Advertisement

மண்ணைக் காக்க மரபுகளை பேணுவோம்

நமது நாடு இயற்கை, கலாசாரம், கட்டமைப்பு பாரம்பரியத்திற்கு பெயர் பெற்றது. இந்தியாவின் மாறுபட்ட, ஒருங்கிணைந்த கலாசார பாரம்பரியம் வேறு எங்கும் காண முடியாதது. மாநிலத்திற்கு மட்டுமன்றி, மாவட்டத்திற்கும், ஏன் ஒவ்வொரு தாலுகாவிற்கும் கூட வெவ்வேறு வகையான பண்பாட்டுப் பாரம்பரியம் இருப்பதும், அவை இன்றளவும் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுவதும் இந்தியாவின் தனிச்சிறப்பு.
இந்தியக் கல்வி முறையின் தனித்தன்மையை மாற்றி, அடிமை மனநிலையைப் புகுத்திய மெக்காலே கல்வி முறை இன்றளவும் நமக்குள் ஊடுருவிக் கிடக்கிறது. ஆங்கிலேயரான லார்டு மெக்காலே 1835ல் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையொன்றே, இந்தியாவின் அன்றைய கல்வி முறை குறித்து தெளிவாக விளக்கும்.
அதில் 'நான் இந்தியா முழுவதும் சுற்றிப் பார்த்தபின், திருடர்களோ, பிச்சைக்காரர்களோ இல்லை என்பதை தெரிந்து கொண்டேன். செல்வச் செழிப்போடும், நல்ல பழக்க வழக்கங்களோடும் இந்தியா திகழ்கிறது. இந்திய நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் ஆன்மிக, கலாசார பாரம்பரியங்களை உடைத்து வீழ்த்துவது கடினம். எனவே அவர்களது பழமையான, தொன்மைக் குரிய கல்வி முறை மற்றும் கலாசாரங்களை மாற்றி, வெளிநாட்டுப் பொருட்கள் (முக்கியமாக ஆங்கிலேயப் பொருட்கள்) இந்திய பொருட்களை விடச் சிறந்தது என்பதை முழுமையாக நம்ப வைத்து, நமது எதிர்பார்ப்பை அடைய முடியும்' என்று மெக்காலே கூறியிருக்கிறார்.
பாரம்பரியங்களைப் பாதுகாத்த ஆங்கிலேயர்:அதற்குப் பிறகே இந்தியக் கல்வி முறையில் பெருத்த மாற்றம் ஆங்கிலேயர்களால் கொண்டு வரப்பட்டு, நமக்குள் அடிமை மனநிலை புகுத்தப்பட்டது. இப்படிப்பட்ட ஆங்கிலேயர்களே நமது பழமையான மரபுச் சின்னங்களைப் பாதுகாப்பதில் அக்கறை காட்டினர் என்பது மறுக்க முடியாத உண்மை. அதன் காரணமாகவே பல்வேறு வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டடங்களை இன்றைக்கும் நம்மால் பார்க்க முடிகிறது.
ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் சுற்றுலா போட்டிக் குறியீடு வரிசைப்படுத்தப்படுவது வழக்கம். இப்போட்டிக் குறியீட்டில் 2013ல், 140 நாடுகளை வரிசைப்படுத்தினர்.அதில் இந்தியா, 65ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. உலக அளவில் இயற்கை வளத்தில் 9வது இடத்தையும், கலாசார வளத்தில் 96வது இடத்தையும், ஆரோக்கியம் மற்றும் துாய்மைக் குறியீட்டில் 109வது இடத்தையும், நீடித்த சுற்றுப்புற வளர்ச்சியில் 107வது இடத்தையும் பெற்றிருப்பது தற்போதைய நம் நிலைமையை தெளிவாக விளக்குகிறது.
தரக்குறியீட்டில் நம் நாட்டின் மிகப் பின்தங்கிய நிலைக்கு நாம் ஒவ்வொருவருமே ஒரு வகையில் காரணம்.நம்முடைய பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் போற்றிப் பாதுகாக்கத் தவறியதே இதற்கான காரணம் என்பதை சொல்லத் தேவையில்லை. இந்நிலை தொடர்ந்தால், பாரம்பரிய சின்னங்களில் நமக்குரிய தனித்தன்மையை இழப்பதோடு, நமது பாரம்பரிய சொத்துக்களையும் கொஞ்சம் கொஞ்சமாக இழக்க வேண்டிய நிலை வரும்.
ஒவ்வொரு ஊருக்கும், நகரத்திற்கும் தனித்தனி வரலாறுகளும், பண்பாட்டுப் பெருமைகளும் உண்டு. ஆனால், அவற்றை உணர்ந்து கடைப்பிடிப்பதில், பின்பற்றுவதில், செயல்படுத்துவதில் நாம் காட்டும் பொறுப்பின்மை 'உலகப்புகழ்' வாய்ந்தது. பாரம்பரிய வாழ்விடங்களின் பெருமைகளை உணராமல் செயல்படுவதால், அதற்குரிய மதிப்பை இழந்து, அவ்விடங்கள் சமூக விரோத செயல்பாடுகளுக்கு துணை போகிற இடமாய் மாறிப்போவதற்கு நாம் காரணமாகிறோம்.
உணவுப் பாரம்பரியம் பூகோளவியல், தட்பவெப்பத்திற்கு ஏற்றவாறு நமக்கான உணவுப் பாரம்பரியம் காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. பன்மயத்தன்மை கொண்ட பயிர்களால், நம் உடலுக்குத் தேவையான ஆற்றலும், நுண்ணுாட்டங்களும் குறைவின்றிக் கிடைத்தன. ஆனால் அப்பாரம்பரியத்தை மறந்ததால், தற்போதைய உணவு முறையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதனால், நோய்களுக்கு ஆளாகி, மருத்துவத்திற்காக நம் வருவாயின் பெரும்பகுதியை செலவிடுகிறோம். 'உணவே மருந்து, மருந்தே உணவு' எனும் அடிப்படையிலான உணவுப் பாரம்பரியம் மறுபடியும் கட்டமைக்கப்பட வேண்டும்.
உழவுப் பாரம்பரியம் :காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த இயற்கை விவசாய முறையிலிருந்து மாறுபட்டு, அபரிமிதமான உற்பத்தியை நோக்கி பயணம் செய்ததன் விளைவு, வேதி உரங்களையும், அளவுக்கு அதிகமான பூச்சிக்கொல்லிகளையும் கையாள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். இதனால், நம் மண், நிலம் ஆகியவற்றோடு நமது பாரம்பரிய விவசாய முறைகளும் அழியும் நிலையை எட்டியுள்ளன. தற்போதைய விவசாய சூழலில் இருந்து விடுபட்டு, பண்டைப் பாரம்பரிய வேளாண் முறைக்கு மாறுவதன் மூலம் செலவுகளைக் கட்டுக்குள் கொண்டு வந்து விவசாயத்தை, லாபகரமாக மாற்ற முடியும்.
உறவுப் பாரம்பரியம் :நம் உறவுப் பாரம்பரியம் என்பது முதியோர்களை மதித்தலும், பெற்றோர்களைப் பாதுகாத்தலும் தான். அதை மறந்து செயல்படுவதன் விளைவாக, நமது உறவுக் கலாசாரம் சீர்கெட்டு முதியோர் இல்லங்கள் பெருகிவிட்டன.'குழந்தைகளுக்குக் காப்பகங்கள், முதியோர்களுக்கு இல்லங்கள்' என பண்பாட்டிற்கு எதிர் திசையில், நம் பயணம் செய்து கொண்டிருக்கிறது. மண உறவுகள் கசந்து மணவிலக்குகள் அதிகரித்து வருகின்றன. இதைப்போலவே ஆசிரியர்--மாணவர், தொழிலாளர்-- முதலாளி, மக்கள்--அரசியல்வாதிகள் உறவு பின்னடைவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. குழந்தைகளுக்கு உறவுகளைச் சொல்லி மட்டுமல்ல,
உறவுகளோடு வளர்ப்பதுதான், அவர்தம் தலைமுறைக்கு நாம் செய்யும் பெருந்தொண்டு.நம் மரபுகளைத் திரும்பச் சென்று அறிய முயலும் நல் முயற்சி தற்போது பலமட்டத்திலும் காண முடிகிறது. இதன் விளைவாகவே பல்வேறு நகர்ப்புறங்களில் அதற்கென பாரம்பரிய நடைப்பயணங்கள், கலந்துரையாடல்கள், பசுமைப் பயணங்கள் தொடங்கியிருக்கின்றன. இது, சமூகம் நல்ல மாற்றத்தை நோக்கி நகர்கிறது என்பதற்கான அறிகுறி. இது போன்ற கூட்டு முயற்சியின் மூலமே பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாகும்.
--கே.பி.பாரதி
ஒருங்கிணைப்பாளர், பாரம்பரிய நடைப்பயணம், மதுரை. 93441 02841

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (6)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement