Advertisement

கறுப்பு பணம் உருவாக அரசே காரணம்! எஸ்.ராமசுப்ரமணியன், எழுத்தாளர், சிந்தனையாளர் -

இன்றைக்கு அரசு முதல், உச்ச நீதிமன்றம் வரை அனைவரது கவனத்தை கவர்ந்திருக்கும் ஒரு விஷயம், 'கறுப்பு பணம்!''மீட்டுக் கொண்டு வருவோம்' என்று காங்கிரஸ் அரசு, ஒப்புக்குச் சொல்லிக் கொண்டிருந்தது. பா.ஜ., அரசோ, அதை மீட்டுக் கொண்டு வர, தலையால் தண்ணீர் குடித்துத் தவித்து தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

பா.ஜ., அரசு தவித்துத் தடுமாறிக் கொண்டிருப்பது, எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட அடைய முடியா மல், ஒதுக்கி, ஓரங்கட்டி வைத்து இருக்கும் காங்கிரசுக்கு ஏளனமாக, கேலியாக உள்ளது.நடு நடுவே உச்ச நீதிமன்றம் வேறு கேள்வி மேல் கேள்வி கேட்டு அரசை குடைந்து கொண்டிருக்கிறது.ஆனால், ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. காங்கிரஸ் சொல்வது போல, வெளிநாட்டில் பதுக்கிய, கணக்கில் வராத, வரவே வராத கறுப்புப் பணத்தை, ஒரு ரூபாய் கூட இந்தியாவுக்கு கொண்டு வர முடியாது என்பது தான் அது. இது அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும், வேடிக்கையாகவும், வேதனையாகவும், ஏன், ஏமாற்றமாகவும் கூட இருக்கலாம். உண்மை அது தான்.காரணம், கறுப்புப் பணம் என்ற விவகாரத்தை உருவாக்குவதே அரசு தான்.ஒரு அரசே முயற்சி செய்து, பல்வேறு வகைகளில் உதவி செய்து உருவாக்கும் கறுப்புப் பணத்தை, எப்படி அதே அரசு மூலம் திரும்பப் பெற முடியும்?இந்த நாட்டில் உள்ள பல்வேறு சட்டங்களும், கறுப்புப் பணத்தை உருவாக்குவதற்குத் தான் உதவியாக உள்ளனவே தவிர, நேர்மையாளனாக யாரையும் உருவாக்குவதில்லை.

அரசை எப்படி ஏமாற்றுவது, கறுப்புப் பணத்தை எப்படி உருவாக்குவது, அதை பாதுகாப்பாக எப்படி வெளிநாடுகளுக்குக் கொண்டு சென்று பதுக்கி வைத்து காப்பாற்றுவது என்று கற்றுக் கொடுப்பதற்கென்றே அரசு, சில, 'புரொபஷனல்'களை தன் செலவில் உருவாக்கி, நாட்டு மக்கள் 'தில்லு முல்லு' செய்ய கற்றுக் கொடுக்கிறது.நம் நாட்டு சட்ட திட்டங்கள், சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்டவை என்று சொல்கின்றனர்.

சந்திரகுப்த மவுரியரின் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்த மக்கள், அரசிற்குச் செலுத்த வேண்டிய வரியை நியாயமாகவும், முறையாகவும் செலுத்தியதாகத் தான் வரலாறு குறிப்பிடுகிறதே தவிர, சந்திரகுப்த மவுரியரின் நாட்டில் வரி கட்டாமல் ஏமாற்றிச் சேர்த்த பணத்தை, பக்கத்து நாட்டு அரசர்களிடமோ, வணிகர்களிடமோ கொடுத்து பாதுகாத்து வைக்கச் சொன்னதாக வரலாறு எங்கேயும் குறிப்பிடப்படவில்லை.நாடு சுதந்திரம் அடைவது வரை, ஆங்கிலேயர்கள் இந்தியாவில் சுரண்டி, இங்கிலாந்துக்கு செல்வத்தை கொண்டு போயினர்.சுதந்திரம் அடைந்த பின், அதே காரியத்தை இங்குள்ள பெரும் தொழிலதிபர்களும், பணக்காரர்களும், நடிகர்களும், அரசியல்வாதிகளும், சுயதொழில் செய்வோரும் செய்ய ஆரம்பித்தனர்; தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றனர்.'பூவில் உள்ள தேனை, வண்டு (தேனீ) எப்படி பூவுக்குச் சேதமில்லாமல் சேகரிக்கிறதோ, அதுபோல நாட்டில் மக்களிடமிருந்து வரிகளை அரசு வசூல் செய்ய வேண்டும்' என்கிறார் சாணக்கியர்.

சாணக்கியர் கூறியுள்ள அதிகபட்ச வரியே, 6 சதவீதம் தான்.நம் நாட்டில் வரி எத்தனை சதவீதம்?'குலேபகாவலி' படத்தில் வருவது போல, நின்றால் வரி, நிமிர்ந்தால் வரி, நடந்தால் வரி, அமர்ந்தால் வரி என்று வரிகள் விதிக்கப்பட ஆரம்பிக்கவில்லையே தவிர, அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், 'ரூம்' போட்டு அமர்ந்து, எந்தெந்த வகைகளில் வரிகளை விதிக்கலாம் என்றல்லவா யோசித்துக் கொண்டிருக்கின்றனர்.தவிர, விற்பனை வரிக்கு கீழே, 'சர்சார்ஜ்' என்று ஒன்று. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ப.சிதம்பரத்தால் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வரி, 'சேவை வரி!'எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்; வருமானத்தில், 10 சதவீதம் தான் வருமானவரி என்றால், மக்களுக்கு அரசை ஏமாற்ற தோன்றுமா? கறுப்புப் பணம் உருவாகுமா? அப்படி உருவாகும் கறுப்புப் பணம் கடல் கடந்து போகுமா?

ஆக, கறுப்புப் பணம் என்ற கணக்கில் காட்டாமல் மறைக்கப்படுகிற ஒன்று உருவாக, முக்கிய முதல் காரணம் அரசும், அதன் வரிவிதிப்புக் கொள்கைகளும் தான்.
நம் நாட்டில் வரி கட்டாமல், 'டிமிக்கி' கொடுக்கும் பணத்தை வாங்கி பாதுகாத்துக் கொடுப்பதும், ஒரு வகையில் குற்றம் தானே? ஒரு தனி மனிதன் செய்தால் அது குற்றம்; அதுவே ஒரு நாடு துணிந்து செய்தால் பாராட்டா, சட்ட பாதுகாப்பா?நம் நாட்டு கறுப்புப் பணத்தை பதுக்கிப் பாதுகாத்து வைத்திருக்கும் நாடுகளோடு, அது சுவிட்சர்லாந்து ஆனாலும் சரி, ஜெர்மனி ஆனாலும் சரி, அமெரிக்காவே ஆனாலும் சரி, ஒட்டோ, உறவோ கிடையாது. அந்நாடுகளோடு வர்த்தக தொடர்போ, வேறு தொடர்போ கிடையாது.அந்நாடுகளில் பதுக்கி வைத்துள்ளோர் பெயர்கள் பட்டியல் கிடைத்ததும், அவர்கள் அந்நாடுகளுக்கே, 'பேக்' பண்ணி அனுப்பி வைக்கப்படுவர் என, அரசு அறிவிக்க முன் வருமா? கறுப்புப் பணத்தை ஒழிக்கவே முடியாதா?

முதலில், வரி விகிதத்தை அதிகபட்சம், 10 சதவீதம் என்று குறைக்க வேண்டும். அது, மக்களிடையே அரசு மீது ஒரு நம்பிக்கையைத் தோற்றுவிக்கும். நேர்மை தவறி நடக்க மாட்டோம்; முறைகேடுகளுக்கு உதவ மாட்டோம் என்று தொடர்புடையோர் உறுதிமொழி எடுக்க வேண்டும்.ஆக, கறுப்புப் பணம் என்ற ஒன்று உருவாவதற்கு காரணமே அரசு தான். அரசு என்றால் இப்போதுள்ள அரசு அல்ல; நாடு விடுதலையான நாள் முதலாக, டில்லியில் அமர்ந்து கோலோச்சிக் கொண்டிருந்தோர் தான்.
இ - மெயில்: essorresgmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (8)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement