Advertisement

குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்

அண்ணாச்சி வேட்டிகட்டும் ஆம்பளையா நீங்க - யாராச்சும் ரோசமிருந்தா மாட்டுப் பக்கம் வாங்க”... பழனி திரைப்படத்தில் கவியரசு கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள் இவை.உழுதுண்டு வாழ்கின்ற உழவர் பெருமக்களுக்குப் பின்னேதான் இந்தப் பாருண்டு - என்பது நம் மூத்தோர் சொல்.“தைப் பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்”என்னும் பாடலுக்கு ஏற்ப வேளாண்மைக் கலாசாரத்தின் உற்றதுணையே மாடுகள்தான்.வேட்டைக்காரச் சமுதாயத்திலிருந்த மனிதகுலம் கால்நடைகளை மேய்க்கத் தொடங்கி வேளாண்மைச் சமுதாயமாக மாறிய காலந்தொட்டு மனிதரோடு உற்ற தோழனாய் விளங்குபவை மாடுகள்தான். பசுக்களின் பெருமையை வேதகாலம் தொடங்கி இன்றுவரை நாம் அறிந்திருந்தாலும் ஆண்டாள்நாச்சியார் தன் 'திருப்பாவை'யில்...“வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்” எனச் செழுமை வாய்ந்த பசுக்களின் அருமையை உணர்த்துகிறார்.கிருஷ்ணாவதாரத்தில் கண்ணபெருமான் முல்லை நிலத்தில் பசுக்களைத் தன்னுடைய புல்லாங்குழல் இசையால் கவர்ந்த காட்சிகளைப் புராணக் கதைகளில் காண்கிறோம். இப்பசுக்கள் பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் எனும் ஐந்து அற்புதங்களைத் தருகின்றன. நன்கு பால் தரும் ஒரு பசு குடும்பத்தில் ஒரு நபராக (ரேஷன் கார்டில் கூட சேர்க்கலாம்) இன்றும் காமதேனுவாய்ப் போற்றப்படுகிறது.நன்றி செலுத்தும் தினம் இப்பசுக்களுக்கு நன்றி செலுத்தும் தினம் மாட்டுப்பொங்கல். வீட்டிலே பொங்கல் வைக்கும்போது இப்பசுக்களும் உடன்நின்று பெருமை சேர்க்கும்.
இரண்டாயிரம் ஆண்டுகளாக உழவு மாடுகளாக, பயணத்திற்கேற்ற வண்டிமாடுகளாக, கிணற்றிலிருந்து நீர் இறைக்கும் கமலை மாடுகளாக, உணவுக்கான எண்ணெய்களை தயாரிக்க உதவும் செக்கு மாடுகளாக (மதுரையில் செல்லத்தம்மன் கோவில் செக்கு எண்ணெய் இன்றைக்கும் பிரபலம்) உழைக்கும் மனிதரின் பாதி அங்கமாக இருக்கும் மாடுகளைப் போற்றுகின்ற தினம் இத்தினம்.இதன் பெருமையை உணர்ந்துதான், ஆலவாய் அண்ணலாகிய சிவபெருமான் ரிஷபத்தை வாகனமாக ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும். திருஞானசம்பந்தரும் சிவபெருமானைப் போற்றும்போது, “தோடுடைய செவியன் விடையேறி ஒரு துாவெண் மதி சூடி…” எனக் குறிப்பிடுகின்றார். 'விடை' என்பது ரிஷபம் காளைமாடு.
சங்க இலக்கியத்தில் சங்க காலம் 'வீரயுகக் காலம்' ஆதலால் அக்காலத்தில் வீரர்களுக்கே சமுதாயத்தில் முன்னுரிமை இருந்தது. திருமணம்கூட இவ்வீரத்தின் அடிப்படையிலேயே நிகழ்ந்தது. சான்றாக வில்லை முறித்ததால் இராமனுக்கு சீதை, வில்லை நாணேற்றி சுழலும் மச்சத்தை (மீன்) அடித்ததால் அர்ச்சுனனுக்கு பாஞ்சாலி. இவைபோன்று முரட்டுக் காளையை அடக்குகின்ற வீரர்களுக்கே கன்னிப்பெண்கள் மாலையிட்டார்கள். கொல்லும் தன்மையுடைய முரட்டுக்காளையின் கொம்புக்கு அஞ்சுகின்ற இளைஞனை மறுபிறவியிலும் கணவனாக ஏற்கமாட்டாள் வீரக்கன்னிப்பெண் என்பதை,“கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்” என்று பதிவுசெய்கிறது சங்க இலக்கிய நுாலான கலித்தொகை.
திரைப்படங்களில்கூட எம்.ஜி.ஆர்.(தாய்க்குப் பின் தாரம்) தொடங்கி, கமல்ஹாசன் (விருமாண்டி) வரை மாடு பிடித்து அடக்கிய கதைகளை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். மாட்டைப் பாட்டாலே அடக்கிய ராமராஜன்களும் திரையுலகில் உண்டு. எருதுகட்டு, மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு எனத் தமிழகத்தின் தெற்குப்பகுதி மக்களின் வீரத்திற்குச் சான்று இப்பொங்கல் திருநாள்தான்.மண்ணும், மாடுகளும், மனித உறவும், வீரமும் காதலும் ஒருங்கே இணைந்த இம்மாட்டுப் பொங்கல் திருநாள் ஜாதி, மத பேதமற்ற சமுதாயப் பொங்கல் திருநாளாகும். அறுவடைத் திருநாளாகத் தொடங்கி, உழவடை மாடுகளைப் போற்றி உறவுகளை இணைக்கின்றஇத்தைத்திருநாளை இனிக்கும்பொங்கலோடு, சுவைக்கும் கரும்போடு, அணைக்கும் உறவுகளோடு கொண்டாடி மகிழ்வோம்.
இத்தனைக்கும் நடுவில் பொங்கல் வாழ்த்து அட்டைகளும், புதுப்புது கவிதைகளும் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து கொண்டிருப்பது சற்றே கவலையளித்தாலும், பொங்கலும், மாட்டுப்பொங்கலும் நமது பண்பாட்டின் அடையாளங்கள் தானே.- பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்,பேச்சாளர், எழுத்தாளர், நடிகர்.humour_sambandanyahoo.co.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement