Advertisement

வெல்லுமா இனி வேளாண்மை - முனைவர் பழ.துக்கையண்ணன்.

பல நாடுகளில் மனித இனம் நாடோடிகளாக திரிந்து, காடுகளில் விலங்குகளை வேட்டையாடி உண்டு வந்த காலங்களில், தமிழன் ஆற்றுப்படுகைகளில் நகர நாகரிகம் கண்டிருந்தான். அவனது இந்த வளர்ச்சிக்கு, மூல காரணம் உழவுத் தொழிலே.இரண்டாம் உலகப்போரும், இதற்கு பிந்தைய உலகச் சூழலும் மனிதனின் வாழ்வியலில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்தன. ஐரோப்பிய நாடுகளின் காலனி ஆதிக்கம் உலகம் முழுவதும் பரவி இருந்ததால், அவர்களின் தொழில் சார்ந்த கண்டுபிடிப்புகள் உழவுத் தொழிலைப் புறந்தள்ளின.குண்டூசி தயாரிப்பவர் தன் உழைப்பு, மூலப்பொருட்களின் விலை, ஆள் கூலி, மின்செலவு மற்றும் வரிகள் உட்பட அனைத்தையும் சேர்த்து குண்டூசிக்கு விலை நிர்ணயம் செய்ய முடிகிறது. ஆனால் உணவளிக்கும் உழவன், அவனது உழைப்பால் கிடைத்த விளைபொருளுக்கு விலை நிர்ணயம் செய்ய இயலவில்லை. இதனால், உயர்ந்து வரும் விலைவாசிக்கும், உழவனின் வருமானத்திற்கும் இடையேயான இடைவெளி அதிகரித்துக் கொண்டே வருகிறது. எதனால் இந்த இடைவெளி?

ஒற்றுமை இல்லை :*உழவர்களிடம் நாடு தழுவிய குழு மனப்பான்மையோ, ஒற்றுமையோ இல்லை.*திட்டமிட்டோ அல்லது அறியாமையினாலோ அரசுகள் விவசாய தொழிலை முதன்மைப்படுத்தாமல் விட்டுவிட்டன.
*இலவசங்கள் மற்றும்
மானியங்கள் மூலம் உழவர்கள் ஏமாறுவதும், ஏமாற்றப்படுவதும் வாடிக்கையாகிவிட்ட நிலை.
*விவசாயிக்கும், நுகர்வோருக்கும் இடையில் வணிகம் என்ற பெயரில் இடைத்தரகர்கள் சுரண்டுவது.
*பண்ணையார் அமைப்பு வேளாண் சாகுபடி முறை, தனிநபர் சாகுபடி அமைப்பாக (நில உச்சவரம்பு சட்டம் போன்றவை வாயிலாக) மாறி, மறுபடியும் மாற்று வழியில் பன்னாட்டு அமைப்புகளின் (கார்ப்பரேட் பார்மிங்) சாகுபடி முறைக்கு மாறுவதும், மாற்றப்படுவதும்.
இதுபோன்ற உண்மைக் காரணங்கள் விரிவாக ஆராயப்பட வேண்டும்.
வேளாண் விளை பொருட்களை யார் சந்தைப்படுத்தினாலும் அது அரசின் சட்டத்திற்கு உட்பட்ட, உழவர்களின் பங்களிப்புடனும், மிகுந்த கண்காணிப்புடனும் கூடிய அமைப்பாக இயங்க வேண்டும்.

தலைகுனிய வேண்டிய இடம்:சந்தைப்படுத்துதலில் நாம் வெட்கித் தலைகுனிய வேண்டிய இடம் எது தெரியுமா. ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பண்டங்களுக்கு மக்கள் நெடுநேரம் காத்திருப்பதும், அந்தந்த அலுவலர்களால் உதாசீனப்படுத்தப்படுவதுமே ஆகும். விடுதலை பெற்று பல ஆண்டுகளாகியும் நாம் உணவுப் பொருளை சண்டையிட்டு வாங்கும் நிலை மாறவே இல்லை.அரிசி உற்பத்தி செய்யும் உழவனும், உழவுத் தொழிலாளியும் உணவுக்கு கால்கடுக்க நிற்கும் சூழல் உள்ளது. பொது வினியோகம் என்று வந்துவிட்டால், வேளாண் விளைப் பொருட்களை
சந்தைப்படுத்தும் பொதுத்துறை அமைப்புகளை உருவாக்க வேண்டும். புதிய தொழிற்சாலை, மென்பொருள் பூங்கா அமைப்பதற்காக விளை நிலங்களை அழிக்கக் கூடாது. ஒரு விவசாயி தன்னால் நிலத்தை சாகுபடி செய்ய இயலாமல் போகும் பட்சத்தில், அந்த நிலத்தை அரசு சார்ந்த அமைப்பே எடுத்து விவசாயம் செய்ய வேண்டும். இதில் கிடைக்கும் வருவாயில் உழவனும், அரசும் பங்கு போட்டுக் கொள்ளலாம்.ஒருபுறம் வேளாண்மைக்கு புதிய தொழில்நுட்பங்களையும், திட்டங்களையும் அறிவித்துக் கொண்டே, விளை நிலங்கள் குடியிருப்புகளாக மாற்றுவதை அறவே கைவிட வேண்டும். இந்நிலை தொடர்வதால் மண்வெட்டி, கலப்பையுடன் வயலுக்கு சென்றவர்களில் பலர், டீகடைகளில் நில விற்பனை தரகர்களாக உலா வருவதை காணமுடிகிறது.நமது நிலப்பயன்பாடு புள்ளி விபரத்தை பார்த்தோமானால் பயனுள்ள விளைநிலங்கள், பட்டியலில் கணிசமான பரப்பளவு உள்ளன என தெரியவரும். அப்படியானால் அந்த விளைநிலங்கள் ஏன் பயனற்று போயின? இது ஆராய்ச்சிக்கு உரியது. இதற்கான காரணங்களில்
"விவசாயம் செய்ய போதுமான ஆட்கள் கிடைப்பது இல்லை” என்பதும் ஒன்று.

வேலை ஆட்கள் இல்லையா :விவசாயிகளும், விவசாய வேலை ஆட்களும் நிறைந்த நம் நாட்டில் விவசாயம் செய்ய ஆட்கள் இல்லை என்ற காரணம் ஏற்புடையதா என்று பார்க்க வேண்டும். அப்படியானால் இத்தனை நாட்கள் வேலை செய்து வந்தவர்கள் என்ன ஆனார்கள்? உழவனிடம் கேட்டால், 'ஆட்களின் கூலி அதிகம்' என்கின்றனர்.இலவச மின்சாரம் துவங்கி, விதை, உரம், நாற்றாங்கால், பசுமைக்குடில், இயந்திரங்கள் போன்ற அனைத்திற்கும் மானியம் என்ற பெயரில் உழவர்களை வஞ்சித்து வருகிறோம். நம் குடிமக்களை தன்னிறைவு பெற விடாமல் ஏதாவது ஒன்றை கொடுத்துத்தான் அவன் வாழ வைக்கப்பட வேண்டும் என்ற போக்கு, மெல்லச்சாகும் விஷம் அருந்துவது போன்றதே.'கட்டுபடியான விலையில்லை' என்று குப்பையில் கொட்டப்படும் அல்லது வயல்களில் அறுவடை செய்யாமல் அழிக்கப்படும் விளைபொருட்களை உற்பத்தி செய்தவர்களுக்கும், அவற்றை வாங்கி உட்கொள்ளும் நுகர்வோருக்கும் எந்த பயனுமின்றி இடைத்தரகர்களின் கொள்ளை லாபத்தை தடுக்க வேண்டும். அரசு அமைப்புகள் இடைத்தரகர் இடத்தை கையிலெடுக்க வேண்டும்.
எந்த காரணம் கொண்டும் உழவனும், உழவனின் வளங்களும் சுரண்டப்பட்டு விடக்கூடாது என்ற விழிப்புணர்வு மக்களுக்கு இருக்க வேண்டும். நிலம், நீர், கால்நடைகள் தன் பாரம்பரியத்தை இழந்து நிற்கும் சூழல் உருவாகி உள்ளது. இன்றைக்கு சில இளைஞர்கள் வேளாண்மையை தொழிலாகப் பார்க்க முனைந்துஉள்ளனர். நன்று தான்.அவர்களுக்கு உழவின் அடிப்படையும் நேர்த்தியும் கற்றுத்தரப்பட வேண்டும். காளான் பண்ணை அமைத்து லட்சம், லட்சமாகவும் தேனீப்பண்ணை அமைத்து கோடி, கோடியாக சம்பாதித்து விடலாம் என்ற கனவைத் தவிர்த்து, தகுந்த அறிஞர்களிடம் அறிவியல் ரீதியாகவும், அனுபவம் வாய்ந்த சிறந்த உழவர்களிடம் ஆக்க ரீதியாகவும் கற்றுத் தெளிந்து, இவ்வாய்ப்புகளில் இறங்க வேண்டும்.வேளாண்மைக்கான திட்டங்களை விவசாயிகளைக் கொண்டு இயற்ற வேண்டும். குளிரூட்டப்பட்ட அறைகளில் ஆணையங்கள் இயங்குவதைத் தவிர்த்து,
உழவனின் அருகில் இருந்து செயல்பட வேண்டும். எத்துறை இளைஞனும், அறிஞனும் வேளாண் துறையை அறிந்திருக்க முன்வர வேண்டும். அப்போது மட்டுமே உழவுக்கு உயிரூட்ட முடியும்.- -முனைவர் பழ.துக்கையண்ணன்.
உதவிப் பேராசிரியர்,
வேளாண்மை அறிவியல் நிலையம்.
ராமநாதபுரம்-.99940 58099

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement