Advertisement

காலங்கள் தோறும் காந்தி: இன்று தியாகிகள் தினம்

"கடவுள் என் முன்னே தோன்றி உனக்கொரு வரம் தரப்போகிறேன்! என்ன வேண்டும் கேள் என்றுகேட்டால்! என் வாழ்நாளில் மறைந்த இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தியுடன் ஒருநாள் இரவு உணவருந்த வேண்டும் என்று கேட்பேன்” என்று அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாளில் பதிலளித்தார் பராக் ஒபாமா.ஆயுத உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் வல்லரசு நாட்டின் தலைவர் ஒருவர் மூன்றாவது காலாக கைத்தடியை மட்டுமே வைத்துக் கொண்டு, அங்குமிங்கும் இந்திய மண்ணின் விடுதலைக்காக ஓடிக்கொண்டிருந்த அந்த மனிதரைப் பற்றி இப்படி குறிப்பிடுகிறார் எனில் அந்த அரையாடைத் துறவி நம்மைவிட்டு மறையவில்லை. கடல் கடந்து காலம் கடந்து இனம், மொழி, மதம் என எல்லாவற்றையும் கடந்து இன்றும் உலகின் வழிகாட்டியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது.

காந்தி வணங்கிய கடவுள்:உலகில் வேறு எந்த தலைவருக்கும் இல்லாத சிறப்பு காந்திக்கு மட்டும் எப்படி என எண்ணும் போது அவரின் வாழ்க்கை நிகழ்வுகளே அதற்கான பதில்களாக விரிகின்றன. போர்பந்தரில் பிறந்த காந்தி ஆயுத போர்களை நம்பாதவர். 2500 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான அகிம்சை சத்தியாகிரகம் என்ற தத்துவங்களை நவீன காலத்தில் வெற்றிகரமாக மறு நிர்மாணம் செய்து உலக மக்களைக் கவர்ந்தவர். "சத்தியமே அவரின் மதம். அன்பு அறவழி ஒழுக்கம்; மனசாட்சி இவையே அவர் வணங்கிய கடவுள்கள்”. வழக்கறிஞராக தான் சம்பாதித்த செல்வங்கள் அனைத்தையும் தாய் நாட்டின் விடுதலை வேள்விக்கு காணிக்கையாக வழங்கிய வள்ளல் நம் காந்தி! ஒத்துழையாமை இயக்கப்போராட்டம் வெற்றிகரமாக நடை பெறவேண்டுமென்றும; அதேவேளையில் சாமானிய ஏழைமக்கள் பாதிக்கப்பட கூடாது என்றும் திலகர் நினைவு நிதி வசூலிக்க உண்டியல் குலுக்கிய தன்னலமற்ற மனிதர்! இதன் மூலம் எங்களை எவரும் அசைக்க இயலாது என்று ஆணவத்துடன் எக்காள முழக்கமிட்ட ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் அரியாசனத்தை அசைத்த முதல் மனிதர். இதில் சிலருக்கு மாற்றுக் கருத்தும் உண்டு. ஆனால் முதல் சந்திப்பிலேயே முரண்பட்டு காந்தியக் கொள்கையை நிராகரித்த தேசியநாயகன் நேதாஜி, காந்தியின் போராட்ட வலிமையையும் தாய் நாட்டின் விடுதலைக்காக காந்தியின் பின்னே அணிவகுத்து நின்றமக்கள் சக்தியையும் பார்த்து, 'தேசத்தந்தை' என அழைத்தார். இதுவே காந்தியின் போராட்டங்களுக்கான அங்கீகாரம். பாரதியின் வரிகளைத் தொட்டுச் சொல்வதானால் "நரைகூடிக்கிழப்பருவமெய்திய”பின்னரும் "குன்றென நிமிர்ந்து நின்று” உள்ளத்தில் போராட்ட உணர்வோடு 30 கோடி இந்தியர்களை தன்னுள் அடக்கி வைத்திருந்தவர் காந்தி.

காந்தி விரும்பிய பொது வாழ்வு:உடல் உழைப்பு சிறுமை; மூளை உழைப்பே உயர்வு என்ற மேல்த்தட்டு சிந்தனையை முற்றிலுமாக நிராகரித்த காந்தி தனது சர்வோதயா சமூகத்தில் மூளை உழைப்பாளர்களும் கண்டிப்பாக உடல் உழைப்பை செய்யவேண்டும் என்று வலியுறுத்தினார். உடல் உழைப்பும் மூளை உழைப்பும் சேரும் போதுதான் தனிமனித வளர்ச்சி மற்றும் சமூகவளர்ச்சி சாத்தியம் என்று விளக்கினார். "எல்லோரும் சரிநிகர் சமம்” என்ற உணர்வு அனைவரிடமும் ஏற்படவேண்டும் என்று விரும்பிய காந்தி எளிமையான வாழ்க்கை வாழ வேண்டும் என்று விரும்பினார். ஆனால் ஏழ்மையான வாழ்க்கையை வெறுத்தார். நாமே விரும்பி தேவைகளைக் குறைத்துக் கொள்வதன் மூலம் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து ஏழ்மையை விரட்டமுடியும் என்று நம்பினார். இன்றுள்ளதுபோல் நகரங்கள் கிராமங்களைச் சுரண்டும் நிலை ஏற்பட கூடாதென்று, தான் கனவுகண்ட பொதுவாழ்வு சமூகத்தை கிராமிய நாகரிகத்தால் கட்டமைக்க விரும்பியவரே நமது காந்தி.

காந்தி விரும்பிய கல்வி:ஆங்கில அரசு 1835-ல் புகுத்திய கிளார்க்குகளை உருவாக்கும் கல்வி முறைதான் 2015-ம் ஆண்டிலும் சில மாற்றங்களுடன் தொடர்ந்து பின் பற்றப்படுகிறது. ஆங்கில அரசின் மெக்காலே கல்வித் திட்டத்தின் சீர்கேடுகளை காந்தி தெளிவாகவேஅறிந்திருந்தார். அது நமது கலாச்சார பண்பாட்டு வேர்களிலும் ஆழமாக வேரூன்றி நம் முன்னோர்களின் அடையாளங்களை மறைத்து விடும் என்று உணர்ந்தார். ஆங்கிலக் கல்வி முறை நேரடியான சமுதாய சூழ்நிலைகளிலிருந்தும் உடல் உழைப்பிலிருந்தும் நமது குழந்தைகளைப் பிரித்துவிடுகின்றது என்றும் இதனால் மாணவர்கள் உள்ளத்தில் சமுதாய உணர்வு வளராமல் போகும் என்று தீர்க்கதரிசனமாகக் கூறினார். "உண்மையான கல்வி என்பது தனிமனிதனின் மனதில் பண்பு, ஞானம், பொறுமை, உண்மை ஆகியவற்றை விதைப்பதில் அடங்கியிருக்கிறதே தவிர இலக்கிய பயிற்சியில் இல்லை” என்று சிறந்தகல்விக்கு இலக்கணம் கூறியவர் காந்தி.

"அகிம்சையை நேசித்து ஆணவத்தை எதிர்த்து சத்தியம் என்ற உண்மையைக் கடைப்பிடித்து சரித்திரமாய் ஒருவர் இந்த மண்ணில் வாழ்ந்து மடிந்துள்ளார்” என்பதையே இன்றைய பெரும்பாலான இளைய தலை முறை நம்ப மறுக்கிறது. "காந்தியவாதம்”அவர்களுக்கு இன்று கசப்பு மருந்தாகிப் போனது. இனிப்பை மட்டுமே சுவைக்க விரும்பி பழகிவிட்ட இன்றைய இளைய தலைமுறைக்கு"காந்திய சித்தாந்தம்”என்ற மருந்து கசந்தாலும் அதை நிச்சயம் அருந்த வேண்டியகாலம் வரும். அப்பொழுது இந்தப் புனித மண்ணில் எண்ணற்ற காந்திகள் தோன்றுவர்.

- முனைவர் .சி.செல்லப்பாண்டியன், உதவிப் பேராசிரியர், வரலாற்றுத் துறை தேவாங்கர் கலைக் கல்லூரி, அருப்புக்கோட்டை. 78108 41550

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (8)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement