Advertisement

பசுக்கள் பல வண்ணம்; பால் ஒரு வண்ணம்

ஏழைகள் தொண்டில் இறைத்தொண்டு காணும்படி கூறியவர் திருமூலர். பூசைக்கு பூவும் நீரும் போதும் என பாடியவர். உள்ளம் பெருங்கோயில் எனக்கூறிய ஆன்ம நேய அருட்கவி. 'என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே' என தன் பிறப்பின் நோக்கத்தையும் அழகாக தெளிவுபடுத்தியுள்ளார். 'உயிரிலெங்கும் உடலனைத்தும் ஈசன் கோயில்' என மனிதனின் உண்மையான படைப்பின் நோக்கத்தை வெளிப்படுத்தியவர் திருமூலர்.விஞ்ஞானம், தத்துவம், யோகம், ஆன்மிகம், மருத்துவம் என திருமூலர் தொடாத துறைகளே இல்லை. திருமந்திர பாடல்கள் இதற்கு சான்றாக திகழ்கின்றன. திருமந்திரத்தில் தான் சித்தாந்தம் என்ற சொல் முதன் முதலாக பயன்படுத்தப்பட்டுள்ளது. திருமந்திரமும், திருக்குறளும் ஒரே மாதிரியான கருத்துக்களை வலியுறுத்துகின்றன. அன்றாட மனிதனுக்கு வேண்டிய அறம், பொருள், இன்பத்தை முப்பாலாக திருவள்ளுவர் தந்துள்ளார். அதையே திருமூலர் ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கையும் முதல் நான்கு தந்திரங்களில் தந்துள்ளார்.

திருமந்திரமும், விஞ்ஞானமும்:தாவரங்களுக்கு உயிருண்டு என்பதிலிருந்து மரபணு சோதனை வரை பல விஞ்ஞான உண்மைகளை பல ஆண்டு காலம் ஆய்வு செய்து விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். ஆனால் திருமூலரோ மனிதனின் சுரப்பிகளை பற்றியும், அணுவின் தன்மை பற்றியும் வானசாஸ்திரத்தை பற்றியும் பல அரிய செய்திகளை வெளிப்படுத்தியுள்ளார். இரண்டாம் உலக போரின் போது கால் நடக்க முடியாமல் மற்றவர்களின் உதவியுடன் சிலர் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அந்த மருத்துவமனை மீது குண்டு போட போகின்றனர் எனக் கூறியவுடன் மற்றவர் உதவியுடன் வந்தவர்கள் தானே எழுந்து ஓடி அருகிலிருந்த மைதானத்திற்கு சென்று நின்றனர். இதுபோன்ற எல்லா நிகழ்வுகளுக்கும் மனமே காரணம் என டாக்டர் உதயமூர்த்தி, 'தன் எண்ணங்கள்' என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார். இதை 'தானே தனக்கு பகைவனும், நட்டானும், தானே தனக்கு மறுமையும் இம்மையும், தானே தான் செய்த வினைப்பயன் துய்ப்பானும், தானே தனக்கு தலைவனும் ஆமே' என்ற பாடலில் அழகாக விளக்கியுள்ளார். நமக்கு நாமே நண்பனாகவும், பகைவனாகவும் அமைகிறோம். பெற்றோரின் குடும்பச்சூழல், வேலைப்பளு, கணவன், மனைவிக்கு இடையே ஏற்படும் தகராறு, குழந்தையின் மனநலத்தை பாதிக்கிறது. பெற்றோர்கள் குழந்தைகளுக்கு இன்சொல்லை விளைநிலமாக்கி கொடுத்தால், குழந்தைகளின் மனம், தானே நலம் பெறும். இன்றைய குழந்தைகளின் மனநலமே நாளைய வளமான வாழ்வு என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

திருமூலரும், மருத்துவமும்:திருமூலர் ஆண், பெண் உடற்கூறு அறிந்த ஞானி. சட்டம் ஆண், பெண் திருமண வயதை நிர்ணயித்துள்ளது. ஆனால் திருமூலரோ பெண்ணின் வயது இருபதும், ஆணின் திருமண வயது முப்பதும் இருப்பது நலம் பயக்கும் என குறிப்பிட்டுள்ளார். தற்போதைய நவீன உலகில் கருவிலுள்ள குழந்தை ஆணா, பெண்ணா என ஸ்கேன் செய்து கூறுமளவு வளர்ந்துள்ளது. ஆனால் திருமூலரோ, பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கண்டறிய பாடல் எழுதியுள்ளார். பெண் எந்தந்த காலத்தில் கருத்தரித்தால் எப்படிப்பட்ட குழந்தை பிறக்கும் என்பதையும் திருமந்திரத்தில் விளக்கியுள்ளார். குழந்தை பிறக்கும் போதே, பெயர் தெரியாத பல வியாதிகளுடன் பிறக்கிறது. பெற்றோர் உடல் நலனை பேணி பாதுகாத்தால் நலமுடன் குழந்தை பிறக்கும் என்பதை திருமூலர் பாடலால் தெளிவுபடுத்துகிறார். உயிர் வளர்க்க வேண்டும் என்றால் உடல் வளர்க்க வேண்டும் என்றவர் திருமூலர். 'உடம்பார் அழியின் உயிரார் அழிவர்' என குறிப்பிட்டுள்ளார். உரிய நேரத்தில் உணவு அருந்துவது உடலுக்கு நலம் பயக்கும். அதே போல யோகத்தையும் தகுந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்பதை விளக்கியுள்ளார். பிராணாயாமத்தின் சிறப்பையும் செய்யும் முறையையும் தீரும் வியாதிகளையும் திருமந்திரத்தில் அழகாக விளக்கியுள்ளார்.

சமுதாய பார்வை:ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொலை நோக்கு பார்வையுடன் சமுதாயத்திற்கு வேண்டிய நல்லிணக்க செய்திகள் திருமந்திரத்தில் அழகாக விளக்கப்பட்டுள்ளன. 'ஒன்றே குலமும், ஒருவனே தேவனும் நன்றே நினைமின்...' 'பசுக்கள் பல வண்ணம் பால் ஒரு வண்ணம்... மேய்ப்பவன் ஒருவனே' என்ற இப்பாடல்களில் ஒற்றுமையின் அவசியத்தையும், அனைவரும் சேருமிடம் ஒன்றே எனவும் விளக்கியுள்ளார். மூலப்பொருளாகிய மண் ஒன்று தான். ஆனால் அதை கொண்டு பல பானைகள் செய்யலாம். கண்கள் எல்லாவற்றையும் காட்டும். ஆனால் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாது. 'மண் ஒன்று தான் பல நற்கலம் ஆயிடும் கண் ஒன்று தான் பல காணும் தனைக்காணா' என ஒற்றுமையின் சிறப்பை திருமூலர் வெளிப்படுத்தி உள்ளார். திருமந்திரத்தை மேலும் ஆய்வு செய்தால் அந்த கருவூலத்திலிருந்து பல அரிய செய்திகளை அறியலாம்.

- முனைவர் ச.சுடர்க்கொடி, ஆசிரியை (ஓய்வு), காரைக்குடி 94433 63865.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement