Advertisement

சுவாசத்தை விஷமாக்கும் மரம்

நிலத்தடி நீர்மட்டம் பெருக வேண்டும். இயற்கைவளம் பாதுகாக்க வேண்டும். புவிவெப்பத்தை குறைக்க வேண்டும். சுத்தமான காற்றை சுவாசிக்க வேண்டும். அனைத்தும் வேண்டும் எனில் ஒன்று மட்டும் செய்ய வேண்டும். சீமைக் கருவேல மரங்களை வேரோடு அழிக்க வேண்டும்! நம்மை அடிமைபடுத்திய சீமைக்காரர்களை (வெள்ளையர்கள்) விரட்டி சுதந்திர இந்தியாவாக மாற்றினோம். ஆனால் சீமைக் கருவேல மரங்களை மட்டும் நம்மால் அழிக்க முடியவில்லை. வெட்ட வெட்ட வீறு கொண்டு எழுந்து நிலப்பரப்பை சத்தமின்றி கபளீகரம் செய்யும் இந்த மரங்களைப் பற்றி இன்னும் கொஞ்சம் அறிந்து கொள்வோம்.பெரும்பாலான மரங்கள் நாம் வெளியிடும் கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சிக் கொண்டு நாம் சுவாசிப்பதற்கு தேவையான ஆக்ஸிஜனைத் தருகின்றன. சீமைக் கருவேல இதற்கு விதிவிலக்கு. ஆக்ஸிஜனை உட்கொண்டு கார்பன் டை ஆக்ஸைடை தருவதோடு இயற்கை வளத்தை கெடுத்து கொண்டிருக்கின்றன. மரத்தின் வேர்கள் 175 அடி ஆழம் வரை செல்கின்றன.

ஒரு அடிக்கு ஆயிரம் லிட்டர்:இம்மரம் ஒரு அடி உயரம் வளர்வதற்கு ஆயிரம் லிட்டர் தண்ணீரை எடுத்துக் கொள்கிறது. மற்ற மரங்கள் 50 முதல் 100 லிட்டர் தண்ணீரை எடுத்துக் கொள்கின்றன. ஒரு மரம் ஆண்டிற்கு 10 ஆயிரம் விதைகளை உற்பத்தி செய்து காற்றில் பரப்புகிறது. மரத்தின் உயரம் அதிகபட்சமாக 40 அடி, சுற்றளவு நான்கு அடி. ஒரு மாதத்தில் 20 முதல் 30 கிலோ வரை வளரும். இந்த மரம் வளரும் போது இதைச் சுற்றி எந்த உயிரினங்களும் வாழத் தகுதியில்லாமல் போகிறது. வேரூன்றி வளரும் போதே மண்ணை மலடாக்குகிறது. நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சுவதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. மழைநீர் பொய்த்துப் போனதற்கு இவற்றின் ஆக்கிரமிப்பும் ஒரு காரணம். மரம் வெளியிடும் நச்சுக்காற்றை கர்ப்பிணிகள் சுவாசித்தால் குழந்தையை பாதிக்கும். ஆண்மை குறைபாட்டை உண்டாக்குகிறது. மரத்தில் இருந்து வரும் மூச்சு(நச்சு)காற்று காற்றில் கலந்து ஈரப்பதத்தை குறைக்கிறது. காய்ந்த பழமாக விழும் காயை மாடுகள் உண்பதால் நோய் உண்டாகிறது.

விஷமாகும் சுவாசம்:ஒருவர் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு ரயில்பயணம் மேற்கொள்கிறார் என்று வைத்துக் கொள்வோம். நாள் முழுவதும் ரயில் தடத்தின் இருபுறமும் உள்ள சீமைக் கருவேல மரங்கள் வெளிவிடும் நச்சுக்காற்றை சுவாசித்தபடியே சென்னை செல்கிறார். சென்னை செல்லும் பாதிபேருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது. உண்மையான காரணம் இம்மரங்கள் வெளியிடும் நச்சுக்காற்று தான். இது தெரியாமல் காற்று மாசுபடுவதால் தான் உடல்நிலை பாதிக்கப்படுகிறது என்று கூறுகிறோம். ரயில்வே துறை நடவடிக்கை எடுத்து இவற்றை அழிக்க முன்வரவேண்டும். இருபது ஆண்டுகளுக்கு முன் ஒரு ஊரில் ஒன்று அல்லது மருத்துவமனைகள் மட்டுமே இருந்தன. தற்போது தெருவிற்கு இரண்டு மருத்துவமனைகள் உள்ளன. மக்களின் அக்கறையின்மை, விளைநிலங்கள் வீட்டடி மனைகளாக மாறியது, விவசாயம் செய்யாத விளைநிலங்கள் பெருகியது ஆகியவை தான் இம்மரங்களின் பெருக்கத்திற்கு காரணம்.

சொன்னது என்னவாயிற்று:சீமைக்கருவேல மரங்களை 30.9.2014க்குள் அழிப்பது குறித்து தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. இதுவரை திண்டுக்கல் நத்தம், செந்துறையிலும் திருச்சியில் மருங்காபுரி, வி.இடையபட்டி எல்லைக்குள் மட்டுமே இம்மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. இதுபோல் அனைத்து இடங்களிலும் வேரோடு அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெறும் அறிவிப்பு மட்டும் போதாது; தொடர் கண்காணிப்பும் அவசியம். மரங்களை எரிப்பதால் வரும் புகை புற்றுநோயை தரும். அதாவது 14 சிகரெட் புகைத்ததற்கான பலனை கொடுக்கிறது. நுரையீரலை பாதித்து கருப்பாக்குகிறது. அதனால் இவற்றை அழிக்க கேரள அரசு உடனடி நடவடிக்கை எடுத்தது. நாமும் அதை ஒழிக்க என்ன செய்ய வேண்டும். மரத்தை வேரோடு பிடுங்க வேண்டும். மரத்தை வெட்டி விட்டு வேர்ப்பகுதியில் நாட்டு சர்க்கரையை துணியில் வைத்து எரிக்க வேண்டும்.

நமது பணி என்ன:ஒவ்வொரு பொது சேவை அமைப்புகளும் ஒரு கிராமத்தை தத்தெடுத்து இம்மரங்களை அழிக்க வேண்டும். மக்கள் தங்களது ஒருநாள் உழைப்பை இதற்காக செலவிட வேண்டும். பள்ளி, கல்லூரி என்.எஸ்.எஸ். அமைப்புகள் சீமைக் கருவேல மரங்கள் ஒழிப்பதை சபதமாக மேற்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்கு இலக்கு நிர்ணயித்து போர்க்கால அடிப்படையில் இவற்றை ஒழிக்க வேண்டும். இம்மரங்களை அகற்றி குறைந்த தண்ணீரில் அல்லது வறண்ட நிலையில் வளரும் நன்மை தரும் மரங்களை வளர்க்க வேண்டும்.

- ஏ.ஜானகிராமன், இயற்கை விவசாயி, மதுரை, 91500 09998.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (5)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement