Advertisement

இளைய தலைமுறைக்கு பத்துக் கட்டளைகள்:என் பார்வை

'இந்தியாவின் மறுமலர்ச்சி நாயகன்' என்று போற்றப்படும் விவேகானந்தர் இம்மண்ணுலகில் வாழ்ந்தது என்னவோ பாரதியைப் போல 39 ஆண்டுகளே. எனினும் குறுகத் தரித்த குறள் போன்று அமைந்த வாழ்நாளில் இளைய தலைமுறையை வடிவமைப்பதில் அவரது பங்கு சிறப்பானது.“உடலில் உறுதி இல்லாமலும், மனதில் ஊக்கம் இல்லாமலும், புதிய கருத்து எதுவுமே இல்லாமலும், உயிரில்லாத களிமண் உருண்டைகள் போல அல்லாமல், வலிமை மிக்க, சுறுசுறுப்பான இளைஞர்களே நமக்குத் தேவை. அத்தகைய நுாறு இளைஞர்களால் உலகமே புரட்சிகரமான மாறுதலைப் பெற்றுவிடும்” என நம்பியவர் விவேகானந்தர்.இளைய தலைமுறையினரின் ஆளுமை வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு விவேகானந்தர் நுால்களிலும், உரைகளிலும் வகுத்துத் தந்த பத்துக் கட்டளைகள்.1.'முதலில் உன்னிடத்தில் நீ நம்பிக்கை வை!''எவன் ஒருவனுக்குத் தன்னிடத்தில் நம்பிக்கை இல்லையோ அவனே நாத்திகன்' என்பது விவேகானந்தரின் கருத்து. 'தன்னம்பிக்கை கொண்டிருந்த ஒரு சிலருடைய வரலாறே உலக சரித்திரம் ஆகும்' என்பார் அவர்.'நம்பிக்கை, நம்பிக்கை, நம்மிடத்தில் நம்பிக்கை; நம்பிக்கை, கடவுளிடத்தில் நம்பிக்கை - இதுவே மகிமை பெறுவதன் ரகசியம் ஆகும்' என்பது அவரது முத்திரை வாசகம்.2.'வலிமை பெற்ற மனிதனாக எழுந்து நில்!'இன்றைய சூழலில் நமக்குத் தேவை இரும்பைப் போன்ற தசைகளும், எக்கு போன்ற நரம்புகளும் தான்' எனக்கூறும் விவேகானந்தர், 'காலமெல்லாம் அழுது கொண்டிருந்தது போதும். இனி அழுகை என்ற பேச்சே இருக்கக் கூடாது. சுய வலிமை பெற்ற மனிதர்களாக எழுந்து நில்லுங்கள்...இந்த உலகம் மிகப் பெரிய ஓர் உடற்பயிற்சிக் கூடம். இங்கு நாம் நம்மை வலிமை- உடையவர்களாக்கிக் கொள்வதற்காக வந்திருக்கிறோம்' என இளைய பாரதத்தினைத் தட்டி எழுப்புகிறார்.3.'இல்லை' என்பதை 'இல்லை' யாக வை!வாழ்க்கையில் எப்போதும் எதிர்மறையான எண்ணங்களுக்கு - சொற்களுக்கு - இடம் தரவே கூடாது; உடன்பாடாகவே சிந்திக்க வேண்டும்; வாக்கினில் இனிய சொற்களையே கையாள வேண்டும்.இல்லை என்று ஒருபோதும் சொல்லாதே. 'என்னால் இயலாது' என்று ஒரு நாளும் சொல்லாதே. ஏனெனில் நீ வரம்பில்லா வலிமை பெற்றவன்… நீ எதையும் எல்லாவற்றையும் சாதிக்கக் கூடியவன்.4. 'துன்பத்திற்குத் துன்பம் தா!'வாழ்க்கையில் எதிர்கொள்ளும் துன்பங்களுக்குத் துன்பம் தர வேண்டுமானால், என்ன செய்வது? ஏளனங்களைப் பொருட்படுத்தக் கூடாது; எதிர்ப்புக்களுக்கு அஞ்சவும் கூடாது.'ஒவ்வொரு பணியும் மூன்று நிலைகளைக் கடந்தாக வேண்டும். ஏளனம், எதிர்ப்பு, பிறகு கடைசியில் ஏற்றுக்கொள்ளப்படுதல். தனது காலத்தை மீறி முற்போக்காகச் சிந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் நிச்சயம் தவறாகவே புரிந்து-கொள்ளப்படுவான். எனவே எதிர்ப்பும் அடக்குமுறையும் வரவேற்கத் தக்கவையே' என்கிறார்.5. 'மன உறுதியோடு கடுமையாக உழை!'விவேகானந்தரின் கருத்தில் இளைஞர்கள் தங்கள் குறிக்கோளை அடைவதற்குத் தேவையான பண்புநலன்கள் இரண்டு: 1. கடுமையான உழைப்பு 2. பெரும் மன உறுதி.'வெற்றி பெறுவதற்கு நிறைந்த விடாமுயற்சியையும் பெரும் மன உறுதியையும் நீங்கள் கொண்டிருக்க வேண்டும். விடாமுயற்சி பெற்றவன், 'சமுத்திரத்தையே குடித்து விடுவேன்', 'எனது சங்கல்பத்தால் மலைகள் நொறுங்கி விழுந்தாக வேண்டும்' என்று சொல்கிறான். அத்தகைய ஆற்றலை, அத்தகைய மன உறுதியை நீ பெற்றிடு. கடுமையாக உழை. உனது குறிக்கோளை நீ அடைவாய்' எனக் கூறுகிறார் விவேகானந்தர்.6. 'ஒரு கருத்தையே வாழ்க்கை மயமாக்கு!''ஒரு கருத்தை அல்லது கொள்கையை எடுத்துக்கொண்டு, அதற்காகவே தன்னை அர்ப்பணித்துப் பொறுமையுடன் போராடிக் கொண்டிருந்தால், எவருக்கும் ஆதரவான ஒரு காலம் வரும்' என்றார் விவேகானந்தர். வாழ்க்கையில் இளைஞர்கள் வெற்றி பெறுவதற்கு அவர் காட்டும் வழி எளிமையானது.'ஒரு கருத்தை எடுத்துக்கொள். அந்த ஒரு கருத்தையே உனது வாழ்க்கை மயமாக்கு. அதையே கனவு காண். அந்தக் கருத்தை ஒட்டியே வாழ்ந்து வா. உடலின் ஒவ்வொரு பாகத்திலும் அந்த ஒரு கருத்தே நிறைந்திருக்கட்டும். அந்த நிலையில் மற்ற எல்லாக் கருத்துக்களையும் தவிர்த்துவிடு. வெற்றிக்கு இது தான் வழி'.7. அச்சம் தவிர்!'அச்சமே மரணம். அச்சத்திற்கு அப்பால் நீ போக வேண்டும்' என்பதே அடிப்படையான வாழ்க்கைப் பாடம். 'நான் மகத்தான பணியைச் செய்யப் பிறந்தவன்' என்ற உறுதியான நம்பிக்கையோடு இளைஞர்கள் தங்கள் வாழ்வின் ஒவ்வோர் அடியையும் எடுத்து வைக்க வேண்டும். நாய்க்குட்டிகளின் குரைப்பைக் கேட்டு நீங்கள் அஞ்ச வேண்டியதில்லை. ஆகாயத்தின் இடியோசைகளைக் கேட்டும் நீங்கள் அஞ்ச வேண்டாம். இந்தியாவையும், இந்த உலகம் முழுவதையுமே நாம் தட்டியெழுப்பியாக வேண்டும்.8. 'உனது எதிர்காலத்தை நீயே உருவாக்கு!''உனது விதியைப் படைப்பவன் நீயே என்பதைப் புரிந்து கொள். உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே குடிகொண்டு இருக்கின்றன. உனது எதிர்காலத்தை நீயே உருவாக்கு. ஏற்கனவே நடந்து முடிந்ததைக் குறித்து வருந்தாதே. எல்லையற்ற எதிர்காலம் உன் முன்னால் விரிந்து பரந்திருக்கிறது' என இளைய தலைமுறையினருக்கு உணர்த்தும் விவேகானந்தர், 'எழுந்து நில். தைரியமாக இரு. வலிமையுடன் இரு. பொறுப்பு முழுவதையும் உன் தோள் மீதே சுமந்து கொள்' என்கிறார்.
9. 'முதலில் கீழ்ப்படிவதற்குக் கற்றுக்கொள்!'நம் நாட்டில் ஒவ்வொருவனும் கட்டளை இடவே விரும்புகிறான். கீழ்ப்படிவதற்கு ஒருவரும் தயாராக இல்லை. மேலை நாட்டு மக்களிடையே சுதந்திர மனப்பான்மை மிகவும் அதிகம். என்றாலும் கீழ்ப்படியும் தன்மையும் அவர்களிடம் அதற்கு நிகராகவே இருக்கிறது. ஆனால் இங்கு நாமோ, கர்வம் கொண்டவர்களாக இருக்கிறோம். இது எந்தக் காரியத்தையும் சாதிப்பதில்லை. கீழ்ப்படியும் தன்மை தான் தனிமனிதனின் முன்னேற்றத்துக்கு காரணமாகிறது.10. 'எதிர்த்து நின்று போராடு!''பயங்கரவாதத்தை அஞ்சாமல் எதிர்த்து நில். எழுந்து நின்று போராடு. ஓர் அடியும் பின்வாங்கக் கூடாது.- எது வந்தாலும் போராடி முடி' என்பதே விவேகானந்தர் இளைய தலைமுறைக்கு வழங்கும் வாழ்க்கைப் பாடம்.-முனைவர் இரா.மோகன்எழுத்தாளர், பேச்சாளர்94434 58286

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement