Advertisement

மன அழுத்தம் ஏன் ஏற்படுகிறது

மனநோய்..... மருத்துவத்தால் சரியான விடை சொல்ல முடியாத நோய். எல்லா நோய்களையும், அந்த நோய் தாக்கிய நபரால் விவரித்து விட முடியும். ஆனால் மன நோய் பாதிக்கப்பட்ட ஒருவரால் தனக்கு என்ன பிரச்னை என்பதை சொல்ல முடியாது. இதனால் உறவினர்கள் சொல்லும் யூகங்களின் அடிப்படையிலும், டாக்டர்கள் அனுபவத்தின் அடிப்படையிலும் மருத்துவம் பார்க்கின்றனர்.நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீதம் பேருக்கு மனநோய் அல்லது மன அழுத்தம் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதாவது பத்து கோடி பேருக்கு இந்த தாக்கம் இருக்கிறது. தற்கொலை செய்பவர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் மனநோய் பாதிக்கப்பட்டவர்கள். பொதுவான புள்ளிவிபரங்களை பார்த்தால் ஏழை நாடுகளை விட பணக்கார நாடுகளில்தான் தற்கொலையும் அதிகம், மனநோயும் அதிகம். இந்தியாவை பொறுத்தவரை தற்கொலையும், மனஅழுத்த பாதிப்பும் அதிகம் இருந்த மாநிலம் கேரளா. இந்த பாதிப்பை வரிசைப்படுத்தும் போது கடந்த ஆண்டு வரை கேரளா முதலிடத்தில் இருந்தது. கடந்த ஆண்டுவரை 4வது இடத்தில் இருந்த தமிழ்நாடு தற்போது தற்கொலையிலும், மன அழுத்த பாதிப்பிலும் முதலிடத்தில் உள்ளது கவலைக்குரிய விஷயம்.

என்ன காரணம்:இதற்கு என்ன அடிப்படை காரணம்? சிதைந்து போன உறவு முறைகள், கிராமங்கள் அழிந்து நகரங்கள் உருவானது, நகரத்தில் இயந்திரமயமான வாழ்க்கை, கூட்டுக்குடும்ப மகிழ்ச்சி காணாமல் போனது, தன் வேலை, தன் வீடு என்ற குறுகிய மனப்பான்மையின் வளர்ச்சி, யாரும் இல்லையோ என்ற பாதுகாப்பற்ற உணர்வு, குடிபழக்கம் இப்படி பல காரணங்களை கூற முடியும். தற்கொலை செய்பவர்களில் பெரும்பாலோனோருக்கு குடி பழக்கம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மன அழுத்தம் அதிகமாகி கட்டுப்பாடற்ற நிலைக்கு செல்லும் போதுதான் மனநோய் ஏற்படுகிறது. மன அழுத்தம் ஏற்படும் போது டாக்டரிடம் கலந்து ஆலோசித்து சிகிச்சை மேற்கொண்டால் அதிலிருந்து விடுபடமுடியும். மருத்துவத்தின் வளர்ச்சி மூலம் இந்த நோயை ஆரம்ப கட்டத்தில் 100 சதவீதம் குணமாக்க முடியும்.

வாழவே ஆசை இல்லை:பல்வேறு பிரச்சனைகளுக்காக மனநல ஆலோசனை பெற வரும் மக்கள் மத்தியில் தனக்கு வாழவே ஆசை இல்லை என்று வந்த ஒரு நோயாளியைப் பற்றிய அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். ஒரு நடுத்தர வயதில் உள்ள குடும்பத் தலைவி. அவரது கணவர் அலுவலகத்தில் பணிபுரிந்துவந்தார். இரண்டு குழந்தைகள் எட்டு, ஐந்தாம் வகுப்பில் படிக்கிறார்கள் வாழ்க்கை மிக சந்தோஷமாக போய் கொண்டிருந்த கால கட்டத்தில் கணவருக்கு திடீரென்று விபத்து ஏற்பட்டு, அலுவலகத்திற்கு தொடர்ந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. வருமானம் குறைந்தது. கணவரின் படுக்கை ஒரு புறம். மறுபுறம் குழந்தைகளை வளர்க்க முடியாமல் பொருளாதார நெருக்கடி. இதனால் இந்த பெண்ணிற்கு தூக்கம் குறைய ஆரம்பித்தது. ஒரு சில மணி நேரம்கூட தூங்க முடியாமல் அதிகாலையிலேயே கொட்ட கொட்ட விழித்திருப்பார். மனதில் தாங்க முடியாத துயரத்தோடு அடிக்கடி கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்தார். வெளியில் எங்கும் செல்வது இல்லை. வாழ்க்கையே அர்த்தமற்றதாகி விட்டது போல் எண்ண ஆரம்பித்தார். தனக்கு வாழவே ஆசை இல்லை என்று கூறிக் கொண்டிருந்த அவர் திடீரென்று ஒரு நாள் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொள்ளவும் முயற்சி செய்தார். நல்ல வேளையாக தற்கொலை முயற்சி முறியடிக்கப்பட்டது. சில நேரங்களில் தன் வலது கை காணாமல் போய்விட்டதாகவும் கூறிக்கொண்டிருப்பார். இந்த நிலையில் என்னிடம் அழைத்து வந்தார்கள்.

மன அழுத்த அறிகுறி:அந்த பெண்மணியை பரிசோதித்த போது அவருக்கு தூக்க குறைவு, மனக்கவலை, எந்த ஒரு நிகழ்விலும் மகிழ்ச்சி இல்லாமல், மகிழ்ச்சியை உணர முடியாத நிலை இருந்தது. தற்கொலை எண்ணங்களும், உடலின் ஏதோ ஒரு பாகம் இல்லாதது போன்ற சிந்தனையில் ஏற்படும் தவறான நம்பிக்கையும் இருப்பது தெரிந்தது. இவை யாவும் மன அழுத்த நோயின் அறிகுறிகள். இதை உணர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்த போது மீண்டு வந்து இன்று நலமாக இருக்கிறார். மன அழுத்த நோய் மனம் சார்ந்த பிரச்னை. ஆண்களைவிட பெண்களிடம் இரண்டு மடங்கு அதிகமாக வெளிப்படுகிறது. பொதுவாக 20 முதல் 50 வயது வரை மன அழுத்தம் அதிகமாக வெளிப்படுகிறது. தனியாக இருப்பவர்கள், திருமணம் ஆகாதவர்கள் அதிகம் மன அழுத்த நோய்க்கு ஆளாகிறார்கள். வாழ்க்கையில் எதிர்பாராமல் ஏற்படும் துயர சம்பவங்கள் பொருளாதார பின்னடைவுகள், தோல்விகள் போன்றவை மன அழுத்த நோய் உடனடியாக வெளிப்பட காரணமாக அமைகின்றன. ஒரு சிலருக்கு, எந்தவித காரணமும் இல்லாமலும் மன அழுத்த நோய் ஏற்படலாம். தன்னம்பிக்கையற்ற உணர்வு, எல்லாவற்றிற்கும் பிறரை சார்ந்து இருப்பது, அதிக ஒழுங்கு எதிர் பார்ப்பது போன்ற ஆளுமை குணம் கொண்டவர்களுக்கும் மன அழுத்த நோய் வர வாய்ப்புகள் அதிகம். மகப்பேறு காலத்தில் ஹார்மோன்களில் மாற்றம் ஏற்பட்டு அது மூளை நரம்புகளில் சலனத்தை ஏற்படுத்தி பின்னர் அது பழைய நிலைக்கு வராத போது அந்த பெண்களுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தும். ஆதரவற்ற வயோதிகர்களிடமும் மன அழுத்தம் அதிகமாக காணப்படுகிறது.

யாருக்கு அதிகம்:மாரடைப்பு, சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தம், பல நீண்ட கால வியாதி உள்ளவர்களிடமும் மன அழுத்தம் அதிகமாக ஏற்படுகிறது. இதில் இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டால், அவருக்கு நோய் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம். குற்ற உணர்வுகள், தன்னைப்பற்றி, எதிர்காலத்தைப் பற்றி, சமூகத்தைப்பற்றி எதிர்மறையான எண்ணங்கள், பேச்சு, செயல் மற்றும் எல்லாவற்றிலும் வேகம் குறைதல் போன்றவை மன அழுத்தநோயின் அறிகுறிகள். வளர் இளம் பருவத்தினர் போதை பழக்கங்களுக்கு அடிமையாதல், கல்வியில் பின்தங்கல், வீட்டைவிட்டு ஓடிப்போதல், சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதும் மன அழுத்தத்தின் காரணமாக இருக்கலாம். இவ்வாறு பல்வேறு பரிமாணங்களில் வெளிப்படும் மன அழுத்த நோய்க்கு உடனடியாக சிகிச்சை செய்வது அவசியம். இன்று நவீன மருந்துகள் மன அழுத்த நோயை முழுமையாக கட்டுப்படுத்த வல்லவை. மருந்துகளோடு, ஆற்றுப்படுத்துதலும் (அமைதிப்படுத்துதல்) இணைந்து சிகிச்சை செய்தால், மன அழுத்த நோயிலிருந்து பூரணமாக குணமடையலாம்.

- டாக்டர் அருள்பிரகாஷ், மனநலத்துறை இணை பேராசிரியர், கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி 04652- 274 718 arulmanasgmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement