Advertisement

உங்களாலும் முடியும் எரிசக்தி சேமிப்பு: -வி.கிருபாகரன்

இந்தியாவில் 60 சதவீத மின்சாரம் நிலக்கரி, பெட்ரோலிய கச்சா எண்ணெய் மூலம் தயாரிக்கப் படுகிறது. மின் உற்பத்தியின் போது வெளியேறும் கரியமில வாயு, நைட்ரஜன், சல்பர் டை ஆக்ஸைடு ஆகியவை சுற்றுச் சூழலை பாதிக்கிறது. இதனால் புவி வெப்பமாதல், வானிலை மாற்றம் ஏற்படுகிறது இது வளரும் நாடுகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. ஆனால், நாம் சுற்றுச்சூழல் மாசு பற்றி கவலை இல்லாமல் தேவைக்கு அதிகமாக மின்சாரத்தை வீணாக்குகிறோம்.

மின்சாரத்தை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும்போது விரயம் ஏற்படுகிறது. இதனால் ஒரு யூனிட் மின்சாரத்திற்கு, 3 யூனிட் தேவைப்படுகிறது. பெரும்பாலான வீடுகளில் 'வாஷிங் மெஷின்,' 'பிரிட்ஜ்,' 'டிவி' போன்ற பொருட்கள் உள்ளன. மக்கள்தொகை பெருக்கத்தால் தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், அலுவலகங்கள், வாகனங்கள் பெருகிவிட்டன. இதனால் மின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் மின் உற்பத்தியை அதிகரிப்பதில் ஏராளமான சிக்கல்கள் உள்ளன.

புதிய திட்டம் :மின் தட்டுப்பாடு நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் முட்டுக்கட்டையாக உள்ளது. புதுப்பிக்கவல்ல எரிசக்தி பயன்பாடு, எரிபொருள் சேமிப்பு மூலம் இந்த பிரச்னையை எதிர்கொள்ளலாம். சூரியஒளி, காற்று, நீர் ஆகியவற்றில் இருந்து மின்சாரம் தயாரிப்பது புதுப்பிக்கவல்ல எரிசக்தி. இந்த முறையில் மின்சாரம் தயாரிக்க மத்திய, மாநில அரசுகள் அதிக கவனம் செலுத்த துவங்கிவிட்டன. 11 வது ஐந்தாண்டு திட்டத்தில் சூரியஒளியின் மூலம் 50 ஆயிரம் மெகாவாட், கற்றாலைகள் மூலம் 7,660 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மின்சார பிரச்னைக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மட்டுமே தீர்வு காண முடியும் என நாம் இருந்துவிட கூடாது. ஒவ்வொரு தனிமனிதனின் பங்களிப்பும் மின் பற்றாக்குறையை சரிசெய்வதிலும், சுற்றுசூழல் மாசை தடுப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

மாற்றம் தேவை :சுடுநீருக்காக 'ஹீட்டர்' உபயோகிப்பது அதிகரித்து வருகிறது. இதற்கு பதிலாக சூரிய சுடுநீர் சேகரிப்பை பயன்படுத்தலாம். விலையும் குறைவு. மின்சாரமும் மிச்சம். சுற்றுச் சூழல் பாதிப்பும் ஏற்படாது. மின்தடை நேரங்களில் 'இன்வர்டருக்கு' பதிலாக 'சோலாரை' பயன்படுத்தலாம். 'சோலாருக்கு' அதிக முன்பணம் செலவிட வேண்டும் என பயப்படுகின்றனர். 'சோலார்' பொருத்த வங்கிகள் கடன் தருகின்றன. சூரிய நீர்காய்ச்சி வடிப்பானை பயன்படுத்தி நீரை ஆவியாக்கி குளிர செய்து நன்னீர் பெறலாம். இதனை வடிவமைப்பது மிகவும் எளிது.ஒரு சதுர மீட்டர் அளவுள்ள காய்ச்சி வடிப்பான் தினமும் 3 லிட்டர் தண்ணீரை நன்னீராக்கும். அடுக்குமாடி குடியிருப்புகளில் மக்கும் குப்பைகள், மனித கழிவுகளை பயன்படுத்தி எளிய முறையில் 'பயோகேஸ்' தயாரித்து எரிபொருளாக பயன்படுத்தலாம். உடற்பயிற்சி கூடங்களில் பயன்படும் நடைபயிற்சி இயந்திரம், சைக்கிள்களில் சிறிய டைனமோவை பொருத்தி மின்சாரம் தயாரிக்க முடியும்.

குறியீடு முக்கியம்:சேமிப்பு என்றவுடன் நமக்கு தோன்றுவது பணம் ஒன்றே. செல்வத்தை போல் எரிசக்தி வளங்களையும் நமது வருங்கால சந்ததியினருக்கு சேமிப்பது அவசியம். மின்சாதனத்தை தேவையான அளவு மட்டும் பயன்படுத்த வேண்டும். மெலிந்த புளோரோசென்ட் பல்புகள், சிறிய புளோரோசென்ட் பல்புகள், மின்னணுவியல் ரெகுலேட்டர்கள், மின்னணுவியல் சோக்குகளை நாம் உபயோகப்படுத்த வேண்டும். நட்சத்திர குறியீடுள்ள மின்பொருட்களை பயன்படுத்த வேண்டும்.எரிவாயு அடுப்பில் பெரிய பர்னர் எரிந்தால் மணிக்கு 135 கிராம் எரிவாயு வீணாகும். இதை தடுக்க தேவையான பொருட்களை தயார்நிலையில் வைத்து கொண்டு சமையல் செய்ய வேண்டும். பிரஷர் குக்கரில் சமைத்தால், அரிசி வேகவைப்பதில் 20 சதவீதம், பருப்பை வேக வைப்பதில் 46 சதவீதம், இறைச்சியை வேக வைப்பதில் 41.5 சதவீதம் எரிபொருளை மிச்சப்படுத்தலாம். அதிகமாக நீரை வைத்து அரிசியை வேக வைத்தால் எரிபொருள் தேவை 65 சதவீதமாக அதிகரிக்கும்.

எரிவாயு மிச்சம் :கொதிநிலை வந்தவுடன் தீயை தணிக்கவும். இதன்மூலம் 35 சதவீதம் எரிபொருளை மிச்சப்படுத்தலாம். குறுகலான அடிபாகம் கொண்ட பாத்திரங்களை சமையலுக்கு உபயோகிக்க கூடாது. அவை தீயை பக்கங்களில் தழுவவிடும். பாத்திரம் மூடி இருக்க வேண்டும். தேவைக்கு ஏற்ப சிறிய பர்னர் அல்லது தனிவான தீயையே அடிக்கடி பயன்படுத்தினால் 6 முதல் 10 சதவீதம் எரிவாயுவை மிச்சப்படுத்தலாம்.'பிரிட்ஜில்' இருந்து எடுக்கப்படும் உணவுப்பொருட்களை உடனே சமையலுக்கு பயன்படுத்தக் கூடாது. ஐ.எஸ்.ஐ., தரச்சான்று பெற்ற அடுப்பை பயன்படுத்த வேண்டும். வீடுகளில் மின்விளக்கு, மின் விசிறியை 15 நாட்களுக்கு ஒருமுறை துடைக்க வேண்டும். இதன்மூலம் ஒரு சதவீதம் மின்சாரத்தை சேமிக்கலாம். வாகனத்தில் சீரான வேகத்தில் செல்வது எரிபொருளை மிச்சப்படுத்தும், மணிக்கு 45-55 கி.மீ., வேகத்தில் வண்டியை இயக்கினால் 40 சதவீதம் கூடுதல் 'மைலேஜ்' கிடைக்கும். கார் இன்ஜினை முறையாக 'டியூனிங்' செய்வதன் மூலம் 6 சதவீதம் எரிபொருள் மிச்சப்படுத்த முடியும். அடிக்கடி 'கியர்' மாற்றுவது 20 சதவீத எரிபொருளை வீணாக்கும். சீராக 'பிரேக்கை' பயன்படுத்த வேண்டும். 'கியர்'களை மாற்றும்போது மட்டும் 'கிளட்ச்' பயன்படுத்த வேண்டும்.தன்னிறைவான எரிசக்தி அளிப்பது அரசின் கடமை மட்டும் அல்ல. ஒவ்வொரு தனிமனிதனும் எரிசக்தி சேமிப்பிற்கு தங்களால் ஆன பங்களிப்பை அளிக்க வேண்டும்.
- வி.கிருபாகரன்,
உதவி பேராசிரியர்,
ஊரக எரிசக்தி மையம்,
காந்திகிராம பல்கலை,
காந்திகிராமம். 94438 59066.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement