Advertisement

காதை கடி... கண்ணை குத்து... ஓங்கி கத்து! : என் பார்வை

நடந்தால் வன்முறை... நின்றால் வன்முறை... அமர்ந்தால் வன்முறை... என பள்ளி, கல்லூரி, வீடு, அலுவலகங்களில் பெண்களைச் சுற்றி வன்முறைகள் அதிகரித்து வருகின்றன.
நள்ளிரவில் உடல் முழுக்க
நகையணிந்து ஒரு பெண் சுதந்திரமாக நடமாடும் போது தான் உண்மையான விடுதலை கிடைத்ததாக அர்த்தம் என்றார் மகாத்மா காந்தி. நள்ளிரவில் பூட்டிய வீட்டுக்குள் கூட ஒரு பெண் நிம்மதியாக இருக்க முடியவில்லை. நகைக்காக கொலை... பாலியலுக்காக கொலை... என பெண்களின் நிம்மதிக்கு விலை பேசி வரும்
கூட்டத்திடம் இருந்து எப்படி தங்களை காத்துக் கொள்வது.உலகம் முழுக்க தற்காப்பு கலைகள் நிறைய உள்ளன. கராத்தே, சிலம்பம், ஜூடோ, டேக்வாண்டோ... கலைகளைச் சொல்லலாம். கராத்தே என்பதில் கரா என்றால் வெறுமனே என்றும், தே என்றால் கைகள் என்றும் அர்த்தம். வெறும் கைகளால் நம்மை எப்படி எதிரியிடமிருந்து காத்துக்
கொள்வது என்பது தான் முக்கியம். எதிரியை செயல்படவிடாமல் தடுக்க வேண்டும்.
உலகளவில் ஜப்பானின் ஒகினவோ என்ற இடம் தான் கராத்தேயின் தாயகம். மிக திட்டமிட்டு இதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. உலகம் முழுக்க பிரபலமான கராத்தே கலை தற்காப்பு கலையின் மற்றொரு அம்சம். பலசாலியான ஒருநபர் நம்முடன் இருந்தால் நமக்கு எங்கிருந்தோ தைரியம் பறந்து வரும். கராத்தே கற்றுக் கொண்டால் அடிப்படையில்
தன்னம்பிக்கை, தைரியம், ஆபத்தான சூழ்நிலையில் அதிலிருந்து பதட்டமின்றி வெளிப்படும் திறன் கிடைக்கும்.
அனைவரும் கராத்தே தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில்லை. சூழ்நிலைக்கேற்ப தங்களை எப்படி காத்துக் கொள்ள வேண்டும் என்பது தான் முக்கியம்.
நிலை தடுமாற வேண்டும்
ஒரு பெண் ரோட்டில் தனியாக நடந்து சென்று கொண்டிருக்கிறார். ஜீன்ஸ், சேலை, சுரிதார், தாவணி எதையும் அணிந்திருக்கலாம். திடீரென ஒருவன் வந்து கழுத்தில் உள்ள செயினை
அபகரிக்க முயலும் போது என்ன செய்ய வேண்டும். கழுத்துப் பக்கம் கை வரும் போது தடுக்க முயலலாம். கையில் என்ன இருக்கிறதோ அதை வைத்து தாக்கலாம். கீழே கிடக்கும் கல்லை எடுத்து துப்பட்டாவில் கட்டி தலையில் தாக்கலாம். பேனா, கீசெயின் இருந்தால் கண், நெற்றியில் குத்தலாம். இதனால் உடனடியாக நிலை தடுமாறி விடுவார் எதிரி.
ஒருவர் தாக்க முற்பட்டாலோ, கையை பிடித்து இழுத்தாலோ பதட்டப்படுவதை நிறுத்த வேண்டும். பதட்டப்பட்டால் ரத்தஅழுத்தம்
அதிகரித்து வியர்வை பெருகும். உடல் சோர்ந்துவிடும். அதன்பின் எதையும் செயல்படுத்த முடியாது. அந்த சூழ்நிலையில் என்ன செய்தால் தப்பிக்க முடியும் என்பதை விரைவாக யோசிக்க வேண்டும். அதற்கு அடிப்படையில் தன்னம்பிக்கை, தைரியம் வேண்டும்.கையை பிடித்து இழுத்தால் கையை எப்படி விடுவிப்பதென தெரிந்து கொள்ள வேண்டும். கையில் கிடைத்த பொருளை எறிவதன் மூலம் தற்காத்து கொள்ள வேண்டும்.பள்ளி, கல்லூரி, அலுவலகங்களில் இதுகுறித்த தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவிகள் தற்காப்பு குறித்து தனியாக பயிற்சி பெறுவது நல்லது. வீட்டில் உள்ள குடும்பத்தலைவிகள் எளியமுறைகளின் மூலம் தற்காப்பதை கற்றுக் கொள்ள வேண்டும்.
விழிப்புணர்வு குறைவு தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலையில் ஓராண்டு கராத்தே டிப்ளமோ பயிற்சிக்கான பாடங்கள் எழுதியுள்ளேன். அப்பாடத்திட்டம் தற்போதும் உள்ளது. ஆனால் அதற்கான விழிப்புணர்வு தான் குறைவு.சென்னை, கோல்கட்டா, பெங்களூரு போன்ற நகரங்களில் பெண்களுக்கான தற்காப்பு
விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. ஐ.டி.நிறுவனங்களே அதற்கான ஏற்பாடுகளை செய்கின்றன.
வீடுகளில் சட்டென கையில் கிடைப்பது துடைப்பமும், மிளகாய்ப்பொடியும் தான்.
ஆபத்தான சூழ்நிலையில் வினாடி கூட தாமதிக்காமல் மீண்டுவர வேண்டும் என்பது தான் முக்கியம். துளியும் பயமின்றி ஆக்ரோஷமாக மாற வேண்டும். தனியாக இருக்கும் போது முடிந்தளவு ெவளிநபர்களுக்காக கதவை திறக்காமல் இருப்பது தான் நல்லது. தண்ணீர் கேட்பது போல, நோட்டீஸ் கொடுப்பது போல வருவர். கவனமுடன் இருப்பதும் ஒருவகையில் தற்காப்பு தான்.
காதை கடி குழந்தைகளை கடத்த முற்பட்டால், அவர்கள் தூக்குபவர்களின் காதை கடிக்க வேண்டும். கண்களை குத்த வேண்டும். முடிந்தளவு ஓங்கி கத்தி மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும். இவற்றையெல்லாம் சிறு செய்முறைகளுடன் குழந்தைகளுக்கு கற்றுத் தருவது அவசியம்.
ரோட்டில் தனியாக நடந்து செல்லும் போது கையில் மண்ணை வைத்துக் கொள்ளலாம். எதிரி தாக்க வரும்போது கண்களில் மண்ணைத் தூவலாம்.கற்றுக் கொள்வதற்கு நேரமில்லை என்பது வெற்று வார்த்தை. காலையில் எழுகிறோம், பல் துலக்குகிறோம், நமக்கான வேலைகளைச் செய்கிறோம். அதில் ௧௫ நிமிடங்கள் நம்மை பாதுகாப்பதற்கான பயிற்சிக்காக ஒதுக்க வேண்டும்.கராத்தே தெரியாவிட்டாலும் கல், மண், கையில் கிடைத்த ஆயுதத்தை பயன்படுத்துவதற்கு கூட தைரியம் வேண்டும். அந்த அடிப்படை தைரியத்தை வளர்ப்பதற்கும் சிறுபயிற்சிகள் வேண்டும். இதற்கு ஒல்லியானவர், குண்டானவர் என்ற பாகுபாடில்லை. தைரியமானவர், தைரியமில்லாதவர் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
இந்த உலகம் பெண்களுக்காக மலர் படுக்கையை தயார் செய்யவில்லை. முள்படுக்கையை கடந்து செல்ல பழக வேண்டும். அதற்கான தைரியத்தை வளர்ப்பதற்கு நம்மை நாமே தயார்படுத்த வேண்டும்.
-ஷிகான் சி.அஜித் பிரகாஷ், முதன்மை கராத்தே பயிற்றுனர், மதுரை, ௯௮௪௩௩ ௬௯௧௦௭.


வாசகர்கள் பார்வை

பனையின் வரலாறு
வெயிலின் தாக்கத்தால் தவிக்கும் மக்களுக்கு இளம் நுங்கு சாப்பிட்டதை போல உணர்வை தந்தது என் பார்வையில் வெளியான 'ஆயுள் குறைவது அரசின் பனை மரத்துக்கு அழகா' என்ற கட்டுரை. கட்டுரையாளர் குமரி அனந்தன் வாழ்க பல்லாண்டு.
- அன்புச்செல்வன், வீரபாண்டி.

எதிர்ப்பு சக்தி
கொசுக்களால் உண்டாகும் நோய்கள் குறித்த விழிப்புணர்வு அடங்கிய 'எமனாக உருமாறும் கொசுக்கள்' என்ற கட்டுரை என் பார்வையில் வெளியானது பயனுள்ளதாக இருந்தது.
- அ.அபுதாகிர், பழநி.

பனை மரத்து பயன்
என் பார்வையில் வெளியான 'ஆயுள் குறைவது அரசின் பனை மரத்துக்கு அழகா' கட்டுரை படித்தேன். பனை மரம் கொடுக்கும் பதநீர் கண், எலும்பு, நரம்புகளை வலிமையாக்கும் சக்தி கொண்டது என்பதை படித்த போது பனையின் பயன்கள் மகத்தானது என்பதை உணர்ந்தேன்.
- எஸ். பரமசிவம், மதுரை.

உறவுகள் வளர்ப்போம்

இளமை என்பது யாருக்கும் நிரந்தரமல்ல ஒரு நாள் நமக்கும் வயசாகும் என்பதை அழுத்தமாக பதிவு செய்தது என் பார்வையில் வந்த முனைவர் செல்லத்தாயின் 'அன்பை அள்ளி அள்ளி பருகுவோம்' கட்டுரை.
- பி. மகேஸ்வரி, சிவகங்கை

கடல் நீலம்
வானத்தின் நீல நிறத்தை தான் கடல் பிரதிபலிக்கிறது என்று என்னை போல பலரும் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், இந்த நீல நிற கடலுக்கு காரணம் தண்ணீரில் மூலக்கூறுகள் சிதறடிக்கப்படுவது என்ற தகவலை தெரிந்து கொண்டோம்.
- ஜெ. விஜயலட்சுமி, ராமேஸ்வரம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement