Advertisement

அன்பை அள்ளி அள்ளி பகிர்வோம்!

'விடுமுறை இல்லை, வீடியோ அனுப்புங்கள்வாரக்கடைசியில் வருத்தப்பட;வீடியோ கலரில் இருப்பது உத்தமம்ஏனெனில் என் அமெரிக்க நண்பர்களுக்கு மலையாள மரணம் பற்றித் தெரிய வாய்ப்பில்லை”என்பது மலையாளக் கவிஞர் அய்யப்ப பணிக்கர் எழுதிய, ஆழமான கருத்தை விதைத்த கவிதை. மரணம் ஓர் உயிரிழப்பு என்றில்லாமல், இன்றைய தலைமுறையினருக்கு அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளில் ஒன்றாகிவிட்டது. பண்பாட்டு கலாசாரத்தை விட்டு நெடுந்தொலைவுக்கு நம் சந்ததிகள் போய்க் கொண்டிருக்கின்றன என்பதை நினைத்துப் பார்க்கும் போது அச்சமாக இருக்கிறது.

'அவன் வீட்டின் பெயரோஅன்னை இல்லம்,அவன் அன்னை இருப்பதோஅனாதை இல்லம்'என்று மகனுக்கும் பெற்றோருக்குமான உறவு எழுத்தளவில் தான் இருக்கிறது என்பதைப் பதிவு செய்கிறது இக்கவிதை.முதியோர் இல்லங்கள் பெருக யார் காரணம்? ஒரு குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள். கஷ்டம் என்றால் என்ன என்று தெரியாமல் பெற்றோர் வளர்க்கின்றனர். இந்த சூழ்நிலையில் வளர்க்கப்பட்ட பிள்ளைகளுக்கு சிறு கஷ்டம் என்றாலும் தாங்கமுடியாத நிலையில் பல்வேறு முடிவுகளை எடுக்கின்றனர்.

தாய் தந்தைக்கு வேலை :கணவன், மனைவி இருவரும் வேலைக்கு போகும் வீட்டில் வயதான தாய் பிள்ளைகளை வளர்ப்பதற்கு, தந்தை பிற வேலைகள் (கடைக்குப் போவது, கரன்ட் பில் கட்ட) செய்வதற்கு பயன்படுத்தப்படுகின்றனர். அவர்களால் வேலை செய்ய முடியாத அளவிற்கு வயோதிகம் வரும்பொழுது மகனுக்கும், மருமகளுக்கும் இடையே சண்டை ஆரம்பமாகிறது. அதை தாங்கமுடியாத பென்ஷன் வாங்கும் பெற்றோர் தானாகவே முதியோர் இல்லம் சென்று விடுகின்றனர்.

மற்ற பெற்றோர்களின் நிலை பரிதாபத்திற்கு உரியதாகிறது. என் வகுப்பறையில், 'இப்பொழுது மனிதர்களிடையே அன்பு குறைந்து கொண்டே வருகிறது' என பல மாணவிகளும்; 'இல்லை... அன்பு எப்பொழுதும் குறையாது' என சில மாணவியரும் பேசினர். ஆதங்கத்தை, கோபத்தை வெளிப்படுத்த வகுப்பறை ஒரு களமாக அமைந்திருந்தது. மாணாக்கர் சிலர், தந்தை இல்லாத குறையையும்; சிலர், தாய் இல்லாத குறையையும் கொட்டித் தீர்த்தனர். வளரும் பருவத்தில் இருக்கும் இந்த வாலிபக் குழந்தைகளுக்குள் எவ்வளவு ஆற்றாமை கொட்டிக் கிடக்கிறது. இவ்வளவு நாளாக அவர்கள் மனதில் கிடந்த வெறுப்பு, விரக்தி, கோபம், தாபங்கள், வேதனைகள் என எல்லாவற்றையும் வெளிப்படுத்தி விட்டனர்.

நான் இப்படி தீர்ப்பு கூறினேன். 'அன்பு உள்ளது என்று பேசுவதற்கு நான்கு பேருதான் வந்தீர்கள். அன்பு இல்லை என்று பேச ஏழு பேர் வந்துள்ளீர்கள். இதிலிருந்து தெரியவில்லையா? தீர்ப்பு என்ன என்று' -சொல்லி முடிக்கும் முன் ஒரே கைதட்டல். பார்வையாளராக உட்கார்ந்திருந்த மாணாக்கர் அனைவரும் அன்பு கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் தான் கைதட்டியுள்ளனர் என அறிந்தேன். சமுதாயத்தில் தவறு எங்கு நிகழ்கிறது. 'அன்பான பெற்றோர் இருந்தால்
பிள்ளைகள் தவறு செய்யமாட்டார்கள்' என அந்த வகுப்பறை எனக்கு படிப்பினை சொல்லித்தந்தது.

ஒரு வீட்டில் நடந்த நிகழ்வு. 'கொதிச்சு வேகாத சோறும் சோறு இல்ல; கொழந்த இல்லாத வீடும் வீடு இல்லை' என சொல்கிற மாதிரி எட்டுக் குழந்தை பெற்றனர். மக்களைப் பெத்த மகராசி, புள்ளையப் பெத்தவ புண்ணியவாட்டி என கிராமத்தில் கூறும் சொலவடைக்கு ஏற்ப வாழ்ந்த விவசாயக் குடும்பம்.இன்று பிள்ளைகள் பல்வேறு ஊர்களில் இருப்பதால், 80 வயதாகிப் போன அவர்களைப் பார்க்க முன்வரவில்லை. ஏனென்றால் பெற்றோர் தனக்கு என்று எதையும் சேமித்து வைக்கவில்லை. அவர்களுடைய சேமிப்பே பிள்ளைகள் தான். கடைசி காலத்தில் ஊர் பெரியவர்கள் அவர்களுடைய பிள்ளைகளை வரச்சொல்லி, 'முடியாமல் இருக்கும் உங்க தாய், தகப்பனைப் பார்த்துக் கொள்ளப் போகிறீர்களா...இல்ல. நீங்க எங்களுக்குத் தாய், தகப்பன் இல்லை என்று எழுதிக் கொடுத்திட்டுப் போங்க; நாங்க பார்த்துக் கொள்கிறோம்' என சொல்லிவிட்டனர். இதைவிட அவமானம் அவர்களுக்கு வேறு என்ன வேண்டும்?

பிள்ளைகளும் வேண்டா வெறுப்பாக ஆளுக்கொரு மாதம் பார்த்துக் கொள்வதாக முடிவெடுத்தனர். இதனைக் கேட்ட பெற்றோர், 'பிள்ளைகளுக்குப் பாரமாக இருக்கக்கூடாது' என நினைத்து இரவோடு இரவாக தற்கொலை செய்து விட்டனர்.இதை பிள்ளைகளுக்குச் செய்யும் தியாகம் என்பதா; தீராத வேதனை என்பதா? 'ஒரு பிள்ளைப் பெத்தவனுக்கு உறியில சோறு; நாலு புள்ளப் பெத்தவனுக்கு நடுத்தெருவில் சோறு' என்ற நிலைமை ஆகிவிட்டது.அன்பு பொதுவானது
அன்பு என்பது அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது. அதை பரிமாறினால் நாம் பக்குவம் அடையலாம்.'மகனே! நீ அம்மா என்று அன்றொரு நாள் அழைத்த சொல் இன்றும் என் காதில் குறுகுறுக்கிறது. இப்போது ஒரே ஒரு முறை மட்டும் அம்மா என்று அழைப்பாயா? 'எனத்தவிக்கும் தாய்மார்கள் எத்தனை பேர்.

வயதானவர்களின் பேச்சைக் கேட்பதற்கு இன்று யாரும் தயாராக இல்லை. முதுவோலையைப் (பழுத்த இலை) பார்த்து குறுந்தோலை (இளந்தளிர் - இலை) சிரித்ததாம். முதுவோலை சொல்லியதாம், 'நீயும் ஒரு நாள் முதுவோலை ஆவாய்' என்று. நாமும் முதியவர்கள் ஆவோம். நம் நிலைமை எப்படி இருக்கும் என்று இன்றைய இளைய தலைமுறை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஒழிந்த உறவுகள் :பெயர்களைச் சொல்லி என்று அழைத்தோமோ, அன்றே நம் உறவுகள் ஒழிந்து போய்விட்டன. அண்ணன், அக்கா, மாமா, மச்சான், மதினி, சித்தி... எவ்வளவு மகிழ்வைத் தரும். ஒன்றாம் வகுப்பு படிக்கும் பையன் பத்து படிக்கும் உடன்பிறந்த அண்ணனை 'டேய் ரமேஷ்... அம்மா கூப்பிடுறாங்க' எனச் சொல்கிறான். இந்த நிலையை மாற்ற வேண்டும். சிறு வயதிலே உறவுகள் பற்றிப் புரியும் படியாக நம் பிள்ளைகளுக்குப் பெற்றோர் சொல்லி கொடுக்க வேண்டும். இல்லையென்றால் 'தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாய்' நாம் வருத்தப்பட வேண்டிய நிலை வரும்.ஊற்றெடுக்கும் அன்பை அள்ளி அள்ளி பகிர்ந்தால் தான் அது ஊற்றெடுக்கும். இல்லையென்றால் நீர் தேங்கி கிடக்கும் குட்டம் போல கெட்டுப் போகும். அன்பு என்ற ஒன்று இல்லை என்றால் இந்த அகிலமே அழிந்துவிடும்.

-முனைவர். க. செல்லத்தாய்,

தமிழ்த்துறை தலைவர்,எஸ்.பி.கே.கல்லுாரி, அருப்புக்கோட்டை.
9442061060
sellathai03gmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (12)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement