Advertisement

ஒரு தரம் இரண்டு தரம் மூன்று தரம்...- முருகராஜ் ,பத்திரிகையாளர்

நாட்டில் உள்ள பிரச்னைகளை எல்லாம் மறக்க செய்வதற்கு, உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்கிறது. மழுங்க செய்வதற்கு, 'இந்தியன் பிரீமியர் லீக்' எனப்படும், ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி அடுத்து வருகிறது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, மார்ச் 29ல் முடிந்த கையோடு, ஐ.பி.எல்., எட்டாவது சீசன், ஏப்., 8ம் தேதி துவங்கி, மே 24ம் தேதி வரை நடக்கிறது.இந்த போட்டிக்கான வீரர்கள் ஏலம் நடந்து முடிந்திருக்கிறது. சென்னை சூப்பர்கிங்ஸ் துவங்கி, டில்லி டேர்டெவில்ஸ் அணிவரை, தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் எடுத்திருக்கின்றன. வெளிநாட்டு வீரர்கள், 44 பேர் உட்பட, 123 வீரர்கள் தலைக்கு, ஏற்கனவே நல்ல விலை வைக்கப்பட்டு கம்பெனி சரக்காக, 'ஸ்டாக்' வைக்கப்பட்டுள்ளனர். இதில் கழட்டி விடப்பட்ட அல்லது காசு பத்தாது என, கழண்டு கொண்ட வீரர்களின் வெற்றிடத்தை நிரப்புவதற்கு தான், இந்த ஏலம் முக்கியமாக பயன்பட்டது. நாம் என்ன விலைக்கு போவோம் என்ற எதிர்பார்ப்புடன், 344 வீரர்கள் பட்டியலில் பரிதாபமாக காத்திருந்தனர்.

உலக கோப்பை போட்டியில் விளையாடவே தகுதியில்லை என்று வெளியேற்றப்பட்ட யுவராஜ்சிங்கிற்கு, சாதனை விலையாக, 16 கோடி ரூபாய் கொடுத்து டில்லி டேர்டெவில்ஸ் அணி, ஏலத்தில் எடுத்துள்ளது.அவர் அவ்வளவு பெரிய அப்பாடக்கரா என்றால், கடந்த ஆண்டு அவரது ஆட்ட வரலாறு, அப்படி எல்லாம் இல்லை; மொத்த ரவுண்டிலும் சேர்த்து, 376 ரன்கள் எடுப்பதற்குள் அவருக்கு மூச்சு வாங்கி விட்டது என்கின்றனர். 'அதெல்லாம் இல்லை; யுவராஜுக்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு பைசாவும் பயன் தரும்' என்கிறார், முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர். ஒவ்வொரு பைசாவும் யுவராஜுக்கு பலன் தான். ஆனால். அவரை நம்பி ஏலத்தில் எடுத்த அணிக்கு என்ன பலன் என்பது தான் கேள்வியே.அதனால் தான் யுவராஜை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று பெங்களூரு அணி, டில்லி அணியிடம் தள்ளிவிட்டு விட்டது.

பெங்களூரு அணி என்ற உடனேயே, சரக்கும் கையுமாக மைதானத்தில் வலம் வரும், விஜய் மல்லையா தான் நினைவுக்கு வருகிறார்.தன் கிங்பிஷர் நிறுவனத்திற்கு வாங்கிய கடன் பிரச்னையும், ஊழியர்களின் சம்பள பிரச்னையும், இன்னபிற கோர்ட் பிரச்னைகளும் கழுத்தை இறுக்குவதால், மல்லையா இந்த ஆண்டு ஏலத்தில் இருந்து தள்ளியே நிற்பார் என்று பார்த்தால், முதல் ஆளாக வந்து, தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை, 10.5 கோடிக்கு ஏலம் எடுத்தார். சினிமாவில் சம்பாதித்தது போதாது என, கிரிக்கெட்டிற்கு வந்துள்ள பஞ்சாப் அணியின் உரிமையாளர் நடிகை பிரித்தி ஜிந்தாவும் சிலரை ஏலம் எடுத்தார். நல்லவேளை, ஏலம் எடுத்த வீரர்கள் அங்கே இல்லை; இருந்திருந்தால், மைதானத்தில் கட்டிப்
பிடித்து உணர்ச்சிவசப்படுவது போல, ஏல அரங்கிலேயே உணர்ச்சிவசப்பட்டு இருப்பார்.

ஒரு அணி அதிகபட்சமாக, 60 கோடி ரூபாய் வரை தான் வீரர்களின் ஏலத்துக்கு செலவிடலாம் என, நல்லதொரு விதி இருக்கிறது. மைக்கேல் ஹசி, இர்பான் பதான், ராகுல் ஷர்மா, கைல் அப்பாட், ஆன்ட்ரூ டை, பிரதியூஸ் சிங், அன்குஷ் பைன்ஸ், ஏகலைவா திவேதி இவர்களை எல்லாம் ஏலம் எடுத்தது போக, சென்னையின் கையிருப்பு தற்போது, 70 லட்சம் ரூபாய் தான்.அதனாலென்ன? போலீசிடம் தடியடி வாங்கி, மண்டை உடைந்து ரத்தம் வழிந்தாலும், மருத்துவமனைக்கு கூட போகாமல் வரிசையில் நின்று, பல ஆயிரம் ரூபாய் கொடுத்து கவுன்டரில் டிக்கெட் வாங்கத் தான், நம் கோடிக்கணக்கான இந்திய சகோதரர்கள் இப்போது முதலே காசு சேர்த்து வருகிறார்களே... ஆகவே, போட்ட முதலைவிட பலமடங்கு அள்ளிவிடலாம்.

'இங்கே கொடுப்பதை விட, அங்கே நிறைய கொடுக்கிறாங்களாம்' என, சென்னை அணியை விட்டு முதலில் கிளம்பியவர்கள் முரளி விஜய் மற்றும் பத்ரிநாத். இன்னமும் முதல் தர போட்டியில் கூட விளையாடாத, 20 வயதான சுழற்பந்து வீச்சாளர், சி.கே. கரியப்பாவை, 2.40 கோடி ரூபாய்க்கு கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்த அதே நேரம், முன்னணி வீரர்களான ஹசிம் அம்லா (தென் ஆப்ரிக்கா), சங்ககரா, மகிளா ஜெயவர்த்தனே (இருவரும் இலங்கை), பிராட் ஹாட்ஜ் (ஆஸ்திரேலியா), ராஸ் டெய்லர் (நியூசிலாந்து) உட்பட முன்னணி வீரர்கள் பலரை, ஏலத்தில் கேட்கவே ஆள் இல்லை என்ற நிலை. இதென்ன கிரிக்கெட் அரசியலோ?

இப்படியாக, 344 வீரர்களில், 67 வீரர்கள் மட்டும் ஏலம் போன நிலையில், மற்றவர்கள் சக வீரர்களுக்கு கூல்ட்ரிங்ஸ் கொண்டு போய் கொடுக்கிற வேலையைச் செய்வோம் என, முடிவு எடுத்தனர்.இதில் மனதளவில் அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள், தற்போது உலக கோப்பைக்காக விளையாடிக் கொண்டு இருக்கும் நம் அணிவீரர்களாகத் தான் இருப்பர்.மாங்கு மாங்கென்று விளையாடி உலக கோப்பையை ஜெயித்தாலும், அதிகபட்சமாக, மூன்று கோடி ரூபாய் தான் கிடைக்கும். ஆனால், உலக கோப்பை விளையாடவே தகுதி இல்லை என்று சொன்ன யுவராஜுக்கு, 16 கோடி ரூபாய் கிடைக்கிறது. இது போக, சிக்சருக்கு, பவுண்டரிக்கு செஞ்சுரிக்கு, கேட்சுக்கு என, தனியாக காசு கொட்டும்; உபரியாக, 'சியர்ஸ் கேர்ள்ஸ்' நடனம் வேறு.

பக்கம் பக்கமாக கொட்டிக் கிடக்கும் இந்த கோடிக்கணக்கான ரூபாய் ஏலம் தொடர்பான செய்திகளுக்கு நடுவே, ஒரு துக்கடா செய்தி ஒன்று ஒளிந்திருந்தது... அந்த செய்தி இது தான்... ஊட்டச்சத்து இல்லாமல் ஒரு வயதை தொடுவதற்குள்ளேயே இறந்து போகும் குழந்தைகளின் எண்ணிக்கை ஜப்பான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளில், 1 சதவீதமாக இருக்கும் நிலையில், இந்தியாவில், 42 சதவீதமாக உள்ளது.
இ-மெயில்:murugaraj2006gmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (12)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement