Advertisement

இலங்கையும், தமிழர்களும்!- கே.எஸ்.அழகிரி

இதிகாச காலமான ராமாயண காலம் முதல் ஏராளமான தமிழ் மன்னர்கள், இலங்கையை ஆண்டு வந்தனர். தமிழ் மன்னரான ராஜராஜசோழன், இலங்கையின் வடபகுதியை, 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்துள்ளார்.

தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்ய, தென் தமிழகத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள், ஒரு நுாற்றாண்டுக்கும் மேல் இலங்கையில் ரத்தம் சிந்தி உழைத்து வருகின்றனர்.எனவே, இலங்கைக்கும், தமிழர் களுக்கும், அவர்கள் இலங்கைத் தமிழர்களானாலும், இந்தியத் தமிழர்களானாலும் ஒரு நெருக்கமான பிணைப்புண்டு.இன்று ஒரு தெளிவு தெரிகிறது; அது, அதிபர் மைத்ரிபால சிறிசேன உருவில் தெரிகிறது. இது கானல் நீரா அல்லது உண்மைத் தெளிவா என்பதை, காலம் தான் முடிவு செய்யும்.

ராஜபக்ேஷ அகற்றம் என்பது, குடும்ப ஆட்சியின் வீழ்ச்சி என்றும், ஜனநாயகத்தின் மலர்ச்சி என்றும் சொல்லலாம்.சிங்களர்களில் சரிபாதியும், தமிழர்களில் முழுமையாகவும், சிறிசேனவிற்கு ஓட்டளித்துள்ளனர். இதன் நன்றிக் கடனாக, 13வது அரசியல் சட்டத் திருத்தத்தை, புதிய அரசு நிறைவேற்ற வேண்டும்.
இது எளிய காரியமன்று. சிங்களர்கள் மத்தியில், இதற்கு பெரும் எதிர்ப்பு எழக்கூடும். தன் ஆளுமைத்திறன் மூலம் புதிய அரசு சமாளித்து, தமிழர்களுக்கு நியாயம் வழங்க முன்வர வேண்டும்.சிறிசேன பிறப்பில் புத்த மதத்தவராகவும், இளமையில் மார்க்சிஸ்டாகவும், மேலும் காந்திஜியின் மீது நம்பிக்கை உடையவராகவும் இருப்பதால், இனம் சார்ந்த அரசியல் மீது அவருக்கு ஆர்வமோ, நம்பிக்கையோ இருக்காது என்பது, நமக்கு ஆறுதல் தரக்கூடிய விஷயம்.

யாழ்ப்பாண தமிழர்கள், இயல்பாகவே அறிவுக்கூர்மை மிக்கவர்களாக இருப்பதால், சிங்கள மேட்டுக்குடியினருக்கு, தமிழர்கள் மீது ஒரு காழ்ப்புணர்ச்சி உண்டு. அது அரசியல் களத்திலும், பிற அரசுத் துறைகளிலும் மெல்ல மெல்ல பரவி விருட்சம் கொண்டது.தமிழர்களின் உயர்வால் எரிச்சலுற்ற சிங்கள அரசு, அரசியல் துறையில் தமிழர்களை வளரவிடாமல் தடுக்க முடிவு செய்தது. இது, தமிழர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கொழும்புவில் இருந்து குக்கிராமம் வரை, தமிழர்கள் அறப்போராட்டத்தில் இறங்கினர். வடக்கு, கிழக்குப் பகுதிகள் மட்டுமல்லாது, மலையகப் பகுதிகளிலும் போராட்ட உணர்வு உச்சம் அடைந்தது. இலங்கையில், சிங்களமும், தமிழும் ஆட்சி மொழியாக இருப்பின், இலங்கை ஒரே நாடாக இருக்க முடியும்; சிங்களம் மட்டுமே ஆட்சி மொழியாக இருப்பின், இலங்கை இரு நாடுகளாக பிரிவது வெகுதூரத் தில் இல்லை என்ற கருத்து, தமிழர்களிடம் மட்டுமல்ல, சீரிய சமநோக்கு உடைய சிங்களர்களிடமும் எழுந்தது.

பிரதமர் டி.எஸ்.சேனநாயக, 1948ல், இலங்கை குடியுரிமை சட்டம் என்ற சட்டமுன் வடிவை கொண்டு வந்தார். அதன்படி ஒருவர், இலங்கையின் குடியுரிமை பெற வேண்டும் என்றால், அவர் இலங்கையில் பிறந்தவராக மட்டும் இருந்தால் போதாது; அவரின் தகப்பனாரும் இலங்கையில் பிறந்தவராக இருத்தல் வேண்டும் என்கிறது அச்சட்டம். இதன் விளைவாய், பல லட்சம் இந்தியத் தமிழர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.இதனால், ஏழு இந்திய வம்சாவளி தமிழ் பார்லிமென்ட் உறுப்பினர்கள், தங்கள் பதவியை இழந்தனர். பின் அவர்களால் தேர்தலில் போட்டியிடவே இயலவில்லை. இக்கொடுமையான கறுப்பு சட்டத்தை எதிர்த்து, மலையகத் தமிழர்கள் கொதித்தெழுந்தனர். ஆனால், யாழ்ப்பாணத் தமிழர்கள் மத்தியில், இக்கறுப்பு சட்டத்திற்கு எதிரான மனநிலை ஏனோ எழவில்லை.ஆனால், எஸ்.ஜெ.வி.செல்வநாயகம் மட்டும் கொதித்தெழுந்தார். இன்று, இந்திய தமிழர்களுக்கு இக்கொடுமை நிகழ்ந்திருக்கிறது. நாம் மவுனம் காத்தால், நாளை, இலங்கை தமிழர்களுக்கும் இது நிகழக் கூடும் என, கோடையிடி போல கர்ஜித்தார்.இக்கறுப்பு சட்டத்தை அன்றைய இந்திய அரசும் வேடிக்கை பார்த்தது. அதன்பின், விடுதலைப்புலிகள் தலைதூக்கினர். நீண்ட போராட்டத்துக்குப் பின், இலங்கை தமிழர் பகுதியில் இப்போது அமைதி ஏற்பட்டுள்ளது.

இன்றைய இலங்கை அரசு, இந்தியாவிற்கு மிக நெருக்கமான அரசாக திகழ்கிறது. வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத நெருக்கம் தற்போது, இரு நாடுகளுக்கிடையேயும் நிலவுகிறது.பொதுவாகவே, இலங்கைக்கும், இந்தியாவிற்கும் ஒரு பங்காளிப் பார்வை உண்டு. அப்பார்வையில் இப்போது மாற்றம் நிகழ்ந்துள்ளது. பரஸ்பரம் நம்பிக்கை பிறந்துள்ளது.ராஜிவ் - ஜெயவர்த்தனே கொண்டு வந்த, 13வது அரசியல் சட்டத் திருத்தம், தமிழர்களுக்கு அதிக உரிமையை வழங்குகிறது; இதை நடைமுறைப்படுத்தினால், நன்மை பயக்கும் என, வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் கருதுகிறார்.ஆனால் விடுதலைப்புலிகள், அன்று, இந்த திருத்தத்தை நடைமுறைப்படுத்த ஒத்துழைக்கவில்லை. தனிநாடு பிரிவினை என்பதிலேயே அவர்கள் குறியாக இருந்தனர்.

பவுத்த சிங்களர்கள், 13வது அரசியல் சட்டத் திருத்தமே கூடாது என்கின்றனர். இலங்கையில் உள்ள அனைத்து மாகாணங்களுக்கும் இருக்கிற உரிமை போல தான், தமிழர்கள் வாழும் மாகாணங்களுக்கும் இருக்க வேண்டும். தமிழர்களுக்கென தனி சட்ட அதிகாரம் வழங்குதல் கூடாது என்பது, அவர்கள் வாதம்.
ஜனநாயகத்தில் நம்பிக்கை உடைய பிற சிங்களர்கள், பொதுவாகவே மாகாணங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும் என்கின்றனர். 13வது அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வருவதில் தவறேதும் இல்லை என்பது, அவர்களின் நிலை.ஆனால், இலங்கை உச்ச நீதிமன்றம், '13வது அரசியல் சட்டத் திருத்தம் செல்லாது' என, ராஜபக்ேஷ காலத்தில் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது.

இலங்கையில் நிலவுகிற இந்தக் குழம்பிய சூழலில், இந்திய அரசு, நட்பு ரீதியான ஒரு அழுத்தத்தை, இலங்கைக்கு தர வேண்டும்; அமெரிக்காவுடன் நமக்கு இருக்கும் நெருக்கத்தை பயன்படுத்தி, உலக கருத்தை, இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக மாற்ற வேண்டும். உலகம் தரும் அழுத்தம், இலங்கையின் சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.இலங்கையில், அரசியல் அதிகாரம், துப்பாக்கியிலிருந்து பிறக்காது என்பதை, விடுதலைப்புலி ஆதரவாளர்கள் உணர்ந்து பார்க்க வேண்டும். உலக கருத்து இன்று, ஜனநாயகத்தின் மேல் நாட்டமும், வன்முறை மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிராகவும் திரும்பி உள்ளது.
விடுதலை இயக்கம் அல்லது போராட்டம் என்பது அகிம்சை முறையிலும், ஜனநாயக கோட்பாடுகளை தழுவியதாகவும் இருக்க வேண்டுமே அல்லாமல், வன்முறை வழியில் இருக்க கூடாது.எனவே, இந்நிலையில் உறுதியான, மிக உறுதியான ஒரு நிலைப்பாட்டை இந்திய அரசு எடுத்து, இலங்கையில், தமிழர்களின் பிரச்னையை தீர்க்க வேண்டும்.

மலையகத் தமிழர்களான இந்திய தமிழர்கள், மிகவும் சீர்கெட்ட நிலையில் அங்கு வாழ்கின்றனர். லட்சக்கணக்கானோர் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்கின்றனர். ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு வெளியேறிய போது, தேயிலைத் தோட்டங்கள் இலங்கை அரசின் கட்டுப்பாட்டிற்குள் வந்து விட்டது. அந்த அரசு இடங்களில் தான் மலையகத் தமிழர்கள் வாழ்கின்றனர். நுாறாண்டுகளாக வாழ்ந்தும், அந்த இடம் அவர்களுக்கு சொந்தம் இல்லை; பட்டாவும் இல்லை. அரசு நிலத்தை, விலை கொடுத்து வாங்கவும் முடியும்.அவர்களுக்கும் நில உரிமை வழங்குதல் வேண்டும் என, இந்திய அரசு, இலங்கைக்கு அழுத்தம் தர வேண்டும்.உறுதியாக நிதானமாக, உலக கருத்தை இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக திரட்டி, முடிந்தால், ஐ.நா.,விலும் செல்வாக்கை பயன்படுத்தி, அவர்கள் மூலமாகவும் ஜனநாயகம் தழைக்க, இலங்கையில் உள்ள தமிழர்கள் உரிமை பெற்று நல்வாழ்வு வாழ இந்தியா பணியாற்ற வேண்டும்.இந்த நுாற்றாண்டில், இரண்டாம் தர குடிமக்கள் என்போர் உலகில் எங்கும் இருக்க கூடாது; குறிப்பாக, தமிழர்களில் கூடாது.
இ-மெயில்: ksa.siddugmail.com

- கே.எஸ்.அழகிரி
-பார்லிமென்ட் முன்னாள் உறுப்பினர் மற்றும் இந்திய அரசின் வெளிவிவகார குழுவின் முன்னாள் நிலைக்குழு உறுப்பினர்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (6)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement