Advertisement

நீர் நிலையை உயர்த்தினால் வரி தள்ளுபடி

பிரபஞ்சம் தோன்றி 13.7 ஆயிரம் கோடி ஆண்டுகளாகிறது. அதன் பின் நம் சூரியக்குடும்பம் தோன்றி 4.6 ஆண்டுகளாகிறது. நீர் உலகில் தோன்றி 4.3 ஆயிரம் கோடி ஆண்டுகளாகிறது. இன்று உலகம் முழுவதும் பேசப்படுகிற இன்றியமையாத பொருள் நீர். வளர்ந்த நாடுகள்,வளரும் நாடுகள் என அனைத்தும் நீரின் முக்கியத்துவத்தை உணரத் தொடங்கி, நீர் மேலாண்மை, நீர் பாதுகாப்பு என பல நிலைகளை தொட்டு ஏரி, நீராதாரங்களை பாதுகாக்க முயல்கின்றன. மனிதன் நீரின் தேவையை அறிந்திருந்தும், அதன் முக்கியத்துவத்தை உணராத காலத்திலேயே தமிழ் இலக்கியங்கள் நீரின் இன்றியமையாமையை பற்றி இயம்ப தொடங்கி விட்டன.

நீர் சுழற்சி:இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, "நீரின்றி அமையாது உலகெனின் யார் யார்க்கும் வான் இன்று அமையாது ஒழுக்கு” என வள்ளுவம் அழகாக கூறியது. "அமுதூறும் மாமழை நீர் அதனாலே அமுதூறும் பன்மரம் பார்மிசை நோற்று” என திருமூலர் அமுதம் போன்றது மழைநீர் என்றார். "உண்டி கொடுத்தோர் எல்லாம் உயிர் கொடுத்தோரோ” என புற நானூற்று பாடல், நீர் இல்லாமல் நம் உடம்பில் இயக்கம் இல்லை என கூறுகிறது. நீர் சுழற்சி என்பது நீர் எவ்வாறு உருமாறுகிறது என்பதை விளக்கும் நவீன அறிவியல் சொற்றொடர். ஆனால் புலவர் உருத்திரங்கண்ணனார் நீர் சுழற்சி பற்றி அன்றே, "வான் முகந்த நீர் மழை பொழியவும், மழை பொழிந்த நீர் கடல் பரப்படும், மாரி பெய்யும் பருவம் போல், நீரின்றி நிலத்து ஏற்றவும், நிலத்தினின்று நீர் பரப்பும் அளந்தறியாப் பல பண்டம்” என கூறியுள்ளார்.

நீர் நிலை பெயர்கள்:தமிழகத்தில் நீர்நிலைகள் எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை அறியும்போது வியப்பு மேலிடுகிறது.


* அகழி - கோட்டையின் புறத்தே அகழ்ந்துஅமைக்கப்பட்ட நீர் அரண்.


* அருவி - மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.


* ஆழிக்கிணறு - கடலுக்கு அருகே அமைக்கப்பட்ட கிணறு.


* ஆறு - பெருகி ஓடும் நதி.


* இலஞ்சி - பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்.


* உறை கிணறு - மணற்பாங்கான இடத்தில் தோண்டிய சுடுமண் வளைய கிணறு.


* ஊருணி - மக்கள் பருகும் நீர்நிலை.


* ஊற்று - பூமிக்கடியில் நீர் ஊறுவது.


* ஏரி - வேளாண்மை பாசன நீர் தேக்கம்.


* ஓடை - எப்பொழுதும் வாய்க்கால் வழிந் தோடும் நீர்.


* கண்மாய் - (பாண்டிய மண்டலத்தில்) ஏரிக்கு வழங்கும் பெயர். கால்வாய் - ஏரி, குளம், ஊருணி இவற்றுக்கு நீர் ஊட்டும் வழி.


* குட்டை - மாடு முதலியவைகளை குளிப்பாட்டும் சிறிய நீர் நிலை. குளம் - ஊர் அருகே மக்கள் குளிக்க பயன்படும் நீர் நிலை.


* கூவம் - ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு.


* சுனை - மலையிடத்து இயல்பாய் அமைந்த நீர் நிலை.


* திருக்குளம் - கோயிலின் அருகே அமைந்த நீராடும் குளம். இப்படி தமிழர்கள் நீர் நிலைகளை பல்வேறு பெயர்களில் அழைத்து அவற்றை வேறுபடுத்தி பார்த்தனர்.

வரி தள்ளுபடி:காவிரியின் குறுக்கே கல்லணை கட்டிய கரிகாலன் கால கட்டத்தில் தான் சத்வாகனர்கள் வட்ட வடிவ கிணறுகளை அறிமுகப்படுத்தினர். பல்லவர், சோழர் காலத்தில் நீர் நிலைகள் நன்கு பராமரிக்கப்பட்டது. சாணக்கியர் எழுதிய அர்த்த சாஸ்திரத்தில் பொதுமக்கள் நீர் நிலையை உயர்த்தினால், அவர்களுடைய வரி தள்ளுபடி செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குளம், ஏரி கட்டினால் 5 ஆண்டுகளும், ஏரி, குளம் இவற்றை புதுப்பித்தால் 4 ஆண்டுகளும், தூய்மைப்படுத்தினால் 3 ஆண்டுகளுக்கும் வரி தள்ளுபடி செய்யப்பட்டன. இதன்மூலம் நீர்நிலைகளை காக்க அப்போதைய அரசர்களும், மக்களும் எப்படி பொறுப்போடு செயல்பட்டார்கள் என்று உணரமுடிகிறது அல்லவா? ஆனால் இன்றைய நிலைமை? வளரும் நாடுகள் இன்று மறைமுக நீர் (விர்ச்சுவல் வாட்டர்) என்ற ஒரு கருத்தை கைக்கொள்கின்றன. ஒரு பொருள் தயாரிக்க எவ்வளவு நீர் தேவைப்படுகிறது. அது உணவு பொருளாக இருந்தாலும், வேறு பொருளாக இருந்தாலும் சரி. அதன் அடிப்படையில் அந்த பொருளை தயாரிப்பதை விட இறக்குமதி செய்தால், நீரை சிக்கனப்படுத்த இயலும் என கணக்கிட்டு செயல்படுகின்றன. நீர் பஞ்சமே இல்லாத அமெரிக்கா கூட, நீர் சேமிப்புக்காக அதிக நீர் தேவைப்படும் தயாரிப்பு பொருட்களை இறக்குமதி செய்கிறது. நம் முன்னோர் நீருக்கு மதிப்பளித்து, அதை சேமிக்க பல்வேறு வழிகளை கையாண்டது போன்று, நாமும் நீரை பற்றிய விழிப்புணர்வை பெறவில்லை எனில் வருங்கால சந்ததி வாழ முடியாது. "அணை கடந்த வெள்ளம் திரும்பி வராது” என்ற பழமொழியை மனதில் கொள்வோம். நீர் சேமிப்பு, பாதுகாப்பை செயல்படுத்துவோம்.

- பொன்.சூரியசுந்தரி, தலைமை ஆசிரியை, ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி, காயம்பட்டி. 73737 50524

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement