Advertisement

தண்ணீர்... தண்ணீர்...என் பார்வை

'நீரின்றி அமையாது உலகு' என இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீரின் முக்கியத்துவத்தை தெளிவாக உலகுக்கு எடுத்துரைத்துள்ளார் வள்ளுவர். மனிதன் வாழ்க்கையை நீர் நிலைகள் இருக்கும் இடங்களிலேயே ஆரம்பித்தான் என்பதை சிந்து சமவெளி நாகரிகம் தெரிவிக்கிறது. புதிய ஊர்களுக்குச் சென்று அங்குள்ள நீர் நிலைகளில் நீராடும் முன் அந்நீரை சிறிதளவு உட்கொள்ள வேண்டும் எனக் கிராமங்களில் கூறுவர். நீர் மிகப்பெரிய மருந்து. மனிதன் மயக்கமடைந்தால் உடனே நாம் தேடுவது தண்ணீர். அதை தெளித்தவுடன் மயக்கம் தெளிகிறது. 'தாயை பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே' என்பது பழமொழி. உணவருந்தாமல் ஒருவாரம் வாழலாம். ஆனால் நீர் அருந்தாமல் சில நாட்கள் கூட வாழ முடியாது.

முதல் உலக போர் நிலத்திற்காகவும், இரண்டாம் உலக போர் அதிகாரத்திற்காகவும் நடைபெற்றது. மூன்றாம் உலக போர் வருமேயானால் அது தண்ணீருக்கான போராகத்தான் இருக்கும். அந்த அளவிற்கு நீர் பற்றாக்குறை உலக அளவில் உள்ளதை புரிந்து கொள்ள வேண்டும்.
உலக சுகாதார மையத்தின் புள்ளிவிபரப்படி ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 50 லிட்டர் தண்ணீர் அவரது அன்றாட நடவடிக்கைக்கு தேவைப்படுகிறது. குடிநீரை எடுத்து கொண்டால் உலக அளவில் 88.4௦ கோடி மக்கள் பாதுகாப்பான குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். தண்ணீரினால் பரவும் நோய்களில் ஆண்டிற்கு பல கோடி மக்கள் இறக்க நேரிடுகிறது. உலக அளவில் 43 சதவீத மக்கள் வயிற்று போக்கு நோயினால் பாதிக்கின்றனர். இவற்றில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் 14வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தான். வளர்ச்சி அடைந்த நாடுகளில் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படுகிறது. எனவே தண்ணீரால் பரவும் நோய்கள் அங்கு குறைவு.

தண்ணீரால் நோய்கள் உலக அளவில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் உள்நோயாளிகளில் 50 சதவீதம் பேர் தண்ணீர் சம்மந்தப்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள். வளர்ச்சி அடையாத, வளர்ந்துவரும் நாடுகளின் குடிசைப்பகுதிகளில் வசிக்கும் மக்களின் தண்ணீர் பயன்பாடு ஒரு அமெரிக்கன் 5 நிமிடம் குளிக்கப்பயன்படுத்தும் தண்ணீரின் அளவை விட குறைவு.
தண்ணீர் சம்மந்தமான நோய்களினால் பாதிக்கப்பட்டு ஒவ்வொரு 15 மணித்துளிகளுக்கு ஒரு குழந்தையும், உலக அளவில் ஓர் ஆண்டுக்கு 1.4 கோடி குழந்தைகள் இறக்கின்றனர். உலக அளவில் 90 சதவீதம் குழந்தைகள் வயிற்று போக்கு நோயினால் இறக்கின்றனர்.
கோடிக்கணக்கான பெண்களும், குழந்தைகளும் குடிநீர் சேகரிப்பிற்காக நிறைய நேரம் செலவிடுகின்றனர். ஒரு காலத்தில் மழைப்பொழிவு அதிகம் இருந்தது. நிலத்தடி நீரும் வளமையாக இருந்தது. தண்ணீர் தேவை குறைவாகவும், அதன் அளவு அதிகமாகவும் இருந்தது. ஆனால் இன்று தொழில் வளர்ச்சி, விவசாயம், மக்களின் அன்றாட பயன்பாடு அதிகரித்து நீர் பற்றாக்குறை நிலவுகிறது. முன்பு தெருவிற்கு தெருகுழாய்களோ, வீட்டிற்குள் குழாய்களோ, ஆழ்துளை கிணறுகளோ கிடையாது. கிராமங்களில் மக்கள் தங்களுக்கு தேவையான நீரை கிணறுகளிர் இறைத்து எடுத்தனர்.

வீணாகும் தண்ணீர்
ஆனால் இன்று வீட்டிற்கு வீடு, தெருவிற்கு தெரு குழாய் வசதி செய்து கொடுத்துள்ளோம். ஆனால் பல குழாய்களில் நல்லி கிடையாது. இருந்தாலும் யாரும் அதை அடைப்பது இல்லை. நீர் அனைத்தும் தேவையற்று தெருக்களில் ஓடி வீணாவதை காண்கிறோம்.
தண்ணீர் பொதுப்பொருள்,இயற்கை கொடுத்த அரும்பொருள். ஏழை, பணக்காரர் என்ற ஏற்றத்தாழ்வு இல்லாமல் அவர்களுக்கு தேவைப்படும் அளவிற்கு கிடைக்க வேண்டும். ஆனால் இன்று தண்ணீர் பயன்பாட்டிலும் ஏற்றத்தாழ்வு இருக்கிறது.

இன்னும் சில காலத்தில் ஒரு பேரல் தண்ணீரானது ஒரு பேரல் ஆயிலை விட மதிப்பு அதிகமாகும் என்று ஜெப்ரே ரோத்பெடர் என்ற அறிஞர் கூறுகிறார். இன்று கிராமங்களில் கூட நீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் சூழல் அதிகரித்துள்ளது. பெருநகரங்களில் ஒரு பக்கெட் நீரில் காலைக்கடன் முடித்து, குளித்து செல்வோர் லட்சகணக்கானோர்.
நம் முன்னோர் கல்வி அறிவு இல்லாதவர்களாக இருந்தாலும் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே கணித்த ஞானிகள். மழைகாலங்களில் வரும்நீரை சேமித்து தாமும் பயன்படுத்தி சந்ததிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கால்வாய்கள் அமைத்து கிராமத்திற்கு ஒரு குளம் வெட்டி, எங்கெங்கு நீர்நிலைகள் அமைக்க முடியுமோ அங்கு ஏரி, கண்மாய், அணைகள் கட்டி முறையாக பராமரித்து தண்ணீர் பிரச்னை இன்றி வாழ்ந்தனர்.
இன்று முறையான பராமரிப்பு இல்லாததால் நீர் நிலைகளில் கிடைக்கும் சிறிதளவு நீரையும் சேமிக்க இயலவில்லை. இதனால் கிடைக்கும் மழைநீர் கடலில் வீணாக கலக்கும் சூழல்
ஏற்பட்டுள்ளது.

நகர மயமாக்கலின் தாக்கமாக நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு, கிராமம், நகரம் தோறும் தார், கான்கிரீட் ரோடுகள் அமைத்தல், பாலிதீன் பயன்பாட்டினை முறையாக அகற்றாமை போன்ற பல காரணங்களால் மழைநீர் பூமிக்குள் செல்ல தடை ஏற்பட்டுள்ளது.
சமூக விரோதிகளால் காடுகள் அழிக்கப்படுகிறது. சாலை விரிவாக்கம் போன்றவற்றால் மரங்கள் வெட்டப்படுகிறது. மரம் வளர்ப்பில் ஆர்வமின்மையால் நமக்கு கிடைக்கும் மழை அளவு குறைந்து வருகிறது. நாம் நீருக்காக அண்டை மாநிலங்களுடன் சண்டையிட்டு நீதிமன்றங்களை நாடுகிறோம். கேரளா, கர்நாடகம் போல் நமக்கும் போதிய அளவு காட்டு வளம் உள்ளது. அவர்கள் முறையாக பாதுகாக்கின்றனர்; பலன் பெறுகின்றனர்.

தண்ணீர் பிரச்னை என்பது சமுதாய பிரச்னை. இதை தீர்க்க அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும். வீடுதோறும் மழைநீர் சேகரிப்பு ஏற்படுத்த வேண்டும். புதிய வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உள்ளதா என பார்த்த பின் அனுமதிக்க வேண்டும். கிராமங்களில் ஒவ்வொரு தெருவிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டிஅமைத்து அனைத்து வீடுகளையும் இணைத்து மழைநீர் சேமிப்பை உருவாக்க வேண்டும். இதற்கு அனைத்து ஊராட்சிகளும் முயற்சிக்க வேண்டும்.-முனைவர் சு.கணேசன்பொருளியல் துறை தலைவர்,அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி, சிவகாசி. 98650 48554

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement