Advertisement

சினிமா இசையமைப்பில் சாதிப்பேன்: புது களத்தில் சுவடு வைக்கிறார் சுதா ரகுநாதன்

இனிமையான குரல் வளத்தால், கர்நாடக இசை ரசிகர்களின் மனங்களை தன் வசமாக்கியவர், சுதா ரகுநாதன். கடந்த, 25 ஆண்டுகளுக்கு மேலாக கர்நாடக இசைத்துறையில் தனித்துவமிக்க இசை ஆளுமையாக விளங்கும் இவர், 'சங்கீத கலாநிதி', 'பத்மபூஷண்', 'பத்மஸ்ரீ' உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.

சமீபத்தில், ஒரு நூல் வெளியீட்டு விழாவுக்கு கோவை வந்த அவர், 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த பேட்டி:

* 'பத்மபூஷண்' விருது அறிவிக்கப்பட்டுள்ள இந்த தருணத்தை, எப்படி உணர்கிறீர்கள்?


பல ஆண்டுகளாக இசைப்பணியில் ஈடுபட்டு வருகிறேன். அப்பணியை நான் சரியாக செய்து வருகிறேன் என்பதற்கான, அங்கீகாரம் தான் இவ்விருது. எனக்கு விருது கிடைத்து இருக்கிறது என்பதை விட, தமிழ் இசை உலகத்துக்கு பெருமை கிடைத்து இருப்பதாக உணர்கிறேன்.

* கர்நாடக இசைப்பாடகியாக அறியப்பட்ட நீங்கள், இப்போது சினிமா இசை அமைப்பாளராக அறிமுகம் ஆகி இருக்கிறீர்கள். அந்த அனுபவம் பற்றி சொல்லுங்களேன்?


எழுத்தாளர் அசோகமித்திரன் எழுதிய, 'தண்ணீர்' என்ற நாவலை இயக்குனர் வசந்த் சினிமாவாக எடுக்கிறார். அதற்கு நான் இசையமைக்கவேண்டும் என்பது வசந்த் விருப்பம். அதனால், நான் ஏற்றுக்கொண்டேன். மேலும், அவருக்கு இசையைப்பற்றி நன்றாக தெரியும். அவர் இயக்கியுள்ள படங்களில் எல்லாம், இசைக்கு அதிக முக்கித்துவம் கொடுத்திருக்கிறார்.

* சாஸ்திரிய சங்கீதம், திரையிசை இரண்டும் வெவ்வேறு களங்கள். இதை நீங்கள் எப்படி கையாளப்போகிறீர்கள்?


இசை என்பது பெரிய கடல். அதில், கர்நாடக இசை ஒரு அங்கம். திரைப்பட இசை, இன்னொரு அங்கம். சினிமாவுக்கு என்ன தேவை என்பதை அறிந்து வேலை செய்தால் போதும். நான் கர்நாடக இசைத்துறையில் இருந்தாலும், சினிமாத் துறையுடன் எனக்கு தொடர்பு உண்டு. பல படங்களில் பாடல்கள் பாடி இருக்கிறேன். அதனால், திரை இசையில் நான் சாதிப்பேன்.

* தமிழ் சினிமா இசை அமைப்பாளர்களில் உங்களுக்கு யாரை பிடிக்கும்?


இளையராஜாவை அதிகம் பிடிக்கும். காரணம், திரை இசையில் இரண்டு பரிணாமங்கள் உண்டு. அவை இரண்டும் இளையராஜாவிடம் உள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையில், 'வந்தே மாதரம்' பாடல் தான் பாடினேன். தமிழ் இசையமைப்பாளர்கள் யாரையும் குறைத்து மதிப்பிட முடியாது. அனைவரும் திறமையானவர்கள்.

* நீங்கள் சாய்பாபாவின் தீவிர பக்தையாமே...


ஆமாம், நான் மட்டுமல்ல என் பெற்றோரும், தீவிரமான பக்தர்கள். நான் பாபாவின் ஆசியால் பிறந்தவள். நான் பிறந்தவுடன் எனக்கு, கீதசுதா என்று இனிய பெயரை பாபாதான் வைத்தார். காது குத்தியதும், அட்சரம் கற்பித்ததும் அவர்தான். அதனால், எனக்கு எல்லாமே பாபாதான். நான் தடுக்கி விழுந்தால் கூட அம்மா என்று கத்தமாட்டேன். 'சாய் ராம்' என்றுதான் கத்துவேன். அந்த அளவுக்கு அவர் என் ஜீவனில் கலந்திருக்கிறார்.

* நீங்கள் தொடர்ந்து, 25 ஆண்டுகளுக்கு மேலாக திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவில் பாடி வருகிறீர்கள். அந்த அனுபவம் பற்றி சொல்லுங்களேன் ?

திருவையாறு செல்வது எனக்கு புனித யாத்திரை. அதனால், அந்த தேதியில் வேறு எந்த நிகழ்ச்சிக்கும் செல்லமாட்டேன். கர்நாடக இசைக்கச்சேரியில் தியாகராஜரின் கீர்த்தனை இல்லாத கச்சேரி இருக்காது. இசைத்துறையில் முழுமையாக ஈடுபட்டுவரும் நான், அவரது ஆராதனை விழாவில் பங்கேற்று, எல்லோருடன் சேர்ந்தும், தனித்தும் பாடி அஞ்சலி செலுத்துவதுதான், அவருக்கு நாம் செய்யும் மரியாதை.

* இசைத்துறையில், இன்றைய இளைஞர்களின் பங்களிப்பு எப்படி இருக்கிறது?


இது, இசைக்கான பொற்காலம். குழந்தைகள் இசையை மிகவும் ஆசையாகவும், திறமையாகவும் கற்றுக்கொள்கின்றனர். தங்கள் பிள்ளைகள் இசை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் பெற்றோருக்கும் அளவுக்கு அதிகமான ஆர்வம் இருக்கிறது.

* இசையை முழுநேர தொழிலாக செய்ய முடியுமா?


இன்றைக்கு கண்டிப்பாக செய்யலாம். கர்நாடக சங்கீதம் மட்டும் பாட வேண்டும் என்பதில்லை. சினிமா, 'டிவி', மெல்லிசை கச்சேரிகள் என, ஏராளமான வாய்ப்புக்கள் உள்ளன.

* சினிமாவில் வாய்ப்பு வந்தால், நடிப்பீர்களா?


ஏற்கனவே, வாய்ப்பு வந்தது; நான் மறுத்து விட்டேன். நடிக்க போய் விட்டால், இசையில் கவனம் செலுத்த முடியாது. ஒருவேளை எனக்கு தனித்துவமான பாத்திரமாக இருந்தால், குடும்பத்தினர் அனுமதித்தால், நடிப்பது பற்றி யோசிப்பேன்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement