Advertisement

நேரு : சமாதானம் தேடி

ஹங்கேரி மீதான தாக்குதலை எதிர்த்துப் பேசியதைவிடவும் எகிப்து மீதான தாக்குதலை எதிர்த்து நேரு உரத்த குரலில் பேசினாரா? 1959 வரையிலும் ஹங்கேரியுடன் தூதரக நிலையிலான வெளியுறவுகள் இல்லை. மேற்கத்திய வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல்களைத் தவிர வேறு தகவல்கள் இல்லை. அந்நிலையில், தில்லியில் இருந்த ரஷ்யத் தூதரிடம் நேரு தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினார். சுதந்தரத்துக்காகப் போராடும் ஹங்கேரிய தேசியவாதிகளின்பால் இந்தியா அனுதாபம் கொண்டுள்ளது என்பதை சோவியத் அரசாங்கத்திடம் தெரிவிக்குமாறு மாஸ்கோவில் உள்ள இந்தியத் தூதருக்கு அவர் ஆணையிட்டார். ஹங்கேரி நிலைமைகள் குறித்து முழுத் தகவல்களைத் திரட்டுமாறு இந்தியத் தூதரை அவர் கேட்டுக் கொண்டார். 1956 நவம்பர் 5-இல் தில்லியில் நடைபெற்ற ஐ.நா. கல்வி, அறிவியல், கலாசாரஅமைப்பின் (யுனெஸ்கோ) மாநாட்டில் பேசும்போது 'எகிப்திலும், ஹங்கேரியிலும் இன்று மனிதர்களுடைய கண்ணியமும் சுதந்தரமும் அவமதிக்கப்படுவதையும், அரசியல் குறிக்கோள்களை அடைவதற்காக மக்களை ஒடுக்குவதற்காக நவீன ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதையும் நாம் பார்க்கிறோம்' என்று நேரு குறிப்பிட்டார். இந்தியா, பர்மா, சிலோன், இந்தோனேசியா ஆகியவற்றின் பிரதமர்கள் சேர்ந்து வெளியிட்ட கூட்டறிக்கையானது, ஹங்கேரியில் இருந்து சோவியத் படைகள் அகற்றப்பட வேண்டும் என்றும், தாங்கள் விரும்புகிற ஜனநாயக மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான மக்களின் உரிமை மதிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியது. ஐ.நா.வில் இந்தியா கொண்டுவந்த தீர்மானம் பார்வையாளர்களை ஏற்றுக்கொள்ளுமாறு ஹங்கேரி அரசை கேட்டுக் கொண்டது. சோவியத் நாட்டின் எதிர்ப்பையும் மீறி மிகப் பெரும்பான்மை ஆதரவுடன் அத் தீர்மானம் நிறைவேறியது. அதைத் தொடர்ந்து சோவியத் பிரதமர் புல்கானின், ஹங்கேரி அரசின் தலைவர் காதர், யுகோஸ்லேவியாவின் தலைவர் டிட்டோ ஆகியோருக்கு அந்தத் தீர்மானத்தை ஆதரிக்குமாறும், ஐ.நா. பொதுச்செயலர் டாக் ஹாம்மர்ஜால்டை ஹங்கேரிக்கு வருகை தர அழைக்குமாறும் வலியுறுத்தி நேரு செய்திகள் அனுப்பினார்.ஹங்கேரி தொடர்பாக பாகிஸ்தான், க்யூபா, இத்தாலி, அயர்லாந்து, பெரு ஆகியவை ஐ.நா.வில் கொண்டுவந்த தீர்மானத்தை எதிர்த்து இந்தியா ஏன் வாக்களித்தது என்பதை மக்களவையில் நவம்பர் 16-ஆம் தேதி நேரு விரிவாக விளக்கிப் பேசினார். அந்தத் தீர்மானத்தின் வாசகமானது சோவியத் படைகளை வெளியேறச் செய்வதற்கான இந்தியாவின் முயற்சியைத் தோற்கடித்திருக்கக் கூடும் என்றும் அந்நியத் தலையீட்டைக் கொண்டு வந்திருக்கக் கூடும் என்றும், 'போர்த் தீயில் ஹங்கேரி அழிந்துபோவதற்கு' வழிவகுத்திருக்கக் கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார். (கொரியப் போரை மனதில் கொண்டே அவர் அவ்வாறு பேசினார். அந்தப் போரில், அமெரிக்கா தலைமையிலான படைகள் 38-ஆவது அட்சரேகைக் கோட்டைத் தாண்ட வட கொரியாவுக்குள் புகுந்தன. சீனாவின் தலையீட்டைத் தொடர்ந்து அவை பின்னுக்குத் தள்ளப்பட்டன. நிலைமை மேலும் மோசமாகும் வகையில் சீனாவை ஆக்கிரமிப்பாளர் என ஐ.நா. முத்திரை குத்தியது. அமெரிக்க அதிபர் ட்ரூமன் அணு குண்டை பயன்படுத்தப் போவதாக மிரட்டினார்.) ஐ.நா. மேற்பார்வையில் தேர்தல்களை நடத்துவது என்பதுதான் தீர்மானத்தில் 'மிகவும் ஆட்சேபத்துக்குரிய பகுதி.' அது பிற நாடுகளில் தலையிடுவதற்கான மோசமான முன்னுதாரணமாக இருந்திருக்கக் கூடும். தீர்மானத்தின் ஒவ்வொரு பத்தியின் மீதான வாக்கெடுப்பிலும் இந்தியா கலந்துகொள்ளாமல் இருந்தாலும், 'மிகவும் ஆட்சேபணைக்குரிய பத்தியை' எதிர்த்து அது வாக்களித்தது. அந்த வகையில் இறுதி வாக்கெடுப்பில் தீர்மானம் முழுவதற்கும் எதிராக வாக்களித்தது.ஹங்கேரியில் உள்ள நிலைமைகள் பற்றிய பாகுபாடற்ற தகவல்களுக்காகக் காத்திருந்ததன் காரணமாக, ஹங்கேரி தொடர்பாக நேரு ஆரம்பத்தில் எச்சரிக்கையுடன் நடந்துகொண்டார். (ஆனால் சூயஸ் கால்வாய் நெருக்கடியின் ஒவ்வொரு கட்டத்திலும் நேரடித் தகவல்கள் கிடைத்துவந்தன.) அது இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் அவர் இரட்டை அளவுகோல்களுடன் நடந்துகொள்கிறார் என அவர் மீது குற்றம்சாட்டுவதற்கு இடம் அளித்தது. ஆனால் ஹங்கேரியில் மக்கள் எழுச்சி பற்றிய முழு விவரங்களும் உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, நவம்பர் 19-இல் மக்களவையில் அவர் ஆற்றிய உரையில் எல்லா எச்சரிக்கைகளும் கைவிடப்பட்டன. அதுபற்றி அடுத்த நாள் செய்தி அளித்த பிபிசி செய்தியாளர் ஜெரால்டு பிரீஸ்ட்லாண்ட் 'நேருவின் உரை மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்தது' எனக் குறிப்பிட்டார். 'அவரது உரை முன்கூட்டியே எழுதித் தயாரிக்கப்பட்ட வாசகங்களோ, குறிப்புகளோ இல்லாமல் அமைந்திருந்தது. அது கணக்குப்போட்டு பேசிய பேச்சாக இல்லை மாறாக இதயத்தில் இருந்து நேரடியாக வந்த ஒன்றாக இருந்தது. ரஷ்ய ஏகாதிபத்தியத்துக்கு எதிராகவும், இரும்புத் திரைக்குப் பின்னால் அடக்கி ஒடுக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆதரவாகவும் இந்த அளவுக்கு ஆக்கபூர்வமாக நேரு இதற்கு முன்பு ஒருபோதும் பேசியதில்லை. ஐ.நா.வில் சமீபத்தில் இந்தியா முன்வைத்துள்ள தீர்மானமானது இந்த வழியில் அது தொடர்ந்து செல்ல முனைந்திருக்கிறது என்பதையே காட்டுகிறது' என்று அவர் கூறியிருக்கிறார்.எகிப்திலும் ஹங்கேரியிலும் நடந்த கேடுவிளைவித்த துன்ப நிகழ்ச்சிகளுக்கும், பனிப் போரினால் தூண்டப்பட்ட பகை வல்லரசுகளின் பதிலடி ஆட்டத்தின் எதிர் எதிர் நடவடிக்கைகளுக்கும் தொடர்பு இருப்பதாக நேரு கருதினார். 1956 டிசம்பர் 20-இல் நியூ யார்க்கில் ஐ.நா. பொதுப்பேரவையில் ஒலித்த அவரது சொற்கள் போர்களினால் முற்றிலும் சலிப்படைந்தவர்களின் குரலாக ஒலித்தன: 'பனிப் போர்கள் என்பதற்கு, மனிதர்களின் மனத்தில் போர்க் கருத்துகளை ஊட்டி வளர்த்தல் என்று பொருளாகும்... இந்த ஒப்பந்தங்கள், ராணுவக் கூட்டணிகள் எல்லாம் காலத்துக்கு பொருத்தமற்றவை. அவை பகைமையை மட்டுமே உருவாக்கும். ஆயுதங்களைக் குவிப்பதற்கே வழிவகுக்கும். ஆயுதக் குறைப்பை மேலும் மேலும் கடினமாக்கும்' என்று அவர் பேசினார்.சூயஸ் போரினால் நாசரை அகற்றும் குறிக்கோளை எட்ட முடியவில்லை. ஆட்சியை மாற்றுவதற்கான வெளிப்படையான முயற்சியை முறியடித்து அவர் தாக்குப் பிடித்து நின்றார். ஆனால் இந்த நல்வாய்ப்பு, 1951-இல் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை அகற்றும் நோக்கில் பெட்ரோலியக் கச்சா எண்ணெய்த் தொழிலை நாட்டுடைமை ஆக்குவதற்கு இரான் நாடாளுமன்றம் வாக்களித்தபோது, இரான் பிரதமர் மொசாதிக்குக்கு கிடைக்கவில்லை. அந்த ஆண்டு ஜூன் 20-ஆம் தேதி நாட்டு மக்களுக்கு வானொலியில் உரையாற்றியபோது, 'பாரசீகத்தில் ஐம்பதாண்டுக் கால ஏகாதிபத்தியம் இன்று முடிவுக்கு வந்திருக்கிறது' மொசாதிக் குறிப்பிட்டார். இங்கிலாந்தும் அமெரிக்காவும் இணைந்து நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இரான் அரசு 1953-இல் தூக்கி எறியப்பட்டது. மொசாதிக் சிறையில் அடைக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாட்டை விட்டு ஓடிய, ஆங்கிலேய அமெரிக்க அரசுகளுக்கு அடிபணிந்து நடக்கிற மன்னர் ஷா மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவரப்பட்டார். ஆட்சிகள் மாற்றப்பட்ட மற்ற சூழ்நிலைகளிலும், காலனி ஆதிக்கம் முடிவுக்கு வந்ததற்குப் பிந்தைய உலகத்தின் புதிய யதார்த்தங்கள் அங்கீகரிக்கப்படவில்லை. உகாண்டாவில் பிரிட்டிஷ் ஆதரவுடன் நடத்தப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பில் மில்டன் ஓபோட்டே நீக்கப்பட்டு இடி அமீன் ஆட்சிக்குக் கொண்டுவரப்பட்டார். அமெரிக்காவின் சிஐஏ உளவு அமைப்பானது காங்கோவில் பாட்ரிஸ் லுமும்பாவையும் பின்னர் சிலியில் சல்வடார் அல்லெண்டேயையும் படுகொலை செய்தது. அவர்கள் இருவருமே ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், மக்களின் போற்றுதலுக்குரியவர்கள். எண்ணற்ற படுகொலை முயற்சிகளில் இருந்து ஃபிடல் காஸ்ட்ரோ தப்பிப் பிழைத்திருக்கிறார். வல்லரசுகளின் நலன்களுக்கு எதிரானவர்கள் திறமையான முறையில் ஒழிக்கப்பட்டனர். ஜனநாயகத்துக்கு அடிப்படை என்ற முறையில் உள்நாட்டில் எதிர்ப்புகளை ஆதரித்த ஜனநாயக நாடுகள்தான் இந்தச் செயல்களில் ஈடுபட்டன என்பதுதான் நகை முரண். இவற்றுக்கு ரகசிய நடவடிக்கைகள் தேவையாக இருக்கவில்லை. 1950-களின் ஆரம்பத்தில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் டீன் அகிசன் வெளிப்படையாகவே அதைக் கூறியிருக்கிறார்: 'அமெரிக்காவின் நிலைக்கோ, பெருமைக்கோ, அதிகாரத்துக்கோ ஏற்படும் சவால்களுக்கு பதிலடி கொடுக்க நேரும்போது அமெரிக்காவுக்கு எந்த சட்டப் பிரச்னைகளும் எழாது' என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். மேலான படை வலிமையின் அரண்களுக்கு வெளியே இருப்பவர்களுக்கு சுதந்தரத்தை அடைவது என்பது ஆபத்தானது. மேலும் அவர்கள் சுதந்தரமாகச் செயல்படுவது அடியோடு அழிவையே கொண்டு வந்து சேர்க்கும். =========நேரு : உள்ளும் புறமும் நயன்தாரா சகல்தமிழில்: ஜெயநடராஜன்கிழக்கு பதிப்பகம்பக்கம் 320 விலை ரூ 200இணையத்தில் புத்தகத்தை வாங்க : https://www.nhm.in/shop/978-93-5135-152-8.htmlஃபோன் மூலம் புத்தகத்தை வாங்க : 09445901234 / 09445979797

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement