Advertisement

அநியாயமான கோபங்கள்

ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நாம் ஒருவரையொருவர் சார்ந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பது உண்மை. எங்கோ ஒரு சேற்றில் விதைக்கப்படும் நெல்லில் தான் நம் வாழ்வாதார ஜீவன் உள்ளது. நூற்றுக்கணக்கான நூல்கண்டுகள் பிரிந்து ஒரு ஆடைக்கு உயிர் தருகிறது.நம் வாழ்வாதாரங்களான உணவு, உடை, இடம், எல்லாமே நாம் பிறரை சார்ந்து இருக்கும் போதுதான் கிடைக்கிறது. யாரோ ஒருவர் உண்ணவும், உடுத்தவும் நான் ஏன் வெயிலிலும், மழையிலும் உழைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் மனிதம் உரைக்க உழைப்பதால் தான் நாம் வாழ்கிறோம். கடந்த சில நாட்களாகவே பேஸ்புக்கிலும் வாட்ஸ் அப்பிலும் ஒரு கதை ஒன்று பல நண்பர்களால் பகிரப்பட்டு வருகிறது. கார் துடைக்கும் ஒரு தந்தை மகன் பற்றிய கதை. காரை சிறிது சேதப்படுத்தும் மகனை தண்டிக்கும் தந்தை, தந்தை மீது பாசத்தை செலுத்தும் மகனின் நிலை, அதைக் கண்டு மனம் உடையும் தந்தை என கண்மண் தெரியாமல் ஆழ்ந்து யோசிக்காமல் சட்டென்று உணர்ச்சிவசப்படுவதால் தன் மகனின் விரலையே இழக்கும் தந்தையின் உணர்வுகள் தான் அந்தக் கதை.

தணியாத கோபம்:எத்தனையோ கோபங்களை நாம் கண்டிருக்கிறோம், அந்தக் கோபம் தணிந்தவுடன் அதே நபர்களிடம் உங்கள் கோபத்தின் காரணம் என்னவென்று கேட்டுப்பாருங்கள்; அவர்களுக்கு சொல்லத் தெரியாது. சிறு உணர்ச்சிகளின் வெளிப்பாடுதான். நமது கோபம் எப்படியெல்லாம் வெளிப்படுகிறது? பிரியாணிக்கு லெக்பீஸ் இல்லையென்றால், கல்யாணவீட்டில் சரியாக கவனிக்கப்படாமல் போய்விட்டால், சாப்பாட்டில் உப்பு இல்லாவிட்டால், பஸ்சில் ஜன்னல் சீட்டு கிடைக்காவிட்டால், இப்படி அநேக காரணங்களை உதாரணங்களோடு நாம் சொல்லிக்கொண்டே போகலாம். கோபம்- இதை நாம் எப்படி பழக்கப்படுத்திக் கொள்கிறோம். வாய்வார்த்தையில் கோபத்தைப்பற்றி பேசுகிறீர்கள், கோபத்தைப்பற்றியும் அதனால் விளையும் தீமைகளைப் பற்றியும் எழுதுகிறீர்கள். ஆனால் அது நம்மில் எப்படி விதைக்கப்படுகிறது என்பதை ஏன் குறிப்பிடுவதில்லை என்று ஒரு கேள்வி எழுவது தெரிகிறது.

பகையை உருவாக்குகிறோம்:சாதாரணமாக குழந்தைகள் கீழே விழுந்தால் நாம் ஓடிப்போய் பிடிக்கிறோம், அதனால் அவர்களுக்கு தன்னம்பிக்கை குறைகிறது என்பது ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்ட உண்மை. நாம் அதை கண்டுகொள்ளாமல் போய்விட்டால், குழந்தைகள் அதை பெரியதாக எடுத்துக்கொள்ளாமல் மற்ற வேலைகளைச் செய்ய ஆரம்பித்துவிடும். அதேபோல், குழந்தைகள் சுவற்றிலோ, மேசையிலோ இடித்துக்கொண்டால் குழந்தையை சமாதானப்படுத்தும் சாக்கில் நாம் சுவரையோ, மேசையையோ அடிப்போம். 'கவலைப்படாதேடா செல்லம்... அம்மா அதை அடித்துவிட்டேன்!' என்று சமாதானம் சொல்வோம். அப்போது குழந்தையின் மனதில் பதியும் விஷயம், யாராவது நம்மை அடித்தாலோ, நாம் இடித்துக்கொண்டாலோ நாமும் திருப்பி அடிக்கவேண்டும் என்று தோன்றுமாம். நாமே வளரும் குழந்தைகளின் மனதில் பகையை உருவாக்கிறோம் நம்மையும் அறியாமலேயே! பதிமூன்று வயதுக் குழந்தையிடம் 6 மாத குழந்தையை விட்டுப்போன தாய்க்கு கேளிக்கைகள் தான் பெரியதாக இருந்தது. பால் புகட்டும் போது புரையேறியதை தவிர்க்கத் தெரியாததால் குழந்தை இறந்தது. எந்தபொறுப்புமே ஏற்காத தாய் அப்போது அந்தப் பதிமூன்று வயதுக் குழந்தையிடம் கொண்ட கோபம் எப்படி நியாயமானதாகும். கூடப்பிறந்த அக்காள் கணவரால் பாலியல் செய்யப்பட்ட பெண்ணை யாரும் அறியாமல் தந்தையே கொன்றார். அந்தக் கோபம் எப்படி நியாயமானதாக இருக்கும். இப்படி அநேக கோபங்கள் அநியாயமானதாக மட்டுமே இருக்கும். நியாயமான கோபங்கள் விரைவில் நீர்த்துப் போகக் கூடியவை.

எங்கே மனிதநேயம்:மனித நேயத்திற்கு எதிரான செயல்களையே நாம் அதிகம் கண்டுவிட்டபடியால், மனித நேயத்தோடு சில தகவல்களைப் பார்ப்போம். பெரிய திமிங்கலத்திற்கு கூட மனிதன் வலை வீசி விடுகிறான். ஆனால் சிறு கொசுவிற்குப் பயந்து தானே வலைக்குள் முடங்குகிறான் என்று ஒரு சொல்லாடல் உண்டு. அந்த கொசுக்கள் பரப்பும் மலேரியாவிற்கு எப்படி மருந்து கண்டுபிடித்தார்கள் தெரியுமா? ஐதராபாத்தில் பணக்காரரான ஒரு வெள்ளையர் வசித்த பகுதியில் மலேரியாவால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வந்தார்கள். கொசுவால் மலேரியா எப்படி பரவுகிறது என்பதை அறிவதற்காக... அந்த மனிதர் தினமும் ஒவ்வொரு சாக்கடை உள்ள தெருவில் படுத்துக் கொள்வாராம். அப்போது அவருக்கு மலேரியா வரவில்லையாம். மிகவும் கஷ்டப்பட்டு அதிகமான கொசுக்களை மூட்டையாக கட்டி அதை அரைத்துக் குடித்தாராம்; அப்போதும் அவருக்கு மலேரியா வரவில்லையாம். கொசுக்களைப் பிடித்து கூழ் போல் ஆக்கி உடம்பெங்கும் தடவிப் பார்த்த போதும் மலேரியா வரவில்லையாம். பின உணவாக கொசுக்களையே உண்டார். இறுதியில் அவர் மலேரியாவுக்கு மருந்தையும் கண்டுபிடித்துவிட்டார். ஆனால் அவர் மருந்தை எப்படிக் கண்டுபிடித்தார் என்று சொல்லவில்லை. பெரிய பணக்காரராக இருந்த போதிலும் சுயநலம் இன்றி அடுத்தவர்களின் வருத்தத்தை உணர்ந்து தன்னைப் பெரிதும் வருத்திக்கொண்ட அவரின் செயல் உச்சகட்ட மனித


நேயத்திற்கு சான்றுதானே! சில நாட்களுக்கு முன்பு எண்ணெய் லாரி ஒன்று விபத்துக்குள்ளாகி டிரைவரும், கிளீனரும் உயிருக்குப் போராடிக்கொண்டு இருக்கும் போது, பொதுமக்கள் அவர்களை காப்பாற்றாமல் குடம் குடமாக எண்ணெயைக் பிடித்துக்கொண்டு போனார்களாம். இதுதான் மட்டமான மனிதநேயத்திற்கு சாட்சி. மனித மனதிற்குள் மனித நேயம் மரித்து விடவில்லை என்பதற்கு சான்றாக ஆங்காங்கே சில சம்பவங்கள் நடந்து கொண்டிருப்பது ஒரு ஆறுதல்.

- லதா சரவணன் எழுத்தாளர், lathasharangmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (5)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement