Advertisement

புற்று நோய்க்கு முற்றுப்புள்ளி..: கு.கணேசன்,

இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக புள்ளி விவரம் எச்சரிக்கிறது.புற்றுநோய் என்றாலே பலருக்கும் முகத்தில் பயம் அப்பிக் கொள்ளும். உடலில் சிறிய கட்டி வந்து விட்டால் புற்று நோயாக இருக்குமோ என்ற சந்தேகம் மனதை அலைக்கழிக்கும். மாறி வரும் வாழ்க்கைமுறை, மேற்கத்திய உணவுமுறை, புகைப்பழக்கம், மதுப்பழக்கம், உடற்பருமன், பூச்சிக்கொல்லி மருந்துகள் உபயோகம், வம்சாவளி போன்ற பல காரணங்களால் உயர்ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு, புற்றுநோய் ஏற்படுகிறது. இதில் புற்றுநோய் முக்கியமானது.

எது புற்றுநோய் :உடலில் செல்கள் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் இயல்பு நிலைக்கு மாறாக வளரும் நிலையை புற்றுநோய் என்கிறோம். இது ஆரம்பத்தில் கண்ணுக்குத் தெரியாத அளவில் உருவாகி நாளடைவில் விபரீத வளர்ச்சி அடைந்து உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தும். ரத்தப் புற்றுநோய் தவிர மற்ற எல்லா புற்றுநோய்களும் கட்டிகளாக திரள்வது தான் வழக்கம். புற்றுநோய் கட்டிகள் வாய், மூக்கு, தொண்டை, இரைப்பை, உணவுக்குழாய், குடல், கல்லீரல், நுரையீரல், கருப்பை வாய், சினைப்பை, மூளை, ரத்தம் என்று உடலின் உள்உறுப்புகளில் தான் வளர்கின்றன. தோல் புற்றுநோய் இதற்கு விதிவிலக்கு. ஒரு புற்று கட்டியானது தான் பாதித்த உறுப்பை மட்டும் இல்லாமல் மற்ற உறுப்புகளையும் கெடுத்து நாளைடைவில் உடலின் ஒட்டுமொத்த செயல்பாட்டையும் பாதிக்கிறது. புற்றுநோய் வந்த சில நாட்களில் உயிரைப் பறித்து விடுவதில்லை. ஆண்டுக்கணக்கில் வளர்ந்து பல அறிகுறிகளை வெளிப்படுத்தி நம்மை எச்சரித்து அதன்பின் தான் ஆபத்தை ஏற்படுத்தும். அதற்குள் நாம் விழித்துக் கொண்டால் புற்றுநோயின் பிடியிலிருந்து தப்பிவிடலாம்.

புகை - பகை :புற்றுநோய்க்கு முக்கிய காரணம் புகைப்பழக்கம். புகையிலையில் உள்ள பாலிசைக்ளின் அரோமேட்டிக் ஹைட்ரோ கார்பன், தார், நிகோடின், கார்பன் மோனாக்ஸைடு, அமோனியா, பீனால் போன்ற நச்சுக்கள் உடல் செல்களைத் தொடர்ந்து உறுத்திக் கொண்டே இருப்பதால் மரபணுக்களில் மாற்றம் ஏற்படுகிறது. அப்போது செல்கள் வரம்புமீறிய வளர்ச்சிக்கு உள்ளாகி புற்றுநோயை ஏற்படுத்துகின்றன. எந்த ஒரு அயல்பொருளும் உடலில் ஆண்டுக்கணக்கில் நீடித்தால் அது தங்கியிருக்கின்ற உடல்பகுதியை பாதிக்கும். புகையிலையில் உள்ள நச்சுக்கள் வாய், நாக்கு, கன்னம், தொண்டை, உணவுக்குழாய் ஆகிய இடங்களிலும் மதுவில் உள்ள நச்சுக்கள் கல்லீரல், இரைப்பை, குடல், மலவாயிலும் புற்றுநோயை உண்டாக்குகின்றன.புகையில் வாட்டப்படும் உணவு, கொழுப்பு மிகுந்த பதப்படுத்தப்பட்ட துரித உணவுகளை அடிக்கடி சாப்பிடுவோருக்கு இரைப்பை, குடல், மார்பு பகுதியில் புற்றுநோய் வருகிறது. நார்ச்சத்துள்ள உணவுகளை குறைந்தளவில் சாப்பிடுபவர்களுக்கு பெருங்குடல் புற்று வரும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

செயற்கை நிறமூட்டிகள் :கண்களை கவர்வதற்காகவும் ருசியை மேம்படுத்துவதற்காகவும் ஓட்டல் உணவுகளில் செயற்கை நிறமூட்டி, மணமூட்டி, இனிப்பூட்டிகள் சேர்க்கப்படுகின்றன. இவற்றிலுள்ள அனிலின், ஆக்சைம், அமைட் ரசாயனங்கள் நம் மரபணுக்களின் பண்புகளை பாதித்து புற்றுநோய் உருவாவதை ஊக்குவிக்கின்றன.சூரியஒளியிலிருந்து வரும் புறஊதாக் கதிர்கள் உடலில் அதிகளவில் படுமானால் தோல் புற்றுநோய் வருவதுண்டு. எக்ஸ் கதிர்வீச்சு மற்றும் அணுக்கதிர் வீச்சு காரணமாக ரத்தப்புற்றுநோய், தோல் புற்றுநோய் வருகின்றன. விவசாயத்திற்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தின் ரசாயனங்கள் புற்றுநோய்க்கு வழிவிடுகின்றன.

தொழில்வழி பாதிப்பு :நிக்கல், ஈயம், பித்தளை, இரும்பு, அலுமினியம் போன்ற உலோகங்கள், அமிலம், பெயின்ட், சாயப்பட்டறை, ரப்பர் தொழிலாளிகள், பென்சீன், ஆர்சனிக், காட்மியம், குரோமியம் போன்ற ரசாயனங்கள் தயாரிக்கும் தொழிலாளர்களுக்கும் தோல், நுரையீரல், குரல்வளையில் புற்றுநோய் வருகிறது.

பொதுவான அறிகுறிகள் :உடலில் ஏற்படும் கட்டி, எடை குறைதல், தொடர் ரத்தசோகை, தொடர் வயிற்றுப்போக்கு, சிறுநீர், மலத்தில் ரத்தம் வெளியேறுதல், நீண்டநாட்களுக்கு காயம் ஆறாமல் இருத்தல், மூக்கிலிருந்து ரத்தம் வெளியேறுதல், நீண்ட கால அஜீரணம், உணவை விழுங்குவதில் சிரமம் ஆகியவை அறிகுறிகள். ஏற்கனவே இருந்த கட்டி மற்றும் மரு அளவிலும் நிறத்திலும் மாற்றமடைதல், பல வாரங்களுக்கு தொடர் இருமல், இருமலில் ரத்தம் வருதல், குரலில் மாற்றம் இவற்றில் ஒன்றோ, இரண்டோ இருந்தால் டாக்டரை அணுக வேண்டும்.

தடுக்க என்ன வழி :மது, புகை, புகையிலை வேண்டாம். காய்கறி, கீரை, பழம், நார்ச்சத்துள்ள மற்றும் சிறுதானிய உணவுகளை அதிகமாக சாப்பிடுங்கள். கொழுப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவை குறையுங்கள். உடற்பருமனை தவிர்க்க தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். 35 வயதுக்கு மேல் ஆண்டுக்கு ஒருமுறை 'மாஸ்டர் ஹெல்த் செக்அப்' செய்யுங்கள். சிறுமிகளுக்கு 10 வயது முடிந்ததும் 'எச்பிவி' தடுப்பூசி போடுங்கள். பெண்கள் 40 வயதுக்கு மேல் ஆண்டுக்கு ஒருமுறை 'பாப்ஸ்மியர், மெமோகிராம்' பரிசோதனை செய்யுங்கள்.
-கு.கணேசன்,
பொதுநல டாக்டர்,
ராஜபாளையம்,
99524 34190

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (5)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement