Advertisement

கண்மாய் கட்டு குளம் வெட்ட விரும்பு

'அறம் செய்ய விரும்பு” என அவ்வையார் ஆத்திச்சூடியில் கூறியதுபோல் 'குளம் வெட்ட விரும்பு' என்ற புது ஆத்திச்சூடி கற்கும் நிலைக்கு இந்த கம்ப்யூட்டர் உலகில் நாம் நிற்கிறோம். அக்காலகட்டங்களில் திண்ணை வைத்து வீடு கட்டி வழிப்போக்கர்கள் தாகம் என தண்ணீர் கேட்டால் மோர் கொடுத்து நம் முன்னோர் மகிழ்ந்தனர். ஆனால் தற்போது குடிக்கும் தண்ணீரைக்கூட பாட்டிலில் அடைத்து விற்கப்படும் நிலை வந்துவிட்டது.
'நீரின்றி அமையாது உலகு' என்பது உண்மைதான். நினைத்துப்பாருங்கள். சகல வசதிகள் இருந்தும் தண்ணீர் இல்லாத வாழ்வு சுட்டெரிக்கும் பாலைவன சுடுமணலில் நம்மை வறுத்தெடுப்பது போல் அமையும். 'நா' வறட்சி ஒன்றை மட்டும் தாங்க முடியாத நிலையில் இருப்போம். பரந்து விரிந்த பூமிப்பரப்பில் முக்கால்பங்கு நீரினால் சூழப்பட்டுள்ளது. இதில் கடல் நீர் 97 சதவீதம், நன்னீர் 3 சதவீதம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆறு, குளங்கள் அனைத்தையும் காணாப்பொருளாக்கிவிட்டோம். ரோடு விரிவாக்கங்கள் என்ற பெயரில் மழைதரும் மரங்களையும் வெட்டிவிட்டோம். ஆனால் அதற்குப்பதிலாக மரக்கன்றுகள் நடப்படுவதில்லை.
புது மழை எப்போது :ஓசோன் படலத்தினை ஓட்டையாக்கி, பருவ காலத்தினை மாற்றிவைத்த பெருமை நம்மையே சாரும். நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்ட நிலையில் மழைநீரை மட்டுமே நாம் நம்பி இருக்கும் சூழ்நிலை உருவாகி வருகிறது. பருவமழை பொய்த்துவிட்டால் புயல் அடித்தால் மட்டுமே புதுமழை என்ற நிலைப்பாட்டிற்கு வந்துவிட்டோம். அவ்வாறு பொழிகின்ற மழைநீரை கூட சேமிக்க வழியின்றி வாறுகாலில் கழிவுநீருடன் கலக்கவிட்டு நாம் கலங்கியே நிற்கிறோம்.
நீரை சேமித்திட வழியின்றி தண்ணீர் என்னும் தங்கத்தினை இழந்து தவிக்கிறோம். குறுமணல் கொண்ட தெருக்களையெல்லாம் சிமென்ட் ரோடு அமைத்து பூமிக்குள் தண்ணீர் செல்ல வழியில்லாமல் செய்துவிட்டோம். ' மன்னர் அசோகர் குளங்களை வெட்டினார்... மரக்கன்றுகளை நட்டார்'... என பள்ளியில் படித்தபோது ஆண்டுதோறும் இதையே படிக்கிறோமே என்று அங்கலாய்த்த காலம் உண்டு. அதன் அவசியம் இப்போதுதான் புரிகிறது.
வீட்டுமனைகளான விளைநிலங்கள் ஆறு,குளம், கண்மாய், நீர்நிலைகளை மூடிவிட்டு அங்கெல்லாம் வீடுகளை கட்ட துவங்கிவிட்டோம். மழைநீரை சேமிக்காமல் விவசாயத்தை அழித்துவிட்டோம். விவசாய நிலங்களையும் வீட்டுமனைகளாக மாற்றிவருகிறோம்.
'நெல் முளைக்கும் நிலங்களில் எல்லாம்சர்வே கல் முளைக்கும் அதிசயம்
மனிதர்களே...உங்கள் சந்ததிகளுக்கு பசித்தால்பணம் தின்ன கற்றுக்கொடுங்கள்...!பணம் தின்னும் காலம் விரைவில் வரும்'என கவிஞர் பஷீரா ரசூல் கூறியுள்ளார்.பெரிய பெரிய ஆறுகளை எல்லாம் ஆக்கிரமித்து சிறுகால்வாய்களாக மாற்றிவிட்டோம். அவையும் நீரின்றி தற்போது மண்தரையாக மாறியுள்ளன.நதிகளின் ஓட்டங்கள் எல்லாம்தன் போக்கினை மாற்றி பஸ் செல்லும் வழித்தடங்களாக மாறிவிட்டன. பின்னர் எங்கே இங்கு மழை பெய்யும்?
கரிசல்பூமியில் விரிசல் ஆறுமாதங்களுக்கு ஒருமுறை அறுவடை செய்யும் பழக்கம், விவசாயம் செய்திட ஏற்ற சூழல் நமது இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இருந்துள்ளது. தற்போது விவசாயிகளின் நிலை பரிதாபம் தான். வறட்சியால் கரிசல் பூமியில் விதைத்துவிட்டு விரிசல் பூமியைக்கண்டு மனம் வெதும்புகின்றனர். மழை பெய்து கெடுக்கிறது அல்லது பெய்யாமல் கெடுக்கிறது.
விதைக்குழந்தைகள் மண்தாயின் கர்ப்பத்தில் இருந்து வெளிவரும் நேரத்தில் சுட்டெரிக்கும் வெப்பத்தில் சுருண்டே மடிகின்றது அல்லது மழைநீரில் மூழ்கி அழுகி மடிகின்றது. எஞ்சிய மழைநீரை சேமிக்க வழி தெரியாமல் அல்லாடுகிறோம். ஆறு,குளம், ஏரி என நீரை சேமித்து வைத்திருந்தால் அளவோடு நீர்பாய்ச்சி மழைக்குழந்தையை பராமரித்து வளர்த்திருக்கலாம்.
சேமிக்க வழியில்லாததால் மழைக்காலங்களில் 50 ஆயிரம் மில்லியன் கன அடிநீர் வீணாக கடலில் கலக்கிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. குளங்களும், பொய்கைகளும் அக்காலத்தில் நிறைய இருந்துள்ளன. புறநானுாறு, பட்டினப்பாலை போன்றவை குளங்களை துார்வாரி மழை நீர் சேமிப்பதின் அவசியத்தை வலியுறுத்துகின்றன.
திருவிளையாடல் புராணத்தில் 'வைகை' வற்றாத ஜீவநதியாக பதிவு செய்யப்பட்டுள்ளது . அந்த நதியை வற்ற வைத்ததுதான் நாம் செய்த சாதனை. அது வறண்டதால் மதுரையில் சித்திரைத்திருவிழாவில் தொட்டியில் நீர் நிரப்பி அழகரை இறங்க வைக்கிறோம்.
சுத்தமான காற்று எங்கே? :இன்றளவும் உலகம் இயங்குகிறது என்றால் நம் முன்னோர்கள் புவிவெப்பமயமாதலில் இருந்து காத்ததுதான் காரணம். நாம் அழகிய பூமிப்பந்தினை பாழ்படுத்திவிட்டோம். தண்ணீரை விலைக்குவாங்குவதுபோல் காற்றையும் விலைக்கு வாங்கும் காலம் வருமோ... என அஞ்சும் சூழலின் வாயிலில் நிற்கிறோம். மரங்களை வெட்டிவிட்டு பல்வேறு வகைகளில் காற்றை மாசுபடுத்தி சுத்தமான காற்று இல்லாமல் தவிக்கிறோம்.
வீட்டிற்கு ஒரு மரக்கன்று வளர்த்து, வெப்பம் தவிர்த்து, ஓசோன் படலம் அடைத்து மழையினை வரவழைத்து குளங்களில் நீர்தேக்கி விவசாயம் செழித்து புவி வளம் கொழிக்க வாழும் நிலை எப்போது வரும்? அதற்கான வாய்ப்பு கிடைக்குமா என்றால் நிச்சயம் கிடைக்கும். அறம் செய்ய விரும்பு என்பதுபோல இனி 'குளம் வெட்ட விரும்பு' என்ற புதிய ஆத்திச்சூடிக்கு மாறுவோம்.
பொழிகின்ற மழைநீரை சாக்கடையிலும், கடலிலும் கலக்கவிடாமல் உரிய திட்டங்கள் மூலம் ஆறு, குளங்களுக்கு கொண்டுவந்து, தண்ணீர் தேவையினை பூர்த்தி செய்திட வேண்டும். முன்னோர்கள் தந்த வளத்தினைக் கொண்டு காலம் கடத்திவிட்ட நாம், நம் சந்ததிகளுக்காக புவியினை பாதுகாத்து அழகுப்பெட்டகமாய் அவர்கள் கரங்களில் ஒப்படைக்க வேண்டும் என்பதை உறுதி கொள்வோம்.
குளம் வெட்ட விரும்பு...!கண்மாய் கட்டு....!மரக்கன்றுகளை நட்டு வளர்த்துஅடைமழை காத்து...மழைநீர் சேமித்து....மாண்புடன் வாழ்வோம்....!-அ.ஸார்ஜான் பேகம்,தாசில்தார்,சாத்துார்,99525 97937

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement