Advertisement

வாழ்க்கை காரை சர்வீஸ் செய்வோம் - வரலொட்டி ரெங்கசாமி

''உன் கார்ல முன்னால ஸ்பீடா மீட்டர் இருக்குல்ல? அது 10,000 கி.மீ., ஓடியிருக்குன்னு காமிச்சா... கார நிறுத்திட்டு டான்ஸ் ஆடுவியா... விருந்து குடுப்பியா... ராத்திரியெல்லாம் பார்ட்டில இருப்பியா என்ன,'' திடீரென்று நண்பன் ஏன் அப்படிக் கேட்கிறான்? ''அதே மாதிரித்தான்யா புது வருஷமும். 365 நாள் முடிஞ்சா வருஷம் தன்னால மாறுது. அதுல என்னய்யா கொண்டாட்டம்? செய்ய வேண்டிய வேலை ஆயிரம் இருக்கு. அதவிட்டுட்டு புது வருஷம் பிறக்குன்னு ராத்திரி யெல்லாம் ஓட்டல்ல ஆட்டம் போட்டுக்கிட்டு இருக்காங்க,'' நண்பனின் வார்த்தைகளை என்னால் முழுமையாக ஏற்க முடியவில்லை. பெண்கள் உப்புமா கிண்டுவதைப் பார்த்திருக்கிறீர்களா. அடுப்பில் சட்டியில் உப்புமாவிற்கான மூலப் பொருட்கள் இருக்கும். அடுப்பு எரிந்து கொண்டிருக்கும் போது உப்புமாவை கிளறவில்லை என்றால் அது பாத்திரத்தோடு சேர்ந்து ஒட்டிக் கொள்ளும். எனவே பெண்கள் உப்புமாவை லேசாகக் கிண்டிக்கொண்டேயிருப்பார்கள்.

உப்புமாவை கிண்டுவோம்:காலம் என்ற அடுப்பில் நம் வாழ்க்கை என்ற உப்புமா வெந்து கொண்டிருக்கிறது. அதை அவ்வப்போது கிண்டிக்கொண்டிருக்க வேண்டும். மிகக் குறைந்த பட்சமாக வருடத்திற்கு ஒரு முறையாவது அதைக் கிண்ட வேண்டாமா? அதை புத்தாண்டு தினத்தன்று புது மகிழ்ச்சியுடன் செய்தால் என்னவாம்? புதிய கார் 10,000 கி.மீ., ஓடினால் யாரும் அதைக் கொண்டாடுவதில்லை. ஆனால் 10,000 கி.மீ., ஓடிய காரை சர்வீசுக்கு விடுகின்றனர். கார் கம்பெனியினர் காரைப் புரட்டிப் போட்டு பார்த்து ஆயில் மாற்றி, வேறு பாகங்கள் ஏதாவது சேதமாயிருக்கிறதா என பார்த்து கொடுக்கின்றனர். ஒன்றுமே செய்யாமல் வருடம் முழுவதும் இயந்திரத்தனமாக வாழ்க்கைக் காரை ஓட்டிக் கொண்டிருந்தால்... கிண்டாமல் அடிபிடித்த உப்புமாவை தலையெழுத்தே என சாப்பிட்டால்... வெந்ததைத் தின்று விதிவந்தால் சாகும் கோடானு கோடி மனித பூச்சிகளில் நாமும் ஒன்றாகி விடுவோம்.

திட்டமிடுவோம்:ஆண்டிற்கு ஒரு முறை நம் வாழ்க்கை உப்புமாவை கிண்டுவோம். வாழ்க்கை என்ற காரை நாமே சர்வீஸ் செய்வோம். நடந்ததை சீர்தூக்கி இனி நடக்க வேண்டியதை திட்டமிடுவோம். அதற்கு சில தீர்மானங்கள் எடுப்போம்... முதல் புத்தாண்டு தீர்மானம்-ஆண்டு முழுவதும் என்னால் செயல்படுத்தக்கூடிய தீர்மானங்களை மட்டும் நான் மேற்கொள்வேன். அது முடியாது என்று தோன்றுகிறதா? இனிமேல் எந்த காலத்திலும் புத்தாண்டு தீர்மானங்களே எடுப்பதில்லை என ஒரு தீர்மானத்தை எடுங்கள். நிம்மதியாகவாவது இருக்கலாம். நீங்கள் வாழப் போவது உங்கள் வாழ்க்கை. கிண்டப்போவது உங்கள் உப்புமா. ஓட்டப் போவது உங்கள் கார். என்றாலும் சில தீர்மானங்கள் எல்லோருக்கும் பொதுவாக...

இந்தாண்டிலாவது வாரத்திற்கு ஐம்பது பக்கங்கள் தரமான இலக்கியம் படிப்பேன். 'டிவி' பார்க்கும் நேரத்தை 20 சதவீதமாக குறைப்பேன். மாதத்திற்கு ஒரு நாள் என் அப்பா அல்லது அம்மா அல்லது இருவரையும் அழைத்துக் கொண்டு ஓட்டல், ஷாப்பிங் என சுற்றுவேன். நட்சத்திர ஓட்டல்களில் அவர்கள் கேட்கும் காசையும் கொடுத்து அதற்கு மேல் ஐம்பது, நூறு என டிப்சும் கொடுத்துச் சாப்பிடும் நான், இனி மேல் காய்கறி விற்பவர்களிடமும் பூ விற்பவர்களிடமும் சத்தியமாக பேரம் செய்ய மாட்டேன்.

சொந்த காசில் சூனியம் ஏன்:புகைப்பிடிப்பதையும் மதுவையும் துறப்பதாக புத்தாண்டு தீர்மானம் போடுபவர்களில் முக்கால்வாசிப் பேர் அந்த தீர்மானத்தை தான் துறக்கிறார்கள். குறைந்த விலையில் நீர் மோர், இளநீர் கிடைக்கும் போது உடலுக்கு ஊறு விளைவிக்கும் பாகனங்களை வாங்கிக் குடித்து நாம் ஏன் சொந்தக் காசில் சூனியம் வைத்து கொள்ள வேண்டும். மாதம் 500 ரூபாய் வரை நாளிதழ், புத்தகம் வாங்க செலவழிப்பேன் என தீர்மானம் செய்யுங்கள். ரோட்டில் செல்லும் போது யாருடனும் சண்டை போட மாட்டேன். தவறு மற்றவர்களிடமே இருந்தாலும் அதை சிரித்தபடி சகித்து கொள்வேன். அவருடன் சண்டை போட்டு என் மன நிம்மதியையும் உடல் நலத்தையும் கெடுத்து கொள்ள மாட்டேன். இத்தனை ஆண்டுகளாக பணம் சம்பாதிக்கவும் பதவி உயர்வு பெறவும் மனதுக்கு பிடிக்காத வேலைகள் பலவற்றை செய்தாகி விட்டது. இந்தாண்டில் குறைந்த பட்சம் வாரம் இரு நாட்களாவது என் மனதுக்கு பிடித்த வேலையை செய்வேன் என்று தீர்மானியுங்கள்.

நட்பு இல்லாதவருடன் பாராட்டு:மருத்துவமனைக்கு சென்று நட்போ, உறவோ இல்லாதவருக்கு பழங்கள் வாங்கி கொடுத்து அவருடன் சில நிமிடங்கள் இதமாக பேசி வருவேன். ஒரு ஏழை பெண்ணின் கல்விச் செலவை ஏற்பேன். அதற்காக என் சுகங்களில் எதையாவது தியாகம் செய்ய தயங்க மாட்டேன் என தீர்மானம் செய்யுங்கள். என் பிறந்த நாளை ஒரு முதியோர் இல்லத்தில் கொண்டாடுவேன். இந்தாண்டு நான்கு முறையாவது ரத்த தானம் செய்வேன். இவை அனைத்தையும் விட மிக முக்கிய புத்தாண்டு தீர்மானம் இருக்கிறது. அதை தெரிந்து கொள்ளும் முன் ஒரு சிறிய பீடிகை. பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தேன். அவர்கள் ஊருக்கு வெளியில் பிரமாண்டமான தொழிற்சாலை கட்டிக் கொண்டிருந்தனர். கட்டுமான பணிகள் முடிய ஓராண்டு ஆகும் என கணக்கிட்டிருந்தார்கள். நிர்வாக இயக்குனர், பொறியாளரிடம் ஒரே ஒரு நிபந்தனை விதித்தார். ஒவ்வொரு சனிக்கிழமையும் வளர்ந்து வரும் கட்டடத்தை பத்து வெவ்வேறு இடங்களில் இருந்து புகைப்படம் எடுப்பேன். முந்தைய வாரத்திற்கும் இந்த வாரத்திற்கும் ஏதாவது இரு படங்களிலாவது வெளிப்படையான மாற்றம் தெரிய வேண்டும். இல்லாவிட்டால்...


ஒவ்வொரு வாரமும் அந்தப்பொறியாளர் பட்ட பாடு இருக்கிறதே! அந்தப் பத்து இடங்களிலும் நின்று பார்ப்பார். ஏதாவது ஒரு மாற்றம் செய்ய சொல்வார். இதனால் கட்டட பணிகள் குறித்த காலத்தில் இனிதே நிறைவு பெற்றன. ஒவ்வொரு புத்தாண்டிலும் பத்து கோணங்களில் இருந்து உங்கள் வாழ்க்கையை பாருங்கள். ஏதாவது ஒரு கோணத்தில் ஏதாவது ஒரு மாற்றமோ முன்னேற்றமோ தெரியவில்லை என்றால் ஏதோ தவறு நடந்து கொண்டிருக்கிறது என்பதை உணருங்கள்.

ஏதாவது ஒன்றை கற்போம்:புதிதாக ஏதாவது ஒன்றை கற்க வேண்டும் என தீர்மானியுங்கள். அது ஒரு புது மொழியாக, ஒரு விளையாட்டாக இருக்கலாம். ஒரு படிப்பாக, பழந்தமிழ் இலக்கியமாக இருக்கலாம். தோட்டக்கலையாக இருக்கலாம். நாடக நடிப்பாக, நாவல் எழுதுவதாக இருக்கலாம். இல்லை நடனமாக இருக்கலாம். இதை எல்லாம் செய்து விட்டால் நீங்கள் பாரதியார் கூறியதை போல தின்று விளையாடி இன்புற்று வாழலாம். எப்பொழுதும் சென்றதையே சிந்தை செய்து கொன்றொழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர் சென்றதனைக் குறித்தல் வேண்டா! இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில் எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர் - (பாரதியார்).

- வரலொட்டி ரெங்கசாமி, எழுத்தாளர், மதுரை. 94430 60431 varalottigmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (5)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement