Advertisement

கடல் ஏன் நீல நிறமாக உள்ளது: இன்று தேசிய அறிவியல் தினம்

இந்திய தேசம் உலகுக்கு தந்த விஞ்ஞானிகளில் முதன்மையானவர் சந்திரசேகர வெங்கட்ராமன் (சர்.சி.வி.ராமன்). 1888 நவம்பர் 7ல் திருச்சி திருவானைக்காவலில் பிறந்தார். தந்தை சந்திரசேகர ஐயர் கணிதம் மற்றும் இயற்பியல் பேராசிரியராக விசாகப்பட்டினம் ஏ.வி.நரசிம்மராவ் கல்லூரியில் பணியாற்றினார். ராமன் விசாகப்பட்டினத்தில் பள்ளி படிப்பு, இன்டர் மீடியேட் தேர்வை எழுதி முதன்மை மாணாக்கராக தேறினார். எம்.ஏ., படிக்கும்போது (18வயதில்) லண்டனிலிருந்து வெளி வந்த (பிலாசபில் மேகசின்) பத்திரிகையில் ஆராய்ச்சி கட்டுரையை வெளியிட்டார். பின்பு எப்.சி.எஸ்., (தற்போதைய 'இந்தியன் ஆடிட் மற்றும் அக்கவுண்ட் சர்வீஸ்') எனும் தேர்வு எழுதி, அதிலும் முதலாவதாக வந்து டெபுடி அக்கவுண்டன்ட் ஜெனரலாக, அரசு பணியில் சேர்ந்து கோல்கட்டாவில் பணியாற்றினார்.

கோல்கட்டா ஆராய்ச்சி:தினமும் அலுவலகம் செல்லும் பாதையில் ஒருநாள் "இந்தியாவின் விஞ்ஞான அபிவிருத்தி சங்கம்” என்ற பெயர் பலகை கண்ணில் பட்டது. உடனே அதில் அங்கத்தினராக சேர்ந்தார். இந்த ஆய்வகத்தில் இயற்பியல் தொடர்பான ஆய்வை மேற்கொண்டார். அதே ஆய்வகத்தில் அவர் ஒலியியல் மற்றும் ஒளியியல் ஆராய்ச்சியையும் மேற்கொண்டார். 10 ஆண்டு அலுவலக பணி செய்து கொண்டே, காலையிலும், மாலையிலும் ஆராய்ச்சி செய்து வந்தார். இங்கு தான் நோபல் பரிசு பெறுவதற்கான ஆராய்ச்சி விதை தூவப்பட்டது. வாயுப் பொருள்களின் காந்த சக்தி, கீத வாத்தியங்களின் தொனி தத்துவம், செவிக்கெட்டாத தொனி விளக்கம் முதலிய பல துறைகளில், இவர் விசேஷ ஆராய்ச்சியை வெளியிட்டார். 1917 ல் கல்கத்தா பல்கலை கழகம் 'தரக்நாத் பாலித் பேராசிரியர்' என்னும் பதவியை வழங்கியது. அதனால், அரசு பணியை உதறிவிட்டு, கல்கத்தா பல்கலையில் பேராசிரியர் பணிக்கு மாறினார். அதே சமயம், இந்தியாவின் விஞ்ஞான அபிவிருத்தி சங்கத்திலும், ஆராய்ச்சி பணியை தொடர்ந்து செய்து வந்தார். அப்போது அவரது ஒளியியல் மற்றும் ஒளிச்சிதறலுக்கான ஆராய்ச்சிப்பணி உலக அளவிலான அங்கீகாரத்தை பெற்றது.

ஏன் என்ற கேள்வியால் நோபல்:1921ல் கல்கத்தா பல்கலை பிரதிநிதியாக, ஆக்ஸ்போர்ட் பல்கலையில் சொற்பொழிவாற்றினார். இதற்காக கப்பல் பயணம் மேற்கொண்டபோது, கடல் ஏன் நீல நிறமாக உள்ளது என்ற கேள்வியை வினவினார். இதற்கான பதில் தான் நோபல் பரிசு பெற்றது. முன்பு கடலின் நீல நிறத்துக்கு, ஆகாயத்தின் நீல நிற பிரதிபலிப்பே என்று நம்பப்பட்டது. அப்படி என்றால், இரவிலும் கடல் நீல நிறமாகவே தோன்றுவதேன். சூரிய ஒளி, தண்ணீர் மூலக்கூறுகள் மூலம் சிதறடிக்கப்படுவதால் கடல் நீல நிறமாக தோன்றுவதாக கண்டுபிடித்தார். இது 'ராமன் விளைவு' என அழைக்கப்பட்டது. இந்த விளைவு கண்டுபிடிக்கப்பட்ட நாள் 1928, பிப்ரவரி 28. இந்த நாளையே தேசிய அறிவியல் தினமாக நாம் கொண்டாடுகிறோம். ஒளிச்சிதறல் ஆராய்ச்சிக்காக ராமனுக்கு 1930 ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதற்காக அவர் பயன்படுத்திய கருவிகளின் மதிப்பு ரூ.300 மட்டுமே. 1929 ல் இங்கிலாந்து அரசால் அவருக்கு 'சர்' பட்டம் வழங்கப்பட்டது. இந்திய அரசு சர்.சி.வி.ராமனுக்கு 1954ல் பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்தது.

ஆராய்ந்து செய்வோம்:ராமன் விளைவின் பயனாக 1930-1942 வரை, 1,800க்கும் அதிகமாக ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிடப்பட்டன. 2,500க்கும் அதிகமாக ரசாயன கலவைகள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டன. அறிவியலின் மிக உயர்ந்த பரிசோ, விருதோ கிடைத்தவுடன் அது சார்ந்து ஆராய்ச்சிகள் பெருகுவது வரவேற்கத்தக்கது என்ற போதிலும், பரிசு பெற்றவருக்கு பெருமை சேர்க்குமே அன்றி புதுவிதமான ஆராய்ச்சிக்கு வழி வகுக்காது. பரிசு பெற்ற அந்த ஆராய்ச்சியின் விளைவை பயன்படுத்தி, நாம் பயன்பாட்டாளர்களாக மட்டுமே இருக்க முடியும். நாம் பயனாளியாக இருக்கிறோமே தவிர படைப்பாளிகளாக இல்லை. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை கொண்டு மற்ற எல்லா நாடுகளை காட்டிலும், மிக குறைந்த செலவில் மங்கள்யானை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைத்தோம். இந்த ஒரு வெற்றி மட்டும் போதுமா?

எங்கிருந்து ஆரம்பிப்பது:ஆராய்ச்சி மனப்பான்மையை எங்கிருந்து ஆரம்பிப்பது எனில் பள்ளிக்கூடங்களில் இருந்து தான். ராமன் விஞ்ஞான ஆராய்ச்சியை பற்றி குறிப்பிடும்போது, "அடிப்படை விஞ்ஞானம் வழிகாட்டுதலாலோ, தொழிற்துறையினாலோ, அரசாலோ, ராணுவ நிர்ப்பந்தத்தாலோ உதிப்பதில்லை. சுயமாக, சுதந்திரமாக சிந்திப்பதால் மட்டுமே, விஞ்ஞான வளர்ச்சி சாத்தியமாகும்” என்றார். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், "அறிவை விட கற்பனை மிகவும் முக்கியம்” என்றார். அதனால்தான் அப்துல்கலாம் கனவு காணுங்கள் என்று கூறுகிறார். பிளஸ் 2 முடித்து பொறியியல் கற்று தகவல் தொழில் நுட்ப வேலைக்கு சென்று, ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் எடுக்கும் கிரெடிட் / டெபிட் கார்டுகளாகத்தான் நாம் நம் குழந்தைகளை வளர்க்கிறோம். நாம் விடா முயற்சியுடன் கூடிய கடின உழைப்பாளிகள் தான். எனினும் விஞ்ஞானத்திற்கு இன்னும் ஒரு நோபல் பரிசு எப்போது கிடைக்கும். அதற்கான முன்னேற்ற பாதையில் இந்தியா முனைப்புடன் செயல்பட வேண்டும்.

- ச. அங்கப்பன், விஞ்ஞானி, சிக்ரி, காரைக்குடி. angs67gmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement