Advertisement

அகரம் தந்து சிகரம் ஏற்றிய தமிழ் வாழ்க: இன்று உலக தாய்மொழி தினம்

மொழி நம் பண்பாட்டைச் செதுக்கும் உளி. தகவல் தொடர்பு எனும் ஒப்பற்ற ஊடகத்தின் விழி. நம் தாய் வழியே பிறந்து வாய் வழியே வளர்ந்து நம்மை அடையாளப்படுத்தும் மந்திரச்சொல். மொழியைத் தாயிடம் இருந்து கற்றதாலும், தாயாய் அமைந்து அது நம்மைக் காப்பதாலும் தாய்மொழி என்று அழைக்கப்படுகிறது. அழியும் மொழிகளை இனியும் காக்காதிருக்கக் கூடாது என்பதற்காக யுனஸ்கோ பிப்.21 ஐ உலகத் தாய்மொழிகள் தினமாய் அறிவித்தது.சிந்தனை எனும் சிற்பத்தைச் செதுக்கத் தாய்மொழி எனும் உளியால் மட்டுமே முடியும். தாகூர், கீதாஞ்சலி எனும் நோபல்பரிசு பெற்ற படைப்பை முதலில் உருவாக்கியது அவரது தாய்மொழியான வங்கமொழியில்தான். காந்தி, வாழ்க்கை வரலாற்று நூலான சத்தியசோதனையை தன் தாய்மொழியான குஜராத்தியில்தான் முதலில் எழுதினார். பத்திற்கும் மேற்பட்ட மொழிகளை அறிந்த பாரதி இறவாப் புகழ் மிக்க கவிதைகளையும் கட்டுரைகளையும் தந்தது அவரது தாய்மொழியான தமிழில்தான். தாய்மொழி நம் உயிர்மொழி. அது நம் தாயைப் போலப்புனிதமானது.

கடல் கடந்தும் இனிக்கும் தாய்மொழி:ஒன்பதாம் உலகத்தமிழ் மாநாட்டில் கலந்துகொண்டுஆய்வுக் கட்டுரை வழங்கவும், நான் எழுதிய பொய்கையாழ்வார்,பூதத்தாழ்வார் எனும் நூல்களை வெளியிடவும் கடந்த மாதம் மலேயாப் பல்கலைக் கழகம் கோலாலம்பூர் அழைத்திருந்தது. தாய்மொழியின் அருமையை தமிழகத்திலிருந்ததை விடவும் அதிக உணர்வு பூர்வமாக அறிந்து கொண்டேன். அயலகத் தமிழர்கள் நல்ல தமிழில் பேசவும் அழகுத்தமிழ்ப் பேசக்கேட்கவும் காத்துக் கிடக்கிறார்கள் என்பதை மலேசிய மண்ணில் புரிந்து கொண்டேன். இரண்டு மூன்று தலைமுறைக்கு முன் தமிழகத்தின் அதிராம்பட்டினம், கீழக்கரை, கடையநல்லூர், மதுரை, திருநெல்வேலி, காரைக்குடி போன்ற ஊர்களிலிருந்து மலேசியா, சிங்கப்பூர் நாட்டில் குடியமர்ந்த தங்கள் முன்னோர்களிடமிருந்து அவர்கள் தமிழ்பேசக் கற்றுக்கொண்டனர். காலவெள்ளத்தில் மலேசிய, சீன, ஆங்கில மொழிகளின் தாக்கத்திற்கு ஆளான பின்னரும்கூட அன்னைத்தமிழை உயிராக மதிக்கிறார்கள் என்பதை அவர்களோடு பேசும்போது புரிந்துகொள்ளமுடிந்தது.

எங்கும் தமிழ்:யாழினி, தமிழ்மேகலை, குமரன், நறுமலர் என்று மாணவர்களின் பெயர்களைக் கண்டபோது மனம் மகிழ்ச்சியில் மலர்ந்தது. ஒன்பதாம் உலகத்தமிழ் மாநாட்டுக்கு எங்களோடு பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து முகம் கோணாமல் தூயதமிழில் பேசி "அய்யா..இடையூறுக்கு வருந்துகிறோம்..மன்னித்துக்கொள்ளுங்கள்” என்று ஓடியாடி உழைத்த அந்த இனிய தமிழ்த் தம்பி, தங்கைகளை என்ன சொல்லி நன்றி பாராட்டுவது? அவர்களின் தாய்மொழிப் பற்று வியக்கவைத்தது. மலேசியாவின் நெருக்கடி மிகுந்த ஒரு நெடுஞ்சாலையின் பெயர் மாமன்னர் ராஜராஜசோழன் சாலை! ஓரிரு நாட்களில் மலாய் மொழியின் ஒருசில சொற்களை நாங்கள் கற்றுக்கொண்டு "தெரிமாகாசி” (மிக்க நன்றி) என்று அந்த மக்களிடம் சொன்னபோது மகிழ்ச்சியில் அவர்கள் துள்ளியது நிறைவாக இருந்தது. ஆயிரக்கணக்கான ஆய்வறிஞர்கள் கலந்து கொண்ட தமிழ் ஆராய்ச்சி மாநாட்டினை, மலேசிய பிரதமர் நஜிப் துன் ரசாக் 'அனைவருக்கும் வணக்கம்' என்று கூறி தொடங்கி வைத்த போது கரவொலி அடங்க இருநிமிடம் ஆனது. நம் மொழியை வேற்றுமொழி பேசும் ஒருவர் பேசுகிறார் என்பதற்கே மனம் இப்படி மகிழ்கிறது.

விழா அரங்கை விட்டு மலேசிய பிரதமர் வந்த போது அவரைச் சந்தித்து, 'தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கிறேன். கல்லூரி தமிழ்த்துறை தலைவராக பணிபுரிகிறேன்' என்று சொன்னதை யாரும் தடுக்கவில்லை. நம் தாய்மொழியை அவர் மதித்ததும் உலகின் ஒப்பற்ற இலக்கியம் திருக்குறள் என்று பேசியதும் மறக்கமுடியாத நிகழ்வுகள். மலேசியாவில் உள்ள 574 பள்ளிகளுக்கும் திருக்குறள், தமிழ் இலக்கியங்களை வாங்கித்தர உள்ளதாவும் அவர் சொன்னது இன்னும் நிறைவளித்தது. புகுமுகவகுப்பு பயிலக்கூடிய தமிழ் மாணவர்களை சந்தித்தேன். அழகான தமிழில் பிழையற பேசினார்கள். திருக்குறளோடு வேறு தமிழ் இலக்கியங்களையும் படிக்க விரும்புவதாக அவர்கள் தெரிவித்தனர். அதற்கு தமிழ்நாட்டில் உள்ள பேராசிரியர்கள் உதவ வேண்டும் என்று தெரிவித்தனர். அலைபேசியிலும் மடிக்கணினியிலும் தமிழ் மென்பொருட்களை அவர்கள் தரவிறக்கம்செய்து தமிழ் படித்து வருவதைக் காணமுடிந்தது. இந்தத் தாய்மொழி தினத்தில் அவர்களை நினைத்துப் பார்க்க முடிந்தது பெருமகிழ்ச்சியே. சிங்கப்பூரின் ஆட்சி மொழியாய் தமிழ் அமர்ந்திருப்பதால் அடுமனையகம், நகையகம், பனிக்கூழகம், துணியகம் என்று விமானநிலையம் முதல் இல்லம் வரை பெயர் பலகைகளில் ஆங்கிலத்தோடு தமிழ் கொலுவிருப்பதைக் காணமுடிந்தது. கடல் கடந்தாலும் தலைமுறைகள் கடந்தாலும் தாய்மொழியை உலகத்தமிழர்கள் மறக்கவில்லை என்பதை அறியமுடிந்தது. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதைச் செயல்படுத்தவேண்டியது நாம்தான். நமக்கு அகரம் கற்றுத்தந்து, நம்மைச் சிகரம் ஏற்றிய நம் தாய்மொழி தமிழில் பிழையில்லாமல் பேசவும் எழுதவும் தொடங்குவோம்... இந்தத் தாய்மொழி தினத்திலிருந்து!

- முனைவர் சௌந்தர மகாதேவன், தமிழ்த்துறைத் தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி 99521 40275

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement