Advertisement

வெற்றி மீது வெற்றி வந்து உன்னைச் சேரும் - ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்

மாணவ, மாணவிகளே, இளைய சமுதாயமே, நண்பர்களே, பொதுமக்களே, 2014 நிறைவு பெற்று 2015ல் அடியெடுத்து வைக்கிறோம் இன்று. அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.'2020க்குள் வளர்ந்த இந்தியா' என்ற லட்சிய கனவு இன்னும் ஐந்து ஆண்டுகளில் நனவாக விரும்புகிறோம். வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் முயற்சியில் நாடு செல்கிறது. அதை நிறைவேற்ற பல்வேறு சமூக, பொருளாதார தடைகளை கடந்து லட்சியத்தை வென்றெடுக்க வேண்டும். அதற்கு நீங்கள் உங்களது லட்சியத்தால், அறிவால், நேர்மை திறத்தால், விவேகத்தால், பண்பால், அன்பால் கருணை உள்ளத்தால், அடுத்தவரை மதிக்கும் பண்பால் உறுதுணையாக இருக்க வேண்டும். வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று உறுதி கொள்ளவேண்டும்.

லட்சியம் தேவை:ஒவ்வொருவருக்கும் வாழ்வில் லட்சியம் இருக்க வேண்டும். எனக்கு பிடித்த கருத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நான் விளக்காக இருப்பேன், நான் படகாக இருப்பேன், நான் ஏணியாக இருப்பேன், அடுத்தவரின் துன்பத்தை துடைப்பேன், மனநிறைவுடன் வாழ்வேன்.

வாழ்வில் வெற்றி பெற 4 விஷயங்கள் அடிப்படையானவை.


1. வாழ்க்கையில் மிகப்பெரிய லட்சியம் வேண்டும். சிறு லட்சியம் குற்றமாகும்.


2. அறிவை தேடி தேடிப்பெற வேண்டும்.


3. லட்சியத்தை அடைய கடுமையாக உழைக்க வேண்டும் .


4. விடா முயற்சி வேண்டும் . தோல்வி மனப்பான்மைக்கு தோல்வி கொடுத்து வெற்றி பெற வேண்டும்.

இந்த நான்கு குணங்களும் இருந்தால் உங்கள் கனவு நனவாகும். பூமியில் பிறக்கும் எந்தக் குழந்தையும் திறமையாளனாக நல்ல மனிதனாக வர வேண்டும் என்பது பெற்றோர் கனவு. அந்தக் கனவு நனவாக பெற்றோர்களும், ஆசிரியர்களும், குழந்தைக்கு அறிவூட்டி, வளர்க்க கூடிய சூழல் தான் நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் மாற்றுகிறது.

வாழ்வு பாடம்:என் வாழ்வில் கண்ட அனுபவங்கள், என் ஆசிரியர்கள், அவர்களிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட அரிய எண்ணங்கள், சில அருமையான புத்தகங்கள் என் வாழ்வின் சிந்தனையை மாற்றியது. எல்லாவற்றையும் விட என் வாழ்வில் எனக்கு கிடைத்த ஒரு புனிதமான கருத்து என்னவென்றால், ''நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை. உன்னால் வெற்றியடைய முடியும்''. இது என் வாழ்வில் கற்ற பாடம். 2012ல் கேரளா பரவூரில் சாஸ்ராயன் அறிவியல் பரப்புரை திட்டத்தை துவக்கினேன். திட்டத்தின் நோக்கம் பல்வேறு பள்ளியில் பயிலும் 2000 மாணவர்களுக்கு தகுதி திறன் தேர்வு பயிற்சி கொடுத்து அவர்களை இன்ஜினியர், டாக்டர், சயின்டிஸ்ட், மேனேஜர், சிவில் சர்வீஸ் அதிகாரிகளாக உருவாக்கும் முயற்சியாகும். அங்கு நான் பேசி முடித்தவுடன் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள், கேள்வி கேட்க கையை உயர்த்தினர். 12 மாணவர்களை தேர்ந்தெடுத்து, கேள்விகளுக்கு பதிலளித்தேன். அதில் இரு கேள்விகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 10ம் வகுப்பு மாணவி, ''நான் மேல் வகுப்பில் சைக்காலஜி படிக்க ஆர்வமாக இருக்கிறேன். பெற்றோர் இன்ஜினியரிங் கோர்ஸ் தான் படிக்க வேண்டும் என்கின்றனர். நான் என்ன செய்ய வேண்டும்,'' என்றாள். மாணவியிடம் நான், ''அப்பா, அம்மாவிடம் அன்பு, பாசம் என்ற உரிமையை பயன்படுத்தி அவர்களே உன் ஆசையை பூர்த்தி செய்தால், அந்த தேர்ந்தெடுத்த துறையில் சாதனையை செய்வேன் என உறுதிமொழி கொடு. உன் பெற்றோர் உன்னை உன் ஆசைப்படி நீ தேர்ந்தெடுத்த துறையில் படிக்க வைப்பர்,'' என அவள் லட்சியம் நிறைவேற வாழ்த்தினேன். அப்போது அந்த மாணவியின் தாய், தந்தை அந்த கூட்டத்தில் இருந்து எழும்பி, 'எங்கள் மகளின் விருப்பப்படி சைக்காலிஜி எடுத்து படிக்க உதவியாக இருப்போம்,' என்றனர்.

மாணவனின் நம்பிக்கை:அடுத்து விஷ்ணு என்ற மாணவன், ''நான் என்ன கேள்வி கேட்க வேண்டும் என்றே தெரியவில்லை. எனக்கு பதட்டமாக இருக்கிறது. இதுவரை வகுப்பில் கூட கேட்டது கிடையாது. ஆசிரியர்களிடம், நண்பர்களிடம் பேச பயமாக இருக்கிறது. மற்ற மாணவர்களைப் பார்த்து, தாழ்மையான எண்ணம் மனதை ஆக்கிரமிக்கிறது. எப்படி தாழ்வு மனப்பான்மையில் இருந்து விடுபடுவது? கப்பல் இன்ஜினியராக ஆவல் இருக்கிறது. என்னால் ஆக முடியுமா,'' என்றான். மேடையில் இருந்த அறிஞர்கள், நான் என்ன பதில் சொல்ல போகிறேன் என பார்த்தார்கள். நான், ''நான் சொல்லுவதை திருப்பி சொல்கிறாயா,'' என்றேன். நான் சொல்ல அவன் திரும்பி சொல்ல, அந்த கவிதையின் வரி அங்கே பல மடங்கு ஓசையுடன் பரிணமித்தது. நான் சொல்ல சொன்ன, எனக்கு பிடித்த கவிதையை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நான் பறந்து கொண்டேயிருப்பேன்


நான் பிறந்தேன் அரும்பெரும் சக்தியுடன்


நான் பிறந்தேன் கனவுடன்,


நான் வளர்ந்தேன் நற்பண்புகளுடன்


நான் பிறந்தேன் உயர் எண்ணங்களை செயல்படுத்த


நான் வளர்ந்தேன் ஆராய்ச்சி உள்ளத்துடன்


நான் வளர்ந்தேன் என்னால் முடியும் என்ற நம்பிக்கையுடன்


நான் பிறந்தேன் ஆகாய உச்சியில் பறக்க


நான் பூமியில் ஒரு போதும் தவழமாட்டேன்,


தவழவே மாட்டேன், ஆகாய உச்சிதான் என் லட்சியம்,


பறப்பேன், பறப்பேன், வாழ்வில் பறந்து கொண்டே இருப்பேன்.

பறக்க வேண்டும் என்ற உணர்வு வாழ்வில் பெரிய லட்சியத்தை அடைய வழிவகுக்கும். அந்த லட்சியத்தை அடைய என்ன செய்ய வேண்டும்? நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை, உன்னால் வெற்றியடைய முடியும் என்று சொன்னேன். அதை திருப்பி சொன்னவுடன், அவன் கண்களில் ஆனந்த கண்ணீரைப் பார்த்தேன். அவனுக்குள் ஒரு நம்பிக்கையின் ஒளி பிரகாசிப்பதை உணர்ந்தேன். பிறரைக் குறித்து மட்டும் ஆராய்பவர் சாதாரண மனிதர். கல்வி கற்றிருந்தாலும் தன்னையும் நன்கு அறிபவரே கல்விமான் ஒவ்வொருவரும் கல்விமானாக முயல வேண்டும். கல்வியின் உண்மையான நோக்கம் நாட்டிற்கு அரும்பெரும் பணிசெய்யும் சக்தியை, உளப்பூர்வ விவேகம் பெற்ற, ஒரு நல்ல மனிதனை உருவாக்குவதே. எதிர்பாராத விஷயங்களை எதிர்பார்க்க கற்றுக் கொள்வது தான் உங்களை இன்னும் ஒரு படி மேலே உயர்த்தும். வெற்றி என்பது இறுதிப்புள்ளி. தோல்விகள் என்பவை இடைப்புள்ளிகள் இடைப்புள்ளிகள் துணையின்றி இறுதிப்புள்ளியை அடைதல் சாத்தியம் இல்லை. வெற்றியை கொண்டாட மறந்தாலும், தோல்விகளை தோல்வியடைய செய்ய கற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால் தோல்விகள் தான் நம்மை வலுப்பெறச் செய்பவை. நம் பயணத்தை முழுமை பெறச் செய்பவை. நம் லட்சியத்தை வென்றெடுக்க செய்பவை. அறிவாற்றால், அன்பாற்றால், பண்பாற்றால் கொண்டு நேர்மைத்திறத்தோடு லட்சியங்களை அடைய உறுதி மேற்கொள்வோம்.

- ஆ.ப.ஜெ.அப்துல் கலாம், முன்னாள் ஜனாதிபதி. apjabdulkalam.com

https://www.facebook com/ abudlkalamofficialpage

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

Advertisement