Advertisement

பெண் என்பதே பெருமை - ரோகிணி ராம்தாஸ் ஐ.ஏ.எஸ்.,

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் உப்பலாயி என்ற குக்கிராமம். பஞ்சாயத்து பள்ளி விழாவிற்கு கலெக்டர் வந்தார். கலெக்டரை கண்ட மகிழ்ச்சியில் ௮ ம் வகுப்பு மாணவி, ''நானும் எதிர்காலத்தில் உங்களைப்போல் ஐ.ஏ.எஸ்., ஆவேன்,'' என்றாள் மன உறுதியுடன்! 'இந்த மாணவி உறுதியாக ஐ.ஏ.எஸ்., ஆவார்' என பள்ளியில் எழுதிச் சென்றார் கலெக்டரும்! அது பொய்யாகவில்லை.அந்த மாணவி 2008ல் தன் 23 வது வயதில் சிவில் சர்வீஸ் தேர்வில் முதல் முயற்சியில் வெற்றி பெற்று ஐ.ஏ.எஸ்., ஆனார். அவர் வேறு யாரும் அல்ல; இன்று மதுரையின் கூடுதல் கலெக்டராக இருக்கும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரி ரோகிணி ராம்தாஸ் ஐ.ஏ.எஸ்., மதுரையின் கிராமங்கள் எல்லாம் கழிப்பறை வசதி பெற வேண்டும் என கங்கணம் கட்டி தன் பணியை மக்களுக்காக அர்ப்பணித்துக் கொண்டுள்ளவர். தமிழகத்தின் இளம் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் வரிசையில் அறிவு திறத்தால், ஆளுமை திறத்தால் சாதித்து வரும் இவரிடம் ஒரு நேர்காணல்...* குக்கிராமத்து சிறுமி எப்படி ஐ.ஏ.எஸ்., ஆனார்?அப்பா ராம்தாஸ் விவசாயி. அம்மா குடும்பத் தலைவி. வீட்டில் நான் 3வது பெண். அப்பா பத்தாம் வகுப்பு படித்தவர் தான்; ஆனால் நான் 2வது படிக்கும்போதே எனக்குள் ஐ.ஏ.எஸ்., கனவை ஊட்டினார். 'டாக்டரானால் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கலாம். வக்கீலானால் ஏழைகளுக்காக வாதாடலாம். நாட்டிற்கு உழைக்க ஐ.ஏ.எஸ்., ஆனால் தான் முடியும்' என்ற எண்ணத்தைஏற்படுத்தி தொடர்ந்து ஊக்கப்படுத்தினார். தன்னம்பிக்கை தந்தார். கிராமத்து பஞ்சாயத்து பள்ளியில் ஆரம்ப கல்வி. அரசு பள்ளியில் இறுதி வகுப்பில் மாநில ராங்க். பின் பி.இ.,படிப்பு. 2007ல் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்றேன். இரண்டாம் வகுப்பில் எடுத்த உறுதி, பி.இ., வரை மாறவில்லை. என் வெற்றிக்கு காரணம் அப்பா தான்.* அழகான தமிழில் பேசுகிறீர்களே...இது எப்படி சாத்தியமாயிற்று?அம்மா தான் காரணம். சிறுமியாக இருந்த போது பல மொழிகளை கற்க வேண்டும் என்பார். ஐ.ஏ.எஸ்., ஆகி தமிழக 'கேடரை' தேர்வு செய்த பிறகு தமிழ் பயிற்சி அளித்தனர். மதுரையில் தான் சப்-கலெக்டர் பயிற்சி பெற்றேன். மதுரை மக்கள் பாசமானவர்கள். இந்த மண்ணின் தமிழை பயின்றேன். சேரன்மாதேவி சப்- கலெக்டராக இருந்த போது கூடங்குளம் அணுமின்நிலையத்தை எதிர்த்து போராட்டங்கள் நடந்தன. கிராமங்களுக்கு சென்று அணு மின் நிலையத்தால் ஆபத்து இல்லை என பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினேன். அதற்கு என் தமிழ் பேச்சு நன்றாக உதவியது.* கிராமத்தில் இருந்து வந்த நீங்கள், கூடுதல் கலெக்டராக தற்போது தமிழக கிராமங்களுக்கு செல்லும் போது எப்படி உணருகிறீர்கள்?நூறு நாள் வேலை திட்ட பணிகளை ஆய்வு செய்ய கண்மாய், கால்வாய் வரப்புகளில் செல்லும் போது, 'பார்த்து செல்லும்படி' மக்கள் வேண்டுகோள் விடுப்பர். கிராமத்தில் பிறந்த எனக்கு இது சிரமமாகபடவில்லை. தமிழக கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் பெண்கள் படிப்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.* நீங்கள் ஐ.ஏ.எஸ்.,-கணவர் ஐ.பி.எஸ்.,(விஜயேந்திர பிதரி-மதுரை எஸ்.பி.,) எப்படி குடும்பத்தை கவனிக்கிறீர்கள்?ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கும் பின்னால் ஒரு ஆண் இருக்கிறார் என்பது போல் திருமணத்திற்கு முன் வரை அப்பா; அதற்கு பின் என் கணவர். என் பணியில் நான் சுதந்திரமாக ஈடுபட, கடினமான அவரது பணிகளுக்கு மத்தியிலும் ஒத்துழைப்பு நல்குகிறார். வீட்டிற்கு வந்தால் தேவையில்லாமல் அலுவல் குறித்தும், வேலைக்கு சென்று விட்டால் வீட்டை பற்றியும் நாங்கள் பேசுவதில்லை.* பெண்களுக்கு கூற விரும்புவது?பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் என்பது, அவர்கள் வீட்டில் இருந்து தரப்பட வேண்டும். பெண் என்பதற்காக பெருமைப்பட வேண்டும். தன்னம்பிக்கையுடன் பெண்கள் அனைத்தையும் அணுக வேண்டும். பொருளாதார ரீதியாக யாரையும் சார்ந்திருக்காதவாறு தங்களை வளர்த்து கொள்ள வேண்டும். அதற்கு கல்வி அவசியம். எனவே பெண்களே படிப்பை விட்டு விடாதீர்கள்!வாழ்த்த 094425 43035 / brohini.iasgmail.com

Download for free from the Store »

Advertisement

வாசகர் கருத்து (6)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement