Advertisement

துவாரம் என் கலைக்கனவு

உலகநாயகன் கமலஹாசனின் மாஜி மனைவி என்பதை கடந்து நடனம், ஆடை அலங்காரம், உள்கட்டமைப்பு அலங்காரம், சிறப்பு குழந்தைகளுக்கு நடனப்பயிற்சி என பல்துறைகளில் தன்னை நிரூபித்தவர் வாணி கணபதி. பெங்களூருவில் வசித்து வரும் அவருக்கு நடனத்தில் புதுமை படைக்கும் எண்ணம் தோன்றியது. அதிலிருந்து பிறந்தது "துவாரம்'. பிப்.6,ல் சென்னையில் நடக்கவிருக்கும் "துவாரம்' நடன நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் முகாமிட்டிருந்த வாணி கணபதி "தினமலர்' வாசகர்களுக்காக கடந்த காலங்களை அசை போட்ட நிமிடங்கள்...

* அதென்ன துவாரம்? பெயருக்கும் நடனத்திற்கும் என்ன தொடர்பு?
சமஸ்கிருதத்தில் துவாரம் என்பதற்கு கதவு என்று பெயர். கதவுக்கு பேசும் ஆற்றல் இருந்தால் என்ன சொல்லும் என்பதை மையமாக வைத்து தான் இந்த கதை நடனத்தை உருவாக்கினேன். மியூசிக், டான்ஸ், தியேட்டர் என்ற முப்பரிணாமத்தை பார்ப்பவர்களால் உணர முடியும்.

* திடீர் தமிழக பிரவேசத்திற்கு காரணம் என்ன?
தமிழ்நாடு எனக்கு மிக முக்கியம். இங்கு தான் நான் கலை கற்றேன். நாட்டியத்திற்கான இடமும் இது தான். நாட்டியம் பிறந்த இடமும் இது தான். நடனத்தின் சிறப்பிற்கு பாதிப்பில்லாமல் அதை மெருகூட்டும் என் முயற்சியை சென்னையில் அரங்கேற்ற வேண்டும் என்ற ஆசை எனக்குள் இருந்தது. பெங்களுரு, மும்பை, ஐதராபாத், ஆந்திராவை தொடர்ந்து "துவாரத்தை' சென்னையில் நடத்த வந்து உள்ளேன்.

* தனி நடனம் மட்டுமே ஆடிய நீங்கள் ஜோடி சேர்ந்தது ஏன்?
சத்தியநாராயண ராஜூவின் நடனத்தை பார்த்தேன். என்னுடன் ஆடுவதற்கு பொருத்தமானவர் என முடிவு செய்தேன்.

* துவாரம் சென்னையை கடக்காதா?
எனக்கும் அந்த ஆசை இருக்கிறது. நல்ல ஸ்பான்சர்ஸ் கிடைத்தால் "துவாரம்' மதுரை, கோவை என தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் பயணிக்கும்.

* நடனம் மீது ஏன் இந்த மோகம்?
என் அம்மா சின்ன வயசிலிருந்தே பாடிட்டு இருந்தாங்க. அவர் இறந்த பின் என்னால் ஆட முடியுமா என்ற பயம் வந்தது. என் நடனம் நடைபெறும் போதெல்லாம் அங்கு அவர் அமர்ந்திருப்பதாகவே உணர்வேன். என் அம்மாவின் ஆத்மாவுடன் ஆலோசித்த பிறகு தான் துவாரம் தொடங்கும் எண்ணம் வந்தது. இந்தியாவில் 12 இடங்களில் இந்த ஷோ நடத்த வேண்டும் என்ற லட்சியத்தோடு புறப்பட்டிருக்கிறேன்.

* தமிழகத்தினுடனான உங்களின் முந்தைய உறவை எண்ணிப்பார்ப்பதுண்டா?
தமிழகத்தில் இப்போதும் எனக்கு நெருக்கமான உறவுகள் உள்ளன. சுஹாசினி, அவரது கணவர் மணிரத்தினம், அவரது அப்பா, அம்மா, சகோதரிகள் என அவர்கள் குடும்பத்துடன் திருமணமான போது இருந்ததை விட இப்போது நெருக்கமாக இருக்கிறேன்.

* உங்களின் இந்த புதிய முயற்சிக்கு கமல் விமர்சனம் எதுவும் கிடைத்ததா?
அவரோட அபிப்ராயம் பற்றி எனக்கு தெரியாது. நான் என் பணியில் பிஸியா இருக்கேன். அவர் சினிமாவில் பிஸியா இருக்கிறார்.

நீங்களும் "துவாரம்' பற்றிய தகவல்களை அறிய விரும்பினால் talentsouthindiagmail.com ல் தொடர்பு கொள்ளலாம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement