Advertisement

இயற்கையை பேணுவோம்; இனிய நலவாழ்வு வாழ்வோம்

நாடா கொன்றோ; காடா கொன்றோ;
அவலா கொன்றோ; மிசையா கொன்றோ;
எவ்வழி நல்லவர்; ஆடவர்;
அவ்வழி நல்லை; வாழிய நிலனே!
என்பது ஔவையின் பாடல்.
ஒரு நிலப்பரப்பு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். காடாக இருக்கலாம்! மலையாக இருக்கலாம்! பள்ளமாக இருக்கலாம்! மேடாக இருக்கலாம். அந்த மண்ணில் செயலாற்றுகின்ற செயல்வீரர்கள் இருந்தால் நாடு வளமாகும்.மண்ணை வளமாக்கி மனிதர்களை நலமாக்கச் செயலாற்றுகின்ற செயல்வீரர்கள் தான் உழவர் பெருமக்கள்.
"கைவருந்தி உழைப்பவர்; தெய்வம்”
"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம். வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்,'' என்றார் பாரதி. உழைப்போர்; உண்டு களித்திருக்க முடியாத நிலை உள்ளது. இனிக்கும் வெல்லத்தில் சிறிய உவர்ப்பு. உழவனின் வியர்வைத் துளியும், கண்ணீர்த்துளியும் கலந்ததால் தானோ? ரத்தத்தை வியர்வையாக்கி உழைத்த விவசாயிகள் தங்களின் உற்பத்திப் பொருள்களுக்குத் தாங்களே விலை நிர்ணயிக்கும் உரிமை பெறும் நாளே விவசாயிகள் வாழ்வின் பொங்கல் திருநாள்!
இயற்கை விவசாயம்
வேளாண்மைப் பொருளாதாரம் எந்தத் திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது? ரசாயன உரங்களையும், பூச்சிக்கொல்லி மருந்துகளையும் பயன்படுத்துவதைத் தவிர்த்த இயற்கை உர விவசாயமே நல்வாழ்வுக்கு ஏற்றது.
இயற்கை சார்ந்த விவசாயத்தை நாம் பழந்தமிழகத்தின் வாழ்வாக காண முடிகிறது. பாரி ஆண்ட பறம்பு மலையில் நால்வகைச் செல்வம் உண்டு என்பர்.
மூங்கில்நெல், பலா, தேன், வள்ளிக்கிழங்கு ஆகியன மண்ணை உழாமல் கிடைத்த செல்வங்கள்.
இயற்கைச் சார்ந்த விவசாயத்தைச் செயல்படுத்தி வரும் அமெரிக்காவின் ரோடெல் நிறுவனத்திடம் "இதற்கு முன்னோடி யார்?” என்று கேட்ட பொழுது, "இந்தியா தான் எங்கள் இயற்கை விவசாயத்தின் முன்னோடி. இயற்கை விவசாயத்தை எங்கள் மூதாதையர் ஆல்பர்ட் ஓவர்டு இந்தியாவில் வெற்றிகரமாக செயல்படுத்தினார். உழவாண்மை ஆவணம் என்ற நூலைத் தந்தார்'' என்றார்.நச்சுப்படாத விவசாயமும், நலிவு இல்லாத விவசாய வாழ்வும் இன்று தேவை. இயற்கை வேளாண்மையில் நில வளம் உயர்ந்து கொண்டே போகிறது. வேலையும், பணச்செலவும் குறைகின்றது. இது எப்படி சாத்தியம் என கேள்வி எழலாம். இயற்கைக்கே திருப்பி அளிப்போம் என்பது தான் அந்த விதி.இதை மசானோபு புகோக்கா என்ற ஜப்பான் விவசாய ஆராய்ச்சியாளர் நிரூபித்திருக்கின்றார். காடுகளில் மரக்கூட்டங்களுக்கு யாரும் ரசாயன உரம் போடவில்லை! பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கவில்லை! நிலத்தை உழாமல் முதல்முறையாக நெற்பயிர் அறுவடை செய்தபொழுது தாம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்கின்றார்.விளைச்சலுக்கு குறைவில்லை நிலத்தில் ரசாயன உரங்களும் பூச்சிகொல்லி நஞ்சுகளும் பயன்படுத்தாததால் இப்போது கிடைக்கும் விளைச்சலில் பத்தில் ஒரு பங்கு குறையலாம். ஆனால் இயற்கையின் சக்தி நமது சக்திக்கு அப்பாற்பட்டது. முதல்கட்ட இழப்புக்குப் பிறகு விளைச்சல் அதிகமாகத் துவங்கி விரைவில் முதலில் எடுத்த விளைச்சலை மிஞ்சி விடும். செயற்கை உரங்களும் பூச்சிகொல்லி மருந்துகளும், இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்ற விவசாயம் இயற்கைத் தாயின் மடியை சேதப்படுத்தக் கூடும் என ஆஸ்திரேலியப் பேராசிரியர் பில்மொல்லிசன் குறிப்பிடுகிறார்.
வறட்சியை தாங்கும் கன்றுகள் ஆதீனத்தின் மேற்பார்வையில்
சிங்கம்புணரி மேலப்பட்டி தென்னந்தோப்பில் 3 ஏக்கரில் குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையம், காசர்கோடு தென்னை ஆராய்ச்சி நிலையம்இணைந்து 17 நாடுகளைச் சார்ந்த வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய 250 நெட்டை ரகக் கன்றுகளை நடவு செய்துள்ளார்கள். வறட்சியைத் தாங்கக்கூடிய 10 மரங்களை அடையாளம் கண்டு அவற்றின் கன்றுகளையும் நடவு செய்துள்ளனர்.
குன்றக்குடித் திருமடத்தில் இயற்கை உரம் பயன்படுத்தி ஒரு காய்கறிப் பண்ணை அமைய, குன்றக்குடி வேளாண்மை அறிவியல் நிலையம் தொழில்நுட்ப ஆலோசனை வழங்கியது. குறிப்பாக திருமடத்தில் அமைந்த காய்கறிப் பண்ணையில் மலைச் சரிவுகளில் பயிரிடும் பீட்ரூட், நூல்கல் போன்றவற்றை வறண்ட தட்ப வெப்ப நிலை உள்ள நமது பகுதிகளிலும் பயிர் செய்து அபார மகசூலைக் காட்டினார் பண்ணை விவசாயத் தொழிலாளி ராமசாமி.
பருவநிலை மாற்றங்கள்
இப்போது பருவநிலை மாற்றங்கள், தட்பவெப்ப மாற்றங்கள், பருவமழை பொய்ப்பு முதலிய காரணிகளால் விவசாய வாழ்வு ஏற்றத்தாழ்வுகளைச் சந்தித்து வருகின்றது. கோடை காலத்தின் வறட்சியால் மழைப்பொழிவு குறைந்து போனது. கால்நடைகளுக்கு குடிக்க கூட தண்ணீர் இல்லை. பல்லாயிரக் கணக்கான தென்னை மரங்கள் மடிந்து போயின.
ஆன்மிகத் தளம் விருட்சங்களைக் கடவுளாகப் போற்றியது.மதுரை கடம்பவனக்காடுஇன்று கடம்பவன மரங்கள் அழிந்த நிலையில் மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் தங்கப் பட்டையிட்டு பட்டுப்போன கடம்ப மரம் காட்சிப் பொருளாகக் காட்சித் தருகிறது. பிள்ளையார்பட்டி மருதவனம்குன்றக்குடி அரசவனம்என ஊர்தோறும் தலவிருட்சங்கள் நிறைந்து வளமும், செழுமையும் இருந்தன. தம் ஆட்சிப்பரப்பில் செடி, கொடிகளுக்குக்கூட வாட்டம் நேர்ந்து விடக்கூடாது என்பதற்காக வாடிய முல்லைக் கொடிக்குத் தன் தேரைத் தந்தான் பாரிவள்ளல். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினார் வள்ளல் பெருமான்.
நெல்லும் புல்லும் வாடிய போது வாடிய மனிதகுலத்தின் போக்கு இன்று திசைமாறிவிட்டது.
இயற்கை அழகு!
அதனை ஆராதனை செய்வோம்!
இயற்கை அறிவு!
அதனிடம் கற்றுக் கொள்வோம்!
இயற்கை அன்பு!
அதன் உறவை உணர்வோம்!
இயற்கை தாய்மை!
அதன் சேய்கள் ஆவோம்!
இயற்கை இறைமை!
அதனைப் போற்றி வழிபடுவோம்!
இயற்கையைப் பேணிப்
பாதுகாத்து நலவாழ்வு வாழ்வோம்.
வறுமை வாழ்வு மறைய, நல வாழ்வு செழிக்க, இயற்கை சார்ந்த வேளாண்மை வாழ்வு செழிக்கட்டும்!
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
-குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்,குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம்,94425 31581. டுதணஞீணூச்டுதஞீடிண்ணூடிஞூடிதிஞுtஞுட்ணீடூஞுண்ஞ்ட்ச்டிடூ.ஞிணிட்


வாசகர்கள் பார்வை

மழைநீரின் புனிதம்!

என் பார்வையில் வெளியான 'தாகம் தீர வழி என்ன' கட்டுரை படித்தேன். மழை நீரை முறையாக நீர்நிலைகளில் கொண்டு சேர்க்கவும், கடலில் கலக்கும் நீரை தேக்கி வைக்கவும் வழியில்லை. முன்னோர்கள் மழை நீரை சேமித்து வைக்க ஏற்படுத்திய வழி முறைகள் இன்று பயன்படாமல் போய்விட்டது. இந்நிலையில் நாம் பணம் கொடுத்து தண்ணீரை வாங்குவதை பெருமையாக நினைக்கிறோம். நீர் நிலைகள் புனிதத்தன்மை மிக்கவை. அதை கடவுளாக கருதி மதிக்க வேண்டும். - வி.எஸ்.ராமு, செம்பட்டி.

பாதுகாப்பு முக்கியம்

என் பார்வையில் போலீஸ் உதவி கமிஷனர் மணிவண்ணனின் விபத்தில்லா தமிழகத்தை காண்போம் கட்டுரை படித்து வாகன விபத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்ற செய்தி அதிர்ச்சியாக இருந்தது. வாகனங்கள் அதிகரித்துள்ளன. ஆனால் வாகன ஓட்டுனர் உரிமம் மற்றும் முறையாக வாகனம் ஓட்டுகிறார்களா என்றால் அது தான் இல்லை. தினமலர் நாளிதழ் நம் சாலைகளின் அவலத்தை அவ்வப்போது படம் பிடித்து காட்டி வருகிறது. எது எப்படியோ நமது பாதுகாப்பு தான் முக்கியம் என நினைத்து சாலைகளில் போட்டியின்றி ஹீரோயிசம் காட்டாமல் விதிகளைக் கடைபிடித்து விபத்தில்லா தமிழகம் உருவாக்குவோம் என உறுதிமொழி எடுப்போம்.- மு.சுலைகாபானு, ஆசிரியை, மதுரை.

சிந்தனை சிதறக் கூடாது

வாகன ஓட்டிகள் என் பார்வையில் வந்த 'விபத்தில்லா தமிழகம் காண்போம்' கட்டுரையை படித்து சிந்திக்க வேண்டும். அதே நேரத்தில் சிந்தனையை சிதறவிடாமல் வாகனம் ஓட்ட வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் போலீஸ்காரர்கள் எச்சரித்து அனுப்பியும் என்ன பயன்? வாகன ஓட்டிகளின் அலட்சியத்தால் விபத்துக்கள் தொடர் கதையாகி வருகின்றன. சாலை விதிகளை பள்ளியில் கற்றுத்தர வேண்டும். -எம்.பி.சத்யஷீலா, மதுரை.

காலத்திற்கு ஏற்ற கட்டுரை

அண்ணன் எப்போ போவான் திண்ணை எப்போ காலியாகும் என உடன் பணிபுரிபவர்களுக்கு தொல்லை செய்பவர்கள் உலாவும் இன்றைய காலத்திற்கு ஏற்ற கட்டுரையாக என் பார்வையில் வந்தது 'நல்லது நடு வழி பொல்லாதது போகிற வழி' கட்டுரை. நீங்கள் தெய்வமாக வேண்டாம். மனித நேயம் மறைந்து வரும் நிலையில் மனித நேயம் உள்ள மனிதர்களாக மாறலாமே என் கட்டுரையை முடித்திருப்பது பொருத்தமாக இருந்தது. மனிதர்களின் குணநலன்களை அலசி ஆராய்ந்து எழுதியிருக்கிறார் முனைவர் லட்சுமி. வாழ்வில் ஒவ்வொரு மனிதனும் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகளை தந்த என் பார்வைக்கு நன்றி.- எஸ். மகாராஜன், மதுரை.


மாற்றம் தந்த கட்டுரை

என் பார்வை 'பொறுத்தார் பூமி ஆள்வர்' என்ற பழ மொழியின் கருத்தினை தாங்கிய 'நல்லது நாடு வழி பொல்லாதது போகிற வழி' என்ற தலைப்பில் சொல்லப்பட்ட ஒவ்வொரு வரியும் இன்று மக்கள் எப்படி நடந்து இன்னல்களுக்கு ஆளாகிறார்கள் என்ற எடுத்து சொன்னது அருமை. எதற்கெடுத்தாலும் கோபம், பொறாமை, என்ற எண்ணத்துடன் வாழ்ந்து தானும் மகிழ்ச்சியினை இழந்து மற்றவர்களையும் அதனை தாக்க செய்வதை மாற்றிக் கொள்ள உதவும் கட்டுரை.- மு.உஷா,மதுரை.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement