Advertisement

ஆயுள் குறைவது 'அரசின்' பனைமரத்துக்கு அழகா!

தொல்காப்பியத்தில் ஒரு பொருளை பெரிதாக சொல்வதற்கு 'பனையளவு' என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளனர். சிறிய பொருளை தினையளவு என்றும் பெரிய பொருளை பனையளவு என்றும் ஒப்பிட்டனர்.திருவள்ளுவர் எழுதிய திருக்குறளில் முப்பாலிலும் பனை வருகிறது. அறத்துப்பாலில் 104வது குறள், பொருட்பாலில் 433வது குறள், இன்பத்துபாலில் 1282வது குறள்களில் பனை என்று வருகிறது. 'கள் உண்ணாமை' என்றொரு அதிகாரமே எழுதியுள்ளார். திருக்குறள் எழுதப்பட்டதும் பனைஓலையில் தான். மூவேந்தர்களில் சேரமன்னனின் நாணயத்தில் பனைமரம் பொறிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தின் அரசு மரம் பனைமரம். தொல்காப்பியத்தில் பனையை பனம்புல் என்றும் தென்னையை தென்னம்புல் என்றும் கூறியுள்ளனர். வெளியே காழ்த்து (கெட்டியாகி) உள்ளே சோறு போல மென்மையாக இருந்தால் அது புல். அதனால் பனம்புல். வெளியே மென்மையாகவும், உள்ளே வைரம் போல உறுதியாகவும் இருந்தால் அது மரம். அதனால் வேம்புவை மரம் என்கிறோம்.

ஆப்ரிக்க நுங்கு பாத்திரம்:இலக்கிய, இலக்கணங்களில் பனைக்கு 101 பெயர்கள் உள்ளன. பனையில் மட்டும் தான் ஆண், பெண் இனங்கள் உள்ளன. ஆண் பனை அலகு விடும். பெண் பனை நுங்குவிடும். இதை பருவபனை என்பர். இந்த மரம் ஆப்ரிக்காவில் இருந்து வந்தது என்றும் சொல்வர். ஒருவேளை இது சரியாகவும் இருக்கலாம். ஒரு காலத்தில் நமது குமரிகண்டம் ஆப்ரிக்க கண்டத்துடன் ஒன்றாக தான் இருந்தது. அழிந்து போன லெமூரியா கண்டத்தில் இருந்த ஒரு நாட்டின் பெயர் ஏழ்பனை நாடு. குமரி கண்டம் மூழ்கிய போது பனை, ஆப்ரிக்க கண்டத்திற்கு சென்றிருக்கலாம். அங்குள்ள கடல்பனை 800 ஆண்டுகள் வாழும். இதன் பெரியகாயில் நுங்கை சாப்பிட்டபின் தண்ணீர் பிடித்து வைக்கும் பாத்திரமாக பயன்படுத்துகின்றனர். நம்நாட்டு பனைமரம் 120 ஆண்டுகள் வாழும். மனிதர்களை வாழ்த்துவதற்கு கூட நூறாண்டுகள் வாழ்க என்பதற்கு பதிலாக 'பனையாண்டு வாழ்க' என்று சொல்லலாம். தேவலோகத்தில் ஐந்து மரங்கள் இருந்ததாம். அதில் ஒன்று கேட்டதைத் தரும் கற்பக தரு. கடவுள், 'பனை என்ற கற்பக தருவை பூமிக்கு கொண்டு போ' என்று பிரம்மாவிடம் ஆணையிட்டதாக சொல்வதுண்டு. நம் பழந்தமிழர்களின் பெருமையைச் சொல்ல தாலியை குறிப்பிடலாம்.

தாலி வந்த கதை:அந்தகாலத்தில் தங்கத்தில் தாலி செய்யப்படவில்லை. பனையை தாலமரம் என்பர். தால மரத்து ஓலையில் மணமகன், மணமகள் பெயரெழுதி சுருட்டி மணமகள் கழுத்தில் மணமகன் அணிவித்ததால் தான் அதற்கு தாலி என்று பெயர் வந்தது. திருமண சடங்கை பனைஓலையில் தான் எழுதினர். ஓலைச்சுருளை சுருட்டி காதணியாக அணிந்துள்ளனர். இன்றும் கன்னியாகுமரியில் திருமணத்தின் போது பனங்கம்பை நட்டு மாவிலை கட்டுவர். கன்னியாகுமரியில் காந்தி காமராஜ் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டுள்ள குமரி வரலாற்று கூடத்தின் வரவேற்பறையை பனையால் உருவாக்கியுள்ளேன். கதவு, தூண், ஜன்னல், மேஜை, நாற்காலி அனைத்தும் பனையால் ஆனது. ரயில்வே ஸ்டேஷனில் இருந்து நூறடி தொலைவில் இருக்கிறது இக்கூடம். வீடாக வேண்டிய பனைமரத்தை விறகாக எரிக்கின்ற நிலையில் நாம் உள்ளோம். ஏடு என்பதே பனை ஓலைக்கான பெயர் தான். என் வீட்டு திருமண அழைப்புகளில் முடிந்தவரை பனைஓலையில் தான் எழுதுகிறேன். இதை எல்லோரும் பின்பற்றினால் பனையை எந்த கொம்பனாலும் அழிக்கமுடியாது.

சுவாமிக்கு நுங்காபிஷேகம்:சென்னை நுங்கம்பாக்கத்தில் நுங்கு அதிகமாக கிடைத்த காலம் அது. அங்குள்ள பாலசுப்ரமணியசுவாமி கோயிலில் பனம்நுங்கு அபிஷேகம் தான் செய்வர். குடிக்க பதநீர், உறிஞ்ச நுங்கு, கடிக்க பனங்கிழங்கு... இதைவிட வேறெந்த மரம் இத்தனை பயன்தரும். ஒருமுறை லண்டன் சென்ற போது பனை ஜாம் பார்த்தேன். பனையில்லாத லண்டனில் ஜாம் எப்படி என கேட்டபோது நுங்கில் இருந்து ஜாம் தயாரித்ததாக சொன்னார்கள். பனைத் தொழிலாளர் நல வாரியத் தலைவர் என்ற முறையில் பனைநுங்கு ஜாம் தயாரிப்பதற்கு தமிழகஅரசின் அனுமதி பெற்று அவற்றை தீவுத்திடல் கண்காட்சியில் விற்பனையும் செய்தது நினைவுக்கு வருகிறது.

உயரம் அதிகம்; கூலி குறைவு:இம்மரம் 80 முதல் நூறடி உயரம் இருக்கும். பனையேறி, ஒவ்வொரு மரமாக காலையில் ஏறி பாளையை கீறி மாலையில் மீண்டும் மரம் ஏறி பதநீரை சேகரிக்க வேண்டும். ஒரு மரத்தில் மூன்று முதல் ஐந்து லிட்டர் பதநீர் கிடைக்கும். செழிப்பான பனையாக இருந்தால் 10லிட்டரும் கிடைக்கும். ஒரு மரத்திற்கு இரண்டு முறை 160 அடி வீதம் ஒருநாளைக்கு பத்து மரம் ஏறி இறங்கினால் 1600 அடி உயரம் சென்று திரும்ப வேண்டும். அதற்கான கூலி எவ்வளவு தெரியுமா. ஒருலிட்டர் பதநீர் ரூ.3.50 தான். எங்கிருந்தோ, எந்தத் தண்ணீரையோ எடுத்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் என்று ஒரு பாட்டில் ரூ.12க்கு விற்பனை செய்த காலத்தில் (2009) தமிழக அரசிடம் பதநீரின் நிலையை தெரிவித்தேன். உடனடியாக ஒருலிட்டர் பதநீரை ரூ.10 ஆக்கச் சொன்னார் அப்போதைய முதல்வர் கருணாநிதி. இப்போதும் ரூ.10ஆகத் தான் இருக்கிறது.

பயன்தரும் பனை:பதநீரில் நிறைய நன்மைகள் உள்ளன. இருதயத்தை வலுப்படுத்துவதற்கான தயாமின் உள்ளது. கண்நோய் வராமல் காக்கிறது. எலும்பு, நரம்புகளை வலுப்படுத்தும் மருந்தாக உள்ளது. பாலில் சீனி கலப்பதற்கு பதிலாக கருப்புகட்டி(கருப்பட்டி) கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் ரத்தசோகை வராது. படிக்க நல் ஏடாகிறது; படுக்க நல் பாயாகிறது; பசிக்கு நல் உணவாகிறது. இத்தனையும் தரும் இந்த செல்வத்தை வெட்டி அழித்துக் கொண்டிருக்கிறோம். தமிழக அரசின் அரசு மரத்திற்கு அதற்குரிய கவுரவத்தையும், மரியாதையையும் தருவது நம் கடமை, அரசின் கடமை.

- முனைவர் குமரி அனந்தன், முன்னாள் தலைவர், பனைத்தொழிலாளர் நல வாரியம், சென்னை. 93821 55772. இமெயில் dr.kumariananthangmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (6)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement