Advertisement

வாட்ஸ் அப்... ஆப்பா?- இ.டி.ஹேமமாலினி,சமூக ஆர்வலர்

'சோஷியல் நெட்வொர்க்' - சமூக வலைதளங்களுக்கு பலரும் அடிமையான சூழ்நிலை உருவாகியுள்ளது. எவ்வளவுதான் அறிவுரை கூறினாலும் மீண்டும் மீண்டும் இளைஞர்கள் அந்த, 'சைட்' - தளத்திலேயே வீழ்கின்றனர்; விபரீதத்தில் போய் சிக்குகின்றனர். திருமணமானவர்கள் கூட இந்த தவறை செய்கின்றனர்; அதனால் குடும்ப வாழ்க்கையே சீரழித்து விடுகிறது.

இளைஞர்கள் இன்று இன்டர் நெட், பேஸ்புக், வாட்ஸ் அப் என, மூழ்கி கிடக்கின்றனர். ஆனால், அதிலொன்றும் ஈடுபடாதவர்களுக்கு, இது என்னவென்று கூட தெரிய வாய்ப்பில்லை. அவர்கள் கூட தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். காதலர்களுக்கு புறாதூது போகும் இன்டர் நெட் - வலைதளம், கழுகாக ஆக மாறும் நிலை, மனைவியை கணவரோ, கணவனை மனைவியோ, வலை தளத்தில் பின் தொடர்வதும், அவர்களையே கண்காணிப்பதும் சரி அல்ல என்பது முதலில் உணர வேண்டியது அவசியம். மது, போதை போன்ற பொருட்களுக்கு அடிமை போல, இன்டர்நெட்டும் புதுவித போதை. எவ்வளவுதான் வேண்டாமென்று மனம் மறுத்தாலும், இந்த சைட்டுகளுக்கு கைவிரல்கள் தானாகவே போக ஆரம்பிக்கும். நேரடியாக பார்க்காத பழக்கமில்லாத நபர்களுடன் நட்பு பாராட்டுவதும், சொந்த பெயரில் அல்லது திருட்டு பெயரில் தயார் செய்யும் கணக்கு மூலமாக, பல நபர்களுடன் எல்லை மீறிய உறவு பாராட்டுவதும், போதையின் அறிகுறிகள். இவர்கள் அடிமை ஆகிவிட்டனர் என்பது கூட, அவர்களால் உணர முடியாது என்பது சங்கடமான உண்மை.பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், இது மற்ற போதை போல வளரவிட்டு வெட்டுவதை போல அல்ல; முளைக்கும் முன்பே வளரவிடாமல் தடுப்பது தான் சிறந்த வழி.இதற்கு அடிமையான ஒருவர், சுயபுத்தியில் இதிலிருந்து வெளியில் வருவதுதான் சிறந்தது. இல்லை யென்றால், மனநல மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது கூட அவசியம்.

இத்தாலியில் வாட்ஸ் அப், பெரிய ஆப்பாக மாறியுள்ளது. வாட்ஸ் அப் பயன்பாடு காரணமாக மணமுறிவு ஏற்படுவதும், திருமண பந்தங்கள் விவாகரத்து அதிகமாக நடக்கிறது என்றும் செய்திகள் கூறுகின்றன. அண்மையில் அதிகமான விவாகரத்து வழக்குகளிலும் மிக முக்கிய வில்லன் இந்த, 'வாட்ஸ் அப்' குறுஞ்செய்திகள் தான். வாட்ஸ் அப் மூலமாக ஒருவருக்கொருவர் ஆபாச படங்கள் அனுப்புவதும் கூட இப்போது சர்வ சாதாரணமாகி விட்டது. கலாசாரத்தின் அஸ்திவாரமே குடும்ப உறவுகளில் தான் உள்ளது என்று நம்புபவர்கள் இத்தாலி மக்கள். 'வாட்ஸ் அப்' என்ற அரக்கனின் தீவிர பிடியில் சிக்கி அங்கு சின்னாபின்னமாகிறது குடும்ப உறவு. எங்கிருக்கிறோம்; என்ன செய்து கொண்டிருக்கிறோம், தனிப்பட்ட விஷயங்கள் கூட யாருடன், என்ன மனநிலையில் என்பதை கூட, சமூக வலைதளங்களில் முன், பின் தெரியாதவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் அபத்தமான சூழலுக்கு போய்க் கொண்டிருக்கிறோம்.

நவீன வாழ்க்கை முறை நல்லதும், கெட்டதுமாக, நம் வாழ்க்கையை அப்படியே புரட்டி போட்டிருக்கிறது. சமூக வலைதளங்களை ஒட்டு மொத்தமாக பயன்படுத்தவோ, தவிர்க்கவோ முடியாதுதான். ஆனால், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் நாம் பகிறும் விஷயங்களுக்கு வரம்பு என்ன என்பதை நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும். முன் பின் தெரியாதவர்களுடன் எல்லாமே பகிர்ந்து கொள்வது மிக தவறு என்பதை தெளிவாக தீர்மானித்து விட்டால், பிரச்னைகள் வராமல் தவிர்க்கலாம். நாலு பேர் கொண்ட வீட்டிலேயே ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதோ, முகத்துக்கு முகம் பார்ப்பதோ கூட இல்லாத, ஓர் தீவு வாழ்க்கையாக இருந்தபோதிலும், வாட்ஸ் அப் மூலம் கணினி இணைப்பு மூலம், 4,000 பேருடன் தொடர்பில் உள்ளனர். ரத்த பாசம் சிறிதும் இல்லாதவர்களாக அல்லவா இந்த வாழ்க்கை முறை இருக்கிறது.உலகின் எந்த மூலையில் எது நடந்தாலும், அடுத்த நொடி அந்த செய்தி நம்மை வந்தடைகிறது. இரவு தூங்குவதற்கு முன், வாட்ஸ் அப், காலை எழுந்ததும் வாட்ஸ் அப்.

எங்குச் சென்றாலும், மொபைலில் குறுஞ்செய்தி வந்துள்ளதா என்று எடுத்து, எடுத்து பார்ப்பதுதான் பேஷன். கோவிலாகட்டும், மரணவீடே ஆனாலும் பாகுபாடில்லை.இது ஏற்படுத்தும் மனரீதியான, உடல் ரீதியான பிரச்னைகள், சிக்கல்கள் மனிதன் உணராமலேயே போகிறான். இதிலிருந்தெல்லாம் விமோசனம் தேவை. இதற்கு ஒரே வழி, அதிலிருந்து வெளியில் வந்து மற்ற செயல்களில் முழுதாக, சுதந்திரமாக ஈடுபடுவது தான். வாழ்க்கையை வாழத் தெரியாமல், உடலையும், மனதையும் குப்பை யாக்கி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்; அதை சீர்படுத்தவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். கலாசார சீரழிவுக்கு வழிவகுக்கும், இந்த, 'வாட்ஸ் அப்' கலாசாரத்தால் பாரம்பரிய கலாசாரங்களை தொலைப்பதாக உணர்வு ஏற்படுகிறது. 'வாட்ஸ் அப்' நமக்கு ஆப்பு ஆகாதவரை நல்லது.
இ-மெயில்: hema338gmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (15)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement