Advertisement

அரசியல் பண்பாட்டில் தலைசிறந்த வாஜ்பாய்!

ஒரு சிறந்த கொள்கையை பின்பற்றும் போது, அதில் வரும் இடர்களையும், புகழ் மாலைகளையும் சமமாக பாவிக்கும் அரசியல் தலைவராக வலம் வருபவர் வாஜ்பாய். அவரை நன்கு அறிந்தவர்கள் இதை உணர்வர்.

வாஜ்பாய் பிரதமராக வந்த பின், அவரை உற்று நோக்கி, மீடியா பலகோணங்களில் இன்று விமர்சித்தாலும், 30 ஆண்டுகளுக்கு முன், அவர் அரசியலில் தடம்பதித்த விதம் அவரை, 'அரசியல் ராஜதந்திரி' என்ற நிலைக்கு உயர்த்தி இருக்கிறது. அத்துடன் ஊழலற்ற நல்ல நிர்வாகி என்ற பெயரையும் வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கிறது.சர்வ அதிகாரம் பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக, புதிய கட்சியான ஜனசங்கத்தின் தலைவராக அவர் ஆற்றிய பணிகள் அளவிடற்கரியது.பண்டித நேரு அமைச்சரவையில் சியாமபிரசாத் முகர்ஜி என்ற தலைசிறந்த தேசியவாதி இருந்தார். அவர் டாக்டர் பட்டம் பெற்றவர், கோல்கட்டா பல்கலைக்கழகத்தை வளம்பெறச் செய்த டாக்டர் ஆசுதோஷ் முகர்ஜியின் மகன். அறிஞர், தேசியவாதி, தலைசிறந்த பார்லிமென்டேரியன் என்ற அடைமொழிகளை இயல்பாக பெற்ற அவர், ஜனசங்க கட்சி துவங்கியதும் அவருக்கு உதவ, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் கோல்வால்கரால் அளிக்கப்பட்டவர் வாஜ்பாய்.
சுதந்திரம் அடைந்த பின், காங்கிரஸ் கட்சிக்கு மாற்று தேவை என்று உணர்ந்த சியாம பிரசாத் துவக்கிய ஜனசங்கத்தில் பயணம் செய்ய துவங்கிய இந்த இளம்
ஆர்.எஸ்.எஸ்., பிரசாரகர், இன்று, 90 அகவை கடந்த பின்னும், தன் தனித்தன்மை மிக்க சிறப்புகளால், 'பாரத ரத்னா' வாக மிளிர்கிறார்.

வாஜ்பாயின் திறமைகளைக் கண்டு நேரு வியந்தது உண்டு. காங்கிரசில் சேருமாறு அழைப்பும் தந்தார். தமிழகத்தில் இருந்து அண்ணாதுரை, ராஜ்யசபாவுக்கு எம்.பி.,யாக. தேர்வு செய்யப்பட்ட பின், அங்கு அவர் வாஜ்பாய் அணுகுமுறையை கண்டு பாராட்டியது உண்டு.லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் வாஜ்பாய் பேசிய பேச்சுகள் அவரை சிறந்த 'பார்லிமென்டேரியன்' வரிசையில் முன்னிறுத்தியது.முன்னாள் பிரதமர் இந்திரா, ஒருமுறை வாஜ்பாயை, 'ஹிட்லர் பாணியில் கையை ஆட்டி பேசுகிறார்' என்று விமர்சித்தார். அதற்கு மறு நாளே கையைக் கட்டியபடி பேசிய வாஜ்பாய், தன் ஆணித்தரமான விவாதத்தை வைக்க முற்படும் போது, வழக்கப்படி இரு கைகளையும் விசாலமாக நீட்டியதும் சிரிப்பலை சபையில் ஏற்பட்டது.எதிர் அணியை தன் ஆணித்தரமான விவாதங்களால் மனம் நோகாதபடி பேசுவது அவரது கலை. எவரையும் அவர் தனிப்பட்ட முறையில் விமர்சித்தது கிடையாது. இது அவரது தனி ஸ்டைல்.

ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில் இருந்து அரசியலுக்கு வந்த அவரை, கோல்வால்கர் தன் மகன் போல பரிவு காட்டினார். ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் கூட்டத்தில் பேசும் போது, 'அரசியலில் நாகரிகத்தையும் ஒழுக்கத்தையும் வாஜ்பாய் ஏற்படுத்துவார்' என்று அவர் கூறியது உண்டு.கோல்வால்கர், அவருக்கு அடுத்து வந்த, ஆர்.எஸ்.எஸ்., தலைவரான பாளாசாகேப் தேவ்ரஸ், விசுவ இந்து பரிஷத்தை உருவாக்கிய, எஸ்.எஸ்.ஆப்தே, பாரதிய மஸ்தூர் சங்கத்தை உருவாக்கிய தெங்கடி போன்றோர், வாஜ்பாயை மதித்த விதம் அலாதியானது. அதற்குப் பின் சங்க பரிவார் தலைவர்கள், பரஸ்பரம் ஏதாவது சமயங்களில் ஒருவர் மற்றவரை விமர்சிப்பது வழக்கமாகி விட்டது.அவசர நிலைக்காலத்திற்கு பின் லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் தலைமையில் அமைந்த ஜனதா தளத்தில் பிரதமராக மொரார்ஜி அமைத்த அரசில், வாஜ்பாய் வெளியுறவு அமைச்சர்; அத்வானி செய்தித்துறை அமைச்சராக இருந்தனர்.அடிக்கடி வெளிநாட்டு பயணம் மேற்கொண்ட வாஜ்பாயை அக்காலத்தில் பத்திரிகையாளர்கள், 'வாயேஜ்பாயி' என்று பெயர் சூட்டியது உண்டு. இந்தியாவின் இறை யாண்மையைக் காக்கும் விதமாக வாஜ்பாய் அன்று மேற்கொண்ட நடவடிக்கைகள் அவரது புகழை உயர்த்தின. அதற்குப்பின் காங்கிரஸ் அல்லாத கட்சியின் தலைவர், நீண்ட காலம் பிரதமராக இருந்ததும், 'கூட்டணி தர்மம்' என்ற நடைமுறையை சிறப்பாக நடத்திய விதமும், இன்று பலராலும் புகழப்படுகிறது.

தமிழகத்தின் மீது வாஜ்பாய் அன்பு கொண்டவர். முதலில் இருந்த ஜனசங்கம், பின் பாரதிய ஜனதா ஆகிய இரு கட்சிகளுக்கும், இங்கு அதிக செல்வாக்கு கிடையாது. ஆனால், அவர் சென்னைக்கு வரும் போது பிரமுகர்கள் கூட்டம் ஏற்பாடு செய்யப்படும். அதில் பேசும் அவரது தேசிய பார்வை கண்டு பலரும் பிரமிப்பர். மூதறிஞர் ராஜாஜிக்கு அவர் மீது அதிக மதிப்பு உண்டு.பா.ஜ., கட்சிக்கு சின்னம் உருவாக்க எல்லா மாநிலங்களிலும் கருத்து கேட்கப்பட்டது. அன்று இங்கு இருந்த முக்கிய தலைவரான ஜனாகிருஷ்ணமூர்த்தி, கட்சிக்கு ஆதரவான தமிழறிஞரிடம் கருத்துக் கேட்டார். அவர் பதிலாக, ''முன் ஜனசங்கத்திற்கு விளக்கு சின்னம். 'இல்லக விளக்கது இருள் கெடுப்பது' என்று தேவாரப்பாடல் உள்ளது. இனி அப்பர் பெருமான் கூறிய, 'பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை' என்ற கருத்துப்படி தாமரையை வைக்கலாம்'' என்று, கூறினார்.அது சிவப்புத் தாமரையாக இருந்தால், லட்சுமி வசிக்கும் தாமரை என்று மதச்சாயம் பூசப்படும் என்பதால், நீல வண்ணத்தில் தாமரை உருவாக காரணியாக அமைந்தது.

பா.ஜ., கட்சி கடந்த, 1980ல் உருவான போது, மும்பையில் நடந்த பிரமாண்ட கூட்டத்தில் ஒரு இளைய தலைவர் ஆவேசமாக பேசினார். அப்போது அவர், 'அடல் பிகாரி தான் பிரதமர்; அவர் பெயரைச் சொன்னால் இந்திரா சிம்மாசனம் நடுங்குகிறது' என்று பேசினார். அவர் பேசி முடித்ததும் அவரை அழைத்து, 'இப்போது லோக்சபாவில் நமது கட்சிக்கு பலம் எவ்வளவு என்று தெரியுமா? எத்தனை எம்.பி.,க்கள் நமக்கு இருந்தால் நாம் ஆட்சி அமைக்க முடியும்?' என்று கேட்டார்.
நன்கு பேசக்கூடிய இளைய தலைவர்களை ஊக்குவிக்க, தனக்கு முன் மேடையில் பேசச் சொல்லும் அவர், இம்மாதிரி ஆரவாரங்களை அனுமதித்தது இல்லை. மற்ற கட்சித் தலைவர்களை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவும் அவர் அனுமதிக்கமாட்டார்.'நிறைந்து சொல்லுதல் என்ற குணம் இருந்தால், உலகம் உன்பேச்சை கேட்கும்' என்ற வள்ளுவர் வாக்குக்கு இலக்கணமாக திகழ்ந்த வாஜ்பாய்க்கு, 'பாரத ரத்னா' விருது ஏற்புடையது. தற்போது மூன்று ஆண்டுகளாக தன் பேச்சு வன்மையை முதுமை காரணமாக இழந்த போதும், எவ்வித ஆரவாரமும் இன்றி வாழ்வது அவரது தனிச்சிறப்பு.

ramalingamcffgmail.com
- எம்.ஆர். இராமலிங்கம் -
பத்திரிகையாளர்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement