Advertisement

பொன்னின் நிறம், பிள்ளை மனம், வள்ளல் குணம்: இன்று எம்.ஜி.ஆர்., பிறந்த நாள்

'இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்... இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்...' என சினிமாவில் பாடியதை போல வாழ்ந்து காட்டியவர் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., சினிமா துறையிலும் சரி... அரசியல் துறையிலும் சரி தனி முத்திரை பதித்தவர்.

எம்.ஜி.ஆரின் தாயுள்ளம்:யார் எம்.ஜி.ஆரை சென்று சந்தித்தாலும் முதலில் சாப்பிட்டியா? எனதான் கேட்பார். பெற்ற தாய் மட்டுமே குழந்தை சாப்பிட்டதா? பசியுடன் இருக்குமே என துடிக்கும். அந்த தாயுள்ளம் தான் அவருக்கு. அதனால் தான் இன்றும் மக்கள் மனங்களில் அரசாட்சி செய்து கொண்டிருக்கிறார்.

பாராட்டிய பாங்கு:எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்த காலம். நடிகை ஸ்ரீதேவி உட்பட தமிழக நடிகர்களுக்கு மத்திய அரசு விருது வழங்கியது. தமிழக அரசு சார்பில் அவர்களுக்கு பாராட்டு விழா நடத்த எம்.ஜி.ஆர்., விரும்பினார். சென்னை மயிலாப்பூரில் திறந்தெவளியில் விழா நடந்தது. என்னையும், இயக்குனர் பாரதிராஜாவையும் அழைத்திருந்தார். விழாவில் ஆர்வக்கோளாறில் நான் பேசிய போது, ''தமிழக மக்களை மட்டுமின்றி நடிகர்களையும் மனதில் வைத்து அவர்களுக்கு தேவையானதை செய்து கொடுத்து இப்படி பாராட்டு விழா நடத்துகிறார். எனவே நாம் அவருக்கு செய்ய வேண்டியதை எந்த நேரத்தில் செய்ய வேண்டுமோ அந்த நேரத்தில் செய்ய வேண்டும்,'' என்றேன். உடனே மைக்கை மூடிய படி எம்.ஜி.ஆர்., ''நீ இப்படி பேசினால் எப்படி? கலைஞர்களை பாராட்டி பேச வேண்டும். என்னை பற்றி பேச வேண்டாம்,'' என்றார்.

ரசிகர்களை இழக்க கூடாது:விழா முடிந்த பிறகு என்னையும், பாரதிராஜாவையும் அழைத்த எம்.ஜி.ஆர்., அவருடைய பச்சை நிற 4777 காரில் ஏறும்படி கூறினார். காரில் சென்ற போது எங்களை வீட்டில் விடுவதாக கூறிய எம்.ஜி.ஆர்., ''நீ பேசியது எனக்கு ஓட்டு போட வேண்டும் என கூறுவது போல இருந்தது. அதனால் தான் பேச வேண்டாம் என்றேன். நீ இப்ப தான் சினிமாவில் முன்னேறி வருகிறாய். உனக்கு தி.மு.க., உட்பட எல்லா கட்சியினரும் ரசிகர்களாக இருப்பார்கள். நீ இப்படி பேசியதை கேட்டால், தி.மு.க.,காரர்கள் உன் படம் பார்ப்பதை நிறுத்தி விடுவர். எனக்காக நீ எந்தவொரு ரசிகரையும் இழந்து விடக்கூடாது. அதை என்னால் ஜீரணிக்க முடியாது. சினிமாவில் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது,'' என்றார். தனக்கு ஓட்டு கேட்பதன் மூலம் ரசிகர்களை இழந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் கூறியதையறிந்து அவரது காலை வணங்க தோன்றியது. தனக்காக வாய்ஸ் கொடுக்க வேண்டும் என அனைத்து கட்சி தலைவர்களும் கெஞ்சக்கூடிய நிலையுள்ளது. ஆனால் என்னால் ஆதாயம் தேட எம்.ஜி.ஆர்., நினைக்காததை அறியும் போது நெகிழ்ச்சியாக இருக்கிறது.

எம்.ஜி.ஆரும், சிவாஜியும்:'தாவணிகனவுகள்' படத்தை நடிகர் சிவாஜியை வைத்து இயக்கி நடித்தேன். சிவாஜி, முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரிடம் பிரிவியூ காட்ட விரும்பினேன். சிவாஜியிடம், மேனகா தியேட்டரில் மதியம் 3.30 மணிக்கு சினிமா பார்க்க வரச் சொன்னேன். எம்.ஜி.ஆர்., முதல்வர் என்பதால் பகலில் பிசியாக இருக்கலாம் என கருதி, மாலை 6.30 மணிக்கு நடிகர் சங்க தியேட்டருக்கு வர சொன்னேன். இருவரையும் தனித்தனியாக வரவேற்று அழைத்து செல்ல வசதியாக இருக்கும் என கருதினேன். ஆனால் திடீரென சிவாஜி, ''மதியம் 3.30 மணிக்கு வேறு ஒரு பணி இருப்பதாக கூறி, மாலை 6.30 மணிக்கு வருகிறேன்,'' என்றார். என் மனைவி பூர்ணிமாவிடம், ''படம் பார்க்க வரும் சிவாஜியை நீ வரவேற்று படம் பார்க்க வை... நான் இடைவெளி நேரத்தில் வந்து சேர்ந்து கொள்கிறேன். கேட்டால் லேப் பணி இருப்பதாக கூறி விடுவோம்,'' என ஏற்பாடு செய்தேன். நான் நடிகர் சங்கத்தில் எம்.ஜி.ஆரை வரவேற்று படம் பார்க்க வைத்தேன்.

பரந்த மனப்பான்மை:இடைவெளி நேரத்தின் போது, ''எம்.ஜி.ஆரிடம் லேப் பணிக்கு சென்று உடனடியாக திரும்பி வருகிறேன்,'' என்றேன். ஆனால் தன்னுடன் அமர்ந்து படத்தை பார் என எம்.ஜி.ஆர்., அனுப்ப மறுத்தார். அந்த படத்தில் சிவாஜி தான் ஹீரோ... இதனால் என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை. இதை கவனித்த எம்.ஜி.ஆர்., என்னை விசாரித்தார். வேறுவழியின்றி நடந்ததை தெரிவித்தேன். என்னை கண்டித்த அவர், ''சினிமாவில் ஹீரோ சிவாஜி. சீனியர் ஆர்ட்டிஸ்ட். நீ அவரை வரவேற்று படம் பார்க்க வைத்திருக்க வேண்டும். எனக்காக வந்திருக்க வேண்டாம். உடனடியாக நீ அவருடன் சேர்ந்து படத்தை பார். மீண்டும் இங்கு வர வேண்டாம். நான் மீதி படத்தை பார்த்து செல்கிறேன்,'' என அனுப்பினார். அங்கிருந்து மேனகா தியேட்டருக்கு சென்றேன். படத்தை பார்த்து கொண்டிருந்த சிவாஜி, ''நான் வந்திருக்கிறேன். அப்படி என்ன முக்கிய வேலை,'' என்றார். லேப் பணி என நான் கூறியதும் சிவாஜி, ''எனக்கு எல்லாம் தெரியும். எம்.ஜி.ஆரை படம் பார்க்க அழைத்து விட்டு பாதியில் வந்தால் எப்படி? உடனடியாக நீ சென்று முதல்வரை முழு படம் பார்க்க வைத்து அனுப்பு. ஆயிரம் தான் இருந்தாலும் அவர் இந்த மாநிலத்தின் முதல்வர்,'' என என்னை அனுப்ப முயன்றார். ஆனால் என்னை அங்கு வரக்கூடாது என எம்.ஜி.ஆர்., கண்டிப்பாக கூறியதை தெரிவித்தேன். ஆனாலும் அவர் கேட்காமல் என்னை அங்கிருந்து அனுப்பினார். அப்போது தான் இருவருக்கும் இருந்த பாசம், புரிதல், பரந்த மனப்பான்மையை உணர்ந்தேன்.

வேறு என்ன வேண்டும்:அப்படிப்பட்ட மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவரே (எம்.ஜி.ஆர்.,) என்னை தன் கலைவாரிசாக அறிவித்தது உண்மையில் வரபிரசாதம். வாழ்க்கையில் இதை விட வேறு எனக்கு என்ன வேண்டும்? இதையெல்லாம் முன்கூட்டி நினைத்ததால் என்னவோ என் அம்மா எனக்கு பாக்யராஜ் என பெயர் வைத்திருக்கிறார்.

திருமண பரிசு:என் திருமண வரவேற்புக்கு வரும்படி தெரிவித்திருந்தேன். அங்கு வருவதற்கு முன்பாகவே என் வீட்டிற்கு சென்றிருக்கிறார். என் உதவியாளர் பாபுவிடம் இரு பெரிய குத்து விளக்குகளை கொடுத்து, 'தினமும் விளக்கு ஏற்ற சொல்,' என்று கூறிவிட்டு திருமண வரவேற்பிற்கு வந்தார். உனக்கு பாதுகாப்புக்கு 16 வயது சிறுவனை வைத்திருக்கிறாயே என்றார். எனக்கு ஒன்றும் அப்போது புரியவில்லை. வீட்டிற்கு சென்ற போது தான் எம்.ஜி. ஆரின் கேள்விக்கு அர்த்தம் தெரிந்தது.

- கே.பாக்யராஜ்,
இயக்குனர்,
நடிகர். 044 - 4308 1207.
bhagyaweekgmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (19)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement