Advertisement

வாழ்நாள் முழுவதும் சிரிக்க சின்ன சின்ன பழக்கங்கள்!

'பல் போனால் சொல்' போச்சு என்பது இன்றும் பேசப்பட்டு வரும் பழமொழி. உண்மைதான். தினமும் நாம் செய்ய வேண்டிய சில விஷயங்களை புறக்கணிக்கும்போதும், முறையாக கடைப்பிடிக்காத போதும் வயது ஆக ஆக பாதிப்பை உண்டாக்கும்.

பல் பராமரிப்பு என்பது குழந்தைக்கு முதன்முதலாக பல் முளைத்த உடனே நாம் ஆரம்பித்துவிட வேண்டும். பால் பற்கள்தானே என்று அசட்டையாக இல்லாமல் பாதுகாப்பாக கவனிக்க வேண்டும். துாங்கும் முன் குழந்தை பால் குடித்தால் வாயை தண்ணீரால் கழுவ வேண்டும். வீட்டில் இருக்கும் குழந்தைகளின் பற்கள் மற்றும் வாய் ஆரோக்கியத்தை கவனிப்பது எளிது. ஆனால், பள்ளி செல்லும் குழந்தைகளின் பற்களை சுத்தமாக வைக்கும் வழிமுறைகளை கண்காணிப்பது சற்று கடினம்.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பல் சொத்தை வருவதற்கு காரணம், அவர்கள் உண்ணும் உணவு வகைகள், நொறுக்குத்தீனி வகைகள். அவை பற்களில் ஒட்டிக்கொள்ளும் தன்மை உடையவை. உடனடியாக சுத்தம் செய்யாவிட்டால் அதனாலேயே பல் சொத்தை வரும். இதை தவிர்க்க, பழ வகைகளை தின்பண்டங்களாக கொடுத்து அனுப்பலாம். பள்ளியில் குழந்தைகள் உணவு உண்டபின், வாயை தண்ணீரால் கழுவ பழக்கப்படுத்த வேண்டும். இதை பெற்றோர் தான் சொல்லித்தர வேண்டும் என்பதில்லை.

ஆசிரியர்களே கற்றுத் தந்தால் குழந்தைகள் எளிதில் பழக்கப்படுத்தி கொள்வர்.இரவு பல் துலக்குவது அவசியம் ஒரு நாளில் எத்தனை முறை பல் துலக்குவது என்பதைவிட, எப்படி முறையாக பல் துலக்குவது என்பதில்தான் கவனம் செலுத்த வேண்டும். தினமும் இருமுறை பல் துலக்குவது நல்லது. இரவில் பல் துலக்குவது அவசியம். சரியான பிரஷ்...சரியான முறையில் தேய்ப்பதுதான் பற்களின் ஆரோக்கியத்திற்கு அடிப்படை. வாயின் அளவுக்கேற்ப பிரஷ் தேர்வு செய்ய வேண்டும். பிரஷ் மிகவும் மிருதுவாகவும், மிகக்கடினமாகவும் இருக்கக்கூடாது; மிக மிருதுவாக இருந்தால் சரியாக சுத்தம் செய்யாது; கடினமாக இருந்தால் பற்கள் சீக்கிரம் தேய ஆரம்பித்துவிடும்.

இரண்டு - மூன்று நிமிடங்கள் நிதானமாக பற்களின் வெளிப்புறம், உள்புறம், நாக்கு போன்றவற்றை சுத்தப்படுத்த வேண்டும். நீள வாக்கில் துலக்காமல், மேலும் கீழுமாக அல்லது வட்ட வடிவமாக துலக்க வேண்டும். துலக்கிய பின் பிரஷ்சை உலர்வான இடத்தில் வைக்க வேண்டும். ஈரமான இடத்தில் வைத்தால் பிரஷில் கிருமிகள் தங்கும். மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை பிரஷ் மாற்ற வேண்டும்.

வந்தபின் என்ன செய்வது :இதையும் தாண்டி பல் மற்றும் ஈறு தொடர்பான பிரச்னை வந்தால் அதை சமாளிக்கும் வழிகளும் உள்ளன. மருத்துவ துறையில் கடந்த பத்து ஆண்டுகளில் பல நவீன சிகிச்சைகள் வந்துவிட்டன.லேசர் சிகிச்சையில், லேசர் கதிர் மூலம் அதிகமாக வளர்ந்திருக்கும் ஈறுகளை சரிசெய்யலாம். பற்களின் வடிவத்தை மாற்றலாம். நாக்கின் அடியில் தசை வளர்ந்தால் அதை சரிசெய்து பேச்சு தடைபடாமல் செய்யலாம். இந்த சிகிச்சையில் வலியும் இருக்காது; ஈறுகளில் தழும்பும் உருவாகாது.

பற்கள் வலுவிழந்து விழுந்த பின், பொக்கை வாய் உடையவர்கள் கழற்றி மாட்டும் பல் 'செட்'களை அணிந்துக்கொண்டு அவதிப்படுவது குறைந்து வருகிறது; காரணம், நவீன சிகிச்சை. பல் 'செட்' அணிபவர்களின் குறை தீர்க்கவும், 'கேப்' போடுவதற்கும், பல் இல்லாதவர்களுக்கும் இப்போது 'டென்டல் இம்ப்ளான்ட்' சிகிச்சையில் நிலையான பற்களை பொருத்தலாம். இச்சிகிச்சையின் சிறப்பு, இப்பற்கள் கட்டும்போது மற்ற பற்களை கரைக்கவோ, மாற்றவோ தேவையில்லை. 'டென்டல் இம்பிளான்ட்'களினால் மற்ற பற்களுக்கும், ஈறுகளுக்கும், உடலுக்கும் பக்கவிளைவு, பாதிப்பு இருக்காது.

தோற்றம் மாறாது :பற்களில் கம்பிபோடும் போது உலோகம் தெரிவதை பலர் விரும்புவதில்லை. இன்றைய நவீன சிகிச்சையில் இதற்கும் தீர்வு உண்டு. கம்பி போடுவதற்காக பற்களில் பொருத்தப்படும் 'பிராக்கெட்' இப்போது 'செராமிக்'கிலும் கிடைக்கிறது. இவற்றை பொருத்தும் போது பற்களுக்கும், இவற்றுக்கும் வித்தியாசமே தெரியாது. இதனால் உலோகம் இருப்பது போன்ற தோற்றம் இருக்காது. உங்களுக்கு தகுந்த சிகிச்சை முறையை தேர்வு செய்து அழகான பல் வரிசையை பெறலாம்.
கம்ப்யூட்டரில் உருவாகும் பற்கள் 'காட்/ காம்' எனும் நவீன சிகிச்சை முறைகளில் பற்களின் அளவை கம்ப்யூட்டரில் பதிவு செய்து அதன் மூலம் துல்லியமாக பற்களுக்கு 'கேப்'களை வடிவமைக்கலாம்.

இம்முறையில் குறைந்த நேரத்தில் பற்களுக்கு 'கேப்' போடும் சிகிச்சையை சிறப்பாக செய்ய முடியும். 'ஈறுகளின் ஆரோக்கியம் இருதய ஆரோக்கியத்திற்கு முக்கிய காரணம்' என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அதுபோல் சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதற்கு பற்களும், ஈறுகளும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தின் கண்ணாடியாகவே நமது வாய் உள்ளது.தினமும் காலை, இரவு பல் துலக்குவது, ஈறுகளை சுத்தப்படுத்துவது, வாய் கொப்பளிப்பது போன்ற சின்ன சின்ன பழக்கங்களை தினமும் நாம் கடைப்பிடித்தால் மட்டுமே சிங்கார பற்களாக இருந்து நம்மை வாழ்நாள் முழுவதும் சிரிக்க வைக்கும்.

- டாக்டர் ஜெ.கண்ணபெருமான்,
மதுரை. 94441 54551

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement