.

ஊழலின் ஊற்று கண்:தேர்தல் அறிவிக்கப்பட்டதும் தொகுதிகள் வாரியாக ஓட்டு விவரங்களை ஜாதி, மத அடிப்படையில் கட்சியினர் கணக்கெடுத்து விடுகின்றனர். வேட்பாளர் தேர்வும் பெரும்பாலும் ஜாதி, மதம், பணம் வசதி அடிப்படையில் நடக்கிறது. தேர்தல் கமிஷன் நிர்ணயித்த தொகையை விட கூடுதலாக செலவழித்து தான் வேட்பாளர்கள் வெற்றி பெறுகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே. ஓட்டிற்கு பணம் கொடுப்பதை முழுமையாக தடுக்க முடியவில்லை என்பதை தேர்தல் கமிஷனே ஒப்புக்கொள்கிறது.

கொள்கையற்ற கூட்டணி:'அரசியலில் எதுவும் நடக்கலாம். நிரந்தர நண்பரும் அல்ல - நிரந்தர எதிரியும் அல்ல' என்பது போன்ற பு ரையோடிப் போன விஷயங்களை கூறிக்கொண்டு நேற்று வரை தனிப்பட்ட முறையிலும், கொள்கையளவிலும் தரம் தாழ்ந்து குறை கூறிக் கொண்ட கட்சிகள் திடீரென கொள்கை இல்லா கூட்டணி அமைத்துக்கொள்கின்றன. மக்கள் எல்லாம் ஏமாளிகள் என்று நினைத்து அவர்களின் மறதியை பயன்படுத்தி அதை நியாயப்படுத்தி தைரியமாக மேடையில் பேசுகின்றனர். ஆட்சியை பெற வேண்டும் என்பது தான் கட்சிகளின் பொதுவான கொள்கை. ஒரு கட்சியின் கொள்கையை விரும்பும் வாக்காளர் தன்னுடைய தொகுதியில் வேறு ஒரு கூட்டணி கட்சி போட்டியிட்டால், தான் விரும்பும் கட்சிக்கு வாக்களிக்க முடியாது. அதேபோல் வேட்பாளர் தகுதியற்றவர் என வாக்காளர் கருதினால் தற்போது 'நோட்டா' முறை இருந்தாலும் பலர் வாக்களிக்க மனம் இல்லாமல் தனது ஜனநாயக கடமையை ஆற்றாமல் ஒதுங்கி போய்விடுகின்றனர். இடைத்தேர்தல் தான் முறைகேடுகளின் உச்சகட்டம். அரசு நிர்வாகம் ஸ்தம்பிக்கிறது. எனவே இடைத்தேர்தலே வராத ஒரு தேர்தல் முறை தான் வேண்டும். வேட்பாளர்களை அடிப்படையாக கொள்ளாத, கட்சி அடிப்படையிலான விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையே நமது நாட்டிற்கு பொருத்தமானது. இப்புதிய தேர்தல் முறை அமலானால்

* ஒவ்வொரு ஓட்டு சீட்டிலும் (தற்போது மின்னணு வாக்கு இயந்திரம்) கட்சிகளின் சின்னங்கள் அனைத்தும் இருக்கும். வேட்பாளர் பெயர் இடம் பெறாது.


* தேர்தலுக்கு முன் எந்த கூட்டணியும் வைக்க முடியாது.


* தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு கட்சியும், தேர்தல் நடைபெறும் மொத்த இடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தங்கள் கட்சி பிரதிநிதிகள் பட்டியலை முதலிலேயே கொடுத்துவிட வேண்டும். அந்த வரிசையில் தான் தங்களுக்கு கிடைத்த இடங்களுக்கு பிரதிநிதிகளை அறிவிக்க வேண்டும்.


* மொத்தம் பதிவான வாக்குகளில் ஒவ்வொரு கட்சிக்கும் கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் லோக்சபா/ சட்டசபையில் அக்கட்சிகளுக்கு பிரதிநிதித்துவ எண்ணிக்கை முடிவு செய்யப்படும்.


* எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாவிட்டால் கட்சித் தலைவர்கள் ஒத்த கட்சிகளுடன்


கூட்டணி ஏற்படுத்திக் கொண்டு ஆட்சி அமைக்கலாம். இதில் குதிரை வியாபாரம் நடக்காது.


* இடைத்தேர்தல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டால் அந்த கட்சி தலைவர் ஏற்கனவே அறிவித்த பட்டியலில் மீதம் உள்ளவரில் யாரேனும் ஒருவரை தேர்வு செய்து அறிவிக்கலாம்.


* இதனால் ஓட்டுக்கு பணம் கொடுப்பது உட்பட முறையற்ற செயல்கள் தவிர்க்கப்படும்.

கனிகிறது காலம்:விகிதாசார பிரதிநிதித்துவ முறையை முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் லிங்டோ உட்பட பலர் வலியுறுத்த துவங்கியுள்ளனர். லோக்சபா தேர்தலில் பா.ஜ., பெற்ற மொத்த ஓட்டுக்கள் 17,16,37,684 (31 சதவீதம்). காங்., 10,69,35,311 (19.3 சதவீதம்). ஆனால் 543 உறுப்பினர்களை உள்ளடக்கிய லோக்சபாவில் பா.ஜ., எண்ணிக்கை பலம் 282 (51.9சதவீதம்). காங்., பலம் 44 (8.1சதவீதம்). 19.3 சதவீதம் ஓட்டுக்கள் பெற்ற காங்.,க்கு 8.1 சதவீதம் பிரதிநிதித்துவம் தான் கிடைத்தது. பா.ஜ.,விற்கு இது மகிழ்ச்சியை தந்தாலும், டில்லி தேர்தல் முடிவுகள் சிந்திக்க வைத்திருக்கும். 54.3 சதவீதம் ஓட்டுக்கள் பெற்ற ஆம் ஆத்மி 67 இடங்களை பெற்றிருக்கும் போது 32.7 சதவீதம் ஓட்டுக்கள் பெற்று வெறும் 3 இடங்கள் மட்டுமே பா.ஜ.,விற்கு கிடைத்துள்ளது. 9.7 சதவீதம் பெற்ற காங்.,க்கு ஒரு இடமும் இல்லை. அக்கட்சிக்கு 8,66,962 பேர் ஓட்டளித்தனர். அவர்கள் சார்பில் சட்டசபையில் பேசுவதற்கு ஒரு பிரதிநிதியும் இல்லை.

94 நாடுகளில் அமல்:ஆஸ்திரேலியா, பிரேசில், டென்மார்க் உட்பட 94 நாடுகளில் இம்முறை சிறு சிறு மாறுதலுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது. 'பார்ட்டி லிஸ்டை' சமர்ப்பிக்கும் முறை 85 நாடுகளில் உள்ளன. தற்போதைய முறையை விட விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையில் குறைபாடுகள் மிக குறைவு தான். நம் சூழலுக்கு ஏற்ப எந்த மாதிரியான விகிதாசார பிரதிநிதித்துவ முறையை அமலாக்கலாம் என்பது குறித்து வல்லுனர் குழு ஆலோசனை பெற்று மக்கள் விவாதத்திற்கு விட வேண்டும். மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் இம்முறை அமலாக்கப்பட வேண்டியது அவசியம்.

- எஸ்.ரத்தினவேல், முதுநிலை தலைவர், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், மதுரை. 98430 53153.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement