Advertisement

மடமையை கொளுத்திடு பெண்ணே! நாளை (மார்ச் 8) உலக மகளிர் தினம்

பூமியில் பிறந்த பெண்கள் அனைவருக்குமே பிறந்த நாட்களுண்டு - ஆண்டின் ஏதோ ஒரு நல்ல தினத்தில். ஆனால் அந்த நாட்களெல்லாம் அவர் தம் பிறந்த நாட்கள் ஆகாது. ஏனெனில் 'குழந்தை பருவம் பகுத்தறிவின் உறக்க நிலை' என்கிறார் சிந்தனையாளர் வால்டோர். உறக்க நிலைப் பருவம் கடந்து அறிவிலே வளர்ந்து, சரியெது, தவறு எது எனக் கேட்டு பல துறைக் கல்வி பெற்று, முழுப் பரிணாமமும் அடைந்த பட்டாம் பூச்சியாக கூட்டுக்களைத் துறந்த நாளே அவர்தம் பிறந்த நாளாகும்.

இங்கோர் சிறு விளக்கம்...:



கூட்டுக்களை துறப்பதென்பது குடும்பங்களைத் துறப்பதாகாது. பெண் சிசுக் கொலை என்னும் கொடுமையைத் துறப்பது பாலியல் சித்ரவதை என்னும் பேதமையைத் துறப்பது. பெண்களாய் இருப்பதாலாயே வெறும் அலங்கார பொம்மைகளாய் சிந்திக்காமல் இருப்பதை வெறுப்பது. சிற்சில சமயம் சிந்தித்தாலும் பற்பல சமயங்களில் செயல்படாமல் கூட்டுக்குள் நத்தையாய் சுருண்டு கொண்டு சும்மா இருப்பதை வெறுப்பது. கல்வி, உரிமை, விடுதலை, ஆளுமை, சுயமரியாதை, போராட்ட குணம் இவையெல்லாம் படித்த அல்லது மேல்தட்டு வர்க்கப் பெண்களின் பிரத்யேக அகராதிச் சொற்கள் அல்ல. அதிகச் செலவு செய்து வாங்கிச் சுவைக்கும் செர்ரிப் பழங்களைப் போன்ற அரிதான வகையல்ல. எளிய சமையல் மாதிரி, கறிவேப்பிலை ரசம் போல இவை எல்லாத் தரப்புப் பெண்களுக்கும் ஏற்புடைய, பொதுவான விதிகள்.

உழைப்பின் மகத்துவம்:



உழைப்பு உன்னதமானது என்று சொல்ல மார்க்சிம் கார்கியை நாம் அறிந்திருக்க வேண்டியதில்லை. நகர்புறத்தாரை விட நாட்டுப்புறத்தாருக்கு அது மிக நன்றாகத் தெரியும். உற்று கவனித்தாலும் பார்த்தாலும் கேட்டாலும் உய்ந்தவற்றைப் பின் உணர்ந்து ஆய்ந்தாலும் பெண்கள் நமக்குப் பெரும் ஆயாசமா என்ன? கரையோர மரங்களை எந்தவித பிரயத்தனமுமின்றி பிரதிபலிப்பது நதிக்கென்ன பெருஞ்சுமையா? அதனுடைய இயல்பான தன்மை அது. ஐரோப்பாவில் பெண்கள் பகுத்தறிந்ததால், 1871 ல் பாரிஸ் கம்யூன் பிறந்தது. 1899 ல் டென்ஹாகில் யுத்தத்திற்கு எதிரான பெண்கள் மாநாடு நடந்தது. கிளாரா ஜெட்கின் என்றொரு உழைக்கும் மகளிர் அணியில் இருந்த பெண்மணி பகுத்தறிந்ததால் 1907 ல் சோஷலிசப் பெண்கள் முதல் மாநாடு நடந்தது. சாமான்யப் பெண்களுக்கும் இக்குணங்கள் சாத்தியப்படும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டே உலக உழைக்கும் மகளிர் தினமான மார்ச் 8.

மார்ச் 8 எப்படி, என்று முதல் உலக உழைக்கும் மகளிர் தினமானது? 150 ஆண்டுகளுக்கு முன் மிகச் சாமானியப் பெண்கள் எது சரி, எது தவறு எனப் பகுத்து அறியத் தொடங்கிய பொழுது! 19ம் நூற்றாண்டில் தொழிற்புரட்சி! தொடர்ந்ததோ பல்வேறு துறைகளிலும் பெண்கள் பங்கேற்ற காட்சி! அந்த நாட்களில் தொழிற்சாலைப் பணிப் பெண்களுக்கு வேலை நேரமோ 16 மணி நேரம். வீட்டு வேலை நேரமோ மீதமிருக்கின்றன 8 மணி நேரம். முழுநேர வேலையாட்களாக உழைத்துக் கொண்டிருந்த பெண்கள், ஒரு கட்டத்தில் பகுத்தறிய ஆரம்பித்தனர்.

வேலை நேரம்:



எப்படி தெரியுமா? ஓய்விற்காக நேரம் வேண்டும். பணியிடத்தில் தூய்மையான சுற்றுச்சூழல் வேண்டும். உடலை கவனிக்க, மனதை கவனிக்க, மனையை கவனிக்க, தமக்கெனவும் தனிநேரம் வேண்டும் என பகுத்து அறிந்து போராடியதால் முதன் முதலில் இங்கிலாந்தில் மகளிரின் வேலை நேரம் 10 மணி நேரமாக குறைக்கப்பட்டது. அமெரிக்காவில் நெசவுத் தொழில் செய்த மகளிர் பலர் நெடிய போராட்டம் ஆரம்பித்த அந்த நாள் 1857 மார்ச் 8. தொடர்ந்த அப் போராட்டத்தின் முடிவு குறுக்கப்பட்டிருந்த மக்களின் வரை கோடுகள் பகுத்தறிவென்னும் நெம்புகோலால் விரிவாக்கப்பட்டன. நாளும் உழைக்கும் பெண்கள் நலன் பற்றியும் நினைத்து வெற்றிகண்ட அந்த நாள் மார்ச் 8. அன்று முதல் அகில உலக உழைக்கும் மகளிர் தினமாயிற்று. 1975க்கு பின் ஐ.நா., சபையும் இந்த நாளை அங்கீகரித்தது. இப்படிச் சாமானிய பெண்கள் போட்ட பகுத்தறிவுச் சாலையொன்று இன்று நம்மையெல்லாம் சாதனையென்னும் ஊருக்கு உழைத்துச் செல்லும் சோலையாக நிற்கிறது.

சிகரம் தொட்டவர்கள்:



'பள்ளங்களை பார்ப்பதல்ல வாழ்க்கை; சிகரங்களை தொடுவதற்கே இந்த கை!' என்றொரு ஜப்பானியப் பெண் ஜங்கோ தாயெய் பகுத்தறிந்ததால் தன் 21வது வயதில் எவரெஸ்ட் சிகரத்தை தொட்டார். எழுத்து அக வாழ்க்கையினை சுவைபடுத்தும். புறவாழ்வின் சுமையினின்று எழுந்து வரத் தோள்கொடுக்கும் என்றொரு ஸ்வீடன் பெண் செல்மாலா பகுத்தறிந்ததால், இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண்ணானார். நவீன உலகில் கணினியின் பங்கை பற்றி நன்கறிந்த நடாலி கென்ட் என்னும் நங்கை, கணினி எவ்வளவு சிறியதோ அத்தனை அளவு அதன் கீர்த்தி பெரியது என பகுத்தறிந்ததால் கழுத்தில் தொங்கும் கணினியை கண்டுபிடித்த முதல் பெண்ணானார். நம் நாட்டு பகுத்தறிவுப் பெண்டிரைச் சற்று திரும்பிப் பார்த்தால் ''வன்மை உயர்வு மனிதர் நலமெல்லாம் பெண்மையினால் உண்டு'' என்னும் புரட்சிக் கவிஞரின் வரிகள் தான் நினைவிற்கு வருகின்றன. பண்டித ராமாபாய், கவிக்குயில் சரோஜினி நாயுடு, வள்ளியம்மை, ராணி சென்னம்மா, வேலுநாச்சியார், மோகன முத்துவடிவு, தில்லையாடி வள்ளியம்மை, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, ருக்மணிதேவி அருண்டேல், கண்ணம்மை, மணியம்மை என மிக நீள பட்டியலுண்டு. எண்ணிப்பார்த்தால் எத்தனை பெண்டிரின் வியர்வை, உழைப்பிற்கு பின் நமக்கு இந்த அங்கீகாரம் கிடைத்திருப்பது புரியும்.

எங்கும் சாதனையாளர்கள்:



'' காற்றில்லை எனில் துவளாதே துடுப்போடு' என கற்றுக் கொடுத்த இன்னும் இந்த தேசத்தின் ஒளிபுக முடியாத உட்பிரதேசக் கிராமங்களில், விழி என்னும் விளக்கு மட்டுமே கொண்டு தம் அனுபவம் எனும் கைத்தடியால் அடுத்த தலைமுறையினையாவது அறிவின் வழி செல்ல விடவேண்டும் என்னும் வேட்கை கொண்ட, என் அப்பத்தாவைப் போல, அருமை முதுபெண்கள் ஆங்காங்கே பலருண்டு. பெருமைமிகு மகளிர் பலரையும், அவர் தம் பாதசுவடுகளையும் நினைத்து பார்க்கின்ற ஒரு நாளாக இந்த உழைக்கும் மகளிர் தினம் அமைந்திருக்கிறது. நினைத்தல் என்பது நாம் இருத்தலின் அடையாளம். இருத்தலின் அடையாளம் சிந்தித்திருப்பதே. நாம் நல்லனவற்றையும், வல்லனவற்றையும் நினைத்திருக்க வேண்டும். நினைவில் காடு இருக்கும் மிருகத்தைப் பழக்க முடியாது என்பார்கள். மிருகத்திற்குக் காடு - பெண்ணிற்கு மடமை. மடமை கொளுத்திப், பகுத்தறிவின்பாற் பயணிப்போம்!

- தமிழச்சி தங்கபாண்டியன், எழுத்தாளர். vanapechiyahoo.co.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement