Advertisement

தாமரை கற்றுத்தரும் பண்பாட்டு பாடம்...: - பேராசிரியர் க.ராமச்சந்திரன்

கற்றுக் கொள்வதற்கான பாடம் கணக்கற்றவை இருக்கின்றன என்று புத்தகங்களை தேடித் தேடிப் படிக்கிறோம். புத்தகங்களில் மட்டும் தானா பாடங்கள் இருக்கின்றன. எடுத்து வைக்கும் ஒவ்வொரு பாதச் சுவடுகளிலும், சுவடுகள் பதிக்கும் பாதைகளின் பயணங்களிலும் கணக்கற்ற பாடங்கள் இருக்கின்றன.

இதோ என் பாதங்கள் வீட்டின் வாசற்படியைத் தாண்டுகின்றன. வேலியோரம் வளர்ந்த புல்வெளிகளைப் பார்க்கிறேன். ''நான் உலகம் முழுவதும் சுற்றித்திரிந்தேன். நதிகளையும் மலைகளையும் கண்டு வந்தேன். இதற்காக மிகுந்த பணத்தை செலவழித்தேன். நெடுந்தூரம் கடந்து சென்று எல்லாவற்றையும் நேரில் கண்டேன். என் வீட்டு வாசலுக்கருகில் முளைத்திருக்கும் ஒரு புல்லின் நுனியில் படர்ந்திருக்கும் பனித்துளி ஒன்றில் உலகம் தெரிவதைக் காண மறந்தேன்'', என்று கவிஞர் தாகூர் எழுதிய வார்த்தைகள் என் நினைவுக்குளத்தில் நீச்சலடித்தன. இது தான் உற்றுப்பார்ப்பதற்கான காரணம்.

மன்னிப்பு கேட்கிறேன் :தொடர்ந்து நடக்கிறேன். சுற்றிலும் பார்த்துக் கொண்டே நடக்கிறேன். பூமிப்பரப்பெங்கும் பூத்துக்குலுங்கும் பூக்கள். பூக்களின் மீது எனக்கொரு மயக்கம் உண்டு. மல்லி, அல்லி, கள்ளி, குறிஞ்சி என்று அத்தனை பூக்களையும் ரசிப்பேன். இதே மூக்குத்தி போன்ற முள்ளில் பூத்த நெருஞ்சிப்பூவையும் நெருங்கிக் சென்று ரசிக்கிறேன். இப்போது ஒரு பூவை மட்டும் பார்க்கும் போது வருத்தப்படுகிறேன். அந்தப் பூ செம்பருத்திப் பூ தான். பள்ளி கல்லூரி நாட்களில் தாவரவியல் வகுப்புகளில் பூக்களை அறுத்து பாகங்களை பிரிக்கும் பாடவேளையை நினைத்துத்தான். அதற்காக இப்போது மன்னிப்பு கேட்கிறேன். பூக்களின் மீது அப்படியொரு மயக்கம் எனக்கு. தொடர்ந்து நடக்கிறேன். நீர் நிறைந்திருக்கும் தெப்பக்குளம் தெரிகிறது. நெருங்கிப் பார்க்கிறேன். குளம் நிறைய தாமரைப்பூக்கள். இந்த பூக்களைப் பார்க்க பார்க்க எனக்குள் சிந்தனைகள் சிறகு விரிக்கின்றன. தாமரை இரட்டை விதையிலை கொண்ட நீர்த்தாவரம், வெண்மையாக இருக்கும் பூ வெண்டாமரை என்றும், இளஞ்சிவப்பு நிறத்தில் இருப்பது செந்தாமரை என்றும் அழைக்கப்படுகிறது. நீருக்கு அடியிலே சேற்றிலே கிழங்கிலிருந்து தண்டு முளைத்து வெளிவரும். இந்த தண்டிலிருந்து பெரிய இலைகள் உண்டாகும். இலை நடுவே அடிப்பாகத்தில் காம்பு பொருந்தியிருக்கும். இந்த காம்பில் தான் பூக்கும்.

சேற்றில் பூக்கும் :தாமரை பூப்பது சேற்றில் தான். உயர்ந்தவர்கள் எளிய குடும்பத்திலிருந்து வருவர் என்பதற்கு தாமரை தக்கதொரு எடுத்துக்காட்டு. அவர்களைத் தான் 'சேற்றில் முளைத்த செந்தாமரை' என்று போற்றுகிறோம். 'பூவினுக்கு அருங்கலம் பொங்குதாமரை' என்று போற்றுகிறது தமிழிலக்கியம். இந்தப் பூவை கம்பர் காட்சிப்படுத்துகிறார், எப்படித்
தெரியுமா?வனவாசம் மேற்கொண்டு காட்டிற்கு செல்ல வேண்டும் என்று ராமனிடம் சொன்ன போது அவனது முகம் ' அன்றலர்ந்த செந்தாமரையினை வென்றதம்மா' என்று தான்.
ராமனின் திருமுகத்திற்கு தாமரைப்பூவினை உவமைப்படுத்தி, மகிழ்ச்சியின் வெளிப்பாடாகக் காட்டுகிறார் கம்பர்.சங்க இலக்கியமான நற்றிணையில் ஒரு காட்சி. தலைவன் தலைவியை விட்டு பிரியப்போகிறான் என்பதை தோழி தலைவிக்கு உணர்த்துகிறாள். தேனீக்கள், தாமரை மலர்களின் மகரந்தங்களை ஊதி எடுத்துக் கொண்டு, உயர்ந்த மலையுச்சியில் இருக்கும் சந்தன மரங்களில் கட்டிய தேன் கூடு போன்றது நட்பு, என்கிறாள்.

புனிதம் போற்றும் :வாழ்க்கை புனிதம் நிறைந்தது. தாமரையும் புனிதம் நிறைந்தது. தாமரை, சூரியகாந்தி இரண்டு பூக்களுமே சூரியனைப் பார்த்து மலரும். இதில் சூரியகாந்திக்கு இல்லாத சிறப்பு தாமரைக்கு உண்டு.சூரியனைப் பார்த்து மலர்ந்து அது போகிற திசையில் பயணிப்பதை மட்டுமே சூரியகாந்தி செய்யும். ஆனால் தாமரையோ சூரியன் மறைந்ததும் அதன் மடல்கள் வாடும்; அப்புறம் மூடும். எதற்குத் தெரியுமா தனக்கு வாழ்வுதந்த சூரியனைத் தவிர வேறு எதையும் பார்க்க மாட்டேன் என்று வாழும் உத்தமிதான் இந்த தாமரை. இது தான் தாமரையின் தனிச்சிறப்பு. அகவாழ்க்கையில் எப்படி இருக்க வேண்டும் என்று தாமரை கற்றுத்தரும் வாழ்க்கைப் பாடம் இது.பொது வாழ்க்கையில் புனிதம் நிறைந்தவர்களாக எப்படி இருக்க வேண்டும் என்பதையும் கற்றுத்தருகின்றது இந்த தாமரை.தண்ணீரில் தான் தாமரை வளரும். தன்வேரின் மூலம் தனக்கு தேவையான நீரை உறிஞ்சுவதைத் தவிர கூடுதலாக ஒரு துளி நீரைக்கூட எடுத்துக் கொள்ளாது. தண்ணீரின் மீது மிதக்கும். இலைகளின் மீது நீரைக் கொட்டினாலும் தன்னோடு வைத்துக் கொள்ளாது. முத்துக்களாய் உருமாற்றி கீழே உருண்டோடச் செய்யும்.

பொது வாழ்வில் இருப்பவர்கள் இப்படி தாமரை போல் இருக்க வேண்டும். கோடிக்கணக்கில் பணம் புரளும் இடத்தில் இருந்தாலும் தன் உழைப்பிற்குரிய சம்பளத்தை பெறுவதைத் தவிர ஒரு ரூபாய் கூட பொதுப்பணத்திலிருந்து எடுக்கக்கூடாது. பொதுவாழ்வின் புனிதம் இதுதான். தாமரையின் கிழங்கு, தண்டு, இலை, பூ என்று அனைத்தும் பயன்படுகிறது. பூவில், வண்டுகள் தேன்பருகி மகிழ்வுடன் செல்கின்றன. நறுமணம் வீசி, பலரின் மனதையும் இந்த பூ கவர்கிறது. இறைவனுக்கு சூட்டவும் மங்கையர் சூடவும் செய்கின்றனர். இப்படி பலருக்கு பயன்படுவதால் இவை தினமும் அழகாகவே மலர்கின்றன.வாழ்வதன் பொருள் புரிந்து பூக்களை நேசிப்போம்.
- பேராசிரியர் க.ராமச்சந்திரன்,
பாலையம்பட்டி.
99424 17103.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (5)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement